Monday, November 09, 2015

பீஷ்மார்ஜுனப் போர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 052

The war between Bhishma and Arjuna! | Bhishma-Parva-Section-052 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 10)

பதிவின் சுருக்கம் : போர்வீரர்களை உற்சாகப்படுத்திய துரியோதனன்; பீஷ்மர் செய்த பெரும்போர்; பாண்டவர்களின் படை சிதறி ஓடுவதைக் கண்ட அர்ஜுனன் பீஷ்மரை எதிர்த்து தானே செல்வது; பீஷ்மரின் துணைக்குக் கௌரவர்களில் சிலரும், அர்ஜுனனின் துணைக்குப் பாண்டவப் படையில் சிலரும் விரைந்தது; அர்ஜுனனுக்கும் பீஷ்மருக்கும் இடையில் நடைபெற்ற ஒப்பற போர்...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "இப்படி எனது படைகளும், பகைவர்களின் படைகளும் போர்வியூகத்தை அமைத்துக் கொண்ட பின்னர், அடிப்பவர்களில் முதன்மையானவர்கள் {அவர்கள் அனைவரும்} எப்படித் தாக்கினார்கள்?" என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அனைத்துப் பிரிவுகளும் இப்படி அணிவகுக்கப்பட்ட பின்னர், கவசம் தரித்திருந்த ஒவ்வொரு போராளியும் தங்கள் அழகிய கொடிகளை உயர்த்திப் பிடித்த வண்ணம் {போருக்காகக்} காத்திருந்தனர். எல்லையற்ற கடலைப் போன்றிருந்த (குரு) படையைக் கண்ட உமது மகன் துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, படைக்குள் இருந்தபடியே உமது தரப்பின் போராளிகள் அனைவரிடமும், "கவசம் தரித்த நீங்கள், போரிடத் தொடங்குவீராக" என்றான். உயர்த்தப்பட்ட கொடிகளுடன் கூடிய போராளிகள் அனைவரும், கொடூர எண்ணங்களை வளர்த்துக் கொண்டு, தங்கள் உயிர்களையே துச்சமாக மதித்து, பாண்டவர்களுக்கு எதிராக விரைந்தனர். அதன்பிறகு அங்கே நடைபெற்ற போர் கடுமையானதாகவும், மயிர் சிலிர்ப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.

தேர்கள் மற்றும் யானைகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்தன. தேர்வீரர்களால் அடிக்கப்பட்டவையும், அழகிய இறகுகளும், கூரிய முனைகளும் கொண்டவையுமான பெரும் சக்தி படைத்த கணைகள் யானைகளின் மீதும் குதிரைகள் மீதும் பொழிந்தன. இப்படிப் போர் ஆரம்பித்த போது, மதிப்பிற்குரிய குரு பாட்டனும், பயங்கர ஆற்றல் கொண்டவரும் வலிய கரங்களைக் கொண்டவருமான பீஷ்மர், கவசம் தரித்து, தனது வில்லை எடுத்துக் கொண்டு, அவர்களை {கௌரவர்களை} அணுகி, சுபத்திரையின் வீர மகன் {அபிமன்யு}, வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனன், கேகயர்களின் ஆட்சியாளன், விராடன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், சேதி மற்றும் மத்ஸ்ய வீரர்கள் ஆகியோர் மீது கணைமாரியைப் பொழிந்தார்.

(பாண்டவர்களின்) வலிமைமிக்க அந்த அணிவகுப்பு {வியூகம்}, அந்த வீரர் {பீஷ்மர்} போரிடத் தொடங்கியதும் நடுங்கத் தொடங்கியது. போராளிகள் அனைவருக்கும் இடையில் நடைபெற்ற போரானது பயங்கரமாக இருந்தது. குதிரைவீரர்கள், தேர்வீரர்கள் மற்றும் குதிரைகளில் முதன்மையானவை ஆகியன விரைவில் விழுந்தன. பாண்டவர்களின் தேர்ப்படைப் பிரிவுகள் சிதறி ஓடிப் போகத் தொடங்கின. பிறகு, மனிதர்களில் புலியான அர்ஜுனன், வலிமைமிக்கத் தேர்வீரரான பீஷ்மரைக் கண்டு, விருஷ்ணி குலத்தோனிடம் {கிருஷ்ணனிடம்} கோபத்துடன், "பாட்டன் {பீஷ்மர்} இருக்கும் இடத்திற்கு முன்னேறுவாயாக. ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, கோபம் தூண்டப்பட்ட இந்தப் பீஷ்மர், துரியோதனனின் நலனுக்காக எனது படையை அழித்துவிடுவார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இந்தத் துரோணர், கிருபர், சல்லியன், விகர்ணன் ஆகியோர் துரியோதனன் தலைமையிலான திருதராஷ்டிரர் மகன்களுடன் சேர்ந்து கொண்டும், உறுதிமிக்க இந்த வில்லாளி {பீஷ்மர்} தரும் பாதுகாப்பிலும், பாஞ்சாலர்களைப் படுகொலை செய்துவிடுவார்கள். எனவே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எனது துருப்புகளுக்காக நானே பீஷ்மரைக் கொல்வேன்" என்றான் {அர்ஜுனன்}.

அவனிடம் {அர்ஜுனனிடம்} வாசுதேவன் {கிருஷ்ணன்}, "ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, கவனமாக இருப்பாயாக. ஏனெனில், ஓ! வீரா {அர்ஜுனா}, பாட்டனின் {பீஷ்மரின்} தேரை நோக்கி உன்னை நான் விரைவாகக் கொண்டு செல்வேன்" என்றான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதைச் சொன்ன சௌரி {கிருஷ்ணன்}, உலகத்தால் கொண்டாடப்படும் அந்தத் தேரை, பீஷ்மரின் தேருக்கு முன்பாக நிறுத்தினான். எண்ணிலடங்கா கொடிகள் அசைந்து கொண்டிருக்க, (வெள்ளை) நாரைக்கூட்டங்களைப் போன்ற அழகான குதிரைகள் வேகமாகச் செல்ல, கடுமுழக்கம் செய்யும் குரங்கைப் {குரங்கின் உருவத்தை} பொறித்த கொடி உயர்ந்திருக்க, சூரியப் பிரகாசத்துடனும், மேகங்களின் முழக்கத்தைப் போன்ற சடசடப்பொலியுடனும் கூடிய தனது பெரிய தேரில், கௌரவப் படைகளையும், சூரசேனர்களையும் கொன்றபடி சென்றவனும், நண்பர்களின் மகிழ்ச்சி அதிகரிப்பவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} அங்கே மோதலுக்கு விரைந்து வந்தான்.

(இப்படி) மிக வேகமாக மதங்கொண்ட யானையைப் போல விரைந்து வந்த அவன் {அர்ஜுனன்}, போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வீரமிக்கப் போராளிகளுக்கு (இப்படியே) அச்சமூட்டி, தனது கணைகளால் அவர்களை வீழ்த்தி, சைந்தவன் தலைமையிலான வீரர்களாலும், கிழக்குப் பகுதி {கிழக்கு நாடுகளின்} வீரர்கள், சௌவீரர்கள், கேகயர்கள் ஆகிய போராளிகளால் பாதுகாக்கப்பட்ட சந்தனுவின் மகன் பீஷ்மருடன் பெரும் வேகத்துடன் மோதினான். காண்டீவம் என்று அழைக்கப்படும் வில்லைத் தாங்குபவனை {அர்ஜுனனை} எதிர்க்க, குரு பாட்டனையும் {பீஷ்மரையும்}, தேர்வீரர்களான துரோணர் மற்றும் விகர்த்தனன் மகனையும் {கர்ணன்} தவிர வேறு யாரால் முடியும்?

பிறகு, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, கௌரவர்களின் பாட்டனான பீஷ்மர் அர்ஜுனனை எழுபத்தேழு {77} கணைகளால் {நாராசங்களால்} அடித்தார். துரோணர் இருபத்தைந்தாலும் {25}, கிருபர் ஐம்பதாலும் {50}, துரியோதனன் அறுபத்துநான்காலும் {64}, சல்லியன் ஒன்பது {9} கணைகளாலும் (அவனை {அர்ஜுனனை}) அடித்தனர். மனிதர்களில் புலியான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அறுபது {60}, விகர்ணன் மூன்று {3}, சைந்தவன் ஒன்பது {9}, சகுனி ஐந்து {5} என அவனை {அர்ஜுனனை} அம்புகளால் அடித்தனர். மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அர்த்தயாணி {சல்லியன்}, [1] அந்தப் பாண்டுவின் மகனை அகன்ற தலை கொண்ட மூன்று {3} கணைகளால் {பல்லங்களால்} துளைத்தான். அனைத்துப் புறங்களில் இருந்தும் அவர்கள் அடித்த கூரிய கணைகள் துளைத்தபடியே இருந்தாலும், அந்தப் பெரும் வில்லாளி, அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன் {அர்ஜுனன்}, (கணைகளால்) துளைக்கப்பட்ட ஒரு மலையைப் போல நடுங்காதிருந்தான்.

[1] வங்க உரைகளில் அர்த்தயாணி குறித்த இந்த மூன்று வரிகள் இடம்பெற்றிருக்கின்றன. பம்பாய்ப் பதிப்புகளில் இந்த அரைச் சுலோகம் இல்லை என இங்கே விளக்குகிறார் கங்குலி.

அதன் பேரில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கிரீடம் தரித்தவனான அளவிலா ஆன்மா கொண்டவன் {அர்ஜுனன்}, பீஷ்மரை இருபத்தைந்து {25} கணைகளாலும், கிருபரை ஒன்பது {9} கணைகளாலும், துரோணரை அறுபதாலும் {60}, ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டரரே}, விகர்ணனை மூன்றாலும் {3}, அர்த்தயாணியை {சல்லியனை} மூன்று {3} கணைகளாலும், மன்னனை {துரியோதனனை} ஐந்து {5} கணைகளாலும் அடித்தான்.

அதன்பிறகு, சாத்யகி, விராடன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், திரௌபதியின் மகன்கள், அபிமன்யு ஆகிய அனைவரும் (அவனுக்கு உதவும் பொருட்டு) அவனைச் {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டார்கள். சோமகர்களால் ஆதரிக்கப்பட்ட பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, கங்கை மைந்தரின் {பீஷ்மரின்} நலம் நாடுவதிலேயே ஈடுபட்டுக் கொண்டிருந்த பெரும் வில்லாளியான துரோணரை நோக்கி முன்னேறினான்.

பிறகு, தேர்வீரர்களில் முதன்மையான பீஷ்மர், எட்டு {8} கூரிய கணைகளால் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} விரைந்து துளைத்தார். இதனால் உமது தரப்புப் போராளிகள் மனம் நிறைந்தனர். தேர்வீரர்களில் சிங்கங்களான அவர்களின் முழக்கங்களைக் கேட்டவனும், பெரும் ஆற்றல் கொண்டவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தேர்வீரர்களில் சிங்கங்களான அவர்களுக்கு மத்தியில் உற்சாகமாக நுழைந்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களை (தொடர்ந்து) குறி வைத்து, தனது வில்லைக் கொண்டு விளையாடினான்.

அப்போது, மனிதர்களின் ஆட்சியாளனான மன்னன் துரியோதனன், போரில் பிருதையின் மகனால் {குந்தியின் மகன் அர்ஜுனனால்} பீடிக்கப்படும் தனது துருப்புகளைக் கண்டு பீஷ்மரிடம், "ஓ! கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, கிருஷ்ணனோடு கூடியவனும், பாண்டுவின் மகனுமான வலிமைமிக்க இவன் {அர்ஜுனன்}, நீரும், தேர்வீரர்களில் முதன்மையான துரோணரும் உயிரோடிருக்கையிலேயே, நமது துருப்புகள் அனைத்தையும் வீழ்த்தி, நமது வேர்களை வெட்டிக் கொண்டிருக்கிறான். ஓ! ஏகாதிபதி {பீஷ்மரே}, கர்ணன் எனது நலன் விரும்பியாக இருப்பினும், உம் நிமித்தமாகவே, பிருதையின் {குந்தியின்} மகன்களுடன் போரிடாமல் ஆயுதங்களை ஒதுக்கி வைத்தான். எனவே, ஓ! கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, பல்குனனைக் {அர்ஜுனனைக்} கொல்ல என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வீராக" என்றான் {துரியோதனன்}.

இப்பபடிச் சொல்லப்பட்ட உமது தந்தை தேவ விரதர் {பீஷ்மர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, "க்ஷத்திரிய பழக்கவழக்கத்திற்கு {அறத்திற்கு} ஐயோ" என்று சொல்லி பார்த்தனின் {அர்ஜுனனின்} தேரை நோக்கி முன்னேறினார். மேலும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வெண்குதிரைகள் பூட்டப்பட்ட தங்கள் தேரில் (போருக்காக) அந்த இரு வீரர்களும் நிற்பதைக் கண்ட மன்னர்கள் அனைவரும் சிங்க முழக்கம் செய்த படி, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தங்கள் சங்குகளை முழக்கினர்.

துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, துரியோதனன், உமது மகன் விகர்ணன் ஆகியோர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே} அந்த மோதலில் {பீஷ்மருக்குத் துணை நிற்க} பீஷ்மரைச் சூழ்ந்து கொண்டு போருக்காக நின்றனர். அதே போலப் பாண்டவர்கள் அனைவரும் தனஞ்சயனை {அர்ஜுனனை} சூழ்ந்து கொண்டு கடும் மோதலுக்கு நின்றனர். போரும் ஆரம்பித்தது. அந்த மோதலில் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, பார்த்தனை {அர்ஜுனனை} ஒன்பது {9} கணைகளால் துளைத்தார். அர்ஜுனனும் பதிலுக்குப் பத்து {10} கணைகளால் அவரது உயிர்நிலைகளில் துளைத்தான். பிறகு, பாண்டுவின் மகனான அர்ஜுனன், நன்கு அடிக்கப்பட்ட ஓர் ஆயிரம் {1000} கணைகளால் பீஷ்மரை அனைத்துப் புறங்களிலும் மூழ்கடித்தான். எனினும், பார்த்தனின் {அர்ஜுனனின்} அந்த அம்புகளாலான வலையை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சந்தனுவின் மகனான பீஷ்மர் (தனக்குச் சொந்தமான) மற்றொரு அம்புவலையால் கலங்கடித்தார். போரில் மகிழ்வு கொண்டு, மனம் நிறைந்த அந்த இருவரும் {பீஷ்மரும்-அர்ஜுனனும்}, ஒருவரின் மேல் மற்றவர் ஆதிக்கம் பெற முடியாமல், சாதனைகளுக்கு எதிரான சாதனைகளை ஒருவருக்கொருவர் செய்ய விரும்பினர். பீஷ்மரின் வில்லில் இருந்து அடிக்கப்பட்ட தொடர்ச்சியான அம்புகள், அர்ஜுனனின் கணைகளால் விலக்கப்பட்டன. அதே போல அர்ஜுனனால் அடிக்கப்பட்ட கணைகள் அனைத்தையும், தனது கணைகளால் தரையில் வீழ்த்தினார் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}.

கூரிய முனைகள் கொண்ட இருபத்தைந்து {25} கணைகளால் பீஷ்மரை அர்ஜுனன் துளைத்தான். அந்த மோதலில் பீஷ்மரும் பார்த்தனை {அர்ஜுனனை} ஒன்பது {9} கணைகளால் துளைத்தார். வலிமைமிக்க வீரர்களும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான அவர்கள் இருவரும் ஒருவரின் குதிரைகளை மற்றவர் துளைத்தனர். அவர்களின் கணைகளும், தேர்களின் சக்கரங்களும் கூட விளையாடத் தொடங்கின.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அடிப்பவர்களில் முதன்மையான பீஷ்மர், மூன்று {3} கணைகளால் வாசுதேவனை {கிருஷ்ணனை} நடு மார்பில் அடித்தார். பீஷ்மரின் வில்லில் இருந்து அடிக்கப்பட்ட அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட மதுசூதனன் {கிருஷ்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} மலர்ந்திருக்கும் பலாச {கின்சுக} மரத்தைப் போலக் காணப்பட்டான். மாதவனைக் {கிருஷ்ணனைக்} கண்டு கோபமுற்ற அர்ஜுனன், அந்த மோதலில் கங்கை மைந்தருடைய {பீஷ்மரின்} தேரோட்டியை மூன்று {3} கணைகளால் துளைத்தான். அந்த இருவீரர்களும், அந்தப் போரில் ஒருவரை ஒருவர் குறிபார்க்க எண்ணி, அதில் வெல்ல முடியாதவர்களாக இருந்தனர். அந்த இரண்டு வீரர்களின் தேரோட்டிகளின் திறமை, கரங்களின் வேகம் ஆகியவற்றின் விளைவாக, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முன்னேறுவதிலும், பின்வாங்குவதிலும், அழகிய வளையங்களாகச் சுழல்வதிலும் தங்கள் தேர்களை ஈடுபடுத்தித் தங்கள் திறமைகளை அவர்கள் வெளிக்காட்டினார்கள்.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தாக்குவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} தாங்கள் எதிர்பார்த்ததை அடைவதற்காக அவர்கள் இருவரும் அடிக்கடி தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டே இருந்தனர். இரு வீரர்களும் சிங்க முழக்கங்களுடன் சங்குகளையும் ஊதினர். அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களுடைய வில்லின் நாணொலிகளும் ஒன்று போலவே இருந்தன. சங்கு முழக்கம், தேர்களின் சடசடப்பொலி ஆகியவற்றால் திடீரெனப் பூமி பிளந்தது {பூமியில் விரிசல் விட்டது}. இப்படியே நடுங்கத் தொடங்கிய அது {பூமி}, பாதாள ஒலிகளையும் உண்டாக்கத் தொடங்கியது. ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவர்கள் இருவருக்குள்ளும் எந்த ஏற்றத்தாழ்வையும் யாராலும் காண முடியவில்லை. பெரும் வலிமையும், போரில் பெரும் துணிவும் கொண்ட அவ்விருவரும் ஒருவருக்கொருவர் இணையானவர்களாகவே இருந்தனர்.

பீஷ்மரின் கொடியைக் கொண்டு (கண்டு) மட்டுமே, (உதவி செய்ய) அவரைக் கௌரவர்களால் அணுக முடிந்தது. அதே போல, பாண்டவப் படையினரும் (உதவி செய்ய) பிருதையின் மகனை {குந்தியின் மகன் அர்ஜுனனை} அணுக அவனது கொடியே வழிகாட்டியது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் முதன்மையானவர்களான அவ்விருவரும் தங்கள் ஆற்றல்களை இப்படி வெளிக்காட்டிய போது, போர்க்களத்தில் இருந்த உயிரினங்கள் அனைத்தும் ஆச்சரியத்தால் நிறைந்தன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, யாராலும் அவர்களுக்குள் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை. அறநெறிகளை நோற்கும் மனிதர்களால் அவர்களிடம் எந்த அற மீறலையும் காண முடியவில்லை. கணை மேகங்களின் விளைவால் (சில நேரங்களில்) அவ்விருவரும் யார் கண்ணுக்கும் தெரியாதவாறு மறைந்தார்கள். விரைவில் அவ்விருவரும் மீண்டும் தெரியவும் ஆரம்பித்தனர்.

அவர்களது ஆற்றல்களைக் கண்ட கந்தர்வர்கள், சாரணர்கள் மற்றும் பெரும் முனிவர்களுடன் கூடிய தேவர்கள் தங்களுக்குள், "இந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் கோபத்தால் தூண்டப்பட்டிருக்கும்போது, தேவர்கள், அசுரர்கள் மற்றும் கந்தர்வர்களுடன் கூடிய உலகங்கள் அனைத்தினாலும் கூட, {இந்தத் தேர்வீரர்களைப்} போரில் வீழ்த்த முடியாது. பெரும் ஆச்சரியங்கள் நிறைந்த இந்தப் போர், உலகங்கள் அனைத்திலும் ஆச்சரியம் நிறைந்ததாகவே உண்மையில் இருக்கும், இது போன்ற ஒரு போர் இனி எப்போதும் நடைபெறாது. பெரும் புத்திக்கூர்மை கொண்டவனும், குதிரைகள், தேர் மற்றும் வில்லைக் கொண்டவனும், போரில் கணைமாரி பொழிபவனுமான பிருதையின் மகனால் {அர்ஜுனனால்} இந்த மோதலில் பீஷ்மரை வீழ்த்த முடியாது. தேவர்களாலேயே போரில் வீழ்த்தப்பட முடியாத பெரும் வில்லாளியான பாண்டுவின் மகனையும் {அர்ஜுனனையும்} இந்த மோதலில் பீஷ்மரால் வீழ்த்த முடியாது. இந்த உலகம் எவ்வளவு காலம் நீடித்திருக்குமோ, அவ்வளவு காலம் இந்தப் போரும் தொடரவே செய்யும்" என்றனர் {தேவர்கள்}.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில் போரிட்டுக் கொண்டிருந்த கங்கையின் மைந்தரையும் {பீஷ்மரையும்}, அர்ஜுனனையும் புகழ்ந்த {தேவர்களின்} இவ்வார்த்தைகளை நாங்களும் கேட்டோம். அவ்விருவரும் போரில் தங்கள் ஆற்றலை இப்படி வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது, உமது தரப்பின் வீரர்களும், பாண்டவர்கள் தரப்பு வீரர்களும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} கூரிய குறுவாள்களையும், பளபளக்கும் போர்க்கோடரிகளையும், எண்ணிலடங்கா கணைகளையும், பல்வேறு விதமான ஆயுதங்களையும் கொண்டு ஒருவரை ஒருவர் கொன்றனர். இரு படைகளின் துணிச்சல்மிகுப் போராளிகளும் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும், அடித்துக் கொண்டும் நடந்த அந்தக் கொலைகார மோதல் இப்படி நீடித்துக் கொண்டே இருந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணருக்கும், பாஞ்சாலர்களின் இளவரசனுக்கும் {திருஷ்டத்யும்னனுக்கும்} இடையில் நடைபெற்ற மோதலும் பயங்கரமாகவே இருந்தது". {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English