Friday, November 20, 2015

பீமன் புரிந்த கோரத்தாண்டவம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 054அ

Bhima's dance of terror! | Bhishma-Parva-Section-054a | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 12)

பதிவின் சுருக்கம் : பீமனைத் தாக்க நிஷாத மன்னன் கேதுமானுடன் சேர்ந்து விரைந்த கலிங்க மன்னன் சுருதாயுஸ்; போர்க்களத்தின் கொடூர நிலை; பீமசேனனைக் கைவிட்டு சேதி நாட்டு வீரர்கள் பின்வாங்குவது; பீமன் தனியாகப் போராடுவது; பீமனின் குதிரைகளைக் கொன்ற சக்ரதேவன்; பீமன் சக்ரதேவனைக் கொல்வது; பானுமானைக் கொன்ற பீமன்; வாளை எடுத்துக் கொண்டு பீமன் புரிந்த கோரத்தாண்டவம்....

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "எனது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்டவனும், தனது துருப்புகளால் ஆதரிக்கப்பட்டவனும், பெரும் படைப்பிரிவின் தலைவனுமான கலிங்கர்களின் ஆட்சியாளன் {சுருதாயுஸ்}, அற்புதம் நிறைந்த சாதனைகளுக்குச் சொந்தக்காரனும், மரணத்தைப் போன்ற கதாயுதத்தைக் கையில் கொண்டு போர்க்களத்தில் உலவும் வீரனுமான வலிமைமிக்கப் பீமசேனனை எதிர்த்து எப்படிப் போரிட்டான்?" என்று கேட்டான்.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, இப்படி உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்ட கலிங்கர்களின் வலிமைமிக்க மன்னன் {சுருதாயுஸ்}, ஒரு பெரும் படையின் துணையுடன் பீமனின் தேரை நோக்கி முன்னேறினான். அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சேதிகளால் {சேதி நாட்டு வீரர்களால்} ஆதரிக்கப்பட்ட பீமசேனன், நிஷாதர்களின் மன்னனுடைய மகனான கேதுமானுடன் சேர்ந்து கொண்டு தன்னை நோக்கி வருவதும், யானைகள், குதிரைகள் மற்றும் தேர்கள் நிறைந்ததும், வலிமைமிக்கதுமான கலிங்கர்களின் பெரும் படையை நோக்கி விரைந்தான்.

கவசம் தரித்தவனும், கோபத்தால் தூண்டப்பட்டவனுமான சுருதாயுசும் அணிவகுக்கப்பட்ட தனது துருப்புகளால் பின்தொடரப்பட்டு, மன்னன் கேதுமான் துணையுடன் அந்தப் போரில் பீமனுக்கு முன்பாக வந்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல்லாயிரம் தேர்களுடன் கூடிய கலிங்கர்களின் ஆட்சியாளனும் {சுருதாயுசும்}, பத்தாயிரம் {10,000} யானைகள் மற்றும் நிஷாதர்களுடன் கூடிய கேதுமானும், பீமசேனனை அனைத்துப் புறங்களில் இருந்தும் சூழ்ந்தனர்.

பிறகு, பீமசேனனைத் தங்கள் தலைமையில் கொண்டவர்களான சேதிகள், மத்ஸ்யர்கள், கரூசர்கள், ஆகியோர் பல மன்னர்களுடன் சேர்ந்து நிஷாதர்களுக்கு எதிராக விரைவாகச் சென்றனர். ஒருவரை ஒருவர் கொல்லும் விருப்பத்தில் விரைந்து கொண்டிருந்த வீரர்களுக்கிடையில், கடுமையான பயங்கரப் போர் தொடங்கியது. பீமனுக்கும், அவனது எதிரிகளுக்கும் இடையில் திடீரென மூண்ட அந்தப் போர், ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் இந்திரனுக்கும், திதியின் மகன்களுடைய வலிமைமிக்கப் படைக்கும் இடையில் நடந்த போரைப் போன்று பயங்கரமானதாக இருந்தது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போரில் போராடிக் கொண்டிருந்த அந்த வலிமைமிக்கப் படையின் ஆரவாரம், முழங்கிக் கொண்டிருக்கும் கடலின் ஒலியைப் போலப் பேரொலியாக இருந்தது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்ட போராளிகள் அந்தப் போர்க்களம் முழுவதையும் சதையும், இரத்தமும் பரவிய ஒரு சுடுகாடு போல ஆக்கினர். படுகொலை செய்யும் விருப்பத்தால் உந்தப்பட்ட போராளிகளுக்கு நண்பனையும் எதிரியையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியவில்லை. போரில் எளிதில் வெல்லப்பட முடியாத அந்தத் துணிவுமிக்க வீரர்கள், தங்கள் சொந்த நண்பர்களையே தாக்கத் தொடங்கினர். சேதிகள் {சேதி நாட்டு வீரர்கள்} ஒரு புறத்திலும், கலிங்கர்களும், நிஷாதர்களும் ஒருபுறத்திலுமென, சிலருக்கும், பலருக்கும் இடையில் நடந்த அந்த மோதல் பயங்கரமாக இருந்தது.

தங்கள் சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தித் தங்கள் ஆண்மையை வெளிப்படுத்திய சேதிகள் பீமசேனனைக் கைவிட்டு திரும்பிச் சென்றனர். சேதிகள் தன்னைத் தொடர்வதை நிறுத்தியதும், கலிங்கர்கள் அனைவருடனும் போரிட்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தனது சொந்த கரங்களின் பலத்தை மட்டுமே நம்பி திரும்பாமல் போரிட்டான்.

உண்மையில், வலிமைமிக்க அந்தப் பீமசேனன் அசையாமல் தனது தேர் தட்டில் நின்றபடி கலிங்கர்களின் படைப்பிரிவின் மேல் தனது கூரிய கணைகளை மழையெனப் பொழிந்தான். அப்போது, வலிமைமிக்க வில்லாளியும், தேர்வீரனுமான அந்தக் கலிங்கர்களின் மன்னன் {சுருதாயுஸ்}, சக்ரதேவன் என்ற பெயரால் அறியப்பட்ட அவனது {சுருதாயுசின்} மகன் ஆகிய இருவரும் தங்கள் கணைகளால் அந்தப் பாண்டுவின் மகனைத் {பீமனைத்} தாக்கத் தொடங்கினர். தனது அழகிய வில்லை அசைத்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன், தனது கரங்களின் தனிப்பட்ட பலத்தை மட்டுமே நம்பி அந்தக் கலிங்கனுடன் {சுருதாயுசுடன்} போரிட்டான். எண்ணிலாக் கணைகளை அந்தப் போரில் அடித்த சக்ரதேவன், அவற்றைக் கொண்டு பீமசேனனின் குதிரைகளைக் கொன்றான்.

எதிரிகளைத் தண்டிப்பவனான பீமசேனன் தேரிழந்து நிற்பதைக் கண்ட சக்ரதேவன், அவன் {பீமன்} மீது கூரிய கணைகளை அடித்தபடியே அவனிடம் விரைந்தான். ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, கோடை காலம் கடந்ததும் {கார்காலத்தில்} மழையைப் பொழியும் மேகங்களைப் போல அந்த வலிமைமிக்கச் சக்ரதேவன் கணைமாரியைப் பொழிந்தான். ஆனால், வலிமைமிக்கப் பீமசேனனோ, குதிரைகள் கொல்லப்பட்ட தனது தேரில் நின்று கொண்டே, கடுமையான இரும்பிலான {எஃகால் ஆன} ஒரு கதாயுதத்தைச் சக்ரதேவன் மேல் வீசினான். அந்தக் கதாயுதத்தால் கொல்லப்பட்ட கலிங்க ஆட்சியாளரின் மகன் {சக்ரதேவன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கொடியும் தேரோட்டியும் கொண்ட தனது தேரில் இருந்து கீழே தரையில் விழுந்தான்.

தனது மகன் {சக்ரதேவன்} கொல்லப்பட்டதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான கலிங்கர்களின் மன்னன் {சுருதாயுஸ்}, பல்லாயிரம் தேர்களுடன் பீமனை அனைத்துப் புறங்களிலும் சூழ்ந்து கொண்டான். பெரும் வலிமை கொண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன் கதாயுதத்தைக் கைவிட்டு, கடுஞ்சாதனை செய்ய விரும்பி, வாளை எடுத்துக் கொண்டான். மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த மனிதர்களில் காளை {பீமன்}, தங்கத்திலானதும், சந்திரப்பிறைகளைக் கொண்டதுமான ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டான். கோபத்தால் தூண்டப்பட்ட கலிங்கர்களின் ஆட்சியாளனும் {சுருதாயுசும்}, தனது வில்லின் நாண் கயிற்றைத் {கைகளால்} தேய்த்துக் கொண்டு, (அந்தப் பாண்டவனை {பீமனைக்}) கொல்ல விரும்பிய அந்த ஏகாதிபதி {சுருதாயுஸ்} பாம்பின் விஷத்தைப் போன்ற ஒரு பயங்கரக் கணையை எடுத்து பீமசேனனின் மீது எய்தான். இப்படித் தொடுக்கப்பட்ட அந்தக் கூரிய கணையை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது பெரும் வாளால் பீமசேனன் இரண்டாகப் பிளந்தான். அதனால் பெரிதும் மகிழ்ந்த அவன் {பீமன்}, துருப்புகளை அச்சுறுத்தும் வகையில் பேரொலியுடன் முழங்கினான்.

பீமசேனனுடனான அந்த மோதலில் பெரும் கோபம் தூண்டப்பட்டவனான கலிங்கர்களின் ஆட்சியாளன் {சுருதாயுஸ்}, சாணைக்கல்லில் கூர் தீட்டப்பட்ட பதினான்கு தோமரங்களை {ஈட்டியில் ஒரு வகை} அவன் {பீமன்} மீது வீசினான். எனினும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாண்டுவின் மகன் {பீமன்}, தான் கொண்டிருந்த அந்தச் சிறந்த வாளைக் கொண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வானில் வந்து கொண்டிருந்த அந்தத் தோமரங்கள் தன்னை அடையும் முன்பே அவற்றைத் துண்டு துண்டாக வெட்டிப் போட்டான். (இப்படி) அந்தப் போரில் அந்தப் பதினான்கு தோமரங்களையும் வெட்டியவனும் மனிதர்களில் காளையுமான அந்தப் பீமன் பானுமானைக்[1] கண்டு அவனிடம் விரைந்தான்.

[1] இவன் துரியோதனனின் மைத்துனனாவான். துரியோதனனின் மனைவி பானுமதியின் சகோதரனாவான். ஆனால் பானுமதியின் தந்தை பெயர் சித்திராங்கதன் என்பதாகும்.

அப்போது, பானுமான் கணைமாரியால் பீமனை மறைத்து, குரலால் பேரொலியை எழுப்பி அவ்வொலியை வானில் எதிரொலிக்கச் செய்தான். எனினும், அந்தக் கடும்போரில், பீமனால் அந்தப் பேரொலியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தானே உரத்த குரலைக் கொண்டவனான அவன் {பீமன்}, அதைவிட அதிக ஒலியுடன் ஆரவாரம் செய்தான். அவனது ஆரவாரத்தைக் கேட்ட கலிங்கர்களின் படை அச்சத்தால் நிறைந்தது. அந்தப் போரில், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, அதற்கு மேலும் பீமனை யாரும் மனிதனாகக் கருதவில்லை.

ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, கையில் வாளுடன் உரக்க ஆரவாரம் செய்த அந்தப் பீமன், (பானுமானின்) அற்புதமான யானையின் மீது குதித்தான். அந்த யானையுடைய தந்தங்களின் உதவியைக் கொண்டு {தந்தங்களைப் பிடித்துக் கொண்டு} அந்த யானைகளின் இளவரசனுடைய {யானையின்} முதுகில் ஏறிய அவன் {பீமன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தனது கனமான வாளைக் கொண்டு பானுமானை நடுவில் இரண்டாகப் பிளந்தான். இப்படிக் கலிங்கர்களின் இளவரசனை அந்தப் போரில் கொன்ற அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {பீமன்}, அடுத்து பெரும் சுமையைத் தாங்க வல்ல தனது வாளை அந்த யானையின் கழுத்தில் இறக்கினான். தலை வெட்டப்பட்ட அந்த யானைகளின் இளவரசன் பெரும் ஒலியோடு அலறிக் கொண்டு, வேகமான கடலின் அலைகளால் உண்ணப்படும் {அரிக்கப்படும்} அடிவாரம் கொண்ட சிகரத்துடன் கூடிய மலையைப் போலப் பூமியில் விழுந்தது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அப்படி விழும் யானையில் இருந்து கீழே குதித்தவனும், உற்சாகமிழக்காத ஆன்மா கொண்டவனுமான அந்தப் பாரதக் குலத்தின் இளவரசன் {பீமன்}, (முன்பு போலவே) கவசத்துடனும், கையில் வாளுடனும் பூமியில் நின்றான்.

அனைத்துப் புறங்களிலும் எண்ணற்ற யானைகளை விழச்செய்து (போர்க்களத்தில்} பல பாதைகளை உண்டாக்கிக் கொண்டு திரிந்தான். குதிரைப்படை, யானைகள், தேர்கள், காலாட்படையின் பெரும்பகுதி என அனைத்தையும் கொன்றபடி நெருப்புச் சக்கரத்தைப் போல அவன் சுழல்வதாக அப்போது தெரிந்தது. மனிதர்களில் தலைவனும், வலிமைமிக்கவனுமான பீமன், கூரிய முனை கொண்ட தனது வாளைக் கொண்டு, யானை மீதிருந்த போராளிகளின் உடல்களையும் தலைகளையும் விரைவாக வெட்டிக் கொண்டு பருந்தின் சுறுசுறுப்புடன் களத்தில் பறப்பதாகத் தெரிந்தது.

காலாட்படை வீரனாக நின்று, கோபத்தால் தூண்டப்பட்டு, பிரளய காலத்து யமனைப் போலத் தனியனாகவே நின்று தனது எதிரிகளுக்கு அச்சமூட்டிய அவன் {பீமன்}, அந்தத் துணிவுமிக்க வீரர்களைக் கலங்கச் செய்தான். அவர்களில் புத்தியற்றிருந்தவர்கள் மட்டுமே, கையில் வாளுடன் அந்தப் பெரும்போரில் வேகமாக உலவி கொண்டிருந்த அவனை நோக்கிப் பெரு முழக்கம் செய்து கொண்டு விரைந்தார்கள். எதிரிகளைக் கலங்கடிப்பவனும், பெரும் பலம் கொண்டவனுமான அவன் {பீமன்} அந்த வீரர்களுடைய தேரின் ஏர்க்கால்களையும், நுகத்தடிகளையும் வெட்டி, இறுதியில் அந்த வீரர்களையும் கொன்றான்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமசேனன் பல்வேறு விதமான அசைவுகளை அங்கே வெளிப்படுத்துவதாகத் தெரிந்தது. வேகமாக நகர்தல், உயரமாகச் சுழன்று வருதல், இருபக்கங்களிலும் அசைதல், நேராகக் குதித்தல், ஓடுதல், உயரமாகக் குதித்தல் என {களத்தில்} அசைந்து கொண்டிருந்தான். மேலும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவன் {பீமன்} முன்னோக்கி விரைந்தும், மேல்நோக்கி விரைந்தும் காணப்பட்டான் [2]. உயர் ஆன்ம பாண்டுவின் மகனுடைய {பீமனுடைய} அற்புதமான வாளால் சிதைக்கப்பட்ட சிலர், உயிர்நிலைகளில் தாக்கப்பட்டோ, உயிரிழந்து கீழே விழும்போதோ உரக்க அலறினர்.

[2] வேறுபதிப்பில் இந்த நிலைகள் பின்வருமாறு சொல்லப்படுகிறது: வட்டமாகச் சுழல்தல் {பிராந்தம்}, நாற்புறத்திலும் வீசுதல் {ஆவித்தம்}, மேலாகச் சுழல்தல் {உத்பிராந்தம்}, நாற்புறத்திலும் மேலாகச் சுழல்தல் {ஆப்லுதம்}, நேராக நீட்டல் {பிரஸ்ருதம்}, துள்ளுதல் {பிலுதம்}, இலக்குகளை அடித்தால் {சம்பாதம்}, நேராக வீசுதல் {சமுதீர்ணம்} எனப் பல்வேறு விதமான வாள்வீச்சுகளை வெளிப்படுத்தினான் என்று இருக்கிறது.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துதிக்கைகள் வெட்டப்பட்ட சிலவும், தந்தங்கள் வெட்டப்பட்ட சிலவும், தலை பிளக்கப்பட்ட சிலவும் எனப் பல யானைகள் தங்கள் ஓட்டுநர்களை {பாகன்களை} இழந்து, தங்கள் படைகளையே கொன்றபடி பெரும் அலறலுடன் கீழே விழுந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உடைந்த ஈட்டிகள், யானை செலுத்தும் வீரர்களின் தலைகள், யானைகளுக்கு மேலிருந்த கூடுகள், தங்கம் போன்ற பிரகாசமான கச்சைகள், கழுத்தணிகள், சக்திகள், உலக்கைகள், அம்பறாத்தூணிகள், பல்வேறு வகைகளிலான பொறிகள், அழகிய விற்கள், பளபளக்கும் தலைகளைக் கொண்ட குறு அம்புகள் {பிண்டிபாலங்கள்}, யானைகளை வழிநடத்தப் பயன்படும் அங்குசங்கள் {வேணுகங்கள்}, இரும்பு மாவெட்டிகள், பல்வேறு வடிவங்களிலான மணிகள், தங்கத்தால் இழைக்கபட்ட வாள் பிடிகள் ஆகியவை கீழே விழுவதையும், அல்லது (ஏற்கனவே) விழுந்து கொண்டிருக்கும் குதிரை ஓட்டிகளிடம் இருந்து அவை விழுவதையும் நாங்கள் கண்டோம்.

உடலின் முன்புறமும், கீழ்ப்புறமும், துதிக்கையும் வெட்டப்பட்டோ, முழுவதும் கொல்லப்பட்டோ கிடந்த யானைகளைக் கொண்ட பூமி, நொறுங்கி விழுந்த மலைகள் பரவியிருக்கும் போர்க்களம் போலத் தோன்றியது. இப்படிப் பெரும் யானைகளை நசுக்கிய அந்த மனிதர்களில் காளை {பீமன்}, அடுத்ததாகக் குதிரைகளையும் நசுக்கினான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த வீரன் {பீமன்}, குதிரை வீரர்களில் முதன்மையானவர்களையும் சாய்த்தான்.

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவர்களுக்கும், அவனுக்கும் {பீமனுக்கும்} இடையில் நடந்த அந்தப் போர் எல்லையில்லா கடுமை கொண்டதாக இருந்தது. கடிவாளங்கள், பூட்டங்கயிறுகள், பொன்னொளிவீசும் கச்சைகள், குதிரையின் மேல்விரிப்புகள், ஈட்டிகள், விலைமதிப்புமிக்க ரிஷ்டிகள் {வளையும் தன்மைமிக்க ஒரு வகை வாள்}, கவசங்கள், கேடயங்கள், அழகிய ஆபரணங்கள் ஆகியன அந்தப் போர்க்களத்தில் தரையில் பரவிக் கிடந்தன. அவன் {பீமன்}, (இரத்தத்தால்) பற்பல நிறமுள்ள அல்லி மலர்களால் நிரம்பியதைப் போலத் அந்தப் போர்க்களத்தைப் தோன்றச் செய்தான்.

வலிமைமிக்கவனான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, உயரக் குதித்து, கொடிமரங்களுடன் கூடிய சில தேர்வீரர்களைத் தன் வாளால் இழுத்துக் கிழே தள்ளினான். அடிக்கடி மேலே குதித்தும், பெரும் சுறுசுறுப்புடன் அனைத்துப் புறங்களிலும், பல்வேறு வழிகளில் விரைந்தும் சென்ற அந்த வீரன் {பீமன்} போராளிகளை வியக்கச் செய்தான். காலால் சிலரைக் கொன்றான். தரையில் இழுத்துப் போட்டு, பூமியில் அழுத்தி சிலரைக் கொன்றான். தனது வாளால் சிலரைக் கொன்றான். தனது முழக்கங்களால் சிலரை அச்சுறுத்தினான். (தான் ஓடும்போது உண்டான) விசையால் சிலரைத் தரையில் வீழ்த்தினான். சிலர் அவனைக் {பீமனைக்} கண்ட அச்சத்தால் புறமுதுகிட்டு ஓடினார்கள். இப்படியே, பெரும் சுறுசுறுப்புக் கொண்ட கலிங்கர்களின் பெரிய படை அந்தப் போர்க்களத்தில் பீமசேனனைச் சூழ்ந்த படி அவனிடம் விரைந்து சென்றது" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English