Those, who fought with eachother! | Bhishma-Parva-Section-045b | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 03)
பதிவின் சுருக்கம் : எவர் எவருடன் எவரெவர் போரிட்டனர் என்று சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் விளக்கிச் சொல்வது...
{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்} "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வேகம் கொண்டவனான சங்கன் {விராடனின் மகன்}, போரில் தனக்கு நிகரான வேகம் கொண்டவனான சோமதத்தன் மகனுடன் {பாஹ்லீகரின் பேரனான பூரிஸ்ரவசுடன்} மோதி, "நில், நில்" என்று சொன்னான். பிறகு அந்த வீரன் {சங்கன்}, அவனது {எதிரியான பூரிஸ்ரவசின்} வலக்கையை அந்த மோதலில் துளைத்தான். அதன் பேரில் சோமதத்தனின் மகன் {பூரிஸ்ரவஸ்}, சங்கனின் தோள்களைத் தாக்கினான். செருக்கு மிகுந்த அந்த இரு வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற அந்தப் போர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெகு விரைவில் தேவர்களுக்கும் தானவர்களுக்கும் இடையிலான மோதலைப் போலப் பயங்கரமாக மாறியது.
கோபம் தூண்டப்பட்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், அளவற்ற ஆன்மா கொண்டவனுமான திருஷ்டகேது {சிசுபாலனின் மகன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} கோபத்தின் உருவமே ஆன பாஹ்லீகனுக்கு {பூரிஸ்ரவசின் பாட்டனுக்கு} எதிராகப் போரில் விரைந்தான். பிறகு சிம்ம கர்ஜனை செய்த பாஹ்லீகன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபம் நிறைந்த திருஷ்டகேதுவை எண்ணிலா கணைகளால் பலவீனப்படுத்தினான். எனினும், அந்த மோதலில் {கோபத்தால்} மிகவும் தூண்டப்பட்ட சேதிகளின் மன்னன் {திருஷ்டகேது}, ஒன்பது கணைகளால் பாஹ்லீகனை விரைந்து துளைத்தான். மதங்கொண்ட யானையை எதிர்த்த மற்றொரு மதங்கொண்ட யானையைப் போல, ஒருவரை எதிர்த்து மற்றொருவர் எனத் தொடர்ச்சியாகச் சிங்க முழக்கமிட்ட இருவரும் மிகவும் கோபம் தூண்டப்பட்டவர்களாக இருந்தனர். பெரும் கோபத்துடன் மோதிக்கொண்ட அந்த இருவரும் கோள்களான அங்காரகன் மற்றும் சுக்ரனைப் போலத் தெரிந்தனர் [1].
[1] அங்காரகன் என்பது செவ்வாய்க் கிரகமாகும். சுக்கிரன் என்பது வெள்ளி கிரகமாகும் என இங்கே விளக்குகிறார் கங்குலி. வேறு ஒரு பதிப்பில் செவ்வாயும் புதனும் என்று இருக்கிறது.
கொடிய செய்கைகளையுடைய கடோத்கசன், வலனை {என்கிற அசுரனை} சக்ரன் {இந்திரன்} எதிர்த்துப் போரிட்டது போல, கொடும் செய்கைகளைச் செய்யும் ராட்சசன் அலம்புசனுடன் மோதினான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சினம் மிக்கவனும், பலம் நிறைந்தவனுமான அந்த ராட்சசனை {அலம்புசனை} தொண்ணூறு {90} கணைகளால் கடோத்கசன் துளைத்தான். அந்த மோதலில் அலம்புசனும் பீமசேனனின் வலிமைமிக்க மகனை {கடோத்கசனை} (தனது) நேரான கணைகளால் பல இடங்களில் துளைத்தான். (பழங்காலத்தில்) தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் போரிட்ட வலிமைமிக்கச் சக்ரனைப் போன்றும், பலம் நிறைந்த வலனைப் போன்றும் கணைகளால் சிதைக்கப்பட்ட அவர்கள் {கடோத்கசனும், அலம்புசனும்} ஒளிர்ந்தனர்.
பலம் நிறைந்த சிகண்டி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரின் மகனான அஸ்வத்தாமனுக்கு எதிராக விரைந்தான். எனினும், அஸ்வத்தாமன், (தன் முன்) கோபத்துடன் நின்ற சிகண்டியை கூர்மையான கணையால் ஆழமாகத் துளைத்து அவனை {சிகண்டியை} நடுங்கச்செய்தான். சிகண்டியும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}. சாணையில் தீட்டப்பட்டு, கடினமாக இருந்த ஒரு கணையால் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} அடித்தான். இப்படி அவர்கள் இருவரும் அந்தப் போரில், பல்வேறு வகையான கணைகளால் ஒருவரை ஒருவர் தொடர்ந்து தாக்கினர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும்படைப் பிரிவின் தலைவனான விராடன், வீரனான {நரகனின் மகனும், பிராக்ஜோதிஷ நாட்டின் மன்னனுமான} பகதத்தனை எதிர்த்து வேகமாக விரைந்தான். அவர்களுக்கிடையான போரும் தொடங்கியது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மிகவும் கோபம் தூண்டப்பட்ட விராடன், மலையின் மார்பில் மழையைப் பொழியும் மேகங்களைப் போல, பகதத்தனின் மீது கணைமாரியைப் பொழிந்தான். ஆனால், பூமியின் தலைவனான பகதத்தனோ, அந்தப் போரில், உதயச் சூரியனை மறைக்கும் மேகங்களைப் போல, விராடனை வேகமாக (கணைகளால்) மறைத்தான்.
சரத்வானின் மகனான கிருபர், கைகேயர்களின் ஆட்சியாளனான பிருஹத்க்ஷத்திரனை [2] எதிர்த்து விரைந்தார். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கிருபர் அவனைக் {பிருஹத்க்ஷத்திரனை} கணைமாரியால் மறைத்தார். பிருஹத்க்ஷத்திரனும் சீற்றமிகுந்த கௌதமரின் மகனைக் {கிருபரைக்} கணைமாரியால் மறைத்தான். ஒருவரின் குதிரையை மற்றவர் கொன்றும், ஒருவரின் வில்லை மற்றவர் துண்டித்தும் கொண்ட அந்த வீரர்கள் இருவரும், தங்கள் தேரையும் இழந்தனர். பெரும் கோபத்தில் இருந்த அவர்கள் இருவரும் வாள்களை எடுத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் அணுகினர். அதன் பிறகு, அவர்களுக்கு இடையே நடந்த போர் இணையற்றதாகவும், தன்மையில் பயங்கரமானதாகவும் இருந்தது.
[2] பீஷ்ம பர்வத்தின் இந்த 45ம் பகுதியிலும், மேலும் 47ம் பகுதியிலும் மட்டுமே இந்த மன்னனைப் {கைகேயர்களின் ஆட்சியாளனான பிருஹத்க்ஷத்திரனை} பற்றிய குறிப்பு இருக்கிறது. மகாபாரதத்தில் வேறு எங்கும் இவனது பெயர் காணக்கிடைக்கவில்லை. மேலும் இந்தப் பகுதியிலேயே கேகய சகோதரர்களின் குறிப்பும் பின்புவருகிறது. இங்கே கைகேயம் Kaikeya என்றாலும் கேகயம் Kekaya என்றாலும் ஒன்றெனவே கொள்ள வேண்டியிருக்கிறது. இவன் அந்த ஐந்து சகோதரர்களில் மூத்தவனும், மன்னன் என்ற பதவிக்குரியவனாகவும் இருக்க வேண்டும். மேலும், கௌரவர்கள் தரப்பிலும் ஐந்து கேகயச் சகோதரர்கள் உண்டு என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். இதுதவிர, சபாபர்வம் பகுதி 4ல் யுதிஷ்டிரனை மகிழ்விக்க வந்தவர்களில் கைகேய நாட்டு வில்வீரனான த்யுமத்சேனன் என்பவன் குறிப்பும் கிடைக்கிறது.
எதிரிகளைத் தண்டிப்பவனான மன்னன் துருபதன், (போருக்காக) மகிழ்ச்சியாகக் காத்திருந்த சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதனுக்கு எதிராகப் பெரும் கோபத்துடன் விரைந்தான். சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, அந்த மோதலில் துருபதனை மூன்று கணைகளால் துளைத்தான். துருபதனும் பதிலுக்கு அவனை {ஜெயத்ரதனைத்} துளைத்தான். அவர்களுக்கு இடையில் நடைபெற்ற அந்தப் போர் பயங்கரமாகவும் கடுமையானதாகவும், பார்வையாளர்கள் அனைவரின் இதயங்களுக்கும் நிறைவைக் கொடுக்கும் வண்ணமும் இருந்தது. அந்த மோதல், சுக்கிரனுக்கும், அங்காரகனுக்கும் [3] இடையில் நடைபெற்ற மோதலைப் போன்று இருந்தது.
[3] வேறு பதிப்பில் இந்த இடத்தில் சுக்கிரனுக்கும் செவ்வாய்க்கும் என்று உள்ளதைப் போன்றே இருக்கிறது.
உமது மகன் விகர்ணன், வேகமான குதிரைகளுடன், {பீமனின் மகனான} வலிமைமிக்கச் சுதசோமனை எதிர்த்து விரைந்தான். அவர்களுக்கிடையிலான மோதலும் தொடங்கியது. விகர்ணன் பல கணைகளால் சுதசோமனைத் துளைத்தாலும், அவனால் {விகர்ணனால்} அவனை நடுங்கச் செய்ய முடியவில்லை. அதே போலச் சுதசோமனாலும் விகர்ணனை நடுங்கச் செய்ய முடியவில்லை. அஃது (அனைவருக்கும்) ஆச்சரியமாக இருந்தது.
வலிமைமிக்கத் தேர்வீரனும், மனிதர்களில் புலியும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான சேகிதானன் {சத்வத {யாதவ-விருஷ்ணி} குல மன்னன்}, பாண்டவர்களின் சார்பாகப் பெரும் கோபத்துடன், {திரிகார்த்த மன்னனான} சுசர்மனை நோக்கி விரைந்தான். சுசர்மனும், ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, அடர்ந்த கணைமழையால் வலிமைமிக்கத் தேர்வீரனான சேகிதானனின் முன்னேற்றத்தை தடுத்தான். அந்தப் பயங்கரப் போரில், பெரிதும் தூண்டப்பட்ட சேகிதானன், மலைகளின் மார்பில் மழையைப் பொழியும் மேகத்திரள்களைப் போலச் சுசர்மன் மேல் கணைமாரியைப் பொழிந்தான்.
பெரும் ஆற்றலைக் கொண்ட சகுனி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மதங்கொண்ட யானையை நோக்கி விரையும் சிங்கத்தைப் போலப் பெரும் ஆற்றல் கொண்ட பிரதிவிந்தியனை நோக்கி விரைந்தான். அதன் பேரில், கோபம் தூண்டப்பட்ட அந்த யுதிஷ்டிரனின் மகன் {பிரதிவிந்தியன்}, தானவனைச் சிதைக்கும் மகவத்தை {இந்திரனைப்} போல, அந்த மோதலில், தனது கூரிய கணைகளால் சுபலனின் மகனைச் {சகுனியைச்} சிதைத்தான். பதிலுக்குச் சகுனியும், அந்தக் கடும் மோதலில், பெரும் புத்திசாலி வீரனான பிரதிவிந்தியனை, நேரான கணைகளால் துளைத்தான்.
ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில், காம்போஜர்களின் ஆட்சியாளனும், பெரும் ஆற்றல் கொண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சுதக்ஷிணனை எதிர்த்து சுரூதகர்மன் விரைந்தான். எனினும், ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சகாதேவன் மகனை {சுரூதகர்மனை} சுதக்ஷிணன் துளைத்தாலும், (இந்திரனின் தாக்குதல்களை எதிர்த்து நின்ற} மைநாக மலையென நின்ற அவனை {சுரூதகர்மாவை} நடுங்கச்செய்வதில் அவன் {சுதக்ஷிணன்} தோல்வியுற்றான். இதனால் மிகவும் கோபம் தூண்டப்பட்ட சுரூதகர்மன் எண்ணிலா கணைகளைக் கொண்டு, காம்போஜர்களின் வலிமைமிக்கத் தேர்வீரனுடைய {சுதக்ஷிணனுடைய} உடலின் அனைத்துப் பகுதிகளைச் சிதைத்து அவனைப் பலவீனமாக்கினான்.
எதிரிகளைத் தண்டிப்பவனான இராவான் {அரவான்} [4], பெரும் கோபத்துடன் கவனமாக முயற்சி செய்து, கோபம் நிறைந்த {கலிங்க மன்னன்} ஸ்ருதாயுசை போரில் எதிர்த்து விரைந்தான். பலம் நிறைந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்த அர்ஜுனன் மகன் {இராவான்}, தனது எதிரியின் {ஸ்ருதாயுசின்} குதிரைகளைக் கொன்று சிம்ம முழக்கம் செய்தான். அதன் பேரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (அந்தச் செயலைக்) கண்ட போர் வீரர்கள் அனைவரும் அவனைப் {இராவானைப்} பெரிதாகப் புகழ்ந்தார்கள். கோபம் தூண்டப்படச் சுரூதாயுசும், போரில் அந்தப் பல்குனன் மகனுடைய {அர்ஜுனன் மகனான இராவானுடைய} குதிரைகளை ஒரு பலம்நிறைந்த கதாயுத்தால் அடித்துக் கொன்றான். அவர்களுக்கு இடையிலான போரும் தொடர்ந்தது.
[4] வில்லி பாரதம் படை எழுச்சிச் சருக்கம் 27 முதல் 34ம் செய்யுள் வரை அரவான் களப்பலி விவரிக்கப்படுகிறது. அதற்குமுன்பே பெருந்தேவனார் பாரதத்தில் இந்த அரவான் களப்பலி உண்டு என்று சொல்வார்கள். ஆனால் வில்லியிலும், கிருஷ்ணன் பெண் வடிவம் தரித்து அரவானை மணந்து கொண்ட கதை கிடையாது. அரவான் போரைக் காண வேண்டும் எனும் வரத்தை மட்டுமே வில்லி பாரதத்தில் கேட்கிறான். தமிழகத்தின் கூத்தாண்டவர் கோவில் நிகழ்வுக்குக் காரணமானவன் இவனே {அரவானே}. களப்பலியும், கூத்தாண்டவர் நிகழ்வும் தென்னகத்தில் மட்டுமே சொல்லப்படுகிறது. இவன் {அரவான்} உலூபியின் மகனாகச் சொல்லப்படுகிறான். கங்குலியில் {வியாச பாரதத்தில்} அரவானின் களப்பலியோ, வேறு எந்தக் களப்பலியோ குறிப்பிடப்படவில்லை என்பதை இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவன் மகாபாரதத்தில் இராவான் என்றும், இராவத் என்றும் அழைக்கப்படுகிறான்.
அந்தப் போரில், தனது துருப்புகளின் தலைமையில் தன் மகனின் துணையுடன், நின்ற வலிமைமிக்கத் தேர் வீரனான குந்திபோஜனை, அவந்தியின் இளவரசர்களான விந்தன் அனுவிந்தன் ஆகிய இருவரும் அணுகினார்கள். அந்த இளவரசர்கள் இருவரும் அச்சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்திய ஆற்றல் அற்புதமானதாக இருந்தது. ஏனெனில், அவர்கள் பெரும் அளவிலான துருப்புகளுடன் போரிடும் போதும் கவலையில்லாமல் உறுதியுடன் போரிட்டார்கள். அனுவிந்தன் குந்திபோஜனை நோக்கி ஒரு கதாயுதத்தை எறிந்தான். ஆனால் குந்திபோஜனோ விரைவில் கணைமாரியால் அவனை {அனுவிந்தனை} மறைத்தான். குந்திபோஜனின் மகன் [5] விந்தனை பல கணைகளால் துளைத்தான். பின்னவனும் {விந்தனும்} பதிலுக்கு அவனை {குந்திபோஜன் மகனைத்} துளைத்தான். (அவர்களுக்கு இடையிலான) அந்த மோதலைக் காண மிக அற்புதமாக இருந்தது.
[5] குந்தி போஜனின் மூத்த மகனுடைய பேரும் குந்திபோஜனே ஆகும். மேலும் குந்திபோஜனுக்குப் புருஜித் என்ற பெயரில் மற்றும் ஒரு மகன் இருந்ததாகக் கர்ண பர்வம் பகுதி 6ல் சொல்லப்படுகிறது. துரோண பர்வம் பகுதி 96ல் அஸ்வத்தாமன், குந்திபோஜனின் பத்து மகன்களைக் கொன்றதாக ஒரு குறிப்பும் இருக்கிறது.
ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மேலும், தங்கள் துருப்புகளின் தலைமையில் இருந்த கேகயச் சகோதரர்கள், தங்கள் துருப்புகளுடன் இருந்து ஐந்து காந்தார இளவரசர்களுடன்{?} அந்தப் போரில் மோதினார்கள். தேர்வீரர்களில் சிறந்தவனும், விராடனின் மகனுமான உத்தரனுடன் போரிட்ட உமது மகன் வீரபாகு {திருதராஷ்டிரனின் மகன் வீரபாகு}, அவனை {உத்தரனை} ஒன்பது கணைகளால் துளைத்தான். உத்தரனும் கூரிய முனை கொண்ட கணைகளால் அந்த வீரனை {வீரபாகுவைத்} துளைத்தான். சேதிகளின் ஆட்சியாளன் [6], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உலூகனை எதிர்த்துப் போரில் விரைந்தான். அவன் உலூகனைத் தனது கணை மாரியால் துளைத்தான். உலூகனும் அற்புத இறகுகள் கொண்ட தனது கூரிய கணைகளால் அவனைத் துளைத்தான். அவர்களுக்கு இடையில் நடைபெற்ற போரானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மிகக் கடுமையானதாக இருந்தது. ஏனெனில், ஒருவரை ஒருவர் வீழ்த்த முடியாததால், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாகச் சிதைத்தனர்.
[6] இந்தப் பகுதியின் ஆரம்பத்தில் சேதிகளின் மன்னன் திருஷ்டகேது, பாஹ்லீகனோடு போரிட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் இருந்து விலகிய பிறகு, அவன் {திருஷ்டகேது} உலூகனோடு போரிட வந்தானா? அல்லது அவனது தம்பியான சுகேது இங்கு உலூகனோடு போரிடுகிறானா? தெரியவில்லை. மேலே திருஷ்டகேதுவைக் குறிப்பிடும்போது தெளிவாகப் பெயர் குறிப்பிட்டு சேதிகளின் மன்னன் என்று இருக்கிறது. இங்கே இந்த இடத்தில் சேதியின் ஆட்சியாளன் என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. எனவே இங்கு உலூகனோடு போரிடுவது சுகேதுவாக இருக்கலாமோ என்ற ஐயம் இயல்பாக எழுகிறது.
இப்படியே அந்த மோதலில் பொதுவாக, அவர்கள் தரப்பிலும், உமது தரப்பிலும், தேரில் இருந்த மனிதர்களுக்கு இடையிலும், யானைகளில் இருந்த போர்வீரர்களுக்கு இடையிலும், குதிரைவீரர்களுக்கு இடையிலும், காலாட்படை வீரர்களுக்கு இடையிலும் என ஆயிரக்கணக்கான தனி மோதல்கள் நடந்தன. குறுகிய காலத்திற்கு மட்டுமே அந்த மோதல் அழகிய காட்சியாக இருந்தது. எனினும், விரைவில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அது மூர்க்கமானதாகவும், எதையும் அடையாளம் காண முடியாததாகவும் மாறியது.
(அப்படி நடந்த) அந்தப் போரில் யானைகள், யானைகளை எதிர்த்தும், தேர்வீரர்கள், தேர்வீரர்களை எதிர்த்தும், குதிரைகள், குதிரைகளை எதிர்த்தும், காலாட்படை வீரர்கள், காலாட்படை வீரர்களை எதிர்த்தும் விரைந்தனர். விரைந்து வந்த வீரர்கள் அனைவரும், ஒருவருக்கு எதிராக ஒருவர் கைக்கலப்பு செய்த போது, அந்த மோதல் குழம்பியதாக மிகக் கடுமையானதாக மாறியது.
அங்கே இருந்த தெய்வீக முனிவர்கள், சித்தர்கள், சாரணர்கள் ஆகியோர் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த மோதலைப் போன்ற அந்தப் பயங்கரப் போரைக் கண்டனர். ஆயிரக்கணக்கான யானைகளும், ஆயிரக்கணக்கான தேர்களும், பெரும் அளவிலான குதிரைப் படைகளும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தங்கள் தன்மையை மாற்றிக் கொள்வதாகத் தெரிந்தது [7]. மேலும், ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, தேர்களும், யானைகளும், குதிரைகளும், காலாட்படையும், அதே இடங்களிலேயே மீண்டும் மீண்டும் ஒருவருக்கு எதிராக ஒருவர் போரிட்டனர் [8]" {என்றான் சஞ்சயன்}.
[7] இங்கே மூலத்தில் உள்ள வார்த்தை Viparitam என்பதாகும். அதன் பொருள் முரணானது என்பதாகும். காலாட்படையிலும், குதிரை மற்றும் யானைப்படையில் இருந்த வீரர்களும் தங்கள் குணங்களையே மாற்றிக் கொண்டனர் என்பதே இங்குப் பொருளாகத் தெரிகிறது என இங்கே விளக்குகிறார் கங்குலி.[8] முறியடிக்கப்பட்டாலும், அடிக்கடி அணி திரண்டு, அதே இடத்தை ஆக்கிரமித்தனர் என்பதே பொருள் என இங்கே விளக்குகிறார் கங்குலி.
ஆங்கிலத்தில் | In English |