Tuesday, September 22, 2015

பாண்டவர்கள் நிஷாதர்களை எரித்தது அறமாகுமா?


நமது விவாத மேடையில் நடந்த விவாதமொன்றில் கேட்கப்பட்டது... (பார்க்க : http://mahabharatham.arasan.info/p/blog-page_23.html#nabble-td542)

பாண்டவர்கள் அரக்கு மாளிகையிலிருந்து தப்பிப்பதற்காக அம்மாளிகையை வேறு ஐவருடன் சேர்த்து தீ வைத்தனர். இது எப்படி தர்மம் ஆகும்? பாண்டவர்கள் எப்படி இதை செய்தார்கள்? - கார்த்திக்

இந்தக் கேள்விக்கு நமது நண்பர் திரு.தாமரை அவர்களின் பதில் பின்வருமாறு:

வைசம்பாயனர் சொன்னார், "பாண்டவர்கள் மகிழ்ச்சியுடனும் சந்தேகத்திற்கிடமில்லாமலும் முழுமையாக ஒரு வருடம் வாழ்ந்ததைக் கண்ட புரோசனன் மிகுந்த மகிழ்ச்சி கொண்டான். புரோசனன் மிகுந்த மகிழ்ச்சியோடிருப்பதைக் கண்ட குந்தியின் அறம்சார்ந்த மைந்தன் யுதிஷ்டிரன்  "கொடும் இதயம் கொண்ட அந்தப் பாவி நன்றாக ஏமாற்றப்பட்டிருக்கிறான். நாம் தப்பிச் செல்வதற்குத் தகுந்த காலம் வந்ததென நான் நினைக்கிறேன். ஆயுத சாலைக்கு நெருப்பு மூட்டி, புரோசனனை எரித்துக் கொன்று, அவனது உடலை அங்கே விட்டு, நாம் ஆறு பேரும் யாரும் அறியாமல் தப்பிச் சென்றுவிடலாம்," என்று பீமன், அர்ஜூனன், மற்றும் இரட்டையர்களிடம் (நகுலன் மற்றும் சகாதேவனிடம்) சொன்னான்,

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ மன்னா, பிறகு தானம் செய்யும் நிகழ்ச்சி ஒன்று நடந்த போது, குந்தி ஒரு குறிப்பிட்ட நாள் இரவில் பெரும் எண்ணிக்கையிலான அந்தணர்களுக்கு உணவு கொடுத்தாள். அங்கே பல பெண்களும் வந்து உண்டும், குடித்தும், அவர்கள் விருப்பப்பட்டவாறு மகிழ்ந்திருந்தனர். பிறகு அவர்கள் குந்தியிடம் அனுமதி பெற்று தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.

யாத்திரை செய்து கொண்டிருந்த, ஐந்து மகன்களுக்குத் தாயான ஒரு நிஷாதப் பெண்மணி {வேடுவப் பெண்மணி}, உணவு பெற விரும்பியும், விதியால் இழுக்கப்பட்டும், தனது மகன்கள் அனைவரையும் அந்த விருந்துக்கு அழைத்து வந்தாள். ஓ மன்னா, அவளும் அவளது மகன்களும் அவர்கள் உண்டிருந்த மதுவினால் போதை கொண்டு நிலை தடுமாறி இருந்தனர்.

அந்த மாளிகையில் அந்தப் பெண் தனது மகன்களுடன் உணர்விழந்து பிணம் போல் உறங்கிக் கொண்டிருந்தாள். அந்த மாளிகையில் வசித்தவர்கள் அனைவரும் உறங்கப் படுத்தவுடன், அங்கே அந்த இரவில் பெரும் பலத்துடன் கூடிய காற்று வீசியது. அப்போது பீமன், புரோசனன் உறங்கிக் கொண்டிருந்த பகுதியில் அந்த வீட்டுக்கு தீ மூட்டினான். அதன்பிறகு அந்த பாண்டுவின் மைந்தன், அந்த அரக்கு வீட்டின் கதவுகளுக்கு தீ மூட்டினான். பிறகு அவன் அந்த மாளிகையைச் சுற்றிலும் பல இடங்களில் தீ மூட்டினான்.
- See more at: http://mahabharatham.arasan.info/2013/07/Mahabharatha-Adiparva-Section150.html

************************************************

திரு.தாமரை
அன்று மிகப்பெரிய விருந்து  நடந்திருக்கிறது. அதில் பலரும் கலந்து கொண்டு உணவுண்டனர்.

ஒரு வேட்டுவப் பெண்மணியும் அவளின் ஐந்து மகன்களும் போதையில் அங்கேயே உறங்கி விட்டிருக்கின்றனர்.

முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியது அந்தணர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தில் வேடர்களுக்கும் விருந்தளிக்கப்பட்டது.

அடுத்து கவனிக்க வேண்டியது அவர்கள் தங்கியது அவர்களுக்கும் தெரியாது. பாண்டவர்களுக்கும் தெரியாது. அட்டெண்டஸ் எடுக்கும் பழக்கம் அப்பொழுது கிடையாது.

ஆக வேடுவர் இறப்பிற்கு பாண்டவர் திட்டமிடவில்லை. அறிந்தும் செய்யவில்லை, அது தற்செயலாக நடந்தது.

இது எப்படி தர்மம் ஆகும்?
இது கர்மவினை என்னும் தர்மம் ஆகும். அவர்களின் கர்மவினைப்படி அவர்களுக்கிடப்பட்ட மரணம் வாய்த்தது.

பாண்டவர்கள் எப்படி இதை செய்தார்கள்?
பாண்டவர்கள் இதை அறியாமலேயே செய்தார்கள்.
************************************************
நண்பர் தாமரை அவர்கள் நமது விவாத மேடையில் மஹாபாரதம் குறித்த பல ஆய்வுகளைப் பதிவு செய்து வருகிறார். தனியாக அவற்றைக் காண http://mahabharatham.arasan.info/p/blog-page_23.html#nabble+template%2FNamlServlet.jtp%3Fmacro%3Duser_nodes%26user%3D21 என்ற லிங்குக்குச் செல்லவும்.