Religion by Separation of Matter and Spirit - Kshetra–Kshetrajna Vibhaga yoga! | Bhishma-Parva-Section-037 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 25) {பகவத் கீதை - பகுதி 13}
பதிவின் சுருக்கம் : நிலையற்றதும் அழியக்கூடியதுமான உடலுக்கும், மாற்ற முடியாததும், நித்தியமானதுமான ஆத்மாவுக்கும் இடையிலான வேறுபாடுகளைக் கிருஷ்ணன் விவரிப்பது; தனிப்பட்ட உணர்வு மற்றும் பிரபஞ்சஉணர்வு ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டைக் கிருஷ்ணன் தெளிவாக்குவது...
{அர்ஜுனன் கிருஷ்ணனிடம், "ஓ! கேசவா {கிருஷ்ணா}, இயற்கை, மனிதன், க்ஷேத்திரம் {களம்}, க்ஷேத்திரக்ஞன் {களத்தை அறிந்தவன்}, அறிவு, அறிவின் எல்லை ஆகியவற்றை அறிய விரும்புகிறேன்" என்றான்} [1அ].
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, இந்த உடலே க்ஷேத்திரம் {களம்} என்று அழைக்கப்படுகிறது. அஃதை {களத்தை} அறிந்தவனையே க்ஷேத்திரக்ஞன் {களத்தை அறிந்தவன்} என்று கற்றோர் {தத்துவங்களை அறிந்தோர்} அழைக்கின்றனர் [1ஆ]. ஓ! பாரதா {அர்ஜுனா}, க்ஷேத்திரங்கள் {களங்கள்} என்று என்னை அறிவாயாக [1இ]. 13:1-2
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, இந்த உடலே க்ஷேத்திரம் {களம்} என்று அழைக்கப்படுகிறது. அஃதை {களத்தை} அறிந்தவனையே க்ஷேத்திரக்ஞன் {களத்தை அறிந்தவன்} என்று கற்றோர் {தத்துவங்களை அறிந்தோர்} அழைக்கின்றனர் [1ஆ]. ஓ! பாரதா {அர்ஜுனா}, க்ஷேத்திரங்கள் {களங்கள்} என்று என்னை அறிவாயாக [1இ]. 13:1-2
[1அ] அர்ஜுனனின் இந்தக் கேள்வி கங்குலியில் இல்லை, பாரதியாரிலும் இல்லை. பிரபுபாதரும், கோயந்தகரும் இதை மேற்கண்டவாறே குறிப்பிடுகிறார்கள்.[1ஆ] இங்கே சொல்லப்படும் கற்றோர் என்பது க்ஷேத்திரத்தை அறிந்தவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். கீழ்வரும் விளக்கங்களில் கிருஷ்ணனால் விளக்கப்படுவது போல இங்கே க்ஷேத்திரம் என்பது பருப்பொருளையும் {உடலையும் [அ] உடல் கொண்ட உயிரையும்}, க்ஷேத்திரக்ஞன் என்பது ஆத்மாவையுமே குறிக்கும்.[1இ] க்ஷேத்திரக்ஞன் {களங்கள் அனைத்தையும் அறிந்தவன்} நான் என்பதை அறிவாயாக என்பதே இங்குச் சரியாக இருக்கும். மூலத்தில் அப்படி இருப்பதாகவே தத்வ விவேசனி கூறுகிறது. கங்குலி இங்கு தவறிழைத்திருக்க வேண்டும்; அல்லது அச்சுப்பிழையாக இருத்தல் வேண்டும்.
க்ஷேத்திரம் {களம் [அ] உடல்} மற்றும் க்ஷேத்திரக்ஞன் {களத்தை அறிந்தவன் [அ] ஆத்மா} ஆகியவற்றின் அறிவையே, (உண்மை) அறிவு என நான் கருதுகிறேன். 13:3
க்ஷேத்திரம் (என்பது) என்ன? (அஃது) எதைப் போன்றது?
அஃது என்னென்ன மாற்றங்களை அடைகிறது?
(அஃது) எங்கிருந்து வருகிறது? அவன் (க்ஷேத்திரக்ஞன்) எவன்?
அவனது சக்திகள் {பெருமை} என்னென்ன?
என்பதைச் சுருக்கமாகக் கேட்பாயாக. 13:4
அஃது என்னென்ன மாற்றங்களை அடைகிறது?
(அஃது) எங்கிருந்து வருகிறது? அவன் (க்ஷேத்திரக்ஞன்) எவன்?
அவனது சக்திகள் {பெருமை} என்னென்ன?
என்பதைச் சுருக்கமாகக் கேட்பாயாக. 13:4
பிரம்மத்தைக் குறித்த குறிப்புகளைக் கொடுத்து, நன்கு அமைந்த, காரணம் நிறைந்த உரைகளாலும், பல்வேறு சந்தங்களாலும், இன்னும் பல வழிகளிலும் தனித்தனியாக இவையனைத்தும் {ஏற்கனவே} பாடப்பட்டுள்ளன. 13:5
பெரும்பூதங்களும் {ஐம்பூதங்களும்}, தன்னலம் {அகங்காரம்}, அறிவுத்திறன் {புத்தி}, தோற்றமில்லாதது (இயற்கை) {ஆத்மா}, பத்துப் புலன்கள், ஒன்றானது (மனம்), புலன்நுகர் பொருட்கள் ஐந்து, ஆசை, வெறுப்பு, இன்பம், வலி {துன்பம்}, உடல் உணர்வு, துணிவு ஆகிய இவை அனைத்துமே, அவற்றின் திருத்தப்பட்ட வடிவில், சுருக்கமாக, க்ஷேத்திரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. 13:6-7
கர்வமின்மை, ஆடம்பரமின்மை, தீங்கிழையாமை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, நேர்மை, ஆசானிடம் அர்ப்பணிப்பு, தூய்மை, சீரான தன்மை {உறுதி}, தற்கட்டுப்பாடு, புலன்நுகர்பொருட்களில் வேறுபாடின்மை, தன்னலமின்மை {அகங்காரமின்மை}, பிறப்பு, இறப்பு, முதுமை, நோய், பற்று ஆகியவற்றில் இருந்து விடுதலை, மகன், மனைவி, வீடு மற்றும் எஞ்சியோர் ஆகியோரிடம் பற்றின்மை {அவர்கள் தன்னுடைமை எனக் கருதாமை}, நன்மை மற்றும் தீமையை அடைவதில் சீரான இதயச் சமன்நிலை, வேறு எதையும் தியானிக்காமல் {பிறழா யோகத்துடன்} என்னிடம் கலங்காத அர்ப்பணிப்பு {பக்தி}, தனிமையான இடங்களை அடிக்கடி நாடுதல், மனிதக் கூட்டங்களில் விருப்பமின்மை, தனக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள உறவு குறித்த நீடித்த அறிவு {ஆத்ம ஞானத்தில் எப்போதும் நழுவாமை}, உண்மை அறிவின் {தத்துவ ஞானத்தின்} பொருளை உணர்தல் [2] ஆகிய இவை அனைத்துமே அறிவு என்று அழைக்கப்படுகின்றன; இவற்றுக்கு முரணான அனைத்துமே அறியாமையாகும். 13:8-12
[2] இங்கே "உண்மை அறிவின் பொருளை உணர்தல்" என்பது அறியாமையை அகற்றி மகிழ்ச்சியை அடைவது எனப் பொருள்படும் என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.
எதை அறிந்தால், ஒருவன் அழியா நிலையை அடைவானோ, அந்த அறிவின் பொருளை (இப்போது) நான் (உனக்கு) அறிவிக்கிறேன். தொடக்கமில்லாததும் உயர்ந்ததும், இருப்பு {சத்} மற்றும் இல்லாமை {அசத்} அற்றதும், {13} அனைத்துப் புறங்களிலும் கைகளையும் கால்களையும் கொண்டதும், அனைத்துப் புறங்களிலும் கண்களையும், தலைகளையும், முகங்களையும் கொண்டதும், உலகத்தில் அனைத்திலும் படர்ந்தூடுருவி வசிப்பதும் {அனைத்தையும் சூழ்ந்திருப்பதும்} {14}, புலன்கள் அற்றிருந்தாலும், புலன்களின் குணங்கள் அனைத்தையும் கொண்டதும், அனைத்துப் பொருள்களைத் தாங்கியிருந்தாலும், {அவற்றில்} பற்றில்லாததும், அனைத்துப் குணங்களைக் கொண்டிருந்தாலும் குணங்களற்றதும், {15} அசைவன, அசையாதன மற்றும் அனைத்து உயிரினங்களின் உள்ளேயும் {உள்ளும்} வெளியேயும் {புறமும்} இருப்பதும், (தனது) நுண்மையால் அறியப்படாததும், அருகில் இருந்தாலும் தொலைவில் இருப்பதும், {16} அனைத்து உயிரினங்களிலும் பகிர்ந்திருந்தாலும், பகுபடாமல் இருப்பதும், அனைத்து உயிரினங்களையும் தாங்குவதும், (அனைத்தையும்) படைத்து அழிப்பதும்; {17} ஒளியுருவங்களின் ஒளியானதும், இருளுக்கு அப்பால் இருப்பதாகச் {உயர்ந்ததாகச்} சொல்லப்படுவதும், அறிவானதும், அறிவின் பொருளானதும் {நோக்கமானதும்}, அறிவின் எல்லையானதும், அனைத்தின் இதயங்களிலும் இருப்பதுமான (அது) {அறிவின் பொருளான} பரப்பிரம்மம் ஆகும் {18}. 13:13-18
இப்படியே க்ஷேத்திரம், அறிவு, அறிவின் பொருள் ஆகியவை என்னால் (உனக்கு) சுருக்கமாகச் சொல்லப்பட்டன. என்னில் அர்ப்பணிப்பு கொண்டவன் இதையறிந்தால் என் தன்மையையே அடைகிறான். 19
{பொருள் சார்ந்த} இயற்கை மற்றும் ஆத்மா ஆகியவை தொடக்கமில்லாதவை என்பதை அறிவாயாக. (மேலும்) அனைத்து மாறுதல்களும் {திருத்தங்களும்}, {அந்தப் பொருட்களின் [உடல்களின்]} அனைத்து குணங்களும் இயற்கையில் இருந்தே எழுகின்றன என்பதை அறிவாயாக. 13:20
இன்ப, துன்பங்களை அனுபவிக்கும் அளவின் மூலாதாரமே இயற்கை என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் ஆத்மாவே, இயற்கையில் வசித்து, இயற்கையில் இருந்து பிறக்கும் குணங்களை அனுபவிக்கிறது. {காரணக் காரியங்களை உண்டாக்கும் காரணம் இயற்கை ஆகும். இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்குக் காரணம் புருஷன் [ஆத்மா] ஆகும்}.13:21
(அதன் {ஆத்மாவின்}) குணங்களில் கொண்ட தொடர்பே நல்ல அல்லது தீய கருவறையில் அது {ஆத்மா} பிறப்பதற்குக் காரணமாக அமைகிறது. 13:22
இந்த உடலில் உள்ள உயர்ந்த ஆத்மா {பரம புருஷன்}, மதிப்பீட்டாளன் {மேற்பாற்வையாளன்}, அங்கீகரிப்பவன் {அனுமதி தருபவன்}, ஆதரிப்பவன் {சுமப்பவன்}, அனுபவிப்பவன், வலிமைமிக்கத் தலைவன் {மகேஸ்வரன்} மற்றும் பரமாத்மா என்றும் அழைக்கப்படுகிறான். 13:23
இப்படியே ஆத்மா {புருஷன்} மற்றும் இயற்கை {பிரகிருதி} ஆகியவற்றை அதன் குணங்களுடன் அறிந்தவன் எவனோ, அவன் என்ன நிலையில் இருந்தாலும், {அவன்} மீண்டும் பிறப்பதில்லை {பிறவியை அடைவதில்லை}. 13:24
சிலர் தன்னை {ஆத்மாவை}, தன்னில் {ஆத்மாவில்} தன்னாலேயே {ஆத்மாவாலேயே} அறிகிறார்கள்; பிறர் சாங்கிய அமைப்பின்படியான அர்ப்பணிப்பின் {சாங்கிய யோகத்தின்} மூலமும்; மேலும் பிறர், செயல்களில் அர்ப்பணிப்பின் {கர்ம யோகத்தின்} மூலமும் {தன்னை, ஆத்மாவை} அறிகிறார்கள். 13:25
எனினும் இஃதை அறியாத பிறரோ, இதைக் குறித்து வேறு பிறரிடம் கேட்டு வழிபடுகின்றனர். அப்படிக் கேட்கப்பட்டதில் [3] அர்ப்பணிப்புக் கொண்ட இவர்களும்கூட மரணத்தைக் {பிறப்பு இறப்பு என்ற மறுபிறவியைக்} கடந்துவிடுவார்கள். 13:26
[3] இங்கே "கேட்கப்பட்டது" என்பதைச் சுருதிகள் அல்லது புனிதக் கோட்பாடுகள் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் கங்குலி.
அசைவன, அசையாதன என இருப்பில் வரும் {பிறக்கும்} எந்த உயிரும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, க்ஷேத்திரம் மற்றம் க்ஷேத்திரக்ஞன் (பருப்பொருள் {உடல்} மற்றும் ஆத்மா) என்பனவற்றின் தொடர்பில் உண்டானவை என்பதை அறிவாயாக. 13:27
அழிவனவற்றுள் அழியாதவனாக, அனைத்து உயிரினங்களிலும் சமமாகவே வசிக்கும் அந்த உயர்ந்த தலைவனைக் {பரமேஸ்வரனைக்} காண்பவனே பார்வையுடையவன் ஆவான். 13:28
எங்கும் நிறைந்திருக்கும் தலைவனை {ஈஸ்வரனைக்} காணும் ஒருவன் தன்னை {ஆத்மாவை}, தன்னில் {ஆத்மாவில்} அழித்துக் கொள்வதில்லை [4] {தன்னை துன்பப்படுத்திக் கொள்ளமாட்டான்}. அவன் உயர்ந்த இலக்கையே பிறகு அடைகிறான். 13:29
[4] தன்னைத் தன்னில் அழித்துக் கொள்வது என்பதை உண்மை அறிவை இழத்தல் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் கங்குலி.
அனைத்து செயல்களும், அனைத்து வகையிலும் இயற்கையால் மட்டுமே செய்யப்படுகின்றன என்பதையும், அதே போல செயல்படுபவன் தானல்ல {தான் எதையும் செய்யவில்லை} என்பதையும் காண்பவனே (உண்மையில்) பார்வையுள்ளவன் ஆவான். 13:30
பொருள்களின் {உடல்கொண்ட உயிர்களின்} பன்முகத்தன்மைகள் ஒன்றிலேயே நிலைத்து இருக்கின்றன என்பதையும், அதில் (அந்த ஒன்றில்) இருந்தே (அனைத்தும்) தோன்றுகின்றன என்பதையும் காணும் ஒருவனே பிரம்மத்தை அடைவான் எனச் சொல்லப்படுகிறான். 13:31
ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, தொடக்கமற்றவனாகவும், குணங்களற்றவனுமான இந்த அழிவற்ற பரமாத்மா செயல்படுவதுமில்லை, உடலில் நிலைத்திருந்தாலும் அதனால் களங்கப்படுவதுமில்லை {பற்றில்லமாலேயே இருக்கிறான்}. 13:32
எல்லையற்ற வெளி {வானம், ஆகாயம்} அதன் நுண்மையின் விளைவால் களங்கபடாதிருத்தல் போல {பற்றற்று நிற்பது போல}, ஒவ்வொரு உடலில் நிலைகொண்டிருக்கும் ஆத்மாவும் களங்கப்படுவதில்லை {பற்றுறுவதில்லை}. 13:33
ஒரே சூரியன் மொத்த உலகத்திற்கும் ஒளியூட்டுவது போல, ஓ! பாரதா {அர்ஜுனா}, ஆத்மா {க்ஷேத்திரக்ஞன்} மொத்த பருப்பொருள்களுக்கும் {உடல்களுக்கும், அல்லது உடலின் பொருள்கள் அனைத்துக்கும்} {க்ஷேத்திரங்களுக்கும்} ஒளியூட்டுகிறது. 13:34
அறிவுக்கண் கொண்டு பருப்பொருளுக்கும் {க்ஷேத்திரம், உடல்}, ஆத்மாவுக்கும் {க்ஷேத்திரக்ஞன், உடலின் சொந்தக்காரன் ஆகியவற்றுக்கு} உள்ள வேறுபாட்டையும், அனைத்துப் பொருள்களின் {உடல் கொண்ட உயிர்களின்} இயற்கையில் [5] இருந்து விடுபடுதலையும் காண்பவர்களே பரம்பொருளை அடைகின்றனர்" என்றான் {கிருஷ்ணன்}. 13:35
[5] இங்கே குறிப்பிடப்படும் "பூதப்ரக்ருதிமோக்ஷம் Bhuta-Prakriti-moksha" என்பது சங்கரர் மற்றும் ஸ்ரீதரர் ஆகிய இருவராலும், "பூதங்கள் அல்லது உயிர் பொருட்களின் {Bhuta} இயற்கையில் {Prakriti} இருந்து விடுதலை அல்லது மோட்சம் {moksha} அடையும் ஒருவன்" என்று விளக்கப்படுகிறது. இது போன்ற விடுதலையை விளைவிப்பது உண்மையான அறிவே ஆகும். திரு.டேவீசோ, "இயற்கையில் இருந்து விடுதலையடையும் உயிரினங்கள்" என்று இதை வழங்குகிறார். இது தவறு என்பது தெளிவானது. உயிரினங்கள் என்ற சொல்லானது, தான் {சுயம்} அல்லது ஆத்மா என்ற பொருளைத் தரவில்லை என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.
ஆங்கிலத்தில் | In English |