Tuesday, October 13, 2015

பாட்டனையும் ஆசானையும் வணங்கிய யுதிஷ்டிரன் - பீஷ்ம பர்வம் பகுதி - 043ஆ

Yudhishthira saluted the Grandsire and his Preceptor | Bhishma-Parva-Section-043b | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 02)

பதிவின் சுருக்கம் : தன் தேரைவிட்டு இறங்கி கைகூப்பிய படி சென்ற யுதிஷ்டிரன் நேரே பீஷ்மரிடம் சென்று அனுமதி கோருவது; வரமும் கேட்பது; பிறகு துரோணரிடம் சென்று அனுமதி கோருவது; வரமும் கேட்பது...

(அதே வேளையில்), அம்புகளும் வேல்களும் நிறைந்த எதிரிப்படையைத் ஊடுருவிச் சென்ற மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது தம்பிகள் சூழ பீஷ்மரை நோக்கி முன்னேறினான். அவரது {பீஷ்மரின்} பாதங்களைத் தன் இரு கைகளாலும் பற்றிய அந்தப் பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, போருக்குத் தயாராக இருந்த சந்தனுவின் மகனிடம் {பீஷ்மரிடம்} (இவ்வார்த்தைகளைப்) பேசினான்.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! வெல்லப்பட முடியாதவரே {பீஷ்மரே}, நான் உம்மை வணங்குகிறேன். உம்முடன் நாங்கள் போரிடப் போகிறோம். இக்காரியத்தில் (எங்களுக்கு) உமது அனுமதியை அருள்வீராக. (உமது) ஆசியையும் (எங்களுக்கு) அளிப்பீராக" என்றான் {யுதிஷ்டிரன்}.


அதற்குப் பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பூமியின் தலைவா, ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, இந்தப் போரில் இப்படி என்னிடம் நீ வராமல் இருந்திருந்தால், ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நீ தோல்வி அடையவே நான் உன்னைச் சபித்திருப்பேன். ஓ! மகனே {யுதிஷ்டிரா}, நான் (உன்னிடம்) மனம் நிறைந்தேன். போரிட்டு வெற்றியை அடைவாயாக. ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, போரில் நீ வேறு எதை விரும்புவாயோ அவற்றையும் அடைவாயாக. ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரா}, எங்களிடம் நீ விரும்பும் வரத்தையும் கேட்பாயாக. ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, இது {இந்தக் காரியம்} இப்படி நடந்திருப்பதால் தோல்வி உனதாகாது. மனிதன் செல்வத்திற்கு அடிமையானவன். ஆனால் செல்வம் எவனுக்கும் அடிமையில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதுவே உண்மை. நான் கௌரவர்களின் செல்வத்தால் கட்டப்பட்டு இருக்கிறேன். ஓ! குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, இதன் காரணமாகவே, ஓர் அலியைப் போல, "கௌரவர்களின் செல்வத்தால் நான் கட்டப்பட்டிருக்கிறேன்" என்ற இந்த வார்த்தைகளைச் சொல்கிறேன். போரைத் தவிர்த்து, நீ வேறு எதை விரும்புகிறாய்?" என்று கேட்டார் {பீஷ்மர்} [1].

[1] இங்கே பீஷ்மர் சொல்வது இதுதான்: நான் கௌரவர்களால் கட்டப்பட்டிருக்கிறேன். எனவே என்னால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. உனக்கு எதிராகப் போரிட நான் கடமைப்பட்டுள்ளேன். எனினும், "என்னிடம் நீ என்ன கேட்பாய்?" என்று, கேட்பதைக் கொடுக்க முடிந்தவன் போலப் பேசுகிறேன். எனவே, அலிகளைப் போல, எனது வார்த்தைகளும் பொருளற்றவையாகவும், வீணானவையாகவும் இருக்கின்றன. Klivavat {ஆண் தன்மையற்ற நபர்} என்பதை நீலகண்டர் Kataravat {பிழையுள்ளவன்} என்று விளக்குகிறார். அப்படியே இருந்தாலும் கூட, இரண்டின் பொருளும் ஒன்றுதான் என இங்கே விளக்குகிறார் கங்குலி.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பெரும் அறிவைக் கொண்டவரே {பீஷ்மரே}, நீர் கௌரவர்களுக்காகப் போரிடுவீராக. எனினும், நாளுக்கு நாள் எனது நன்மையையும் விரும்பி, எனது நலன்களையும் ஆலோசிப்பீராக. எப்போதும் இதுவே (உம்மிடம்) எனது வேண்டுதலாகும்" என்றான் {யுதிஷ்டிரனிடம்}.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, ஓ! குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, இதில் என்னால் உனக்கு என்ன உதவ முடியும்? நிச்சயமாக, நான் (உனது) எதிரிகளுக்காகவே {துரோனாதிபதிகளுக்காகவே} போரிடுவேன். நீ சொல்ல வேண்டியதை என்னிடம் சொல்வாயாக" என்றார் {பீஷ்மர்}.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! ஐயா, ஓ! பாட்டா {பீஷ்மரே}, வெல்லப்பட முடியாத உம்மை நாங்கள் எவ்வாறு போரில் வீழ்த்துவது? எனது நன்மைக்கான இதில், நீர் ஏதாவது நன்மையைக் கண்டால், உண்மையில் இஃதை எனக்குச் சொல்வீராக" என்றான் {யுதிஷ்டிரன்}.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, தேவர்களின் தலைவனாகவே {இந்திரனாகவே} எவனும் இருந்தாலும் கூட, நான் போரிடும்போது, என்னைப் போரில் வீழ்த்துபவன் எவனையும் நான் காணவில்லை" என்றார் {பீஷ்மர்}.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா {பீஷ்மரே}, எனது வணக்கங்கள் உமதாகட்டும். எனவே, (இதை) நான் உம்மிடம் கேட்கிறேன். போரில் எதிரிகளால் உமது மரணத்தைப் எவ்வாறு ஏற்படுத்த முடியும் என்பதை எங்களுக்குச் சொல்வீராக" என்று கேட்டான் {யுதிஷ்டிரனிடம்}.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, போரில் என்னை வீழ்த்த வல்ல ஒருவனையும் நான் காணவில்லை. எனது மரணத்திற்கான நேரமும் இன்னும் வரவில்லை. என்னிடம் மீண்டும் வருவாயாக" என்றார் {பீஷ்மர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடன்} தொடர்ந்தான், "பிறகு, ஓ! குரு குலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, மீண்டும் பீஷ்மருக்குத் தலை வணங்கிய யுதிஷ்டிரன், அவரது வார்த்தைகளை ஏற்றான். பிறகு அந்த வலிய கரங்களைக் கொண்டவன் {யுதிஷ்டிரன்}, தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த வீரர்கள் அனைவருக்கும் மத்தியில், தன் தம்பிகள் துணையுடன் ஆசானின் (துரோணரின்) தேரை நோக்கி முன்னேறினான். துரோணரை வணங்கி அவரை வலம் வந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது நன்மைக்கான வார்த்தைகளை அந்த வெல்லப்பட முடியாத வீரரிடம் {துரோணரிடம்} பேசினான்.

யுதிஷ்டிரன் {துரோணரிடம்}, "ஓ! வெல்லப்பட முடியாதவரே, ஓ மறுபிறப்பாளரே {பிராமணரே_துரோணரே}, உமது அனுமதியுடன், எனது எதிரிகள் அனைவரையும் வீழ்த்தும் வண்ணம், பாவமீட்டாமல் நான் போரிடுவது எவ்வாறு? [2]" என்று கேட்டான்.

[2] vigatakalmashas {களங்கமற்ற; நேர்மையான; தூய} என்பது துரோணரைக் குறிக்கிறது என்று நீலகண்டர் நினைக்கிறார். "தூய இதயத்துடன் எனக்குச் சொல்வீராக" என்பது போல ஒரு பொருளை அவர் பரிந்துரைக்கிறார். நீலகண்டர் சொல்வது சரியல்ல என நான் நினைக்கிறேன் என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.

துரோணர் {யுதிஷ்டிரனிடம்}, "போரிடத் தீர்மானித்து, (இப்படி) நீ என்னிடம் வராது இருந்திருந்தால், உனது முழுமையான வீழ்ச்சிக்கு நான் உன்னைச் சபித்திருப்பேன். எனினும், ஓ! பாவமற்றவனே, ஓ! யுதிஷ்டிரா, உன்னிடம் மனநிறைவையும், மதிப்பையும் {கௌரவத்தையும்} அடைந்தேன். நான் உன்னை அனுமதிக்கிறேன், போரிடு, வெற்றியை அடைவாயாக. நான் உனது விருப்பத்தையும் நிறைவேற்றுவேன். நீ என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல். இந்தச் சூழ்நிலையில், போரைத் தவிர்த்து, நீ என்ன விரும்புகிறாய்? மனிதன் செல்வத்திற்கு அடிமையாக இருக்கிறான். ஆனால் செல்வம் எவனுக்கும் அடிமையில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இஃது உண்மையே. நான் கௌரவர்களின் செல்வத்தால் கட்டப்பட்டு இருக்கிறேன். இதன் காரணமாகவே, ஓர் அலியைப் போல நான் கௌரவர்களுக்காகப் போரிட வேண்டியிருக்கிறது. மேலும், இதன் காரணமாகவே, ஓர் அலியைப் போல, "போரைத் தவிர்த்து, நீ வேறு எதை விரும்புகிறாய்?" என்ற இந்த வார்த்தைகளைச் சொல்கிறேன். நான் கௌரவர்களுக்காகப் போரிடுவேன். ஆனால் உனது வெற்றிக்காகவே வேண்டுவேன்" என்றார் {துரோணர்}.

யுதிஷ்டிரன் {துரோணரிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே {துரோணரே}, எனது வெற்றிக்காக வேண்டி, எனது நன்மைக்காக ஆலோசிப்பீராக. எனினும், கௌரவர்களுக்காகப் போரிடுவீராக. இதையே நான் உம்மிடம் வரமாகக் கேட்கிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.

துரோணர் {யுதிஷ்டிரனிடம்}, "நான் எதுவரை போரிடுவேனோ, அதுவரை வெற்றி உனதாக முடியாது. (எனவே), ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, என்னை விரைவாகக் கொல்ல உனது தம்பிகளுடன் முயல்வாயாக" என்றார் {துரோணர்}.

யுதிஷ்டிரன் {துரோணரிடம்}, "இதற்கு ஐயோ, ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {துரோணரே}, உமது மரணத்திற்கான வழிமுறைகளை (எங்களுக்குச்) சொல்லும். ஓ! ஆசானே {துரோணரே}, நெடுஞ்சாண் கிடையாக என்னைக் கிடத்திக் கொண்டு நான் உம்மிடம் இதைக் கேட்கிறேன். உமக்கு (எனது) வணக்கங்கள்" என்றான்.

துரோணர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, "கோபம் தூண்டப்பட்ட நிலையில் போரில் ஈடுபட்டு, தொடர்ச்சியாக அம்புகளைப் பொழிந்து கொண்டு களத்தில் நிற்கும் என்னைக் கொல்லத்தக்க எதிரி எவனையும் நான் காணவில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, எப்போது நான் என் ஆயுதங்களைக் கைவிட்டு, சுற்றுப்புறத்தில் இருந்து விடுபட்டு (யோகத் தியானத்தில்) இருக்கிறேனோ, அப்போது தவிர என்னைக் கொல்ல எவனாலும் முடியாது. நான் இதை உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். நம்பத்தகுந்த பேச்சுக் கொண்டவனிடம் இருந்து முற்றிலும் ஏற்கத்தகாத {இனிமையற்ற} எதையாவது கேட்டால், போரில் நான் எனது ஆயுதங்களைக் கைவிடுவேன் என்பதையும் நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்" என்றார் {துரோணர்}.


ஆங்கிலத்தில் | In English