Tuesday, November 03, 2015

பெருமையுடன் நின்ற பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 049

Bhishma stood proudly! | Bhishma-Parva-Section-049 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 07)

பதிவின் சுருக்கம் : ஸ்வேதன் கொல்லப்பட்டதும் என்ன நடந்தது என்று சஞ்சயனிடம் திருதராஷ்டிரன் கேட்பது; சங்கனுக்கும் சல்லியனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; சங்கனைப் பீஷ்மரிடம் இருந்து பாதுகாக்க அர்ஜுனன் பீஷ்மருடன் மோதுவது; பாண்டவப் படையைப் பீடித்த பீஷ்மர்; முதலாம் நாள் போர் முடிவுற்றது...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "போரில் எதிரியால் படைத்தலைவன் ஸ்வேதன் கொல்லப்பட்டதும், ஓ! மகனே {சஞ்சயா}, வலிமைமிக்க வில்லாளிகளான பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் என்ன செய்தார்கள்? தங்கள் படைத்தலைவன் ஸ்வேதன் கொல்லப்பட்டதைக் கேட்டதும், அவனுக்காகப் போரிட்டவர்களுக்கும், அவனால் புறமுதுகிடச் செய்யப்பட்ட எதிரிகளுக்கும் இடையில் என்ன நடந்தது? ஓ! சஞ்சயா, நமது வெற்றியைக் கேட்டதால், (உனது) வார்த்தைகள் எனது இதயத்தை மகிழச் செய்கின்றன. எங்கள் அத்துமீறலை [1] நினைத்து எனது இதயம் வெட்கத்தை அடையவில்லை.


[1] "இங்கே திருதராஷ்டிரன் சொல்லும் அத்துமீறல் {விதிமீறல்} என்பது, தரையில் நின்று போரிடும் ஸ்வேதனைத் தேரில் இருந்து போரிடும் பீஷ்மர் கொன்றதாக இருக்க வேண்டும். அல்லது மொத்தமாக ஸ்வேதன் படுகொலையையே சொல்வதாகவும் இருக்கலாம். பாண்டவர்களுக்கு மிக நெருக்கமான ஒருவனைக் கொன்ற செயல் அவர்களை இன்னும் தூண்டுவதாக இருக்கும் என்று மன்னன் {திருதராஷ்டிரன்} கருதியிருக்கலாம்" என இங்கே விளக்குகிறார் கங்குலி.

குரு குலத்தின் முதிர்ந்த தலைவர் {பீஷ்மர்} எப்போதும் உற்சாகமாகவும், (எங்களிடம்) அர்ப்பணிப்பு கொண்டவராகவும் இருக்கிறார். (துரியோதனனைப் பொறுத்த வரை) தனது சிறிய தந்தையின் அறிவார்ந்த மகனுடன் {யுதிஷ்டிரனுடன்} பகைமையைத் தூண்டிய பிறகும், யுதிஷ்டிரன் மீது கொண்ட பயம் மற்றும் கவலையின் காரணமாகவும் அந்தப் பாண்டுவின் மகன்களிடமே ஒரு முறை பாதுகாப்பை நாடினான். அந்த நேரத்தில் அவன் {துரியோதனன்}, அனைத்தையும் கைவிட்டுவிட்டு, துயரிலேயே வாழ்ந்தான். பாண்டு மகன்களின் ஆற்றல் மற்றும் அனைத்துப் புறங்களில் இருந்தும் தான் கண்ட தடைகள் ஆகியவற்றின் விளைவால், சிக்கல்களுக்கு மத்தியில் தன்னை இருத்திக் கொண்ட துரியோதனன் அப்போது (சில காலத்திற்கு) நல்ல நடத்தைகளைக் கொண்டிருந்தான். தீய மனம் கொண்ட அந்த மன்னன் {துரியோதனன்} முன்பொரு சமயம் அவர்களின் {பாண்டவர்களின்} பாதுகாப்பின் கீழேயே தன்னை வைத்துக் கொண்டான்.

அப்படியிருந்தும், ஓ! சஞ்சயா, யுதிஷ்டிரனுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த ஸ்வேதன் ஏன் கொல்லப்பட்டான்? உண்மையில், இந்தக் குறுகிய மனம் கொண்ட இளவரசன் {துரியோதனன்}, {நல்ல} வாய்ப்பு அனைத்தையும் தாண்டி, இழிவான பலரால் பாதாள உலகங்களுக்குள் வீசப்பட்டிருக்கிறான். பீஷ்மரோ, ஆசானோ {துரோணரோ}, கிருபரோ, காந்தாரியோ போரை விரும்பவில்லை. ஓ! சஞ்சயா, நானோ, விருஷ்ணி குலத்தின் வாசுதேவனோ {கிருஷ்ணனோ}, பாண்டுவின் மகனான நீதிமிக்க மன்னனோ {தர்மராஜன் யுதிஷ்டிரனோ}, பீமனோ, அர்ஜுனனோ, அந்த மனிதர்களில் காளையரான இரட்டையர்களோ {சகாதேவன் மற்றும் நகுலனோ} போரை விரும்பவில்லை [2].

[2] "4 முதல் 7 வரையிலான வரிகள் மிகக் கடினமாக இருக்கின்றன. நான் இதைச் சரியாகப் புரிந்திருக்கிறேனா என்பதில் எனக்கு உறுதிப்பாடு இல்லை. வியாசர் தனது செய்யுள்களைப் புனைவதற்கான நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டி கணேசரைக் குழப்புவதற்காக வேண்டுமென்றே சொன்ன "வியாசகூட Vyasakuta"ங்களின் தன்மை இவற்றில் இருக்கிறது. 4வது வரியில் "பிதுஸ் Pitus" என்பதற்குச் சித்தப்பாவினுடையே என்றே பொருள் வரும், தகப்பனுடைய அல்ல; அதே போல, கால்நடை கணக்கெடுப்பின்போது கந்தர்வர்களுடன் துரியோதனன் கொண்ட பகைமையைப் போலவே, 6வது வரியில் வரும் "துர்கதேகாம் durga decam" என்பது அணையையே குறிக்கும் [இங்குக் கங்குலி என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்குப் புரியவில்லை. In verse 4 'Pitus' means uncle's and not father's; so also 'durga decam' in verse 6 means entanglements, like Duryodhana's hostility with the Gandharvas on the occasion of the tale of cattle]. வங்காளப் பதிப்பில் 7வது வரியில் Yudhishthiram bhaktya என்று வருகிறது. ஆனால் பம்பாய் பதிப்பிலோ Yudhishthire bhaktas என்று இருக்கிறது. நான் இதில் பம்பாய் பதிப்பையே கைக்கொண்டிருக்கிறேன். 8வது வரியில் வரும் "புருஷதமஸ் Purushadhamas" என்பது சகுனி மற்றும் கர்ணனையே குறிக்கும்" என இங்கே விளக்குகிறார் கங்குலி. இவை இடைசெருகலாக இருக்கக்கூடும் என்று சொன்ன கங்குலியே இங்குப் புரிந்து கொள்ளக் கடினமான செய்யுள்களை வியாசர் புனைந்திருப்பதாகச் சொல்கிறார். வியாசர் புனைந்ததாக இருப்பின் இவை இடைசெருகலாகாதே.

என்னாலும், காந்தாரியாலும், விதுரராலும், ஜமதக்னியின் மகன் ராமராலும் {பரசுராமராலும்}, உயர் ஆன்ம வியாசராலும் எப்போதும் தடுக்கப்பட்டும், கர்ணன் மற்றும் சுபலனின் மகன் {சகுனி} ஆகியோரின் ஆலோசனைகளை எப்போதும் பின்பற்றியவனும், துச்சாசனனுடன் கூடியவனும், தீய மனம் கொண்டவனும், பாவம் நிறைந்தவனுமான துரியோதனன், பாண்டவர்களிடம் தீய நோக்குடனே நடந்து கொண்டான். ஓ! சஞ்சயா, அவன் {துரியோதனன்} கொடுந்துயரத்தில் விழுந்திருக்கிறான் என்றே நான் நினைக்கிறேன். ஸ்வேதனின் படுகொலை, பீஷ்மரின் வெற்றி ஆகியவற்றுக்குப் பிறகு, சினம் தூண்டப்பட்டவனும், போரில் கிருஷ்ணனின் துணையைக் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்} என்ன செய்தான்? உண்மையில், அர்ஜுனன் நிமித்தமாகவே எனது அச்சங்கள் எழுகின்றன. ஓ! சஞ்சயா, அந்த அச்சங்கள் விலக்கப்பட முடியாததாகவும் இருக்கின்றன.

குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, வீரமிக்கவனாகவும், பெரும் செயல்களைச் செய்பவனாகவும் இருக்கிறான். தனது கணைகளைக் கொண்டு எதிரிகளின் உடல்களை அவன் {அர்ஜுனன்} சுக்கு நூறாக்குவான் என்றே நான் நினைக்கிறேன். இந்திரனின் மகனும், போரில் இந்திரனின் தம்பியான உபேந்திரனுக்கு இணையானவனும், சினமும், நோக்கங்களும் பொய்க்காதவனுமான அவனை {அர்ஜுனனைக்} கண்ட போது, உங்கள் மனநிலைகள் என்னவாகின {எப்படி மாறின}? வீரனும், வேதங்களை அறிந்தவனும், நெருப்பையும், சூரியனையும் போன்ற பிரகாசம் கொண்டவனும், ஐந்திர ஆயுதத்தை அறிந்தவனுமான அவன் {அர்ஜுனன்}, எதிரியின் மீது பாயும்போது எப்போதும் வெற்றிவாகை சூடுபவனாக அல்லவா இருக்கிறான்? அவனது ஆயுதங்கள் எதிரியின் மீது விழும்போது, வஜ்ராயுதத்தின் பலத்துடனே விழுகின்றன. வில்லின் நாணை வளைப்பதில் அற்புத வேகத்தைக் கொண்ட அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} ஒரு வலிமைமிக்கத் தேர்வீரனே {மகாரதனே}.

ஓ! சஞ்சயா, கடுமையானவனான துருபதனின் மகனும் {திருஷ்டத்யும்னனும்} பெரும் அறிவுள்ளவனே. உண்மையில், போரில் ஸ்வேதன் கொல்லப்பட்ட போது அந்தத் திருஷ்டத்யும்னன் என்ன செய்தான்? பழங்காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகள் மற்றும் அவர்களது படைத்தலைவனின் {ஸ்வேதனின்} படுகொலை ஆகியவற்றின் விளைவால் உயர் ஆன்ம பாண்டவர்களின் இதயங்கள் {கோபத்தால்} எரிந்து கொண்டிருக்கும் என்றே நான் நினைக்கிறேன். துரியோதனனின் நிமித்தமாக, அவர்களின் கோபத்தை நினைத்து இரவிலும் பகலிலும் நான் ஆறுதல் இல்லாமலேயே இருக்கிறேன். அந்தப் பெரும்போர் எப்படி நடைபெற்றது? ஓ சஞ்சயா, அது குறித்த அனைத்தையும் எனக்கு நீ சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது அத்துமீறல்களைக் குறித்து அமைதியாகக் கேளும். அதன் பலனை துரியோதனன் மீது சுமத்துவது உமக்குத் தகாது. தண்ணீர் வற்றியதும் அணைகட்டுவதைப் போல உமது புரிதல் இருக்கிறது. அல்லது, வீடு பற்றி எரியும்போது கிணறு வெட்டுவதைப் போல {உமது புரிதல்} இருக்கிறது [3].

[3] "எப்படி இவையிரண்டும் பயனற்றவையோ, அதே போல உமது கவலைகளும் பயனற்றதே" என்று சஞ்சயன் சொல்வதாக இங்கே விளக்குகிறார் கங்குலி.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, முற்பகலைக் கடந்து நடந்த அந்தக் கடும் மோதலில் படைத்தலைவனான ஸ்வேதன் பீஷ்மரால் கொல்லப்பட்டான் [4].

[4] முன்பு கங்குலி சொன்னதைப் போல ஸ்வேதனின் கதை இடைச்செருகல் என்பது உண்மையாக இருப்பின், பகுதி 47ஆவின் பாதியில் ஸ்வேதன் நுழைவதில் இருந்து இந்தப்பகுதியின் இந்த வரிவரை இடைச்செருகலே...

எதிரிப் படை அணிகளைக் கலங்கடிப்பவனும், போரில் எப்போதும் மகிழ்பவனும், விராடனின் மகனுமான சங்கன், கிருதவர்மனோடு {அவனது தேரில்} சல்லியன் இருப்பதைக் கண்டு, தெளிந்த நெய்யால் சுடர்விடும் நெருப்பைப் போலத் திடீரெனக் கோபத்தால் சுடர்விட்டெரிந்தான். இந்திரனின் வில்லை ஒத்திருந்த தனது பெரிய வில்லை வளைத்த அந்த வலிமைமிக்க வீரன் {சங்கன்}, அந்தப்போரில் மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைக்} கொல்ல விரும்பி தனக்கு உதவியாகப் பெரும் தேர்ப்படையை அனைத்துப் புறங்களிலும் சூழச் செய்து கொண்டு விரைந்தான்.

கணைமாரியைப் பொழிந்த சங்கன், சல்லியனின் தேரை நோக்கி விரைந்தான். மதம் கொண்ட யானையாக முன்னேறி வரும் அவனைக் {சங்கனைக்} கண்டு, ஏற்கனவே மரணத்தின் {காலனின்} கோரப்பற்களில் {அகப்பட்டு} இருந்த மத்ரர்களின் ஆட்சியாளனைக் {சல்லியனைக்} காக்க விரும்பி, உமது தரப்பின் ஏழு வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அவனைச் சூழ்ந்தார்கள் [5].

[5] அந்த ஏழு பேர் யார் என்ற குறிப்புக் கங்குலியில் இல்லை. ஆனால் வேறு ஒரு பதிப்பில், கோசல மன்னனான பிருகத்பலன், மகத மன்னனான ஜயத்சேனன், சல்லியனின் மகனான ருக்மரதன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், காம்போஜ மன்னன் சுதக்ஷிணன், சிந்து மன்னன் ஜெயத்ரதன் ஆகியோரே அந்த எழுவர் என்றும், அந்த எழுவரின் விற்களையும் ஏழு பல்லங்களாலே சங்கன் வெட்டினான் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

பிறகு, அந்தப் போரில், வலிய கரங்களைக் கொண்ட பீஷ்மர் மேகங்களைப் போல முழங்கியபடி, முழுமையாக ஆறு முழம் நீளம் இருந்த வில்லை எடுத்துக் கொண்டு சங்கனை எதிர்த்து விரைந்தார். வலிமைமிக்கத் தேர்வீரரும், பெரிய வில்லாளியுமான அவர் {பீஷ்மர்}, இப்படி விரைவதைக் கண்ட பாண்டவப் படை, புயலின் தாக்கத்தால் அடிக்கப்பட்ட படகைப் போல நடுங்கத் தொடங்கியது.

பீஷ்மரிடம் இருந்து சங்கன் காக்கப்பட வேண்டும் என்று நினைத்த அர்ஜுனன் விரைவாக முன்னேறி சங்கனுக்கு முன்பு தன்னை நிறுத்திக் கொண்டான். அதன் பிறகு, பீஷ்மருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான போர் தொடங்கியது. போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வீரர்களுக்கு மத்தியில் "ஓ" என்றும், "ஐயோ" என்றும் அலறல்கள் எழுந்தன. ஒரு படை மற்றொரு படையில் கலப்பதைப் போல அப்போது தெரிந்தது [6]. இப்படியே அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.

[6] "அர்ஜுனன் ஒரு படையாகவும், பீஷ்மர் மற்றொரு படையாகவும் தெரிந்தனர். அவர்களுக்குள் ஏற்பட்ட போர் வானத்தின் மின்னலொன்று மற்றொன்றுடன் கலப்பதைப் போல இருந்தது என இங்கே பொருள் கொள்ள வேண்டும்" என்று இங்கே விளக்குகிறார் கங்குலி. வேறு பதிப்பில் இந்த இடத்தில் "ஒளி ஒளியோடு இவ்வாறு நன்றாகச் சேர்க்கை பெற்றது" என்று அங்குள்ள வீரர்கள் ஆச்சரியத்தை அடைந்தார்கள்" என்று சொல்லப்பட்டுள்ளது.

பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கைகளில் கதாயுதத்துடன் கூடிய சல்லியன், தனது தேரில் இருந்து இறங்கி, சங்கனின் நான்கு குதிரைகளைக் கொன்றான். இப்படிக் குதிரைகளை இழந்த சங்கன், அந்தத் தேரில் இருந்து குதித்து, பீபத்சுவின் {அர்ஜுனனின்} தேரை நோக்கி ஓடி (அதில் ஏறிக் கொண்டு) தேறுதல் அடைந்தான். பிறகு, பீஷ்மரின் தேரில் இருந்து பாய்ந்த எண்ணற்ற கணைகள், வானத்தையும் பூமியையும் முழுமையான மறைத்தன. தாக்குபவர்களில் முதன்மையானவரான பீஷ்மர், பாஞ்சால, மத்ஸ்ய, கேகய மற்றும் பிரபத்திரகப் படைகளைத் தனது கணைகளால் கொன்றழித்தார்.

இடது கையாலும் வில் வளைக்க இயன்றவனான பாண்டுவின் மகனுடனான (அர்ஜுனனுடனான) போரை விரைவில் கைவிட்ட பீஷ்மர், தனது படையால் சூழப்பட்டவனும், பாஞ்சாலர்களின் மன்னனுமான துருபதனை எதிர்த்து விரைந்தார். விரைவில் அவர் {பீஷ்மர்}, தனது அன்புக்குரிய உறவினனை {சம்பந்தியான துருபதனை} எண்ணற்ற கணைகளால் மறைத்தார். பின்பனிக் காலத்தில் {சிசிர ருதுவில்} நெருப்பால் எரிக்கப்படும் காட்டைப் போலத் துருபதனின் துருப்புகள் எரிக்கப்படுவதாகவே அப்போது தெரிந்தது. புகையற்ற நெருப்பு சுடர்விட்டுக் கொண்டிருப்பதைப் போலவோ, நன்பகலில் தனது வெப்பத்தால் அனைத்தையும் எரிக்கும் சூரியனைப் போலவோ அந்தப் போர்க்களத்தில் பீஷ்மர் நின்றார்.

பாண்டவர்களின் போராளிகளால் பீஷ்மரைப் பார்க்கக்கூட இயலவில்லை. அச்சத்தால் பீடிக்கப்பட்டு, கண்களைச் சுற்றிலும் சுழல விட்டு, பாதுகாவலர் எவரும் இல்லாததைக் கண்ட அந்தப் பாண்டவப் படை, குளிரால் பீடிக்கப்பட்ட பசுக்கூட்டத்தைப் போலத் தெரிந்தது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கொல்லப்படும்போதும், நன்கு அடிக்கப்பட்டு உற்சாகமிழந்து ஓடும்போதும், பாண்டவத் துருப்புகளுக்கு மத்தியில், "ஓ" என்றும், "ஐயோ" என்றும் அலறல்கள் எழுந்தன.

பிறகு, சந்தனுவின் மகனான பீஷ்மர், தனது வில்லை எப்போதும் வட்டமாக வளைத்துக் கொண்டு, கடும் விஷத்தை ஒத்திருந்த சுடர்மிகும் கணைகளை அடிக்க ஆரம்பித்தார். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, முன்கூட்டியே பாண்டவத் தேர்வீரர்களைப் பெயர் சொல்லி அழைத்து, அவர்களைக் கொன்றவரும், கடும் நோன்புகளைக் கொண்டவருமான அந்த வீரர் {பீஷ்மர்}, அனைத்துப் புறங்களிலும் கணைகளின் தொடர்ந்த வரிசைகளை உண்டாக்கினார். போர்க்களம் அனைத்திலும் பாண்டவத் துருப்புகள் நசுக்கப்பட்டு, நிர்மூலமாக்கப்பட்ட போது, சூரியன் மறைந்ததால் ஒன்றும் புலப்படவில்லை. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில் பெருமையாக நின்று கொண்டிருந்த பீஷ்மரைக் கண்ட பார்த்தர்கள் (இரவு ஓய்வுக்காகத்) தங்கள் படைகளைப் பின்வாங்கச் செய்தனர்." {என்றான் சஞ்சயன்}.

முதல் நாள் போர் முற்றிற்று


ஆங்கிலத்தில் | In English