Friday, October 09, 2015

விடுதலை மற்றும் துறவின் அறம் - மோக்ஷ சந்நியாச யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 042

Religion by Deliverance and Renunciation - Moksha–Sanyasa yoga! | Bhishma-Parva-Section-042 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 30) {பகவத் கீதை - பகுதி 18}

பதிவின் சுருக்கம் : முன்னர்ச் சொல்லப்பட்ட அனைத்து அறங்களின் முடிவுரைகளைக் கிருஷ்ணன் சுருக்கமாகத் தொகுப்பது; அற வடிவங்கள் அனைத்தையும் கைவிட்டுத் தன்னைச் சரணடையுமாறு அர்ஜுனனிடம் கிருஷ்ணன் சொல்வது; அதுவே வாழ்வின் முழுமை என்றும் அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் விளக்குவது...

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, துறத்தல் {சந்நியாசம்} மற்றும் கைவிடல் {தியாகம்} ஆகியவற்றின் உண்மை இயல்புகளை, ஓ! புலன்களின் தலைவா, ஓ! கேசியைக் கொன்றவனே {கிருஷ்ணா} தனித்தனியாக அறிந்து கொள்ள விரும்புகிறேன்" என்றான் {அர்ஜுனன்} [1]. 18:1


[1] ""ஸந்ந்யாஸ Sanyasa" என்பதை நான் "துறத்தல்" எனக் கொண்டிருக்கிறேன். K.T.டெலங்க்-ம் அப்படியே செய்திருக்கிறார். திரு.டேவீசோ "விலகி நிற்கும் நிலை" எனக் கொள்கிறார். அதே போல "த்யாக Tyaga" என்பதை நான் "கைவிடல்" எனக் கொண்டிருக்கிறேன். திரு.டேவீசோ "துறவு" எனக் கொள்கிறார். எனினும், இந்த இரு வார்த்தைகள் என்ன பொருளைக் கொண்டிருக்கின்றன என்பதைப் பின்வரும் சுலோகங்கள் முழுமையாக விளக்குகின்றன. அப்போது அதை அறியலாம்" என்று இங்கே விளக்கமளிக்கிறார் கங்குலி.

அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஆசையுடன் செய்யப்படும் செயல்களை நிராகரிப்பதே துறத்தல் {சந்நியாசம்} எனக் கற்றோரால் அறியப்படுகிறது. அனைத்துச் செயல்களின் பலனையும் கைவிடுவதே, பகுத்தறிவோரால், கைவிடல் {தியாகம்} என அழைக்கப்படுகிறது. 18:2

அறிவுடைய மனிதர்கள் சிலர் செயலையே தீமையென {கருதி} கைவிட வேண்டும் என்று சொல்கின்றனர், பிறரோ வேள்வி, கொடைகள் மற்றும் தவம் போன்ற செயல்கள் கைவிடப்படக்கூடாது என்று சொல்கின்றனர். 18:3

ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, கைவிடல் {தியாகம்} என்பது மூன்று வகைப்படும் என்பதால், ஓ! பரதனின் மகன்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, கைவிடல் {தியாகம்} என்பதில் என் முடிவைக் கேட்பாயாக. 18:4

வேள்வி, கொடைகள், தவம் ஆகிய செயல்கள் கைவிடப்படக்கூடாது. உண்மையில் அவை செய்யப்படவே வேண்டும். வேள்வி, கொடை, தவம் ஆகியவையே அறிவுடையோரின் தூய்மைக்கானவை {தூய்மைக்கான செயல்களாகும்}. 18:5

ஆனால் அந்தச் செயல்களும் கூடப் பற்று மற்றும் பலன் ஆகியவற்றைக் கைவிட்டே செய்யப்பட வேண்டும். ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, இதுவே எனது  தீர்மானமான உயர்ந்த {உத்தமமான}கருத்தாகும். 18:6

(சாத்திரங்களில்) பரிந்துரைக்கப்பட்ட ஒரு செயலைத் துறப்பது முறையாகாது. அதைத் துறப்பதென்பது மயக்கத்தினால் {மாயையினால்} ஏற்படுவதாகும். {எனவே}, அஃதை {அந்த முறையற்ற துறவு} இருளின் தன்மை வாய்ந்ததாகத் {தமோ குணம் எனத்} தீர்மானிக்க வேண்டும். 18:7

உடலின் வலியால் (அஞ்சி), அதைத் துயரமாகக் (துயரத்தின் மூலாதாரமாகக்) கருதி செயலைக் கைவிடும்போது, பேரார்வத்தின் தன்மை {ரஜோ குணம்} கொண்ட அத்தகு கைவிடலைச் {தியாகத்தைச்} செய்யும் ஒருவன், அந்தக் கைவிடலின் {தியாகத்தின்} பலனை ஒருபோதும் அடையமாட்டான். 18:8

(சாத்திரங்களில்) பரிந்துரைக்கப்பட்ட செயல் ஒன்றை, {அது} செய்யப்பட வேண்டியதே என்று (அதைக் கருதி) செய்து, அதில் பற்றையும், பலனையும் கைவிட்டால் {தியாகம் செய்தால்}, ஓ! அர்ஜுனா, அந்தக் கைவிடல் {தியாகம்} நற்குணத்தின் தன்மை கொண்டது {சாத்வீகம்} எனக் கருதப்படுகிறது. 18:9

அறிவைக் கொண்டு, ஐயங்களை அகற்றி, நற்குணத்தன்மை கொண்டவனான கைவிடுபவன் {தியாகி} ஒருவன், ஏற்கத்தகாத செயலில் வெறுப்பையோ, ஏற்கத்தகுந்தவற்றில் பற்றையோ கொள்வதில்லை [2]. 18:10

[2] "இங்கே சொல்லுக்குச் சரியான பொருளைக் கொடுக்கும் திரு.டேவீஸ் {Mr.Davies}, இந்த வாக்கியத்தின் உண்மையான பொருளையோ, பயனிலையையோ சரியாகப் பின்பற்றவில்லை. "குஸலே kusala {ஏற்கத்தக்க} அகுஸலம் akusala {ஏற்கத்தகாத}" ஆகியவற்றுக்கு அவர் லாசனை {Lassen} பின்பற்றி "செழிப்பான", "செழிப்பற்ற" என்று பொருள் கொள்கிறார். "மேதாவீ medhabi {அறிவைக் கொண்டவன்}" என்பதற்கு K.T.டெலங்க் "திறன்வாய்ந்தவன்" என்று பொருள் கொள்கிறார். அது நல்ல பயன்பாடு என்று ஏற்கத்தகாதது" என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.

உடல் கொண்ட ஒரு மனிதனால் செயல்களை முற்றாகக் கைவிட முடியாது, (எனவே), செயல்களின் பலனை எவன் கைவிடுவானோ {தியாகம் செய்வானோ}, அவனே உண்மையாகக் கைவிடுபவன் {தியாகி} எனச் சொல்லப்படுகிறான். 18:11

கைவிடாதவர்கள் {தியாகம் செய்யாதோர்}, தீமையானது, நன்மையானது மற்றும் இரண்டும் கலந்தது என (இந்த) மூன்று வகைப் பலன்களை {கர்ம பயன்களை} இதன் பிறகு {மறுமையில்} அடைகிறார்கள். ஆனால் துறப்பவர்களுக்கோ {துறவிகளுக்கோ} எதுவும் இல்லை {அவர்கள் எதையும் அடைவதில்லை} [3]. 18:12

[3] இங்கே துறப்பவர் என்று சொல்லப்படுவது செயல்களின் பலனைத் துறந்தவர் எனப் பொருள் படும் என்று ஸ்ரீதரர் சொல்வதாக இங்கே விளக்குகிறார் கங்குலி.

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, செயல்களை அழிக்கும் முறைகளாகச் சாங்கியத்தில் அறிவிக்கப்பட்டவையும், செயல்கள் அனைத்தின் நிறைவுக்கானவையுமான ஐந்து{5} காரணங்களை என்னிடமிருந்து கேட்பாயாக [4]. 18:13

[4] ""க்ருதாந்தே Kritante {செயல்களின் அழிவுக்கான முறை}" என்பதைச் சங்கரர், "ஸாங்க்யே Sankhye {சாங்கியம்}" என்ற பெயர்ச்சொல்லின் உரிச்சொல்லாக {பெயர்ச்சொல்லின் விளக்கத்தைக் கூட்டப் பயன்படுத்தப்படும் தொடர்புச் சொல்லாக} எடுத்துக் கொண்டு, அது வேதாந்தத்தைக் குறிப்பதாக நினைத்துக் கொள்கிறார். {அதாவது, "செயல்களை அழிக்கும் முறைகளாகச் சாங்கியத்தில் அறிவிக்கப்பட்டவையும்" என்பதற்குப் பதில் "சாங்கிய சாஸ்த்திரத்தில் அறிவிக்கப்பட்டவையும்" என்று நினைத்துக் கொள்கிறார்}. ஸ்ரீதரரும் அதே கருத்தையே கொண்டிருப்பதாகத் தெரிகிறது" என இங்கே விளக்குகிறார் கங்குலி.

(அவை {ஐந்து காரணங்களாவன}) தளம் {இடம்}, செயல்படுபொருள் {கர்த்தா [அ] செயலைச் செய்பவன்}, பல்வேறு வகைகளிலான உறுப்புகள் {கரணங்கள்}, பல்வேறு விதமான முயற்சிகள் {செயல்முறைகள்} மற்றும் அவற்றுடன் ஐந்தாவதாக தெய்வங்கள் எனவும் கொள்வாயாக [5]. 18:14

[5] இங்கே "தளம்" என்பது உடலைக் குறிப்பதாகும். "செயல்படு பொருள்" என்பது தன்னைத் தானே செயல்படுபவன் என நினைத்துக் கொள்ளும் மனிதனைக் குறிப்பதாகும். இங்கே "உறுப்புகள்" எனப்படுவன பார்வை முதலிய புலனுறுப்புகளாகும். முயற்சி {செயல்முறை} என்பது பிராணன் முதலிய உயிர்க்காற்றுகளின் செயல்பாடுகளாகும். "தெய்வங்கள்" என்பன, கண்கள் முதலிய பிற புலனுறுப்புகளை ஆட்சி செய்வனவாகும் என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.

உடல், பேச்சு, அல்லது மனம் ஆகியவற்றைக் கொண்டு ஒரு மனிதன் எந்தச் செயலையும் நீதியுடனோ, மாறாகவோ {நீதியற்றோ} செய்தால், இவை ஐந்தே அதன் {அந்தச் செயலின்} காரணங்களாகும். 18:15

அஃது இப்படியிருக்கையில், தூய்மையில்லா அறிவின் காரணமாக, தன்னை மட்டுமே செயல்படுபொருளாக எவன் காண்பானோ, அவன் மந்த மனத்தால் {ஒன்றையும்} காணவில்லை {அவன் காட்சியற்றவன் ஆவான்}. 18:16

{நான் என்ற} அகங்கார உணர்வற்று, களங்கம் {பற்று} இல்லாத மனம் கொண்டவன் எவனோ, அவன் இந்த மக்கள் அனைவரையும் கொன்றாலும், கொலையாளியாவதில்லை, (அந்தச் செயலால்) {அவன்} பிணைக்கப்படுவதுமில்லை {கட்டப்படுவதுமில்லை} [6]. 18:17

[6] "அகங்கார உணர்வற்று" என்பது தன்னைச் செயல்படுபவனாகக் கருதாமல் என்று பொருள் படும், "களங்கம்" என்பது பலனில் ஆசை என்ற கறையாகும் என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.

அறிவு, அறியப்படும் பொருள், அறிபவன் ஆகியவை செயல்களைத் தூண்டும் மூன்று பிரிவுகளாக அமைகின்றன. கருவி, செயல், செயல்படுபொருள் {கர்த்தா, தலைவன்} ஆகியவை செயல் நிறைவின் மூன்று பிரிவுகளாக இருக்கின்றன [7]. 18:18

[7] "ஸங்க்ரஹ Samgrahas" என்பதைத் திரு.டேவீஸ் "நிறைவு" எனக் கொள்கிறார். இதுவே சரி என நான் நினைக்கிறேன். K.T.டெலங்க் இதையே "சுருக்கம்" என்பதற்கு இணையாகப் பொருள் கொள்கிறார்" என இங்கே விளக்குகிறார் கங்குலி.

அறிவு, செயல், செயல்படுபொருள் {கர்த்தா, தலைவன்} ஆகியவை தங்கள் குணங்களில் கொண்டுள்ள வேறுபாடுகளின் படி குண விளக்கக்கூற்றில் மூன்று வகையாக அறிவிக்கப்படுகிறது. அவற்றையும் முறையாகக் கேட்பாயாக [8]. 18:19

[8] இங்கே குணங்களின் விளக்கக்கூற்று என்பது சாங்கிய அமைப்பு {சாங்கியம்} ஆகும் என விளக்குகிறார் கங்குலி.

அனைத்துப் பொருட்களிலும் ஒரே நித்தியமான சாரம், பிரிவுபட்டனவற்றுள் பிரிவில்லாமல், எதனால் {எந்த அறிவால்} காணப்படுமோ, அதுவே நற்குணத் தன்மை கொண்ட அறிவு {சாத்வீகம்} என்பதை அறிவாயாக. 18:20

அனைத்துப் பொருட்களுக்குள்ளும் உள்ள பிரிவினையின் விளைவால், அவற்றைப் பல்வேறு வகையானவையாகவும், பல்வேறு சாரங்களாகவும் எந்த அறிவு பகுத்தறியுமோ, அந்த அறிவு பேரார்வத்தின் தன்மை கொண்ட அறிவு {ராஜசம்} என்பதை அறிவாயாக. 18:21

ஆனால், அதுவே முழுமையானது என்றெண்ணி (ஒவ்வொரு) தனிப்பொருளுடனும் எது பற்று கொள்ளுமோ, காரணம் இல்லாத {அறிவில்லாத}, உண்மையில்லாத, அற்பத்தனமான அஃது இருளின் தன்மை கொண்ட அறிவு {தாமசம்} என்று சொல்லப்படுகிறது. 18:22

பற்று, ஆசை, வெறுப்பு ஆகியன இல்லாமல், பலனை எதிர்பாராமல் ஒருவனால் செய்யப்படுவதும், {சாத்திரங்களில்} பரிந்துரைக்கப்பட்டதுமான செயல் நற்குணத் தன்மை கொண்டது {சாத்வீகம்} என்று சொல்லப்படுகிறது.

ஆசைக்குகந்த பொருட்களை நாடியோ, அகங்காரம் நிறைந்தோ ஒருவனால் செய்யப்பட்டு எது பெருந்துன்பத்தைத் தருமோ, அந்தச் செயல் பேரார்வத்தின் தன்மை கொண்டது {ராஜசம்} என்று சொல்லப்படுகிறது. 18:24

விளைவுகள், இழப்பு, (பிறருக்கு நேரும்) தீங்கு, (ஒருவனின் சொந்த) சக்தி ஆகியவற்றைக் கருதாமல், மயக்கத்தில் எது செய்யப்படுமோ, அந்தச் செயல் இருளின் தன்மை கொண்டது {தாமசம்} என்று சொல்லப்படுகிறது [9]. 18:25

[9] இங்கே இத்தகு செயலை கங்குலி "பேரார்வத்தின் தன்மை கொண்டது {ராஜசம்}" என்றே குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் மூலத்தையும், இன்னும் பிற பதிப்புகளையும் ஒப்புநோக்குகையிலும், பொருளின் தன்மையை உணர்ந்து பார்க்கையிலும் இது தவறெனப் படுவதால் அந்தச் செயல் "இருளின் தன்மை கொண்டது {தாமசம்}" என்று இங்கே திருத்தி மூலத்தில் "தத் தாமஸம் உச்யதே tat tamasam ucyate" என்று உள்ளதின் தமிழ்ப் பொருளையே மேலே கொடுத்திருக்கிறேன்.

நிலையான தன்மையும் {உறுதியும்}, சக்தியும் {ஊக்கமும்} கொண்டு, வெற்றி மற்றும் தோல்வியால் அசைக்கப்படாமல், {நான் என்ற எண்ணம் அற்றவனாக} தன்னைப் பற்றி ஒருபோதும் பேசாதவனும், பற்றில் இருந்து விடுபட்டவனுமான செயல்படுபொருளானவன் {கர்த்தா} நற்குணத் தன்மை கொண்டவன் {சாத்வீகன்} என்று சொல்லப்படுகிறான். 18:26

பற்று நிறைந்து, செயல்களின் பலனை விரும்பி, பேராசை, கொடூரம் ஆகியவற்றைக் கொண்டு, தூய்மையற்றவனாக இருந்து, இன்பம் மற்றும் துன்பங்களை உணர்பவனான செயல்படுபொருளானவன் {கர்த்தா} பேரார்வத் தன்மை கொண்டவன் {ரஜோ குணத்தான்} என்று சொல்லப்படுகிறான். 18:27

யன்பாடு தெரியாமல், பகுத்தறிவற்று, பிடிவாதம் கொண்டு, வஞ்சகம் நிறைந்து, தீங்கு செய்து, சோம்பல் நிறைந்து, நம்பிக்கையற்று, காலந்தாழ்த்துபவனான செயல்படுபொருளானவன் {கர்த்தா} இருள் தன்மை கொண்டவன் {தமோ குணத்தான்} என்று சொல்லப்படுகிறான் [10]. 18:28

[10] ""ப்ராக்ருத: Prakrita" என்பதற்கு ஸ்ரீதரரைப் பின்பற்றி "பகுத்தறிவற்ற" என்று பொருள் கொண்டிருக்கிறேன். திரு.டேவீசோ இதை "தீங்கு செய்யும்" என்று பொருள் கொள்கிறார்" என இங்கே விளக்குகிறார் கங்குலி.

ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, அறிவாற்றல் {புத்தி, அறிவுத்திறன்} மற்றும் மனவுறுதி ஆகியவற்றின் மூன்றுவித பிரிவுகளை அதனதன் தன்மைகளின்படி {குணங்களின்படி} மிகவிரிவாகவும் துல்லியமாகவும் நான் அறிவிக்கப்போகிறேன் கேட்பாயாக. 18:29

{மூன்று வகை புத்தி/அறிவுத்திறன்:}
1. செயல் மற்றும் செயலின்மை, செய்யப்பட வேண்டியவை மற்றும் கூடாதவை, அச்சம் மற்றும் அச்சமின்மை, பற்று மற்றும் விடுதலை ஆகியவற்றை அறிந்த அறிவாற்றல் {புத்தி}, ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, நற்குணத் தன்மை கொண்டது {சாத்வீக புத்தி} ஆகும். 18:30

2. சரி {அறம்} மற்றும் தவறு {மறம்} [11], செய்யப்பட வேண்டிவை மற்றும் கூடாதவை ஆகியவற்றில் குறையுடன் பகுத்தறியும் {உள்ளபடி அறியாத} அறிவாற்றல் {புத்தி}, ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, பேரார்வத் தன்மை கொண்டது {ராஜச புத்தி} ஆகும். 18:31

[11] இது மூலத்தில் தர்மம் அதர்மம் என்றே இருக்கிறது. எனவே இங்கே அறம், மறம் என்றே நாம் கொள்ளலாம்.

3. தவறானதைச் சரியென்றும், அனைத்தையும் நேர்மாறாகவும் கருதி இருளால் மறைக்கப்பட்ட அறிவாற்றல் {புத்தி}, ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, இருளின் தன்மை கொண்டது {தாமச புத்தி} ஆகும். 18:32

{மூன்று வகையான மனவுறுதிகள்:}

1. மனம், உயிர்மூச்சுகள், புலன்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை அர்ப்பணிப்பின் {யோகத்தின்} மூலம் எது தளராமல் கட்டுப்படுத்துமோ, அந்த மனவுறுதி, ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, நற்குணத்தின் தன்மை கொண்டது {சாத்வீக மனவுறுதி} ஆகும் [12]. 18:33

[12] திரு.டேவீஸ் "தளராமல்" என்பதை அர்ப்பணிப்பின் {பக்தி} உரிச்சொல்லாகக் {தளராத பக்தி எனக்} கொள்கிறார். இலக்கணப்படி இது தவறானதாகும் என இங்கே விளக்குகிறார் கங்குலி. டேவீசைப் போலவே பாரதியாரும் இதை "பிறழ்ச்சியில்லாத யோகம்" என "தளராத அர்ப்பணிப்பு" என்பதற்கு இணக்கமாவே சொல்கிறார்.

2. ஆனால், ஓ! அர்ஜுனா, அறம், இன்பம், பொருள் ஆகியவற்றைப் பற்றின் மூலம் தாங்கி, பலனை எது விரும்புமோ, அந்த மனவுறுதி, ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, பேரார்வத்தின் தன்மை கொண்டது {ராஜச மனவுறுதி} ஆகும். 18:34

3. பகுத்தறிவற்ற ஒரு மனிதன், உறக்கம், அச்சம், கவலை, மனச்சோர்வு, மடமை ஆகியவற்றை எதனால் கைவிடாமல் இருப்பானோ, அந்த மனவுறுதி இருளின் தன்மை கொண்டதாக {தாமச மனவுறுதி எனக்} கருதப்படுகிறது. 18:35

ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, மூவகை இன்பங்களை என்னிடம் இருந்து இப்போது கேட்பாயாக.
1. மீண்டும் மீண்டும் (அனுபவிப்பதால்) எதில் ஒருவன் இன்பதைக் காண்பானோ, எது வலிக்கு {துன்பத்துக்கு} ஒரு முடிவைக் கொண்டு வருகிறதோ, எது தொடக்கத்தில் விஷமாகவும், ஆனால் முடிவில் அமுதாகவும் இருக்கிறதோ, தன்னறிவினால் உண்டாக்கப்பட்ட மன அமைதியில் எழுந்த [13] அந்த இன்பமே நற்குணத் தன்மை கொண்டது {சாத்வீக இன்பம்} எனச் சொல்லப்படுகிறது. 18:36-37

[13] "'ஆத்ம புத்தி ப்ரஸாதஜம் Atma-budhi-prasadajam' - இதை K.T.டெலங்க், சங்கரரால் கொடுக்கப்படும் மாற்று விளக்கத்தைப் பின்பற்றிச் 'சுயத்தின் தெளிந்த அறிவு' எனக் கொள்கிறார். திரு.டேவீஸ், 'ஒருவனது சுய மன அமைதி' என அதை வழங்குகிறார். நானோ ஸ்ரீதரரைப் பின்பற்றி, அதற்குத் 'தன்னறிவினால் உண்டாக்கப்பட்ட மன அமைதியில் எழுந்தது" என்று பொருள் கொண்டிருக்கிறேன்" என இங்கே விளக்குகிறார் கங்குலி. "தன் மதியில் பிறப்பது" என இதைப் பாரதியார் பொருள் கொள்கிறார்.

2. புலன்நுகர் பொருட்களில் புலன்கள் கொள்ளும் தொடர்பால் எது உண்டாகுமோ, முதலில் அமுதமாகவும், முடிவில் விஷமாகவும் எது தோன்றுமோ, அந்த இன்பம் பேரார்வத்தின் தன்மை கொண்டது {ராஜச இன்பம்} எனக் கொள்ளப்படுகிறது. 18:38

3. தொடக்கத்திலும், அதன் விளைவுகளிலும் ஆத்மாவை எது மயக்குமோ, உறக்கம், சோம்பல், மடமை ஆகியவற்றில் இருந்து எது பிறக்குமோ, அந்த இன்பம் இருளின் தன்மை கொண்டது {தாமச இன்பம்} என விளக்கப்படுகிறது. 18:39

இயற்கையில் பிறக்கும் இந்த மூன்று குணங்களில் இருந்து விடுபட்ட ஒருவன், பூமியிலோ, சொர்க்கத்தில் தேவர்களுக்கு மத்தியிலோ கூட இல்லை. 18:40

பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களின் கடமைகளும் கூட, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, இயற்கையில் பிறக்கும் (இந்த மூன்று) குணங்களின் மூலமே வேறுபடுகின்றன. 18:41

மன அமைதி {மனவடக்கம்}, தற்கட்டுப்பாடு {புலனடக்கம்}, தவத்துறவுகள், தூய்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, நேர்மை, அறிவு, அனுபவம் மற்றும் (மறுமையில் உள்ள இருப்பின்) நம்பிக்கை {ஆத்திகம்} ஆகிய பிராமணர்களின் கடமைகள் (அவர்களுக்குச் சரியான) இயற்கையில் இருந்தே பிறக்கின்றன. 18:42

வீரம், ஆற்றல், உறுதி, திறமை, போரில் புறமுதுகிடாமை, ஈகை, இறைமை {ஆட்சியாளராக இருக்கும் தன்மை} ஆகிய க்ஷத்திரியர்களின் கடமைகள் (அவர்களுக்குச் சரியான) இயற்கையில் இருந்தே பிறக்கின்றன. 18:43

உழவு, கால்நடை வளர்த்தல் {கௌரக்ஷ்ய go-raksya = பசுக் காத்தல்}, வணிகம் ஆகியவை வைசியர்களின் இயல்பான கடமைகளாகும். 

அதே போலச் சூத்திரருக்கும், அவர்களுக்கு இயற்கையாக ஏற்பட்ட தொண்டே [14] கடமையாகும். 18:44

[14] இங்கே கங்குலியில் இருந்து நான் சற்று விலகியிருக்கிறேன். இங்கு அவர் "Servitude", அஃதாவது "அடிமைத்தனம்" என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். இது மூலத்தில் "பரிசர்யா paricaryā" என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு "தொண்டு" என்றும் "சேவை" என்றும் பொருள் கொள்ளலாம். அடிமைத்தனம் என்ற சொல் அங்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பாரதியார், பிரபுபாதர், கோயந்தகர் ஆகியோர் இங்குத் தொண்டு என்றே பொருள் கொள்கின்றனர்.

தனது சொந்த கடமைகளில் ஈடுபடும் ஒவ்வொரு மனிதனும், முழுமை அடைகிறான் {சித்தி அடைகிறான்}. தனது கடமைகளின் பயன்பாட்டின் மூலம் ஒருவன் முழுமையை எப்படி அடைகிறான் என்பதை இப்போது கேட்பாயாக. 18:45

எவனில் இருந்து அனைத்து உயிரினங்களின் அசைவும் தோன்றுகின்றனவோ, எவன் இவை அனைத்திலும் படர்ந்தூடுருவி இருக்கிறானோ, அவனை, தனது சொந்த கடமையில் (ஈடுபட்டு) வழிபட்டே, ஒருவன் முழுமையை அடைகிறான் {தனக்குரிய கர்மத்தால் அவனைப் பூஜை செய்தே ஒருவன் ஈடேறுகிறான்}. 18:46

மற்றொருவனின் கடமையை {பரதர்மத்தை} நன்கு செய்வதை விட, குறையுடன் செய்யப்படும் தன் கடமையே {சுயதர்மமே - தன்னறமே} சிறந்ததாகும். (ஒருவனது சொந்த) இயல்பு {இயற்கை} பரிந்துரைக்கும் கடமையைச் செய்வதால், ஒருவன் பாவத்தை அடைவதில்லை [15]. 18:47

[15] இந்த இடத்தில் பாரதியார் மிக அழகாக, "இயற்கையிலேற்பட்ட தொழிலைச் செய்வதனால் ஒருவன் பாவமடைய மாட்டான்" என்கிறார். பிரபுபாதர், "ஒருவனது இயற்கைக்கு ஏற்ப விதிக்கப்பட்டுள்ள கடமைகள், பாவ விளைவுகளால் என்றும் பாதிக்கப்படுவதில்லை" என்கிறார்.

ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, செயல்கள் அனைத்திலும் தீமையானது [16] நெருப்பைச் சூழும் புகை போல உள்ளது என்பதால், தன் இயல்பான கடமையில் தீமையின் களங்கம் இருந்தாலும், அதை {தன் இயற்கை கடமையை} ஒருவன் கைவிடக்கூடாது. 18:48

[16] இங்கே மூலத்தில் "தோஷம் dosam" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்குப் பாரதியார் "குறை" என்று பொருள் கொள்கிறார். பிரபுபாதர் இங்கே "தோஷம்" என்ற சம்ஸ்க்ருத சொல்லையே பயன்படுத்துகிறார். தீமை என்பதிலும் பெரிய தவறில்லை என்றே நான் புரிந்து கொள்கிறேன்.

எங்கும் பற்றற்ற மனம் கொண்டவன் எவனோ, தன்னைக் கட்டுப்படுத்தியவன் எவனோ, ஆசை விலகியவன் எவனோ, அவனே துறவின் மூலம் செயலில் இருந்து விடுதலையடைந்து உயர்ந்த முழுமையை அடைகிறான். 18:49

(இந்த வகை) முழுமையை அடைந்த ஒருவன், அறிவின் உயர்ந்த நிலையான பிரம்மத்தை எப்படி அடைகிறான் என்பதை என்னிடம் இருந்து சுருக்கமாக அறிந்து கொள்வாயாக. 18:50

தூய மனதுடன், தனது உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி, ஒலி முதலிய பிற புலன்நுகர் பொருட்களைத் துறந்து, பற்றையும் வெறுப்பையும் கைவிட்டு, தனிமையான இடத்தில் வசித்து, குறைவாக உண்டு, பேச்சு, உடல், மனம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி {வென்று}, எவன் தியானம் மற்றும் நுண்மமாதலில் {யோகத்தில்} எப்போதும் நோக்கம் கொண்டுள்ளானோ, எவன் வேறுபாடின்றி இருக்கிறானோ, எவன் அகங்காரம், வன்முறை, செருக்கு, காமம், கோபம் மற்றும் சூழ்ந்திருப்பவற்றை (அனைத்தையும்) கைவிடுகிறானோ, தன்னலத்தில் இருந்து விடுபட்டு, (மன) அமைதியுடன் இருக்கும் அவனே பிரம்மத்தில் கலப்பதற்குத் தகுந்தவனாகிறான். 18:51-53

பிரம்மத்தில் ஒன்று பட்டு, ஆவியில் அமைதியடைந்த (அத்தகு) ஒருவன் வருந்தமாட்டான், ஆசைப்படமாட்டான்; அனைத்துயிரையும் ஒன்றாகக் கருதும் அவன் என்னிடம் உயர்ந்த அர்ப்பணிப்பை {பக்தியை} அடைகிறான். 18:54

(அந்த) அர்ப்பணிப்பைக் {பக்தியைக்} கொண்டு அவன் என்னைப் புரிந்து கொள்கிறான். நான் என்னவாக இருக்கிறேன்? நான் யார்? என்று உண்மையில் புரிந்து கொண்டு, அதன்காரணமாக அவன் என்னுள் {பிரம்மத்துள்} [17] நுழைகிறான். 18:55

[17] ""விஸதே ததநந்தரம் visate tad-anantaram" என்று மூலத்தில் உள்ளது. இதற்குப் பாரதியார் "தத் (அஃது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்" எனப் பொருள் கொள்கிறார். பிரபுபாதர் "இறைவனின் திருநாட்டில் நுழைய முடியும்" எனப் பொருள் கொள்கிறார். கோயந்தகர், "அக்கணமே என்னிடம் ஐக்கியமாகிறான்" என்று பொருள் கொள்கிறார். இங்கே கோயந்தகரின் தத்வவிவேசனீ கங்குலியின் மொழிபெயர்ப்புடன் பொருந்துகிறது.

என்னையே புகலிடமாகக் கொண்டு அனைத்துச் செயல்களையும் அனைத்து நேரங்களிலும் செய்யும் ஒருவன் எனது அருளால் நித்தியமான அழிவற்ற பதத்தை  அடைகிறான். 18:56

செயல்கள் அனைத்தையும் உனது இதயத்தில் எனக்கே அர்ப்பணித்து, என்னிடம் அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} மன நுண்மையுடன் {புத்தி யோகத்தில் ஈடுபட்டு}, உனது எண்ணங்களை என்னில் நிலைக்கச் செய்வாயாக. 18:57

என்னில் உனது எண்ணங்களை நிலைக்கச் செய்தால், எனது அருளால் இக்கட்டுகள் அனைத்தையும் நீ வெல்வாய். ஆனால், ஆணவத்தினால் நீ கேட்க மாட்டாயென்றால், (பின்னர்) நீ முற்றிலும் அழிவாய். 18:58

"நான் போரிட மாட்டேன்" என்று நீ ஆணவத்துடன் நினைத்தாயானால், அந்த உனது தீர்மானம் வீணாகும், (ஏனெனில்) இயற்கையே உன்னைக் கட்டுப்படுத்தும். 18:59

(உனது சொந்த) இயற்கையில் இருந்து எழும் உனது சொந்த கடமையால் கட்டப்பட்டிருக்கும் நீ, மயக்கத்தால் செய்ய விரும்பாததை, வலுக்கட்டாயமாக {தன்வசமில்லாமல்} நீ செய்வாய். 18:60

ஓ! அர்ஜுனா, தனது மாய சக்தியால், கருவி மேல் அமர்ந்திருப்பவர்களாக அனைத்து உயிரினங்களையும் மாற்றி, அந்த உயிரனங்களின் இதயப் பகுதியில் தலைவன் {ஈஸ்வரன்} வசிக்கிறான். 18:61

ஓ! பாரதா {அர்ஜுனா}, அனைத்து வகையிலும் அவனையே நீ தஞ்சமாகக் கொள்வாயாக. அவனது கருணையால் நித்திய பதமான உயர்ந்த அமைதியை அடைவாயாக. 18:62

இப்படியே, (மற்ற) எந்தப் பொருளைவிடவும் புதிர் நிறைந்த அறிவை நான் உனக்கு அறிவித்திருக்கிறேன். அதை முழுமையாக ஆராய்ந்து, நீ விரும்பியவாறு செயல்படுவாயாக. 18:63

மீண்டும் ஒருமுறை, அனைத்திலும் மிகப் புதிரான எனது தெய்வீக வார்த்தைகளைக் கேட்பாயாக. நீ எனக்கு மிகவும் அன்பானவன், எனவே, எது உனக்கு நன்மையோ, அதை நான் உனக்கு அறிவிப்பேன். 18:64

உனது இதயத்தை என்னில் நிலைக்கச் செய்வாயாக, என்னிடம் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டவனாக இருப்பாயாக. எனக்கே வேள்வி செய்வாயாக, என்னையே வணங்குவாயாக. பிறகு என்னை நீ அடைவாய். நீ எனக்கு அன்பானவன் என்பதை நான் உனக்கு உண்மையாக {சத்தியமாக} அறிவிக்கிறேன். 18:65

அனைத்து (அறக்) கடமைகளையும் கைவிட்டு, {என்னையே} ஒரே புகலிடமாகக் கொண்டு வருவாயாக. பாவங்கள் அனைத்திலும் இருந்து நான் உன்னை விடுவிக்கிறேன். வருந்தாதே. 18:66

தவம் பயிலாதவன், அர்ப்பணிப்பில்லாதவன் {பக்தியில்லாதவன்}, குருவுக்காகக் காத்திருக்காதவன் {குருவிடம் கேட்க விரும்பாதவன்}, என் மீது பொய்க்குற்றம் சாட்டுபவன் {என்னிடம் பொறாமை கொண்டவன்} ஆகியோருக்கு உன்னால் இது எப்போதும் அறிவிக்கப்படத்தகாது. 18:67

உயர்ந்த அர்ப்பணிப்பை {பக்தியை} எனது காணிக்கையாக்கி, என்பால் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டோரிடம் இந்த உயர்ந்த புதிரை உரைப்பவன் எவனோ, (தன் அனைத்து) ஐயங்களில் இருந்தும் விடுபடும் அவன் என்னையே அடைவான் [18]. 18:68

[18] "அஸம்ஸய: Asamsayas" என்பதே ஒவ்வொரு உரையிலும் காணப்படுகிறது. அஃது "அஸம்ஸயம் Asamsayam" அல்ல. எனவே, திரு.டேவீஸ், அதன் பொருளாக "ஐயமில்லை" என்று சொல்லி "என்னிடம் வருவான்" என்பதற்கு வினையுரிச்சொல்லாகக் கொள்வது பிழையானதாகும். "ஐயங்கள் விலகி" என்பதே இங்குச் சரியானது" என இங்கே விளக்குகிறார் கங்குலி. பாரதியார் "ஐயமில்லை" என்றே பொருள் கொண்டிருக்கிறார். பிரபுபாதர் "நிச்சயமாக வருவான்" எனப் பொருள் கொள்கிறார். கோயந்தகரும், "சந்தேகமில்லை" என்றே முடிக்கிறார். எனவே, கங்குலி மேற்கண்ட அனைவரிடமும் இருந்து இங்கே மாறுபடுகிறார்.

மனிதர்களுக்கு மத்தியில் அவனைத்தவிர எனக்கு அன்பானவன் வேறு எவனுமில்லை. உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு அன்பானவன் வேறு எவனுமில்லை. 18:69

நமக்குள்ளான இந்தப் புனித உரையாடலை எவன் படிப்பானோ, அவன் {கல்வி என்ற} அந்த அறிவு வேள்வியை எனக்குக் காணிக்கையாக்கியவன் ஆவான். 18:70

என் கருத்து இத்தகையதே. எந்த மனிதன், அற்பத் தடைகளைச் சொல்லாமல் {அற்ப ஆட்சேபணைகள் செய்யாமல்}, நம்பிக்கையுடன் இதைக் கேட்பானோ (படிப்பானோ), அவன் (மறுபிறப்பில் இருந்து) விடுபட்டு, புண்ணியச் செயல்களைச் செய்தவர்களின் அருள் உலகத்தையே அடைவான். 18:71

ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, வேறு எந்தப் பொருட்களிலும் மனதைச் செலுத்தாமல் கவனத்துடன் இதைக் கேட்டாயா? ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, அறியாமையால் (காரணத்தால்) விளைந்த உனது மயக்கம் அழிந்ததா?" என்று கேட்டான் {கிருஷ்ணன்} 18:72

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "என் மயக்கம் அழிந்தது. ஓ! அழிவில்லாதவனே {அச்யுதா, கிருஷ்ணா}, உனது அருளால் (நான் யார் எனும்) எனது நினைவை அடைந்தேன். நான் இப்போது உறுதியடைந்தேன். எனது ஐயங்கள் விலகின. நீ சொல்வதை நான் செய்வேன்" என்றான் {அர்ஜுனன்}. 18:73

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இப்படியே, வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, பிருதையின் உயர் ஆன்ம மகனுக்கும் {குந்தியின் மகனான அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்ததும், அற்புதமானதும், மயிர் சிலிர்ப்பை ஏற்படுத்துவதுமான இந்த உரையாடலைக் கேட்டேன். 18:74

யோகத்தின் தலைவனான கிருஷ்ணன், இந்த உயர்ந்த புதிரை, இந்த யோகத்தை {சித்தாந்தத்தை} நேரடியாக அறிவித்த போதே, வியாசரின் அருளால் நான் இதைக் கேட்டேன். 18:75

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கேசவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, அர்ஜுனனுக்கும் இடையில் நடந்ததும், அற்புதம் நிறைந்ததும், புனிதமானதுமான இந்த உரையாடலை மீண்டும் மீண்டும் நீனைத்து, மீண்டும் மீண்டும் மகிழ்கிறேன். 18:76

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஹரியின் {கிருஷ்ணனின்} அற்புதம் நிறைந்த அந்த வடிவத்தை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து எனக்கு ஏற்படும் திகைப்புப் பெரியதாகும். மேலும் நான் மீண்டும் மீண்டும் எப்போதும் மகிழ்வேன். 18:77

யோகத்தின் தலைவனான கிருஷ்ணன் எங்கிருக்கிறானோ, அந்தப் பெரும் வில்லாளி (பார்த்தன் {அர்ஜுனன்}) எங்கிருக்கிறானோ, அங்கே செழிப்பு, வெற்றி, பெருமை, தவறாத நீதி ஆகியன இருக்கும் என்பதே எனது கருத்து" {என்றான் சஞ்சயன்}. 18:78 


ஆங்கிலத்தில் | In English