Thursday, October 08, 2015

மூவித நம்பிக்கைகளின் அறம் - சிரத்தாத்ரய விபாக யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 041

Religion by the Threefold Kinds of Faith - Sraddhatraya-Vibhaga yoga! | Bhishma-Parva-Section-041 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 29) {பகவத் கீதை - பகுதி 17}

பதிவின் சுருக்கம் : நம்பிக்கை, எண்ணங்கள், செயல்கள் மற்றும் உண்ணும் பழக்கங்கள் ஆகியவற்றில் உள்ள மூன்று விதங்களை மூன்று வித குணங்களுடன் தொடர்பு படுத்திக் கிருஷ்ணன் விளக்குவது...

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கிருஷ்ணா, சாத்திரங்களின் விதிகளைக் கைவிட்டாலும், நம்பிக்கையுடன் வேள்வி செய்பவர்களின் நிலை என்ன? அது நற்குணத்தினுடையதா {சத்வமா}? பேரார்வத்தினுடையதா {ரஜசா}? இருளினுடையதா {தமசா}?" என்று கேட்டான் {அர்ஜுனன்}. 17:1

அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "பண்புருவங்களின் (உயிரினங்களின்) நம்பிக்கைகள் மூன்று வகைப்படும். அவை அதனதன் (தனிப்பட்ட) இயல்பில் தோன்றுகின்றன. நன்னம்பிக்கை {நற்குணத்தால் விளையும் நம்பிக்கை = சாத்விகம்}, உணர்வுமிகுதியின் நம்பிக்கை {பேரார்வத்தால் உண்டாகும் நம்பிக்கை = ராஜசம்} மற்றும் மூடநம்பிக்கை {இருளால் உண்டாகும் நம்பிக்கை = தாமசம்} என்பவையே அவையாகும். அவற்றை இப்போது கேட்பாயாக. 17:2


ஓ! பாரதா {அர்ஜுனா}, ஒருவனின் நம்பிக்கையானது, அவனது சொந்த இயல்புக்கு தகுந்தபடியே அமைகிறது. இங்கே இருக்கும் ஓர் உயிர் நம்பிக்கை நிறைந்தே இருக்கிறது {மனிதன் எவனும் நம்பிக்கை நிறைந்தவனாகவே இருக்கிறான்}; ஒருவனின் நம்பிக்கை எதுவானாலும், அதுவே அவனாவான். 17:3

மூவித நம்பிக்கைகள்
1. நற்குணம் கொண்டவர்கள் {சாத்விகர்கள்} தேவர்களை வழிபடுகிறார்கள்; 
2. பேரார்வ குணம் கொண்டோர் {ராஜசர்கள்} யக்ஷர்களையும், ராட்சசர்களையும் {வழிபடுகிறார்கள்}; 
3. இருள் குணம் கொண்ட மக்கள் {தாமசர்கள்} இறந்தோரின் ஆவிகளையும், பூதக் கூட்டங்களையும் {பிரேத, பூத கணங்களை} வழிபடுகிறார்கள். 17:4

பாசாங்குத்தனம், செருக்கு ஆகியவற்றுக்குத் தன்னை இழந்து, பற்றில் விருப்பம் கொண்டு, வன்முறையில் ஈடுபட்டு, சாத்திரங்களால் விதிக்கப்படாத கடும் தவத்துறவுகளைப் பயின்று, (தங்கள்) உடல் உறுப்புகளின் தொகுதியையும் {பூதத்தொகுதியையும்}, (அவர்களின்) உடல்களுக்குள் நிலைத்திருக்கும் என்னையும் துன்புறுத்தி {சித்திரவதைக்குள்ளாக்கி} வரும் பகுத்தறிவில்லாத அம்மனிதர்கள், அசுர குணங்கொண்டவர்களாக அறியப்பட வேண்டும். 17:5-6

அனைவருக்கும் விருப்பமான உணவும் மூன்று வகையானதாக இருக்கிறது. வேள்வி, நோன்பு {தவம்}, கொடைகள் {தானங்கள்} ஆகியனவும் அதே போலவே உள்ளன (மூன்று வகையாக உள்ளன). அவற்றின் வேறுபாடுகளைப் பின்வருமாறு கேட்பாயாக. 17:7

{மூன்று வகை உணவு முறைகள்:}

1. வாழ்நாளின் அளவு, சக்தி, பலம், நோயின்மை {ஆரோக்யம்}, நன்னிலை, இன்பம் ஆகியவற்றை அதிகரித்து, சுவையுள்ளதாக, எண்ணெய்ப் பசையுள்ளதாக {குழம்பாக}, சத்துள்ளதாக, ஏற்கத்தக்க இனிமையுள்ளதாக இருக்கும் உணவு வகைகளே நல்லோரால் {சத்வ குணமுள்ளோரால்} [1] விரும்பப்படுகின்றன. 17:8

[1] இந்த இடத்தில் கங்குலியில் liked by God என்று இருக்கிறது. அஃது அச்சுப்பிழையாகவோ, ஸ்கேன் செய்ததில் ஏற்பட்ட குழப்பமாகவோ இருக்க வேண்டும். அங்கே liked by Good என்றே இருந்திருக்க வேண்டும். மூலத்தில் அது "ஸாத்த்விகப்ரியா sāttvikapriyāḥ" என்றே இருக்கிறது. அதனால் நானும் நல்லோர் விரும்புகின்றனர் என்று மொழிபெயர்த்திருக்கிறேன்.

உணவின் வகைகள்
2. கசப்பு, புளிப்பு, உப்பு, மிகுந்த சூடு, உறைப்பு, உலர்ந்த நிலை, எரிச்சல் ஆகியவற்றைக் கொண்டு, வலி, துயரம், நோய் ஆகியவற்றை உண்டாக்கும் உணவு வகைகள் உணர்ச்சிமிக்கோரால் {ராஜச குணமுள்ளோரால்} விரும்பப்படுகின்றன. 17:9

3. குளிர்ந்த, சுவையற்ற, அழுகிய, கெட்டுப் போன, பிறர் ஏற்க மறுத்த {எச்சிலான}, தூய்மையற்ற உணவு, இருள் தன்மை கொண்ட மனிதர்களால் {தமோ குணமுள்ளோரால்} விரும்பப்படுகிறது. 17:10

{மூன்று வகை வேள்வி முறைகள்:}

1. விதிகள் பரிந்துரைக்கும்படி, (அதனால் ஏற்படும்) பலனில் எந்த எதிர்பார்ப்பும் {ஏக்கமும்} இல்லாமல், வேள்வி புரிவதே கடமை என்று மனத்தில் தீர்மானித்து மனிதர்களால் எது {எந்த வேள்வி} செய்யப்படுமோ, அந்த வேள்வியே நல்லதாகும் {சத்துவக் குணமுடையதாகும்}. 17:11

2. ஆனால் பலனை எதிர்பார்த்தும், ஆடம்பரத்திற்காகவும் எது செய்யப்படுமோ, ஓ! பரதமகன்களின் தலைவனே {அர்ஜுனா}, அந்த வேள்வி பேரார்வ {ரஜோ} குணம் கொண்டது என்று அறிவாயாக. 17:12

3. விதிக்கு எதிரானது, {பிறருக்கு} உணவு அளிக்கப்படாதது, (புனித வரிகளைக் கொண்ட) மந்திரங்கள் அற்றது, துணை செய்த அந்தணர்களுக்குக் கூலி கொடுக்காதது, நம்பிக்கையில்லாமல் செய்யப்படுவது எதுவோ, அந்த வேள்வி இருள் {தமோ} குணம் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. 17:13

{மூன்று வகை நோன்பு{தவ} முறைகள்:}

1. தேவர்கள், மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்}, குருக்கள், அறிஞர்கள் ஆகியோரை வணங்குதல், தூய்மை, நேர்மை, பிரம்மச்சரியப் பயிற்சி, தீங்கிழையாமை ஆகியவற்றைக் கொண்டே உடலின் தவம் அமைவதாகச் சொல்லப்படுகிறது. 17:14

கோபத்தைத் தூண்டாத, உண்மையான, இனிமையான, நன்மை விளைவிப்பதான பேச்சு மற்றும் ஊக்கமான வேத கல்வி ஆகியனவே பேச்சின் தவமாகச் சொல்லப்படுகின்றன. 17:15

மன அமைதி, மென்மை, குறைவாகப் பேசும் தன்மை {மௌனம்}, தற்கட்டுப்பாடு, மனநிலையின் தூய்மை ஆகியனவே மனத்தின் தவமாகச் சொல்லப்படுகின்றன. 17:16

இந்த மூன்று வகைத் தவங்கள், {அதன்} பலனில் ஆசையற்ற அர்ப்பணிப்புள்ள மனிதர்களால் {யோகிகளால்} முழு நம்பிக்கையுடன் செய்யப்பட்டால், அது நற்குணத்தின் தன்மை {சத்வ குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:17

2. மரியாதை அடைதல், பெருமை அடைதல், வழிபாட்டை அடைதல் ஆகியவற்றின் நிமித்தமாக, பாசாங்குத்தனத்துடன், நிலையற்ற மற்றும் உறுதியற்ற வழியில் செய்யப்படும் தவம் பேரார்வத்தின் தன்மை {ரஜோ குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:18

3. மூட நம்பிக்கையுடன், தன்னைத்தானே துன்புறுத்திக் கொண்டு, பிறரைக் கெடுப்பதற்காகச் செய்யப்படும் தவம் இருளின் தன்மை {தமோக குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:19

{மூன்று வகை கொடைகள்:}

1. கொடுத்தே ஆக வேண்டும் என்ற காரணத்தினால், திரும்பக் கைம்மாறு செய்ய முடியாதவராக இருப்பினும் சரியான நபருக்கு, சரியான நேரத்தில் கொடுக்கப்படும் கொடை நற்குணத்தின் தன்மை {சத்வ குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:20

2. எனினும், (கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தின்) கைம்மாறு எதிர்பார்த்தோ, பலனில் ஒரு கண் கொண்டோ, இதயத் தயக்கத்துடன் அளிக்கப்படும் கொடை பேரார்வத்தின் தன்மை {ரஜோ குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:21

3. தகாத ஓர் இடத்தில், தகாத ஒரு நேரத்தில், தகாத பொருளுக்கு, மதிப்பின்றி, இகழ்ச்சியுடன் அலட்சியமாகக் கொடுக்கப்படும் கொடை {தானம்} இருளின் தன்மை {தமோ குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:22

 ஓம், தத், சத் என்று பிரம்மத்தின் நிலை மூன்று விதமாகச் சொல்லப்படுகிறது. அதனால்தான் (பிரம்மத்தினால்தான்), பிரமாணங்கள் {விதிகள் [அ] உறுதிமொழிகள்}, வேதங்கள், வேள்விகள் ஆகியன பழங்காலத்தில் விதிக்கப்பட்டன. 17:23

எனவே, விதியால் பரிந்துரைத்தபடி வேள்விகள், கொடைகள் மற்றும் தவங்கள் ஆகியவற்றைச் செய்யும்போது, பிரம்மத்தை உச்சரிக்கும் அனைவரும், "ஓம்" என்ற எழுத்தை உச்சரித்தே தொடங்குகிறார்கள். 17:24

"தத்" என்பதை {"தத்" என்ற சொல்லை} உச்சரித்து, பல்வேறு வேள்விச் சடங்குகள், தவம், கொடைகள் ஆகியவற்றை விடுதலையை {மோட்சத்தை} விரும்புபவர்கள் பலனை எதிர்பார்க்காமல் செய்கிறார்கள். 17:25

"சத்" என்பது இருப்பு {உண்மை} மற்றும் நன்மையைக் குறிக்கப் பயன்பட்டு வருகிறது. அதே போல, ஓ! பிருதையின் மகேன {அர்ஜுனா}, "சத்" என்ற சொல், மங்கலகரமான {சுபச்} செயல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. 17:26

வேள்விகள், தவங்கள், கொடைகள் ஆகியவற்றில் கொண்ட மாறாவுறுதி நிலையும் "சத்" என்றே அழைக்கப்படுகிறது. அதன் {பிரம்மத்தின்} [2] பொருட்டாகச் செய்யப்படும் செயலும் "சத்" என்றே அழைக்கப்படுகிறது. 17:27

[2] "முன்னர் சொன்ன பிரிவுகளின் படி இங்கே "அதன்" என்ற சொல் வேள்வி, தவம் மற்றும் தானத்தையே தெளிவாகக் குறிக்கிறது. எனினும், விரிவுரையாளர்கள், "அதன்" என்பது அவற்றைத் தவிரப் பிரம்மத்தையும் குறிக்கலாம் என்று கூறுகிறார்கள். "அதன்" என்பது பிரம்மத்தைக் குறிக்கவில்லை என்பதில் எனக்கு நிச்சயமில்லை" என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.

நம்பிக்கையில்லாமலேயே, (நெருப்பில்) எதைப் படைத்தாலும், எது {தானமாக} அளிக்கப்பட்டாலும், என்ன தவம் செய்யப்பட்டாலும், என்ன செயலைச் செய்தாலும், ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, அது "சத்"-க்கு எதிரானது {அசத்} என்று சொல்லப்படுகிறது. அவை இங்கும் {இம்மையிலும்}, இதன் பிறகும் {மறுமையிலும்} பயன்படாது [3]" என்றான் {கிருஷ்ணன்}. 17:28

[3] "ஓம்", "தத்", "சத்" என்ற வார்த்தைகளுக்குத் தனித்தனியான பயன்கள் இருக்கின்றன. அவை மூன்றும் பிரம்மத்தையே குறிக்கின்றன என்ற புரிதலோடு, இங்கே சுட்டிக்காட்டியபடி அவை பயன்படுத்தப்பட்டால், அத்தகு பயன்பாடு, {அவை சார்ந்த} அந்தந்த நடவடிக்கைகளின் குறைபாடுகளைக் குணப்படுத்தும் என்பதையே இந்த வரிகளின் மூலம் ஆசிரியன் {கிருஷ்ணன்} சொல்ல விரும்புகிறான்" என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.


ஆங்கிலத்தில் | In English