Thursday, November 26, 2015

பீஷ்மர் நடத்திய கடும் தாக்குதல்! - பீஷ்ம பர்வம் பகுதி - 059அ

Bhishma's fierce attack! | Bhishma-Parva-Section-059a | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 17)

பதிவின் சுருக்கம் : வீரர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைக்கலப்பும்; அவர்களுக்குள் பேசிக்கொண்ட வார்த்தைகளும்; போரில் பீஷ்மர் வெளிப்படுத்திய வேகம்; பீஷ்மரைக் கண்டு பாண்டவப் படைகள் அஞ்சி ஓடுவது; நடக்கும் காரியங்களை அர்ஜுனனுக்கு எடுத்துரைக்கும் கிருஷ்ணன்; பீஷ்மரை நோக்கிச் செல்லும்படி கிருஷ்ணனிடம் அர்ஜுனன் சொல்வது....

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "என் மகனின் வார்த்தைகளால் சீற்றமடைந்த பீஷ்மர் அந்தப் பயங்கர உறுதிமொழியை {சபதத்தை} ஏற்ற பிறகு, ஓ! சஞ்சயா, பாண்டுவின் மகன்களைப் பீஷ்மர் என்ன செய்தார்? அல்லது, பாட்டனை {பீஷ்மரை} அந்தப் பாஞ்சாலர்கள் என்ன செய்தார்கள்? ஓ! சஞ்சயா, அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக" என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அந்த நாளின் முற்பகல் கடந்ததும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சூரியன் தனது மேற்கு நோக்கிய பாதையில் இருந்த போது, அந்த உயர் ஆன்ம பாண்டவர்கள் வென்ற பிறகு, அறநெறியின் குறியீடுகள் அனைத்தின் வேறுபாடுகளையும் அறிந்தவரும், வேகமான குதிரைகளால் சுமந்து செல்லப்பட்டவரும், பெரும் படையாலும், உமது மகன்கள் அனைவராலும் பாதுகாக்கப்பட்டவரும் உமது தந்தையுமான தேவவிரதர் {பீஷ்மர்}, பாண்டவர்களின் படையை நோக்கி விரைந்து சென்றார்.


ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாவம் நிறைந்த உமது கொள்கையின் {அநீதியின்} விளைவால், நமக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் ஒரு பயங்கரமான போர் அப்போது தொடங்கியது. விற்களின் நாணொலிகளும், (வில்லாளிகளின் கைகளில் உள்ள) தோலுறைகளும் மோதும் ஒலிகளும் ஒன்றாகக் கலந்து, மலைகள் பிளப்பதற்கு ஒப்பான பேரொலியை ஏற்படுத்தின. "நில்", "இங்கே நான் நிற்கிறேன்", "இவனைத் தெரிந்து கொள்", "திரும்பு", "எழுந்து நில்", "உனக்காகக் காத்திருக்கிறேன்", "அடி" என்ற வார்த்தைகளே எங்கும் கேட்கப்பட்டன.

தங்கத்தாலான கவசங்கள், கிரீடங்கள், கொடிமரங்கள் ஆகியன விழும் ஒலிகள் கற்தரையில் {மலைகளில்} விழும் கற்களின் ஒலியை ஒத்திருந்தன. ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தலைகளும், கரங்களும், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் தரையில் கீழே விழுந்து கொந்தளித்தன {துடித்தன}. உடலில் இருந்து தலை துண்டிக்கப்பட்ட சில துணிவுமிக்கப் போராளிகள், ஆயுதங்களைப் பிடித்தபடியோ, அல்லது வில்லை வளைத்தபடியோ தொடர்ந்து நின்றனர். சதை மற்றும் இரத்தத்தாலான மூர்க்கமான ஓடை ஒன்று, (இறந்த) யானைகளின் உடல்களைத் தனது (குறைநீர்) பாறைகளாகக் கொண்டு ஒரு பயங்கரமான ஆறாக அங்கே ஓடத் தொடங்கியது. குதிரைகள், மனிதர்கள், யானைகள் ஆகியவற்றின் உடல்களில் இருந்து பாய்ந்த அது {அந்த ஆறு}, கழுகுகளுக்கும், நரிகளுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்து, அடுத்த உலகம் எனும் கடலை நோக்கி ஓடியது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது மகன்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் (அப்போது) நடைபெற்ற அது போன்ற ஒரு போர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} இதற்கு முன்னர்ப் பார்க்கவோ, கேட்கவோ படவில்லை. அந்த மோதலில் கொல்லப்பட்ட போராளிகளின் உடல்கள் கிடந்ததன் விளைவாக, தேர்களால் தங்கள் பாதையில் செல்ல முடியவில்லை. கொல்லப்பட்ட யானைகளின் உடல்கள் கிடந்ததன் விளைவாக, மலைகளின் நீலச் சிகரங்கள் போர்க்களமெங்கும் பரந்து கிடப்பதாகத் தெரிந்தது.

பல்வேறு நிறங்களிலான கவசங்கள், தலைப்பாகைகள் ஆகியன சிதறிக் கிடந்த அந்தப் போர்க்களத்தைப் பார்க்க கூதிர்கால {சரத்ருது- இலையுதிர்கால} ஆகாயம் போல அழகாகத் தெரிந்தது. கடுமையான காயம்பட்டாலும் சில போராளிகள் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் எதிரியை நோக்கிப் போரிட விரைந்ததைக் காண முடிந்தது. போர்க்களத்தில் வீழ்ந்த பலர், "ஓ! ஐயா", "ஓ! சோதரா", "ஓ! நண்பா", "ஓ! உறவே", "ஓ! தோழா", "ஓ! மாமா" "என்னைக் கைவிடாதே" என்றும், மேலும் சிலர், "{போரிட} வா, இங்கே வா, ஏன் அஞ்சுகிறாய்? எங்கே செல்வாய்? போரில் நிற்கிறேன், அஞ்சாதே" என்று உரக்க கூச்சலிட்டார்கள்.

அந்த மோதலில், சந்தனுவின் மகனான பீஷ்மர், தொடர்ந்து தனது வில்லை வட்டமாக வளைத்தபடி, கடும் விஷமிக்கப் பாம்புகளைப் போன்றதும், சுடர்மிகும் முனைகளைக் கொண்டதுமான கணைகளை அடித்துக் கொண்டிருந்தார். அனைத்துப் புறங்களிலும் கணைச்சரங்களைத் தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தவரும், கடும் நோன்புகளைக் கொண்டவருமான அந்த வீரர் {பீஷ்மர்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டவத் தேர்வீரர்களை ஒவ்வொருவரையும் முன்பே பெயர் சொல்லி அழைத்து, பின்னர் அடித்தார். தனது கரங்களின் மிகையான வேகத்தை வெளிக்காட்டியபடி, தனது தேர் சென்ற இடமெல்லாம் ஆடிக் கொண்டிருந்த (ஆடுவதைப் போலச் செயல்பட்ட) அவர் {பீஷ்மர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எங்கும் இருக்கும் நெருப்பு வளையத்தைப் போலத் தோன்றினார்.

தனது அசைவுகளின் வேகத்தின் விளைவாக, போரில் இருந்த பாண்டவர்களுக்கும், சிருஞ்சயர்களுக்கும் அந்த வீரர் பலராகக் காட்சியளித்தார். மாயையால் பீஷ்மர் தன்னைப் பலராகப் பிரித்துக் கொண்டார் என்றே அனைவரும் கருதினார்கள். இப்போது அவரைக் கிழக்கில் பார்த்தால், அடுத்தக் கணம் மேற்கில் அவரைக் கண்டார்கள். வடக்கில் பார்த்தால் அடுத்தக் கணம் அவரைத் தெற்கில் கண்டார்கள். அந்தப் போரில் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} இப்படியே காணப்பட்டார்.

பாண்டவர்களில் யாராலும் அவரை {பீஷ்மரைப்} பார்க்கக்கூட முடியவில்லை. அவர்கள் கண்டதெல்லாம் அவரது வில்லில் இருந்து புறப்பட்ட எண்ணற்ற கணைகளை மட்டுமே. தங்கள் படையணிகளைக் கொன்று இத்தகு காரியங்களைச் செய்த அவரை {பீஷ்மரைக்} கண்ட வீரமிக்கப் போராளிகள், புலம்பல்கள் பலவற்றைச் உதிர்த்தார்கள். உமது தந்தையை {பீஷ்மரை} நோக்கி வந்த ஆயிரக்கணக்கான மன்னர்கள், மனித சக்திக்கு அப்பாற்பட்ட வகையில் களத்தைக் கடந்து, சினத்தால் தூண்டப்பட்ட பீஷ்மர் எனும் நெருப்பில், தன்னழிவுக்காகவே வரும் விட்டில் பூச்சிகளைப் போல வந்து விழுந்தார்கள்.

வேகமான கரங்களை உடைய அந்த வீரரால் {பீஷ்மரால்} அடிக்கப்பட்டு, (அவரை எதிர்த்த) மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் உடல்களில் மீது விழுந்த எண்ணிலாத கணைகளில் ஒன்று கூட இலக்கு தவறவில்லை. ஒரே நேரான கணையைக் கொண்டு, வஜ்ரத்தால் பிளக்கப்படும் மலையைப் போல ஒரு யானையை அவர் {பீஷ்மர்} அப்புறப்படுத்தினார். கவசம் தரித்தவர்களும், ஒன்று சேர்ந்திருந்தவர்களுமான இரண்டோ, மூன்றோ யானை வீரர்களை, கூர்முனை கொண்ட ஒரே கணையால் உமது தந்தை {பீஷ்மர்} துளைத்தார்.

அந்தப் போரில், மனிதர்களில் புலியான பீஷ்மரை அணுகிய எவரும், அடுத்தக் கணம் தரையில் கிடப்பதையே காணமுடிந்தது. இப்படி ஒப்பற்ற ஆற்றலைக் கொண்ட பீஷ்மரால் கொல்லப்பட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் பெரும்படை ஆயிரம் திசைகளில் சிதறடிக்கப்பட்டது. கணைமாரியால் பீடிக்கப்பட்ட அந்தப் பெரும்படை, வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் உயர் ஆன்ம பார்த்தன் {அர்ஜுனன்} ஆகியோரின் முன்னிலையிலேயே நடுங்கத் தொடங்கியது. பாண்டவப் படையின் வீரத் தலைவர்கள் பெரும் முயற்சி செய்தாலும், பீஷ்மரின் கணைகளால் பீடிக்கப்பட்ட தங்கள் தரப்பின் பெரும் தேர்வீரர்கள் ஓடுவதைக் கூட அவர்களால் தடுக்க முடியவில்லை. அந்தப் பரந்த படை முறியடிக்கப்பட்டதற்குக் காரணமான அந்த ஆற்றல் தேவர்களின் தலைவனுடைய {இந்திரனுடைய} ஆற்றலுக்கு நிகராக இருந்தது. இருவராக இருக்கும் மனிதர்கள் எவரையும் காண முடியாதபடி, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் படை {பாண்டவப் படை} முழுமையாக முறியடிக்கப்பட்டது.

தேர்கள், யானைகள், குதிரைகள் எங்கும் துளைக்கப்பட்டிருந்தன, கொடிமரங்கள், தேர்களின் கூபரங்கள் {தேர்க்கால்கள்} ஆகியன களமெங்கும் சிதறிக் கிடந்தன. பாண்டு மகன்களின் படை "ஓ" என்றும், "ஐயோ" என்றும் கதறி உணர்விழந்து போயிற்று. தந்தை மகனைத் தாக்கினான், மகன் தந்தையைத் தாக்கினான்; விதிவசத்தால் நண்பன் ஒருவன் தன் ஆருயிர் நண்பனைப் போருக்கழைத்தான். பாண்டு மகன்களின் போராளிகளில் சிலர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கள் கவசங்களைத் தூக்கி எறிந்துவிட்டு கலைந்த தலைமயிருடன் தலைதெறிக்க ஓடினார்கள். உரத்த புலம்பல்களில் ஈடுபட்டவர்களான பாண்டு மகன்களின் படையின், தேர்வீரர்களில் சிறந்த தலைவர்களே கூட, பசுக்கூட்டத்தைப் போல மிகவும் குழம்பிப் போனதாகத் தெரிந்தது.

யாதவர்களை மகிழ்வூட்டுபவன் {கிருஷ்ணன்}, இப்படி முறியடிக்கப்பட்ட படையைக் கண்டு, தேர்களில் சிறந்த (தான் செலுத்திய) தேரை நிறுத்தி, பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, "ஓ! பார்த்தா {அர்ஜுனா}, உன்னால் விரும்பப்பட்ட நேரம் இதோ வந்துவிட்டது. ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, பீஷ்மரைத் தாக்கு, இல்லையேல் நீ உணர்வுகளை இழப்பாய். ஓ! வீரா {அர்ஜுனா}, "பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையில் உள்ள திருதராஷ்டிர மகன்களின் போர்வீரர்கள் அனைவரையும், உண்மையில், என்னோடு போரிடப்போகும் அனைவரையும் நான் கொல்வேன்" என்று மன்னர்களின் கூட்டத்தில் முன்பு நீ சொன்னாய். ஓ! குந்தியின் மகனே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, உனது அந்த வார்த்தைகளை நீ மெய்ப்பிப்பாயாக. ஓ! பீபத்சு {அர்ஜுனா}, அனைத்துப் புறங்களிலும் முறியடிக்கப்படும் உனது படையைப் பார். அகல விரிந்த வாயைக் கொண்ட அந்தகனைப் போல இருக்கும் பீஷ்மரைக் கண்டு, நாலாபுறமும் ஓடும் யுதிஷ்டிரப்படையின் மன்னர்களைப் பார். சிங்கத்தைக் கண்ட பலவீனமான விலங்குகளைப் போல அச்சத்தால் பீடிக்கப்பட்டுத் தங்களைத் தாங்களே அரிதாக்கிக் கொள்கிறார்கள்" என்றான் {கிருஷ்ணன்}.

இப்படிச் சொல்லப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, "கடலெனும் இந்த எதிரிப்படைக்குள் மூழ்கி, பீஷ்மர் இருக்கும் இடத்திற்குக் குதிரைகளைத் தூண்டுவாயாக. ஒப்பற்ற வீரரான மரியாதைக்குரிய அந்தக் குரு பாட்டனை {பீஷ்மரை}, கீழே வீழ்த்தப்போகிறேன்" என்றான் {அர்ஜுனன்}.


ஆங்கிலத்தில் | In English