Sunday, October 04, 2015

குணப்பிரிவினைகளின் அறம் - குணத்ரய விபாக யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 038

Religion by Separation from the Qualities - Gunatraya–Vibhaga yoga! | Bhishma-Parva-Section-038 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 26) {பகவத் கீதை - பகுதி 14}

பதிவின் சுருக்கம் : பொருள் இயல்புகளின் தொடர்புடைய நற்குணம், பேரார்வம் மற்றும் அறிவின்மை ஆகிய மூன்று வழிமுறைகளை (குணங்களை) கிருஷ்ணன் விளக்குவது; உடல்கொண்டு வாழும் ஓர் உயிரில் அவை ஏற்படுத்தும் விளைவுகள், பண்புகள் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றைக் கிருஷ்ணன் விளக்குவது...

அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "எதை அறிந்து, முனிவர்கள் அனைவரும் இந்த உடலில் (உடலின் பந்தங்களில்) இருந்து உயர்ந்த முழுமையை {பரமசித்தியை} அடைந்தார்களோ, அதே அற்புத அறிவியலை, அறிவியல்களில் தெய்வீக அறிவியலை நான் மீண்டும் உனக்கு அறிவிக்கிறேன் {சொல்கிறேன்}. 14:1

இந்த அறிவியலை அடைந்து, எனது இயல்பை அடைந்தோர், (புதிய) {உலக} படைப்பிலும் கூட {அண்டம் அழிந்து புதியதாக மலரும்போது கூட} மறுபிறவியை அடையாமலும், ஊழிக்காலத்தில் {பிரளயத்தின் போதும்} கலங்காமலும் இருக்கிறார்கள். 14:2


எனக்குக் கருவறையாக வலிமைமிக்கப் பிரம்மமே இருக்கிறது. அதில் நான் கருவை {உயிரை} வைக்கிறேன் {அதில் நான் கருத்தரிக்கிறேன்}. அதில்தான், ஓ! பாரதா {அர்ஜுனா} உயிரினங்கள் அனைத்தும் பிறப்பை அடைகின்றன. 14:3

கருவறைகள் அனைத்திலும் பிறக்கும் (உடல்கொண்ட) வடிவங்கள் யாவைக்கும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, பிரம்மமே வலிமைமிக்கக் கருவறையாக இருக்கிறது. (மேலும்) நானே விதையைத் தரும் தந்தையாக இருக்கிறேன். 14:4

இயற்கையில் பிறக்கும் நற்குணம் {சத்வ குணம்}, பேரார்வம் {ரஜோகுணம்}, இருள் {தமோ குணம்} ஆகிய இந்தக் குணங்களே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, நித்தியமான பண்புருவத்தை [ஆத்மாவை] இந்த உடலில் கட்டுகிறது. 14:5

இவற்றில், நற்குணம் {சத்வகுணம்}, தனது பிழையில்லா இயல்பால் தெளிவைத் தரும் ஒளியாகவும் {அறிவாகவும்}, துன்பங்கள் அற்றதாகவும் இருப்பதால், ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, மகிழ்ச்சியையும், அறிவையும் அடைந்து {அது} (ஆன்மாவைக்) கட்டுப்படுத்துகிறது. 14:6

ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, ஆசையையே தன் சாறாகக் கொண்ட பேரார்வம் {ரஜோ குணம்}, தாகத்திலும் {ஏக்கத்திலும்}, பற்றிலும் இருந்து பிறப்பது என்பதை அறிவாயாக.  செயலில் பற்று காரணமாகவே பண்புருவத்தை (ஆத்மாவை) அது {உடலில்} கட்டுகிறது. 14:7

ஓ! பாரதா {அர்ஜுனா}, எனினும், இருளோ {தமோ குணமோ}, அறியாமையில் பிறக்கிறது என்பதை அறிவாயாக. (மேலும்) பண்புருவங்கள் (ஆத்மாக்கள்) அனைத்தையும் அது {தமோ குணம்} கலக்கமடையச் {மயங்கச்} செய்கிறது. பிழை {தவறு}, சோம்பல் மற்றும் உறக்கத்தில் {ஆத்மாவை} அது {தமோ குணம்} கட்டுகிறது. 14:8

ஓ! பாரதா {அர்ஜுனா}, நற்குணம் {சத்வ குணம்} இன்பத்துடன் (ஆத்மாவை) ஒன்றிணைக்கிறது {பற்றுறச் செய்கிறது}; பேரார்வம் {ரஜோகுணம்}, செயலுடன் {ஆத்மாவை} ஒன்றிணைக்கிறது; ஆனால் இருளோ, அறிவுக்குத் திரையிட்டு, பிழையுடன் {தவறுடன்ஆத்மாவை} ஒன்றிணைக்கிறது. 14:9

ஓ! பாரதா {அர்ஜுனா}, பேரார்வத்தையும் {ரஜோகுணத்தையும்}, இருளையும் {தமோ குணத்தையும்} அடக்கி, நற்குணம் {சத்வ குணம்}, நிலைநிற்கிறது. பேரார்வத்தையும், நற்குணத்தையும் அடக்கி இருள் நிலைநிற்கிறது; (மேலும்) இருளையும், நற்குணத்தையும் அடக்கி பேரார்வம் நிலைநிற்கிறது. 14:10

எப்போது இந்த உடலில் உள்ள வாயில்கள் அனைத்திலும் அறிவொளி பிறக்கிறதோ, அப்போது நற்குணம் {சத்வ குணம்} வளர்ச்சி பெறுகிறது என்பதை ஒருவன் அறிய வேண்டும். 14:11

ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, பேராசை, செயல்பாடு, செயல்களின் தொடக்கம், அமைதியின்மை, ஏக்கம் ஆகியவைகளே, பேரார்வம் {ரஜோகுணம்} வளரும்போது பிறக்கின்றன. 14:12

ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, இருள் {ஒளியின்மை}, செயலின்மை, பிழை {தவறுதல்}, மயக்கம் ஆகியவையே, இருள் {தமோகுணம்} வளரும்போது பிறக்கின்றன. 14:13

உடலைத் தாங்குபவன் ஒருவன், ஊழிக்காலத்தின் {தன் மரணத்தின்} போது, நற்குணம் {சத்வ குணம்} வளர்ந்து சென்றால், அவன் பிரம்மத்தை அறிந்தவர்களின் களங்கமில்லா உலகங்களை அடைகிறான். 14:14

பேரார்வம் {ரஜோகுணம்} நிலவும்போது மரணமடைந்து சென்றால், அந்த ஒருவன் {மறுபிறவியில்} செயலில் பற்றுடையோருக்கு மத்தியில் பிறக்கிறான். அதே போல இருளில் {தமோ குணத்துடன்} இருக்கும்போது இறந்தால், ஒருவன் மூடர்களை ஈன்றெடுக்கும் கருவறைகளில் பிறக்கிறான். 14:15

நற்செயலின் பலன் நன்மையானது என்றும், களங்கமில்லாதது என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல, பேரார்வத்தின் பலன் துன்பமாகும்; (மேலும்) இருளின் பலன் அறியாமையாகும். 14:16

நற்குணத்தில் {சத்வ குணத்தில்} இருந்தே அறிவு பிறக்கிறது; பேரார்வத்தில் {ரஜோ குணத்தில்} பேராசையும்; (மேலும்) இருளில் {தமோ குணத்தில்} பிழை, மயக்கம் மற்றும் அறியாமையும் பிறக்கின்றன. 14:17

நற்குணத்தில் {சத்வ குணத்தில்} வசிப்போர் உயர்வடைகின்றனர்; பேரார்வத்திற்கு {ரஜோகுணத்திற்கு} அடிமையானோர் நடுவில் இருக்கிறார்கள்; (அதே வேளையில்) இருளில் {தமோ குணத்தில்} வசிப்போர், இழிகுணத்திற்கு அடிமையாகி வீழ்ச்சியடைகின்றனர் {தாழ்ந்த உலகங்களை அடைகின்றனர்}. 14:18

குணங்களைத் தவிரச் செயல்படுபொருள் வேறு எதுவும் இல்லை எனக் கண்டு, அவற்றைக் கடந்திருப்பதை உணரும் ஒரு பார்வையாளன், எனது இயல்பையே அடைகிறான் {அறிகிறான்}. 14:19

அனைத்து உடல்களின் மூலாதாரமாக இருக்கும் இந்த மூன்று குணங்களைக் கடந்து மேம்பட்டு, பிறப்பு, இறப்பு, முதுமை, துன்பம் ஆகியவற்றில் இருந்து விடுபட்ட பண்புருவம் {ஆத்மா}, அழிவற்ற தன்மையை அனுபவிக்கிறது {அமிர்த நிலையை அடைகிறது}" என்றான் {கிருஷ்ணன்}. 14:20

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! தலைவா {கிருஷ்ணா}, இந்த மூன்று குணங்களையும் கடந்து மேம்பட்டிருக்கும் ஒருவனின் அறிகுறிகள் என்னென்ன? அவனது நடத்தை எது? இந்த முக்குணங்களையும் ஒருவன் கடந்து மேம்படுவது எவ்வாறு?" என்று கேட்டான் {அர்ஜுனன்}. 14:21

அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, ஒளி, செயல், மாயை ஆகியவற்றில் - அவை இருக்கும்போது வெறுப்பையும், இல்லாதபோது விருப்பையும் [1] கொள்ளாதவன் எவனோ {22}, கவலையற்றவனாக அமர்ந்து, அந்தக் குணங்களால் அசைக்கப்படாதவன் எவனோ; அந்தக் குணங்களே (தங்களுக்குரிய செயல்பாடுகளில்) ஈடுபடுகின்றன (தானல்ல) என்று நினைத்து அசையாமல் அமர்ந்திருப்பவன் எவனோ {23}, துன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றாகக் கொள்பவன் எவனோ, தன்னிறைவு கொண்டவன் எவனோ, பூமியின் புல்லையும், கல்லையும், தங்கத்தையும் ஒன்றாகக் கருதுபவன் எவனோ, ஏற்புடையவற்றையும் ஏற்பில்லாதவற்றையும் ஒன்றாகக் கருதுபவன் எவனோ, பகுத்தறிபவன் எவனோ, இகழையும் புகழையும் ஒன்றாகக் கருதுபவன் எவனோ {24}, மதிப்பையும் அவமதிப்பையும் ஒன்றாகக் கருதுபவன் எவனோ, நண்பனையும் எதிரியையும் ஒன்றாகக் கருதுபவன் எவனோ, {பலன் தரும்} முயற்சிகள் அனைத்தையும் துறந்தவன் எவனோ, அவனே குணங்களைக் கடந்து மேம்பட்டவன் எனச் சொல்லப்படுகிறான் {25}. 14:22-25

[1] மூன்று குணங்களின் விளைவுகளைக் குறிப்பதே ஒளி, செயல்பாடு மற்றும் மாயை ஆகும் என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.

மேலும், தனிப்பட்ட அர்ப்பணிப்புடன் {வேறுபாடில்லாத பக்தி யோகத்தில்} என்னை வழிபடுபவன் எவனோ, அவனே இந்தக் குணங்களைக் கடந்து மேம்பட்டு, பிரம்மத்தின் இயல்புக்குள் நுழையத் தகுந்தவனாகிறான். 14:26

ஏனெனில், பிரம்மம், அழிவின்மை, கேடின்மை, நிலையான அறம் மற்றும் தடையற்ற இன்பம் ஆகியவற்றின் உறைவிடமாக நானே இருக்கிறேன்" என்றான் {கிருஷ்ணன்} 14:27



ஆங்கிலத்தில் | In English