Thursday, October 15, 2015

கௌரவர்களைக் கைவிட்ட யுயுத்சு! - பீஷ்ம பர்வம் பகுதி - 043ஈ

Yuyutsu abandoned the Kauravas! | Bhishma-Parva-Section-043d | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 01)

பதிவின் சுருக்கம் : சல்லியனிடம் விடைபெற்ற யுதிஷ்டிரன் கௌரவப் படையை விட்டு வெளியேறுவது; கர்ணனிடம் கிருஷ்ணன் தங்கள் தரப்புக்கு வருமாறு கோருவது; கர்ணன் மறுப்பது; கௌரவப் படை வீரர்களிடம் யுதிஷ்டிரன் கோரிக்கை வைப்பது; யுயுத்சு பாண்டவர் தரப்பை அடைவது; பாண்டவர்களின் நடத்தையை அங்கிருந்த அனைவரும் மெச்சுவது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "தனது தாய்மாமனான மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} அனுமதியைப் பெற்ற அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, தனது தம்பிகள் சூழ அந்தப் பரந்த படையை விட்டு வெளியே வந்தான். பிறகு வாசுதேவன் {கிருஷ்ணன்}, அந்தப் போர்க்களத்தில் இருந்த ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} சென்றான். பாண்டவர்களுக்காகக் கர்ணனிடம் அந்தக் கதனின் அண்ணன் {கிருஷ்ணன்} பேசினான். "ஓ! கர்ணா, பீஷ்மர் மீதிருக்கும் வெறுப்பால் நீ போரிடப் போவதில்லை என்று நான் கேள்விப்பட்டேன். ஓ! ராதையின் மகனே {கர்ணா}, எங்கள் தரப்புக்கு வருவாயாக. பீஷ்மர் கொல்லப்படாதவரை (எங்களுடன் தங்கி) இருக்கலாம். பீஷ்மர் கொல்லப்பட்ட பிறகும், ஓ! ராதையின் மகனே {கர்ணா}, நீ எத்தரப்பையும் விரும்பவில்லையெனில், துரியோதனன் தரப்பில் இருந்து கொண்டு மீண்டும் நீ போரில் ஈடுபடலாம் [1]" என்றான் {கிருஷ்ணன்}.


[1] வேறு பதிப்புகளில் இங்கே "ராதேயா, பீஷ்மர் கொல்லப்படாதிருக்கும்வரை எங்களைச் சேர்ந்திரு. அவர் கொல்லப்பட்ட பிறகு, துரியோனனுக்கு உதவி செய்வதே அறிவுள்ள செயல் {விவேகம்} என நீ கருதினால் மறுபடியும் அவர்களிடம் செல்" என்று இருக்கிறது.

கர்ணன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கேசவா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு} ஏற்பில்லாத எதையும் நான் செய்ய மாட்டேன். துரியோதனனுடைய நன்மையில் அர்ப்பணிப்புள்ள நான் எனது உயிரையும் (அவனுக்காக) விடுவேன் என்பதை அறிவாயாக" என்றான். (கர்ணனின்) இவ்வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணன் {பேசுவதை} நிறுத்திக் கொண்டு யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டுவின் மகன்களுடன் {பாண்டவர்களுடன்} மீண்டும் இணைந்து கொண்டான்.

பிறகு, பாண்டுவின் மூத்த மகன் {யுதிஷ்டிரன்}, வீரர்கள் அனைவருக்கும் மத்தியில், "எவன் எங்களைத் தேர்ந்தெடுப்பானோ {விரும்பி ஏற்பானோ}, அவனை எங்கள் கூட்டாளியாக நாங்களும் தேர்ந்தெடுப்போம் {விரும்பி ஏற்போம்}" என்று உரக்கச் சொன்னான்.

அவர்களின் {பாண்டவர்களின்} மீது கண்களைச் செலுத்திய யுயுத்சு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், குந்தியின் மகனும், நீதிமானுமான மன்னன் {தர்மராஜா} யுதிஷ்டிரனிடம், "பாவமற்றவரே {யுதிஷ்டிரரே}, நீர் என்னை ஏற்பீரென்றால், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உமக்கு {உமது தலைமையின்} கீழ் {இருந்து கொண்டு}, உங்கள் அனைவருக்காகவும் திருதராஷ்டிரர் மகன்களுடன் போரிடுவேன்" என்றான் {யுயுத்சு}.

யுதிஷ்டிரன் {யுயுத்சுவிடம்}, "வா, வருவாயாக, மூடர்களான உனது சகோதரர்களுடன் நாம் அனைவரும் போரிடுவோம். ஓ! யுயுத்சு, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, நாங்கள் அனைவரும், உன்னிடம், "ஓ! வலியகரங்களைக் கொண்டவனே {யுயுத்சு} உன்னை ஏற்கிறோம். என் காரியமாக நீ போரிடுவாயாக" என்றே சொல்கிறோம். திருதராஷ்டிரப் பரம்பரையின் நூலும் {தொடர்ச்சியும்}, அவரது {திருதராஷ்டிரரின்} ஈமப் பிண்டமும் உன்னிடமே உள்ளது என்றே தெரிகிறது. ஓ! இளவரசே, ஓ! பெரும் காந்தியுடையவனே {யுயுத்சுவே}, உன்னை ஏற்கும் எங்களை நீயும் ஏற்பாயாக. தீய புரிதல் {புத்தி} கொண்டவனும், சினம் நிறைந்தவனுமான துரியோதனின் வாழ்வு முடியப்போகிறது" என்றான் {யுதிஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "குருக்களான உமது மகன்களைக் கைவிட்ட யுயுத்சு, பிறகு, துந்துபி மற்றும் பேரிகைகளின் முழக்கத்தோடு பாண்டவர்களின் படைக்குச் சென்றான். மகிழ்ச்சியால் நிறைந்தவனான வலிய கரங்களைக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், தங்கத்தின் ஒளி பொருந்தியதும் பளபளப்பு கொண்டதுமான தனது கவசத்தை மீண்டும் அணிந்து கொண்டான். பிறகு, மனிதர்களில் காளையரான அவர்கள் அனைவரும் தங்கள் தங்களுக்குரிய தேர்களில் ஏறினர். மேலும், அவர்கள் முன்பு போலவே தங்கள் துருப்புகளின் எதிர் வியூகத்தை அமைத்துக் கொண்டனர். துந்துபிகளையும், காகளங்களையும் நூற்றுக்கணக்கில் அவர்கள் ஒலிக்கச் செய்தனர். பிறகு, மனிதர்களில் காளையரான அவர்களும் பல்வேறு வகைகளில் சிம்ம முழக்கமிட்டார்கள்.

மனிதப் புலிகளான அந்தப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, தங்கள் தேர்களில் ஏறுவதைக் கண்ட (அவர்களது தரப்பு) மன்னர்களும், திருஷ்டத்யும்னனும், பிறரும் மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

மரியாதைக்குரியவர்களுக்கு முறையான மரியாதையைச் செய்த பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} உயர்ந்த பண்பைக் கண்டவர்களும், அப்போது அங்கிருந்தவர்களுமான மன்னர்கள் அனைவரும் அவர்களை {பாண்டவர்களை} உயர்வாக மெச்சினார்கள். நட்பு, பரிவு, சொந்தங்களிடம் அன்பு ஆகியவற்றை உரிய காலத்தில் வெளிப்படுத்திய அந்த உயர் ஆன்ம மனிதர்களைக் {பாண்டவர்களைக்} குறித்து அந்த ஏகாதிபதிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அந்தப் புகழ்மிக்க மனிதர்களைக் {பாண்டவர்களைக்} குறித்த துதிபாடல்களுடன் இணைந்து "அருமை, அருமை" என்ற இனிமை வார்த்தைகளே எங்கும் வெளிப்பட்டன.

இதன் விளைவாக அனைவரின் மனங்களும், இதயங்களும் அவர்களின் {பாண்டவர்களின்} பால் ஈர்க்கப்பட்டன. பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} அந்த நடத்தையைச் சாட்சியாகக் கண்டவர்களும், அல்லது கேட்டவர்களும், மிலேச்சர்களும், ஆரியர்களுமான அனைவரும் தடைபட்ட {தழுதழுத்த} குரல்களுடன் அழுதனர். பெரும் சக்தி கொண்ட அந்த வீரர்கள் {மிலேச்சர்களும், ஆரியர்களும்} நூறு நூறாக பேரிகைகளையும், *புஷ்கரங்களையும் முழங்கச் செய்து, பசுவின் பாலைப் போன்று வெண்மையா்க இருந்த தங்கள் சங்குகள் அனைத்தையும் முழங்கினர்" {என்றான் சஞ்சயன்}.
...................................................................................................................................................................
*புஷ்கரங்கள்: ஒருவகைப் பேரிகை


ஆங்கிலத்தில் | In English