Saturday, November 28, 2015

பாண்டவப் படையைச் சூறையாடிய பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 059ஆ

Bhishma causing a havoc in Pandava's host! | Bhishma-Parva-Section-059b | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 17)

பதிவின் சுருக்கம் : போரிடுவதற்காகப் பீஷ்மரை அணுகிய அர்ஜுனன்; பீஷ்மரின் வில்லை இரு முறை அறுத்த அர்ஜுனன்; கோபம் மூண்ட பீஷ்மர் பாண்டவப் படையைச் சூறையாடியது; தலைதெறிக்க ஓடிய பாண்டவப் படை; போரின் நிலை குறித்துக் கிருஷ்ணன் கவலை கொள்வது...

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னான்}, "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது மாதவன் {கிருஷ்ணன்},  சூரியனைப் போன்றதும், காணக் கண் கூசுவதுமான பீஷ்மரின் தேரை நோக்கி, அந்த வெள்ளி நிறக் குதிரைகளைச் செலுத்தினான். பீஷ்மருடன் மோத விரையும் வலிய கரங்களைக் கொண்ட பார்த்தனைக் {அர்ஜுனனைக்} கண்ட, யுதிஷ்டிரனின் வலிமையான படை மீண்டும் அணிதிரண்டது.

சிங்கம் போலத் தொடர்ச்சியாக முழங்கியவரும், குரு போர்வீரர்களில் முதன்மையானவருமான பீஷ்மர், தனது கணை மாரியால் விரைவாகத் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} தேரை மறைத்தார். அந்தக் கணத்தில், கொடிமரம் மற்றும் தேரோட்டியோடு கூடிய அவனது {அர்ஜுனனின்} தேர், அந்தக் கணை மாரியால் மறைந்தது. எனினும், பெரும் வல்லமை படைத்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, பீஷ்மரின் கணைகளால் சிதைக்கப்பட்ட அந்தக் குதிரைகளைப் பொறுமையுடனும், அச்சமில்லாமலும் வழிநடத்திச் சென்றான். அப்போது, மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான நாணொலி கொண்ட தெய்வீக வில்லை எடுத்த பார்த்தன் {அர்ஜுனன்}, தன் கூரிய கணைகளால் பீஷ்மரின் வில்லை அறுத்துக் கீழே தள்ளினான்.

தனது வில் அறுபட்டதைக் கண்ட குரு வீரரான உமது தந்தை {பீஷ்மர்}, மற்றொரு வில்லைக் கண் இமைக்கும் நேரத்திற்குள் எடுத்து நாணேற்றினார். மேகங்களின் முழக்கத்தை ஒத்திருக்கும் நாணொலி கொண்ட அந்த வில்லைத் தன் இரு கைகளாலும் வளைத்தார். ஆனால், கோபம் தூண்டப்பட்ட நிலையில் இருந்த அர்ஜுனன், அந்த வில்லையும் அறுத்தான். அப்போது, சந்தனுவின் மகன் {பீஷ்மர் அர்ஜுனனிடம்}, "ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அற்புதம். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அற்புதம். ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, உண்மையில், இத்தகு வல்லமைமிக்கக் காரியம் உனக்குத் தகுந்ததே. நான் உன்னிடம் மனநிறைவு கொண்டேன். ஓ! மகனே {அர்ஜுனா}, என்னோடு கடினமாக நீ போரிடுவாயாக" என்று (அர்ஜுனன் வெளிப்படுத்திய) கரவேகத்தை மெச்சினார்.

இப்படிப் பார்த்தனை {அர்ஜுனனை} மெச்சி, மற்றொரு பெரிய வில்லை எடுத்த அந்த வீரர் {பீஷ்மர்}, தனது கணைகளைப் பார்த்தனின் {அர்ஜுனனின்} தேர் மீது பொழிந்தார். அந்தக் கணைகளைக் கலங்கடிக்கும் வகையில், தனது தேரை வட்டமாக விரைந்து சுழற்றிய வாசுதேவன் {கிருஷ்ணன்}, தேரை வழிநடத்துவதில் தான் கொண்ட பெருந்திறனை வெளிப்படுத்தினான்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி
கோவில் உற்சவர் [1]
பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பீஷ்மர், பெரும்பலத்துடன் தனது கூர்முனைக் கணைகளால் வாசுதேவன் {கிருஷ்ணன்}, தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும்,   உடல் முழுவதும் துளைத்தார். பீஷ்மரின் அந்தக் கணைகளால் சிதைந்த அந்த இரு மனிதப்புலிகளும், கொம்புகளால் கீறப்பட்ட உடல்களுடன் முழங்கிக் கொண்டிருக்கும் இரு காளைகளைப் போல அப்போது தோன்றினார்கள். மீண்டும் கோபம் தூண்டப்பட்ட பீஷ்மர், அந்த இரு கிருஷ்ணர்களையும் {கருப்பர்களான கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரையும்} நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான கணைகளால் அனைத்துப் புறங்களிலும் மறைத்தார். கோபம் தூண்டப்பட்ட அந்தப் பீஷ்மர், தனது கூரிய கணைகளால், அந்த விருஷ்ணி குலத்தவனை {கிருஷ்ணனை} நடுங்கச் செய்தார் [1]. உரக்கச் சிரித்த அவர் {பீஷ்மர்} கிருஷ்ணனை வியப்படையச் செய்தார்.

[1] சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் உள்ள உற்சவர் முகத்தில் வடுக்கள் இருக்கும். பார்த்தசாரதி என்றால் பார்த்தனின் சாரதி, அதாவது அர்ஜுனனின் தேரோட்டி என்பது பொருளாகும். குருக்ஷேத்திரப் போரில் கிருஷ்ணன் பெற்ற வடுக்களை நினைவுகூரவே இங்குள்ள உற்சவர் முகத்தில் வடுக்களைச் சுமந்திருக்கிறார். இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள http://tamil.thehindu.com/society/spirituality/பார்த்தசாரதி-தரிசனம்/article7304896.ece என்ற லிங்குக்குச் செல்லுங்கள்.

இரு படைகளுக்கு மத்தியில் இருந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணன், அந்தப் போரில் பீஷ்மரின் ஆற்றலையும், அர்ஜுனனின் மென்மையையும், அதனால் பீஷ்மர் போரில் பொழிந்த தொடர்ச்சியான கணைமாரிகளையும் கண்டு, அனைத்தையும் எரிக்கும் சூரியனைப் போல ஆனான். யுதிஷ்டிரப்படையில் உள்ள முதன்மையான போராளிகளை அவ்வீரர் {பீஷ்மர்} கொல்வதையும், அண்ட அழிவுக்கான நேரம் வந்துவிட்டதைப் போல அப்படையை அவர் {பீஷ்மர்} சூறையாடுவதையும் கண்டவனும், அளவிலா ஆன்மா கொண்டவனும், படைக்கூட்டங்களைக் கொல்பவனும், புகழத்தக்கவனுமான கேசவனால் {கிருஷ்ணனால்} தான் கண்டதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. யுதிஷ்டிரனின் படையால் அந்தப் படுகொலையில் இருந்து மீள முடியாது என்றே நினைத்தான்.

மேலும், "ஒரே நாளில் தைத்தியர்கள் மற்றும் தானவர்களோடு கூடிய அனைவரையும் பீஷ்மரால் கொன்றுவிட முடியும் எனும்போது, பாண்டுமகன்களின் துருப்புகள் அனைத்தையும், அவர்களது தொண்டர்களையும் எவ்வளவு எளிதாகக் கொல்ல முடியும்? பாண்டுவின் ஒப்பற்ற மகனுடைய {யுதிஷ்டிரருடைய} பரந்த படை மீண்டும் சிதறி ஓடுகிறது. சோமகர்கள் முறியடிக்கப்பட்டதைக் கண்ட கௌரவர்கள், பாட்டனை {பீஷ்மரை} மகிழ்வூட்டியபடியே உற்சாகமாகப் போரிட விரைகிறார்கள். அர்ஜுனனைப் பொறுத்தவரை, கூரிய கணைகளால் தாக்கப்பட்டாலும், பீஷ்மரின் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதிருக்கிறான். எனவே, பாண்டவர்களுக்காகக் கவசம் தரித்து பீஷ்மரை இன்று நானே கொல்வேன். இந்த உயர் ஆன்மப் பாண்டவர்களின் சுமையை நான் குறைப்பேன்" என்றும் நினைத்தான் {கிருஷ்ணன்}.

கிருஷ்ணன் இப்படி ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, கோபம் தூண்டப்பட்ட பாட்டன் {பீஷ்மர்}, மீண்டும் தனது கணைகளைப் பார்த்தனின் {அர்ஜுனனின்} தேர் மீது அடித்தார். அந்தக் கணைகள் பெரும் எண்ணிக்கையிலானவையாக இருந்தமையால், அனைத்துத் திசைகளும் முழுமையாக மறைக்கப்பட்டன. ஆகாயமோ, திசைகளோ, பூமியோ, பிரகாசமான கதிர்களைக் கொண்ட சூரியனோ கூடத் தெரியவில்லை. வீசிய காற்றும் புகை கலந்து இருப்பதாகத் தெரிந்தது; அனைத்துத் திசைகளும் நடுங்குவதைப் போலத் தெரிந்தது.

சந்தனுவின் அரச மகனுடைய {பீஷ்மருடைய} கட்டளையின் கீழ் இருந்த துரோணர், விகர்ணன், ஜெயத்ரதன், பூரிஸ்ரவஸ், கிருதவர்மன், கிருபர், சுருதாயுஸ் [2], அம்பஷ்டர்களின் ஆட்சியாளன், விந்தன் மற்றும் அனுவிந்தன், சுதக்ஷிணன், மேற்கத்தியர்கள், சௌவீரர்களின் பல்வேறு இனங்கள், வசாதிகள், க்ஷுத்ரகர்கள், மாலவர்கள் ஆகியோர் போரிடுவதற்காகக் கிரீடியை {அர்ஜுனனை} விரைந்து அணுகினர்.


[2] இது கலிங்க மன்னன் சுருதாயுசாக இருக்க முடியாது. பீஷ்ம பர்வம் பகுதி 54ஆ வில், அவன் பீமனால் கொல்லப்படுகிறான். இவன் வேறு ஒருவனாகவே இருக்க வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான குதிரைகள், காலாட்படை, தேர்கள், வலிமைமிக்க யானைகள் ஆகியவற்றால் சூழப்பட்ட கிரீடியைச் {அர்ஜுனனைச்} சிநியின் பேரன் {சாத்யகி} கண்டான். காலாட்படை, யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றால் இப்படிச் சூழப்பட்டவர்களான வாசுதேவனையும், அர்ஜுனனையும் கண்ட சிநிகளின் தலைவன் {சாத்யகி}, அவ்விடத்திற்கு விரைந்து சென்றான். வில்லாளிகளில் முதன்மையான சிநிகளின் தலைவன் {சாத்யகி} அந்தத் துருப்புகளை நோக்கி வேகமாக விரைந்து விருத்திரனைக் கொன்றவனின் {இந்திரனின்} துணைக்கு வந்த விஷ்ணுவைப் போல அர்ஜுனனை அணுகினான்.

பீஷ்மரைக் கண்டு அஞ்சியவர்களும், தங்கள் யானைகள், குதிரைகள், தேர்கள், எண்ணிலடங்கா கொடிமரங்கள் ஆகியன சிதைக்கப்பட்டு, தூள் தூளாக்கப்பட்டவர்களும், களத்தை விட்டுச் சிதறி ஓடியவர்களுமான யுதிஷ்டிரப் படையின் போராளிகள் அனைவரிடமும், போர்வீரர்களில் முதன்மையானவனும் உற்சாகமிக்கவனுமான அந்தச் சிநி குலத்தவன் {சாத்யகி}, "க்ஷத்திரியர்களே, எங்கே செல்வீர்கள்? நீதிமான்களின் கடமையென மூதாதையர்களால் தீர்மானிக்கப்பட்டது இதுவல்ல. வீரர்களில் முதன்மையானவர்களே, உங்கள் உறுதிமொழிகளை மீறாதீர். வீரர்களைப் போல உங்கள் தன்னறங்களை {ஸ்வதர்மத்தை = க்ஷத்ரிய அறங்களை} நோற்பீராக" என்றான் {சாத்யகி}.


ஆங்கிலத்தில் | In English