"Yudhishthira is an infamous wretch" said the warriors! | Bhishma-Parva-Section-043 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் - 1)
பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் மீண்டும் வில்லை எடுத்ததும் பாண்டவர் தரப்பு ஆரவாரம் செய்ந்தது; அனைவரும் போருக்குத் தயாரான போது யுதிஷ்டிரன் தனது கவசத்தையும் ஆயுதங்களையும் துறந்து எதிரிப்படையை நோக்கி நடந்து சென்றது; கௌரவப் படை வீரர்கள் யுதிஷ்டிரனை நிந்தித்தது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "தனஞ்சயன் {அர்ஜுனன்} மீண்டும் (தனது) கணைகளையும், காண்டீவத்தையும் எடுத்ததைக் கண்ட (பாண்டவத் தரப்பில் உள்ள) வலிமைமிக்கத் தேர்வீரர்கள் உரத்த குரலில் ஆர்ப்பரித்தனர். பாண்டவர்களும், சோமகர்களும், அவர்களைப் பின்தொடர்பவர்களும், மகிழ்ச்சியால் நிறைந்து, கடலில் பிறந்தவைகளான தங்களது சங்குகளை முழங்கினர். பேரிகைகள், காகளங்கள், ஜயமங்களைகள், மாட்டுக் கொம்புகள் ஆகியன ஒன்றாக அடிக்கப்பட்டும், ஊதப்பட்டும் அங்கே எழுந்த முழக்கமானது, பெரும் ஒலியுடையதாக இருந்தது.
பிறகு, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, அங்கே கந்தர்வர்கள், பித்ருக்கள், சித்தர் மற்றும் சாரணர்களின் கூட்டங்கள் ஆகியவற்றுடன் கூடிய தேவர்கள், (அக்காட்சியைச்) சாட்சியாகக் காணும் விருப்பத்தில் அங்கே வந்தனர். உயர்ந்த அருளைக் கொண்ட முனிவர்களும், அந்தப் பெரும் படுகொலையைக் காண்பதற்காக, நூறுவேள்விகளைச் செய்தவனின் {இந்திரனின்} தலைமையிலான அந்தக் கூட்டத்துடன் அங்கே வந்தனர்.
பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இரு கடல்களைப் போல இருந்த அந்த இரு படைகளும் மோதலுக்குத் தயாராகவும், தொடர்ச்சியாக நகர்ந்து கொண்டும் இருப்பதைக் கண்ட நீதிமானான வீர மன்னன் யுதிஷ்டிரன், தனது கவசத்தைக் கழற்றி, தனது அற்புத ஆயுதத்தை ஒரு புறமாக வைத்துவிட்டு, கூப்பிய கரங்களுடன் தனது தேரில் இருந்து விரைவாக இறங்கி, கட்டுப்படுத்தப்பட்ட பேச்சுடன் {மௌனமாக}, பாட்டனைப் {பீஷ்மரைப்} பார்த்துக் கொண்டே, எதிரிப்படை (நின்று கொண்டு) இருந்த திசையை நோக்கி, கிழக்கு முகமாகக் கால்நடையாகச் சென்றான்.
(இப்படி) அவன் {யுதிஷ்டிரன்} செல்வதைக் கண்ட குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, விரைவாகத் தனது தேரில் இருந்து இறங்கி, தனது (பிற) சகோதரர்களுடன் அவனை {யுதிஷ்டிரனைப்} பின்தொடர்ந்து சென்றான். தலைவன் வாசுதேவனும் {கிருஷ்ணனும்} அவனுக்குப் பின்னே பின்தொடர்ந்து சென்றான். இதனால் பதட்டம் நிறைந்த (அவனது {யுதிஷ்டிரனின்} படையில் இருந்த) முக்கியமான மன்னர்களும், அதே பாதையில் பின்தொடர்ந்து சென்றார்கள்.
அப்போது அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உமது தம்பிகளைக் கைவிட்டு, கால்நடையாக, கிழக்கு முகம் நோக்கி, எதிரிக்கூட்டத்திடம் செல்லும் உமது செயல் யாது?" என்று கேட்டான் {அர்ஜுனன்}.
பீமசேனன் {யுதிஷ்ட்ரனிடம்}, "ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, உமது கவத்தையும் ஆயுதங்களையும் கைவிட்டு, கவசம் தரித்திருக்கும் எதிரி வீரர்களை நோக்கி, ஓ! பூமியின் ஆட்சியாளரே {யுதிஷ்டிரரே}, உமது தம்பிகளையும் விட்டுவிட்டு எங்கே செல்கிறீர்?" என்று கேட்டான் {பீமன்}.
நகுலன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, எனது மூத்த அண்ணனான நீர் இந்த வழியில் செல்வது (கண்டு) எனது நெஞ்சம் கலங்குகிறது. (எங்களுக்குச்) சொல்லும், எங்கே செல்கிறீர்?" என்று கேட்டான் {நகுலன்}.
சகாதேவன் {யுதிஷ்டிரனிடம்}, "எண்ணற்றவர்களாகவும், பயங்கரமாகவும் இருக்கும் இந்த எதிரிப் படைப்பிரிவுகள் நம்மிடம் போரிடவே இங்கு வந்திருக்கின்றன. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நமது எதிரிகளின் திசையில் நீர் எங்கே செல்கிறீர்?" என்று கேட்டான் {சகாதேவன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "தனது தம்பிகள் இப்படிக் கேட்டுக் கொண்டிருந்தாலும், ஓ! குருகுலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, மௌனத்துடன் எதுவும் சொல்லாமல் தொடர்ந்து சென்றான்.
பெரும் அறிவும், உயர் ஆன்மாவும் கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, புன்னகைத்தபடியே அவர்களிடம், (அப்போது), "இவரது நோக்கத்தை நான் அறிவேன். தனக்கு மேன்மையான பீஷ்மர், துரோணர், கிருபர், சல்லியன் (போன்றவர்களுக்கு) தனது மரியாதைகளைச் செலுத்திய பிறகு, எதிரியுடன் இவர் போரிடப் போகிறார். தனது ஆசான்கள், வயதில் மூத்த மரியாதைக்குரியவர்கள், தனது சொந்தங்கள் ஆகியோருக்கு விதிப்படி தனது மரியாதைகளைச் செலுத்திய பிறகு, தனக்கு மேன்மையானவர்களுடன் எவன் போரிடுவானோ, அவன், போரில் நிச்சயமாக வெற்றிபெறுவான் என்பது பழங்கால வரலாறுகளில் இருந்து கேள்விப்படப்படுகிறது. இதுவே என் எண்ணமும் கூட" என்றான் {கிருஷ்ணன்}.
கிருஷ்ணன் இதைச் சொல்லிக் கொண்டிருந்த போது, திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} படைப்பிரிவின் மத்தியில் "ஐயோ" என்றும் "ஓ" என்றும் பெருத்த ஆரவாரம் எழுந்தது. ஆனால் (படையில் இருந்த) பிறரோ அமைதியாக இருந்தனர். யுதிஷ்டிரனைக் கண்ட திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} போர்வீர்கள் தங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர், "இவன் தனது குலத்தின் இழிந்தவன். இந்த மன்னன் {யுதிஷ்டிரன்} அச்சத்தால் பீஷ்மரை நோக்கி வருகிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது. தனது தம்பிகளுடன் கூடிய யுதிஷ்டிரன் (பீஷ்மரின்) பாதுகாப்பை நாடுபவன் ஆகிவிட்டான். தனஞ்சயன் {அர்ஜுனன்}, பாண்டு மகனான விருகோதரன் {பீமன்}, நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரின் பாதுகாப்பைக் கொண்ட இந்தப் பாண்டுவின் (மூத்த) மகன் {யுதிஷ்டிரனே} ஏன் அஞ்சுகிறான்? இந்த உலகத்தால் கொண்டாடப்பட்டாலும் கூட, இவன் பலமற்றவனாகவும், போரில் நெஞ்சம் நிறைந்த அச்சம் கொண்டவனாகவும் இருப்பதால், ஒரு போதும் இவன் க்ஷத்திரிய வகையில் பிறந்திருக்க முடியாது" என்று பேசிக் கொண்டனர். பிறகு அந்த வீரர்கள் அனைவரும் கௌரவர்களைப் புகழ்ந்தனர். பிறகு இன்புற்ற அவர்கள் அனைவரும், மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் தங்களது ஆடைகளை அசைத்தவண்ணம் இருந்தார்கள்.
மேலும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே (அப்போது) தனது தம்பிகள் அனைவரோடும், கேசவனோடும் {கிருஷ்ணனோடும்} கூடிய யுதிஷ்டிரனை அந்த வீரர்கள் அனைவரும் நிந்தித்தனர். இப்படி யுதிஷ்டிரனை நிந்தித்த அந்தக் கௌரவப் படையினர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விரைவில் மீண்டும் அமைதியடைந்தனர். "இந்த மன்னன் என்ன சொல்வான்? பீஷ்மர் என்ன பதில் சொல்வார்? தன் பலத்தில் தற்பெருமை நிறைந்த பீமன் என்ன சொல்வான், கிருஷ்ணனும் அர்ஜுனனும் என்ன சொல்வார்கள்? உண்மையில் யுதிஷ்டிரனுக்குச் சொல்ல வேண்டியது என்ன?" என்று யுதிஷ்டரனைக் குறித்த ஆர்வம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த இரு படைகளிலும் பெரிதாக இருந்தது.
ஆங்கிலத்தில் | In English |