Tuesday, October 20, 2015

வாழும் ஆசையால் ஓலமிட்ட போராளிகள்! - பீஷ்ம பர்வம் பகுதி - 046

Combatants wailed, in desire of life! | Bhishma-Parva-Section-046 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 04)




பதிவின் சுருக்கம் : இரு படைகளிலும் இருந்த யானைகள், தேர்வீரர்கள், குதிரைகள், காலாட்படை ஆகியோர் போரிட்டதைச் சஞ்சயன் வர்ணிப்பது; யானைகளால் ஏற்பட்ட சேதங்கள், வீரர்கள் அடைந்த துன்பங்கள், உறவினர்களையும் நண்பர்களையும் அறியாது கொன்ற வீரர்கள்; போரில் அடிபட்டு கதறியவர்கள், காயப்பட்டிருந்தாலும் கதறாதவர்கள் எனப் பல வகைப் போர்வீரர்களைச் சஞ்சயன் வர்ணிப்பது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நூறாயிரம் {ஒரு லட்சம் 1,00,000} காலாட்படை வீரர்களின் மோதல் குறித்து நான் இப்போது உமக்கு விவரிப்பேன். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பிற கருத்துகள் அனைத்திலும் ஏற்பட்ட முற்றான மறதியின் காரணமாக, அங்கே, மகன் தந்தையை அறியவில்லை, தந்தையும் தனக்குப்பிறந்த மகனை அறியவில்லை. சகோதரன் சகோதரனை அறியவில்லை, மருமகன் அம்மானை அறியவில்லை. தாய்மாமனும் தனது சகோதரியின் மகனை {மருமகனை} அறியவில்லை. அதே போல, நண்பனும் தனது நண்பனை அறியவில்லை.


பாண்டவர்களும், குருக்களும், தாங்கள் ஏதோ பேய்களால் பீடிக்கப்பட்டவர்களைப் போலப் போரிட்டனர். மனிதர்களில் புலிகளான சிலர் தேர்கள் மீது பாய்ந்து அவற்றைத் தூள் தூளாக்கினர். தேர்களின் நுகத்தடிகள் ஒன்றோடு ஒன்று மோதி நொறுங்கின. தேரின் ஏர்க்கால்களும், இருப்புமுளைகளும் ஒன்றோடு ஒன்று மோதி நொறுங்கின. ஒன்றாகக் கூடியிருந்த சிலர் (வீரர்கள்), ஒன்றாகக் கூடியிருந்த வேறு பிறருடன் மோதினர். அவர்கள் அனைவரும் ஒருவரின் உயிரை மற்றவர் எடுக்கவே விரும்பினர். சில தேர்கள், வேறு தேர்களால் தடுக்கப்பட்டு, அசைய முடியாமல் அப்படியே நின்றிருந்தன.

பெரும் உடல் படைத்த மதங்கொண்ட யானைகள், வேறு பெரும் யானைகள் மீது பாய்ந்து, தங்கள் தந்தங்களினால் ஒன்றை ஒன்று பல இடங்களில் கிழித்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மேலும் பிற {யானைகள்}, தங்கள் வகையில் {யானை வகையில்} வேகமுள்ளவையும், பெரியனவாகவும், முதுகில் கூண்டு பொருத்தப்பட்டவையும், கொடிக்கம்பங்கள் கொண்டவையுமாக இருப்பவற்றுடன் மோதின. போரிடும் பயிற்சி அளிப்பட்ட அவை தங்கள் தந்தங்களால் தாக்கிக் கொண்டு பெரும் வேதனையில் பிளிறின. பயிற்சியால் ஒழுங்கு செய்யப்பட்டவையும், வேணுகங்களாலும் {ஒருவகை யானை ஓட்டும் கருவி}, அங்குசங்களாலும் தூண்டப்பட்டவையும், மதப்பெருக்கிலாதவையுமான யானைகள், மதங்கொண்ட யானைகளை எதிர்த்து விரைந்தன.

அந்தப் போரில் சில பெரிய யானைகள், மதங்கொண்ட யானைகளோடு மோதி அன்றில் பறவைகளைப் போல அலறிக் கொண்டே நான்கு திசைகளிலும் ஓடின. போருக்காக நன்கு பயிற்றுவிக்கப்பட்டவையும், மதங்கொண்ட கன்னத்தையும் முகத்தையும் கொண்டவையுமான பல யானைகள் வாள்கள், ஈட்டிகள் மற்றும் கணைகளால் உயிர்நிலைகளில் அடித்துச் சிதைக்கப்பட்டு, அலறிக் கொண்டு கீழே விழுந்து உயிரிழந்தன. சிலவை பயங்கரமாகப் பிளிறிக் கொண்டு அனைத்து திசைகளிலும் ஓடிக்கொண்டிருந்தன.

யானைகளைப் பாதுகாத்தவர்களும், அகன்ற மார்புகளை உடையவர்களும், திறனுடன் தாக்குபவர்களும், வேணுகங்களையும், அங்குசங்களையும் தரித்துக் கொண்டிருந்தவர்களுமான காலாட்படை வீரர்கள், கோபத்தால் தூண்டப்பட்டு, பிரகாசமிக்கப் போர்க்கோடரிகள், கதாயுதங்கள், தண்டாயுதங்கள், குறுங்கணைகள், ஈட்டிகள், நாராசங்கள், இரும்பு முள் பதிக்கப்பட்ட பருத்த பரிகங்களையும், பளபளக்கும் வாள்களையும் எடுத்துக் கொண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரின் உயிரை மற்றவர் எடுக்கத் தீர்மானித்து அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர்.

ஒருவரை எதிர்த்து ஒருவர் விரையும் துணிச்சல் மிக்கப் போராளிகளின் பட்டாக்கத்திகள் மனித இரத்தத்தில் மூழ்கி பிரகாசமாக ஒளிர்வதாகத் தோன்றியது. சுழலும் வாள்களின் "விஸ்" என்ற ஒலியும், எதிரிகளின் (உடல்களின்) உயிர் நிலைகளைத் தாக்கும் வீரமிக்கக் கரங்களின் ஒலிகளும் சேர்ந்து பேரொலியாக ஒலித்தது. கதாயுதங்கள், முசலங்கள் {உலக்கை போன்ற ஆயுதம்} ஆகியவற்றால் அடிக்கப்பட்டும், சிறந்த வாள்களால் வெட்டப்பட்டும், யானைகளின் தந்தங்களால் பிளக்கப்பட்டும், யானைகளால் தாக்கப்பட்டும், ஒருவரை ஒருவர் அழைப்போரின் குரல்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நரகங்களில் வீழ்ந்தோரின் கதறல்களைப் போல இருந்தன.

பெரும் வேகம் கொண்டவையும், அன்னங்களைப் (அன்னங்களின் கொண்டையைப்) போன்ற ஓங்கிய வால்களைக் கொண்டவையுமான குதிரைகளில் சென்ற வீரர்கள் ஒருவரை எதிர்த்து மற்றவர் விரைந்தனர். பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டவையும், வேகமானவையும், பளபளப்பானவையும், கூரிய முனை கொண்டவையுமான நீண்ட ஈட்டிகளை அவர்கள் {குதிரை வீரர்கள்} வீசினர். விரைந்து செல்லும் சில குதிரை வீரர்கள், {குதிரைகளோடு} எம்பி உயர்ந்து, தேரில் இருந்த தேர்வீரர்களின் தலைகளைத் துண்டித்தனர். மேலும் (ஆங்காங்கே) ஒரு தேர்வீரன், அடிக்கும் தொலைவில் எதிர்ப்பட்டு வரும் குதிரைவீரர்கள் பலரை நேரான பல்லங்களால் {பிறைவடிவ முனை கொண்ட அம்புகளால்} கொன்றான்.

புதிதாய் எழுந்த மேகங்களைப் போன்றவையும், மதங்கொண்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான பல யானைகள், குதிரைகளை வீழ்த்தி தங்கள் கால்களாலேயே அவற்றை மிதித்து நசுக்கின. மத்தகங்களிலும் {யானையின் முகம் மற்றும் நெற்றி}, விலாப்புறங்களிலும் ஈட்டிகளால் பிளக்கப்பட்ட சில யானைகள் பெருந்துன்பத்தால் வீரிட்டு உரக்கப் பிளிறின. மலைக்க வைக்கும் அந்தக் கைகலப்பில், பல பெரிய யானைகள், ஓட்டுநருடன் கூடிய குதிரைகளை வீசி எறிந்தன. சில யானைகள் தங்கள் தந்தங்களால், குதிரைகளையும் அதன் ஓட்டுநர்களையும் வீசி எறிந்து, கொடிக்கம்பத்துடன் கூடிய தேர்களை நசுக்கியபடி திரிந்து கொண்டிருந்தன. மதப்பெருக்கும், சக்தியும் கொண்ட சில பெரிய ஆண் யானைகள், தங்கள் தந்தங்களாலும் கால்களாலும் குதிரைகளையும், அதன் ஓட்டுனர்களையும் கொன்றன. கூரிய முனை கொண்டவையும், பாம்பைப் போன்றவையும், வேகமானவையுமான அம்புகள் யானைகளின் தலைகளிலும், நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், உடல்களிலும் பாய்ந்தன.

பெரிய விண்கற்களின் கீற்றுகள் போலத் தெரிந்தவையும் வீரர்களின் கைகளில் இருந்து அங்கும் இங்கும் வீசப்பட்டவையுமான பளபளப்பான பயங்கரத் தோற்றம் கொண்ட ஈட்டிகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கவசங்களைப் பிளந்து கொண்டு மனிதர்களின் உடல்களையும், குதிரைகளையும் துளைத்தன. சிறுத்தை மற்றும் புலிகளின் தோல்களால் ஆன உறைகளில் இருந்து எடுக்கப்பட்ட பளபளக்கும் தங்கள் பட்டாக்கத்திகளைக் கொண்டு, அப்போரில் தங்களை எதிர்த்த போராளிகளைப் பலர் கொன்றனர். தாங்களே தாக்குண்டிருந்தாலும், தங்கள் உடலின் விலாப்புறங்கள் பிளக்கப்பட்டிருந்தாலும், வாள்கள், கேடயங்கள் மற்றும் போர்க்கோடரிகளைக் கொண்டு (தங்கள் எதிரிகள் மீது) கோபத்துடன் பலர் பாய்ந்தனர். சில யானைகள், தங்கள் தந்தங்களைக் கொண்டு குதிரைகளுடன் சேர்ந்த தேர்களை இழுத்துப்போட்டு, வீசி எறிந்து, தங்கள் பின்னால் கேட்ட கதறல்களால் வழிநடத்தப்பட்டு, அனைத்துப் புறங்களிலும் திரிய ஆரம்பித்தன.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கேயும், இங்கேயும், ஈட்டிகளால் துளைக்கப்பட்ட சிலரும், போர்க்கோடரிகளால் வெட்டப்பட்ட சிலரும், யானைகளால் நசுக்கப்பட்ட சிலரும், குதிரைகளால் மிதிக்கப்பட்ட சிலரும், தேர்ச்சக்கரங்களாலும், கோடரிகளாலும் வெட்டப்பட்ட சிலரும், தங்கள் சொந்தங்களை நோக்கி உரக்க அழைத்தனர். சிலர் தங்கள் மகன்களையும், சிலர் தங்கள் தந்தைமாரையும், சிலர் தங்கள் சகோதரர்கள் மற்றும் சொந்தக்காரர்களையும் அழைத்தனர். சிலர் தங்கள் அம்மான்களையும், சிலர் தங்கள் சகோதரிகளின் மகன்களையும் {மருமகன்களையும்} அழைத்தனர். இன்னும் சிலர் அந்தப் போர்க்களத்தில் இருந்த வேறு சிலரை அழைத்தனர். பெரும் எண்ணிக்கையிலான போராளிகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கள் ஆயுத்தங்களை இழந்தனர், அல்லது தங்கள் தொடைகள் உடைந்திருந்தனர். மேலும் பிறர் கரங்கள் பிளக்கப்பட்டோ, விலாப்புறங்கள் துளைக்கப்பட்டோ, பிளக்கப்பட்டோ உயிர்வாழும் விருப்பத்தால் உரக்க ஓலமிட்டனர்.

ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பலமிழந்த சிலர், தாகத்தால் வதைக்கப்பட்டு, போர்க்களத்தின் வெறுந்தரையில் கிடந்து தண்ணீர் கேட்டனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே},  இரத்த வெள்ளத்தில் புரண்டு கொண்டிருந்த சிலர், மிகவும் பலமிழந்த நிலையில், போருக்காக ஒன்று கூடியிருக்கும் உமது மகன்களையும் {கௌரவர்களையும்}, தங்களையே தாங்களும் பெரிதும் நிந்தித்துக் கொண்டனர்.

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மறுபுறம், ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொண்டு, தங்கள் ஆயுதங்களையும் கைவிடாமல், எந்த ஓலமும் இடாமல், மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் முழக்கம் செய்தபடி, கோபத்தால் தங்கள் உதடுகளை தங்கள் பற்களால் கடித்தபடி, புருவங்களைச் சுருக்கி, ஒருவரை நோக்கி மற்றவர் கடுமுகம் காட்டியபடி, கிடந்த இடத்திலேயே கிடந்த வீரமிக்க க்ஷத்திரியர்களும் அங்கே இருந்தார்கள். பெரும் பலம் கொண்ட சிலர், அம்புகளால் பாதிக்கப்பட்டு, தங்கள் காயங்களுக்காக அவமானப்பட்டு, பெரும் வலியிலும் விடாப்பிடியாக முழு அமைதியுடன் இருந்தனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்களை இழந்து, கீழே வீசப்பட்டு, பெரும் யானைகளால் காயப்பட்டு இருந்த சில தேர்வீரர்கள், பிறரின் தேர்களில் தங்களை ஏற்றிக் கொள்ளக் கேட்டனர். பலர் தங்கள் காயங்களால் பூத்துக் குலுங்கும் பலாச {Kinsuka} மரங்களைப் போல இருந்தனர். படைப்பிரிவுகள் அனைத்திலும், கணக்கிட முடியாத அளவில் எண்ணிலா பயங்கரக் கதறல்கள் கேட்டன.

வீரர்களின் அழிவுக்கான அந்த அச்சம் நிறைந்த மோதலில், தந்தை மகனைக் கொன்றான், மகன் தந்தையைக் கொன்றான், மருமகன் அம்மானைக் கொன்றான், தாய்மாமன் சகோதரியின் மகனைக் {மருமகனைக்} கொன்றான். நண்பன் நண்பனைக் கொன்றான், உறவினர்கள் சொந்தங்களைக் கொன்றனர். பாண்டவர்களுடன் குருக்கள் மோதிய அந்தப் போரில் படுகொலைகள் இப்படியே நடந்தன.

(எவனுக்கும் எவனாலும்) கருணை காட்டப்படாத, அச்சம்நிறைந்த அந்தப் பயங்கரப் போரில், பீஷ்மரை அணுகிய பாண்டவப் படைப்பிரிவுகள் நடுங்கத் தொடங்கின. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வெள்ளியாலான கொடிக்கம்பத்தையும், பனைமரமும் ஐந்து நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்ட கொடியையும் கொண்ட வலிய கரங்களைக் கொண்ட அந்தப் பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது பெரும் தேரில் ஏறி, மேருவின் சிகரத்தில் இருக்கும் சந்திர வட்டிலைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தார்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English