The Religion of Faith - Bhakti yoga! | Bhishma-Parva-Section-036 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 24) {பகவத் கீதை - பகுதி 12}
பதிவின் சுருக்கம் : கடவுளிடம் அர்ப்பணிப்புடன் செல்லும் பாதையைக் கிருஷ்ணன் புகழ்வது; அர்ப்பணிப்புடன் செயலாற்றும் முறையான பக்தி யோகத்தைக் கிருஷ்ணன் விளக்கிச் சொல்வது; மேலும் அவன் பல்வேறு வடிவங்களிலான ஆன்ம ஒழங்குகளை விளக்குவது...
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "தொடர் அர்ப்பணிப்புடன், உன்னை வணங்கி வழிபடுபவர்களிலும், மாற்றமில்லாதவனாக, தோற்றமில்லாதவனாக உன்னை (தியானித்து) வழிபடுபவர்களிலும், {மேற்கண்ட இருவரிலும்}, அர்ப்பணிப்பை {பக்தியை} சிறந்த முறையில் அறிந்தவர்கள் {யோக அறிவில் சிறந்தவர்} யார்?" என்றான் {அர்ஜுனன்}. 12:1
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "என்னில் (தங்கள்) மனத்தை நிலைக்கச் செய்து, தொடர்ச்சியாக என்னை வணங்கி {நித்திய யோகியாக}, (அது தவிரவும்) உயர்ந்த நம்பிக்கையையும் கொண்டவர்களே என்னால் அர்ப்பணிப்பு மிக்கவர்களாகக் {யோகிகளில் மேலானவர்களாகக்} கருதப்படுகிறார்கள். 12:2
எனினும், புலன்களின் மொத்த தொகுதியையும் கட்டுப்படுத்தி, சுற்றிலும், அனைத்து வகையிலும் சம மனதுடன், அனைத்து உயிரினங்களின் நன்மையில் ஈடுபட்டு, மாற்றமில்லாததும் {அழிவற்றதும்}, தோற்றமற்றதும் {குறிப்பற்றதும்}, எங்கும் நிறைந்ததும், சிந்தனைக்கு அப்பாற்பட்டதும், வேறுபாடற்றதுமான நித்தியமான பொருளை {பரம்பொருளை} வழிபடுவோரும் என்னையே அடைகின்றனர். 12:3-4
தோற்றமில்லாததில் {அவ்யக்தத்தில்} மனதை நிலைக்கச் செய்வோருக்கான தொல்லை {கவலை} பெரிது; ஏனெனில் தோற்றமற்றதற்குச் செல்லும் பாதையைக் {நெறியைக்} கண்டடைவதென்பது, உடல்கொண்டோருக்குக் கடினமானதாகும். 12:5
செயல்களனைத்தையும் எனக்கே அர்ப்பணித்து, என்னையே (அடையத்தக்க) தங்கள் உயர்ந்த நோக்கமாகக் கொண்டு, என்னையே வழிபட்டு, வேறு எதிலும் அர்ப்பணிப்பைச் செலுத்தாமல், என்னையே தியானித்து, (இப்படியே) என்னிலேயே தங்கள் மனத்தை நிலைக்கச் செய்பவர்கள் எவரோ, அவர்களை, (இந்த) மரணத்தின்பாற்படும் உலகம் எனும் கடலில் இருந்து தாமதமில்லாமல் நான் விடுவிப்பேன். 12:6-7
என்னில் மட்டுமே உனது இதயத்தை நிலைக்கச் செய்து, உனது புத்தியை என்னில் செலுத்துவாயாக. இதன்பிறகு {இந்த உலகத்திற்குப் பிறகு} நீ என்னில் வசிப்பாய். (இதில்) ஐயமில்லை. 12:8
எனினும், என்னில் உனது இதயத்தை உறுதியாக நிலைநிறுத்த இயலவில்லையெனில், ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, தொடர்ந்த பயிற்சியினால் (எழும்) அர்ப்பணிப்பின் {யோகத்தின்} மூலம் என்னை அடைய முயற்சிப்பாயாக. 12:9
(இந்தத்) தொடர்ந்த பயிற்சிக்கும் நீ தகுதிவாய்ந்தவனாக இல்லாவிட்டால், எனக்காகச் செய்யப்படும் செயல்களே உனது உயர்ந்த இலக்காக இருக்கட்டும். உனது செயல்கள் அனைத்தையும் எனக்காகச் செய்வதால் கூட, நீ முழுமையை {என்னை} அடைவாய். 12:10
இதை உன்னால் செய்ய இயலாவிட்டால் கூட, என்னை அடையும் அர்ப்பணிப்பில் {யோகத்தில்} ஈடுபட்டு, உனது ஆத்மாவைக் கட்டுப்படுத்தி, செயல்கள் அனைத்தின் பலனையும் துறப்பாயாக. 12:11
(அர்ப்பணிப்பில் {யோகத்தில்} ஈடுபடும்) பயிற்சியை விட அறிவு மேன்மையானது; அறிவை விடத் தியானம் மேன்மையானது; தியானத்தைவிட {செயலுக்கான} எதிர்விளைவின் பலனைத் துறப்பது சிறந்தது, துறவில் இருந்து அமைதி உடனே விளைகிறது. 12:12
எந்த உயிரினித்திடமும் வெறுப்பில்லாதவன் எவனோ, நட்பும் கருணையும் கொண்டவன் எவனோ, ஆணவத்தில் இருந்து விடுபட்டவன் எவனோ, தற்பெருமையும், பற்றும் நீங்கியவன் எவனோ, இன்பத்திலும், வலியிலும் {துன்பத்திலும்} ஒன்றாக இருப்பவன் எவனோ, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, மனநிறைவு, எப்போதும் அர்ப்பணிப்பு, கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மா, உறுதியான நோக்கம் ஆகியவற்றைக் கொண்டு இதயத்தையும், புத்தியையும் என்னில் நிலைக்கச் செய்தவன் எவனோ, அவனே எனது அன்புக்குரியவன் ஆவான். 12:13-14
உலகத்துக்குத் தொல்லை {கவலை} கொடுக்காதவன் எவனோ, உலகத்தால் தொல்லை அடையாதவன் {கலங்காதவன்} எவனோ, மகிழ்ச்சி, கோபம், அச்சம் மற்றும் கவலைகள் ஆகியவற்றில் இருந்து விடுபட்டவன் எவனோ, அவனே எனது அன்புக்குரியவன் ஆவான். 12:15
கவலையற்று {எதிர்பார்ப்புகள் அற்று}, தூய்மையுடன், (உலகப் பொருள்களில்) தொடர்பில்லாதவனாக, (மனத்) துயரத்தில் இருந்து விடுபட்டவனாக என்னிடம் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டிருப்பவன் எவனோ, ஒவ்வொரு செயலையும் (அதன் பலனையும்) துறப்பவன் எவனோ, அவனே எனது அன்புக்குரியவன் ஆவான். 12:16
மகிழ்ச்சியும், வெறுப்பும் இல்லாதவன் எவனோ, கவலைப்படாமல், ஆசைப்படாமல் இருப்பவன் எவனோ, நன்மையையும், தீமையையும் துறப்பவன் எவனோ, (மேலும்) என்னிடம் நம்பிக்கை நிறைந்தவன் எவனோ, அவனே எனது அன்புக்குரியவன் ஆவான். 12:17
நண்பன் மற்றும் எதிரி, மதிப்பு மற்றும் அவமதிப்பு ஆகியவற்றில் ஒன்றாக இருப்பவன் எவனோ, குளுமை மற்றும் வெம்மை (இன்பம் மற்றும் துன்பம்) ஆகியவற்றில் ஒன்றாக இருப்பவன் எவனோ, பற்றில் இருந்து விடுபட்டவன் எவனோ, இகழ்வையும், புகழையும் ஒன்றாகக் கருதுபவன் எவனோ, அதிகம் பேசாதவன் {அமைதியாக இருப்பவன்} எவனோ, (தான்) எதிர்கொள்ளும் எதிலும் மனநிறைவுடன் இருப்பவன் எவனோ, வீடற்று {வீட்டைக் குறித்துக் கவலையற்று}, உறுதியான மனத்துடனும், நிறைந்த நம்பிக்கையுடன் இருப்பவன் எவனோ, அவனே எனது அன்புக்குரியவன் ஆவான். 12:18-19
(ஏற்கனவே) அறிவித்தது போல, அழிவற்ற {அமுதம் போன்ற} இந்த நீதியின்படி {அறத்தின்படி} நடப்போர் எவரோ, (அடையத்தக்க) உயர்ந்த பொருளாக என்னையே கருதும் நம்பிக்கை நிறைந்த அந்த அர்ப்பணிப்பாளர்கள் {பக்தர்கள்} எவரோ, அவர்களே எனது மிகுந்த அன்புக்கு உரியவர்களாவர்" என்றான் {கிருஷ்ணன்}. 12:20
ஆங்கிலத்தில் | In English |