Sunday, October 04, 2015

பகவத் கீதையின் தமிழ் மொழிபெயர்ப்பு புரியவில்லை


முழு மஹாபாரததின், பகவத் கீதையின் மொழிபெயர்ப்பினை படித்தால் புரிந்தும் புரியாத மாறி உள்ளது. பல இடங்களில் ஒன்றுமே புரியவில்லை. சுவாமி குருபரானந்தர் என்ற அத்வைத வேதாந்தி, பகவத்கீதையை தமிழில் 50 மணி நேர சொற்பொழிவில் விளக்கியுள்ளார். அதற்குரிய இணைப்பை இங்கு தருகிறேன். இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கேட்கலாம்.

இணைய முகவரி; https://www.poornalayam.org/classes-recorded/essence-of-gita/

இதனை தங்கள் இணையத்தில் இணைத்து விட்டால், சற்று விரிவாக பகவத் கீதையை தமிழில் கேட்க நினைக்கும் அன்பர்கள் பயனடைவார்கள் என நினைக்கிறேன்.

- எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி

********************************************************

நண்பரே
அனைவருக்கும் புரிய வேண்டும் என்றுதான் கங்குலியைத் தவிர, asitis வலைத்தளம், பாரதியாரின் மொழிபெயர்ப்பு, இஸ்கான் பிரபுபாதரின் "பகவத் கீதை - உண்மை உருவில்", கோயந்தகரின் "தத்வ விவேசனி" என நான்கு படைப்புகளை ஒப்புநோக்கி  பகவத்கீதையை நான் மொழிபெயர்த்து வருகிறேன். இருப்பினும் கீதை சற்று கடினமானதுதான். நீங்கள் கொடுத்திருக்கும் லிங்கில் உள்ள ஆடியோ வரிக்கு வரி விவரிப்பு அல்ல. அது கீதையின் சாரம்தான். இருப்பினும் பலருக்குப் பயன்படும் எனவே வலைத்தளத்தில் பகிர்கிறேன். நன்றி

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்

பி.கு.: பதிவிட்ட பிறகு அதே நண்பர் வரிக்கு வரி விளக்கம் தரும் லிங்கை நமக்கு அனுப்பித் தந்திருக்கிறார். https://www.poornalayam.org/classes-recorded/bhagavad-gita/ என்ற லிங்குக்குச் சென்றால் அவற்றைக் கேட்கலாம்.

********************************************************

வாசகர்கள் கவனத்திற்கு

மேற்கண்ட கடிதத்தில் சொல்லியுள்ளவாறு நான்கு படைப்புகளை ஒப்புநோக்கியே நான் கங்குலியின் "The Mahabharata" வில் பீஷ்ம பர்வத்தில் வரும் பகவத் கீதையை மொழிபெயர்த்து வருகிறேன்.

அப்படி ஒப்பு நோக்குகையில், அந்த நான்கு படைப்புகளும் மூலத்திற்கு மிக நெருக்கமாக இருப்பதை உணர முடிந்தது. சிற்சில வேறுபாடுகள் மட்டுமே உள்ளன. பகவத் கீதையை மொழிபெயர்க்க ஆரம்பித்தபோது, கங்குலி முழுமையாகச் செய்திருப்பாரா என்ற சந்தேகம் எனக்கிருந்தது. ஆனால் ஒவ்வொரு பகுதியையும் முடிக்கும்போதுதான். கீதையில் எந்த சிறு பகுதியையும் விடாது கங்குலி மொழிபெயர்த்திருப்பதை உணர முடிந்தது.

என் அறிவுக்கு எட்டியவரையில் கங்குலியின் பகவத் கீதையை முழு அர்ப்பணிப்போடே மொழிபெயர்த்து வருகிறேன். ஆங்காங்கே சில கடினமான பகுதிகளில் கங்குலி தரும் விளக்கங்களையும் அதனூடே மொழிபெயர்த்து வருகிறேன். அதுவும் போதாதென்று தோன்றினால் எனக்குத் தோன்றுவதையும் அடிக்குறிப்பாக இட்டே வருகிறேன். அதனால்தான் பகவத்கீதையின் ஒவ்வொரு பகுதிக்கும் இரண்டு மூன்று நாட்களை எடுத்துக் கொள்கிறேன். 

கங்குலியின் மொழிபெயர்ப்பில் சுலோகங்களாகப் பிரிக்காமல் நெடும்பத்திகளாகச் செய்திருக்கிறார். அதை  நான், மூலத்தோடு ஒப்பிட்டு ஒவ்வொரு சுலோகமாகப் பிரித்து ஆங்கிலத்தில் தனி பதிவாக இடுகிறேன். அதன் பிறகு ஒவ்வொரு சுலோகமாக மேற்சொன்ன நான்கு படைப்புகளையும் ஒப்பிட்டு மொழிபெயர்க்கிறேன்.

இவை அனைத்தையும் படிப்பவர்களுக்கு புரிதலில் எந்த தடங்கலும் நேரக்கூடாது என்பதற்காகத்தான் செய்கிறேன். சில இடங்களில் ஒரே சுலோகத்திற்கு பலரின் உரையோடு அதிக தகவல் கொடுப்பதால் கூட குழப்பமேற்படலாம். அதுவும் தவிர்க்க முடியாததே. மேலும் கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் புரிந்து கொள்வதற்காக பெரிய பெரிய உரைகள் உள்ளன. நான்கு சம்பிரதாயங்களின் படி பெரியோர் பலர் கீதைக்கு உரை எழுதியுள்ளனர். அந்த உரைகள் இல்லாது இவற்றின் பொருளை உணர்வது சற்றுக் கடினம் தான். எனினும், அவை அனைத்தையும் நாம் இங்கே தர முடியாது. மூலத்தில் என்ன உள்ளதோ, அதை மட்டுமே கங்குலி கொடுத்திருக்கிறார். கங்குலி என்ன கொடுத்திருக்கிறாரோ, அதை மட்டுமே நான் மொழி பெயர்த்திருக்கிறேன். எனவே பொருள் புரிய வில்லையென்றால் நீங்கள் அப்படிப்பட்ட விளக்க உரைகளையே நாட வேண்டும்.
"தத்வ - விவேசனி" மற்றும் இஸ்கானின் "பகவத் கீதை - உண்மையுருவில்" என்ற இரு புத்தகங்களில் நல்ல விளக்கங்கள் இருப்பதை நான் படித்திருக்கிறேன். இன்னும் வேறு சில நல்ல புத்தகங்களும் இருக்கலாம் அவற்றைத் தேடிப் படியுங்கள்.

மொழிபெயர்ப்பில், என் பங்குக்கு நான் ஏதாவது தவறு செய்யவும் வாய்ப்பிருக்கிறது. சொற்பிழையோ, பொருட்பிழையோ ஏதேனும் இருப்பதை உங்களில் யார் கண்டாலும் எனக்குத் தெரியப்படுத்துங்கள். நான் கங்குலியோடு மீண்டும் ஒரு முறை அதை ஒப்புநோக்கித் திருத்திக் கொள்வேன். நன்றி!

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்


ஆங்கிலத்தில் | In English