Friday, October 16, 2015

முதலில் தாக்கியது யார்? - பீஷ்ம பர்வம் பகுதி - 044

Who struck first? | Bhishma-Parva-Section-044 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 02)

பதிவின் சுருக்கம் : துச்சாசனன் முதலான கௌரவர்கள் முழங்கிக் கொண்டு முன்னேறி வந்த பீமனின் மீது பாய்வது; அவர்களின் மீது திரௌபதியின் மகன்கள், அபிமன்யு, திருஷ்டத்யும்னன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் பாய்வது; போர் ஆரம்பமாவது; போர்க்களத்தைக் குறித்த சஞ்சயனின் வர்ணனை...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "என் தரப்பு மற்றும் எதிரி தரப்பு ஆகிய இரண்டு படைப்பிரிவுகளும் இப்படி அணிவகுக்கப்பட்ட போது, யார் முதலில் அடித்தது? குருக்களா? பாண்டவர்களா?" என்று கேட்டான்.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "தன் அண்ணனின் {துரியோதனனின்} அந்த வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் துச்சாசனன், பீஷ்மரைத் தங்கள் தலைவராகக் கொண்ட தனது துருப்புகளுடன் முன்னேறினான். பீஷ்மருடன் போரிட விரும்பிய பாண்டவர்களும், பீமசேனனைத் தங்கள் தலைமையில் கொண்டு மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் முன்னேறினர். பிறகு, இரு படைகளில் இருந்தும், சிங்க முழக்கங்களும், ஆரவாரவொலிகளும், ஜயமங்களைகளின் {கிரகசங்களின் Krakachas} ஒலிகளும், மாட்டுக் கொம்புகளின் {மாட்டுக் கொம்பால் செய்யப்பட்ட இசைக்கருவிகளின்} ஒலிகளும், பேரிகைகள், மிருதங்கங்கள், மேளங்கள் ஆகியவற்றின் ஒலிகளும் எழுந்தன. எதிரிகளின் வீரர்கள் நம்மை {கௌரவர்களை} நோக்கி விரைந்தார்கள். நாமும் அவர்களை {பாண்டவர்களை} எதிர்த்துப் பேரொலிகளுடன் விரைந்தோம். இந்த (விரைவின் விளைவால் எழுந்த) ஆரவாரம் {காதுகளைச்} செவிடாக்குவதாக இருந்தது.

அந்த அச்சந்தரும் கொலைகார மோதலில், காற்றினால் அசைக்கப்பட்ட காடுகளைப் போல, சங்குகள் மற்றும் மிருதங்கங்களால் எழுந்த அமளியின் விளைவால் பாண்டவ மற்றும் திருதராஷ்டிரப்படைகள் நடுங்கின. அந்தத் தீய வேளையில் ஒருவருக்கு எதிர் மற்றொருவராக விரைந்த மன்னர்கள், யானைகள், குதிரைகள் ஆகியன நிறைந்த அந்தப் படைகள் செய்த ஆரவாரம், புயலால் கலங்கடிக்கப்படும் கடலின் பேரொலியைப் போன்று இருந்தது.

பேரொலியாகவும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த ஆரவாரம் எழுந்த போது, வலிய கரங்களைக் கொண்ட பீமசேனன், காளையைப் போல உரத்து முழங்கத் தொடங்கினான். பீமசேனனின் அந்த முழக்கம், போராளிகளின் சிங்கமுழக்கங்கள், யானையின் பிளிறல்கள், சங்கு மற்றும் பேரிகைகளின் ஒலிகள் ஆகியவற்றை மீறி மேலே எழுந்தது. உண்மையில், பீமசேனனின் முழக்கங்கள் இருதரப்பு படைகளிலும் இருந்த ஆயிரக்கணக்கான குதிரைகளின் கனைப்பொலிகளையும் விஞ்சியிருந்தது. சக்ரனின் {இந்திரனின்} இடியைப் போன்றும், மேகங்களைப் போன்றும் முழங்கிக் கொண்டிருந்த பீமசேனனின் அந்த ஒலியைக் கேட்டு, உமது வீரர்கள் அச்சத்தால் நிறைந்தனர். அந்த வீரனின் {பீமனின்} கர்ஜனையால், சிங்கத்தின் முழக்கத்தைக் கேட்ட பிற விலங்குகளைப் போல, குதிரைகள் மற்றும் யானைகள் அனைத்தும் சிறுநீர் மற்றும் மலத்தைக் கழித்தன. மேகங்களின் திரள்களைப் போல ஆழமான முழக்கத்தைச் செய்து, பயங்கர உருவம் ஏற்ற {பயங்கர உருவத்தை அடைந்த} அந்த வீரன் {பீமன்}, உமது மகன்களை அச்சுறுத்தி அவர்கள் மீது பாய்ந்தான்.

அதன் பேரில், சகோதரர்களும் உமது மகன்களுமான துரியோதனன், துர்முகன், துஸ்ஸஹன், சலன், வலிமைமிக்கத் தேர்வீரனான துச்சாசனன், துர்மர்ஷணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விவிம்சதி, சித்ரசேனன், பெரும் தேர்வீரனான {மகாரதனான} விகர்ணன், புருமித்ரன், ஜயன், போஜன் ஆகியோரும் சோமதத்தனுடைய வீரமிக்க மகனும் {பூரிஸ்ரவசும்} மேகங்களின் திரள்கள் மின்னல் கீற்றுகளை வெளிப்படுத்துவதைப் போல, தங்கள் அற்புதமான விற்களை அசைத்து, (தங்கள் அம்பறாத்தூணிகளில் இருந்து) சமீபத்தில் சட்டை உதிர்த்த பாம்புகளைப் போன்ற நீண்டிருந்த கணைகளை எடுத்தனர். (தங்களை நோக்கி) விரைந்து வந்த அந்த வலிமைமிக்க வில்லாளியை {பீமனைச்} சூழ்ந்து கொண்ட அவர்கள், சூரியனை மறைக்கும் மேகங்களைப் போல, தங்கள் கணைகளால் அவனை {பீமனை} மறைத்தார்கள்.

திரௌபதியின் (ஐந்து) மகன்கள், வலிமைமிக்கத் தேர்வீரனான சுபத்திரன் {அபிமன்யு}, நகுலன், சகாதேவன் மற்றும் பிரிஷத குலத்தின் திருஷ்டத்யும்னன் ஆகியோர் ({பீமனை நோக்கி விரைந்த} அந்த) தார்தராஷ்டிரர்களை நோக்கி விரைந்து, சொர்க்கத்தின் மூர்க்கமான கணைகளால் {வஜ்ராயுதங்களால்} பிளக்கப்படும் மலைச்சிகரங்களைப் போல, கூர்மையான தங்கள் கணைகளால் அவர்களைக் கிழித்தார்கள். வில் நாண்களின் பயங்கர நாணொலி மற்றும் (வீரர்களின்) கையுறைகள் ஒன்றோடொன்று மோதும் ஒலியாலும் வகைப்படுத்தப்பட்ட அந்த முதல் மோதலில் உமது தரப்பிலோ, எதிரி தரப்பிலோ எந்தப் போராளியும் புறமுதுகிடவில்லை.

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, எண்ணிலடங்கா கணைகளால், குறியை அடித்து எப்போதும் வெல்பவர்களாக இருந்தவர்களில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (குறிப்பாக) துரோணருடைய சீடர்களின் கை வேகத்தை {லாகவத்தை} நான் கண்டேன். வில்நாண்களின் நாணொலி ஒருக்கணமும் நிற்கவில்லை, (காற்றில்) அடிக்கப்பட்ட சுடர்மிகும் அம்புகள், வானத்தின் (வானத்திலிருந்து விழும்) விண்கற்களைப் போல வெளிப்பட்டன. பிற மன்னர்கள் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சொந்தங்களுக்கிடையில் நடந்ததும், பயங்கரம் நிறைந்ததும், கவனத்தைக் கவர்வதுமான அந்தப் போரை பார்வையாளர்களாகக் கண்டு (அமைதியாக) நின்றனர். பிறகு வலிமைமிக்க அந்தத் தேர்வீரர்கள், சினம் தூண்டப்பட்ட நிலையில், ஒருவரிடம் மற்றொருவர் அடைந்த காயங்களை நினைவு கூர்ந்து ஒருவரை ஒருவர் சவாலுக்கழைத்து அந்தக்களத்தில் போரிட்டனர்.

யானைகள், குதிரைகள், தேர்கள் நிறைந்தவையான குருக்கள் மற்றும் பாண்டவர்களின் இரு படைகளும் திரையில் வண்ணம் தீட்டப்பட்ட ஓவியங்களைப் போல அந்தப் போர்க்களத்தில் மிக அழகாகத் தோற்றமளித்தன. அதன் பிறகு, (பிற) மன்னர்கள் அனைவரும் தங்கள் விற்களை எடுத்தனர். போராளிகளால் எழுப்பப்பட்ட புழுதியினால் சூரியன் மறைந்தான். (தங்கள் தங்கள்) துருப்புகளின் தலைமையில் இருந்தவர்கள், உமது மகனின் {துரியோதனனின்} கட்டளையின் பேரால் ஒருவரின் மேல் மற்றவர் பாய்ந்தனர். மோதலுக்கு விரைந்த அந்த மன்னர்களின் யானைகள் மற்றும் குதிரைகளால் எழுப்பப்பட்ட பேரொலிகள், போராளிகளின் சிம்ம முழக்கங்களுடனும், சங்கு முழக்கம் மற்றும் பேரிகைகளின் ஒலி ஆகியவற்றில் எழுந்த ஆரவாரத்துடனும் கலந்தது.

கணைகளை முதலைகளாகவும், விற்களைப் பாம்புகளாகவும், வாள்களை ஆமைகளாகவும், போர் வீரர்களின் சாடல்களைப் புயலாகவும் கொண்ட அந்தப் பெருங்கடலின் {படைகளின்} பேரொலி, (உண்மையான) கடல் கலங்கிய நிலையில் ஏற்படுத்தும் அமளியையே ஒத்திருந்தது. யுதிஷ்டிரனால் கட்டளையிடப்பட்ட ஆயிரக்கணக்கான மன்னர்கள், (தங்கள் தங்கள்) துருப்புகளுடன் உமது மகனின் படையணியினர் மீது பாய்ந்தனர். அந்த இருபடைகளின் போராளிகளுக்கிடையில் நடைபெற்ற அந்த மோதல் மிகக் கடுமையானதாக இருந்தது.

போரிடும்போதோ, உடைந்த அணிவகுப்பில் {வியூகத்தில்} [1] இருந்து திரும்பும்போதோ, மீண்டும் போரிடச் செல்லும்போதோ நமது தரப்பு மற்றும் எதிரி தரப்புப் போராளிகளுக்கிடையில் எந்த வேற்றுமையையும் காண முடியவில்லை. அச்சந்தரும் அந்தப் பயங்கரப் போரில், கணக்கிடமுடியாத அந்தக் கூட்டத்தை விஞ்சி உமது தந்தை (பீஷ்மர்) ஒளிர்ந்து கொண்டிருந்தார்" {என்றான் சஞ்சயன்}.

[1] முதல் நாள் போரில் படைகளின் வியூகத்தைப் பொறுத்தவரை, பீஷ்ம பர்வம் பகுதி 17ல் கௌரவர்கள் தரப்பில் வெறுமனே கௌரவ வியூகம் என்று இருக்கிறது. பீஷ்ம பர்வம் பகுதி 19ல் பாண்டவர்கள் தரப்பில் சூசிமுக {ஊசி போன்ற கூர்முனை கொண்ட} வியூகம் அமைக்கப்பட்டதாக இருக்கிறது.  வில்லிபாரதத்தில் பாண்டவர்கள் அசல வியூகத்தை அமைத்ததாக  குறிப்பு உள்ளது. அசலம் என்பது ஆப்பு போன்ற ஒரு கருவியாகும்.


ஆங்கிலத்தில் | In English