Saturday, December 19, 2015

பிரம்மன் சொன்ன நாராயணத் துதி! - பீஷ்ம பர்வம் பகுதி - 065ஆ

The song of Brahma on Narayana! | Bhishma-Parva-Section-065b | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 23)

பதிவின் சுருக்கம் : பழங்காலத்தில் கந்தமாதன மலைகளில் நடந்த கதையொன்றை பீஷ்மர் துரியோதனனுக்குச் சொல்வது; தேவர்களும், முனிவர்களும், பிரம்மனும் கந்தமாதனத்தில் கூடியிருக்கையில் அவர்களுக்கு நாராயணன் காட்சியளித்தது; பிரம்மன் சொன்ன நாராயணத் துதி; பூமியில் பிறப்பெடுக்குமாறு பிரம்மன் நாராயணனை வேண்டுவது...

{பீஷ்மர் துரியோதனிடம் தொடர்ந்தார்}, "பழங்காலத்தில், கந்தமாதன மலைகளில், தேவர்களும், முனிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, பெரும்பாட்டனுக்காக {பிரம்மனுக்காக} மரியாதையுடன் காத்திருந்தனர் {பணிவிடை செய்தனர்}. அவர்களுக்கு மத்தியில் சுகமாக வீற்றிருந்த அனைத்துயிர்களின் தலைவன் {பிரம்மன்}, சுடர்மிகும் பிரகாசத்துடன் ஆகாயத்தில் நின்றிருந்த ஓர் அற்புதமான தேரை {விமானத்தைக்} கண்டான். தியானத்தால் (அது குறித்த அனைத்தையும்) உறுதி செய்து கொண்ட பிரம்மன், ஒடுங்கிய இதயத்துடனும், கூப்பிய கரங்களுடனும், மகிழ்ச்சிகரமான ஆன்மாவுடனும், அந்த உயர்ந்த தெய்வத்திற்குத் {நாராயணனுக்குத்} தனது வணக்கங்களைச் செய்தான். (இப்படி அந்த வடிவத்தை) ஆகாயத்தில் கண்ட முனிவர்கள் மற்றும் தேவர்கள் ஆகிய அனைவரும், அந்த அற்புதங்களின் அற்புதம் மீது நிலைத்த கண்களுடனும், கூப்பிய கரங்களுடன் எழுந்து நின்றனர்.


பிரம்மத்தை அறிந்த அனைவரிலும் முதன்மையானவனும், அண்டத்தின் படைப்பாளனும், உயர்ந்த அறத்தை அறிந்தவனுமான பிரம்மன், அவனை {நாராயணனை} முறையாக வழிபட்டு, {பின்வரும்} இந்த உயர்வான வார்த்தைகளைச் சொன்னான். அவன் {பிரம்மன்}, "ஏற்றிருக்கும் அண்ட வடிவத்தினால் மகிமையானவன் {விஸ்வாவசு} நீயே, அண்டத்தின் தலைவன் {விஸ்வேதேவன்} நீயே. ஓ! முழு அண்டத்தையும் காப்பவனே {விஷ்வக்சேனா}, ஓ! அண்டத்தையே உனது செயலாகக் கொண்டவனே {சமஸ்தகர்மஸ்வரூபியே}, ஓ! ஆன்மாவைக் கட்டுக்குள் கொண்டவனே {ஜிதேந்திரனே}, அண்டத்தின் தலைமை உரிமையாளன் {விஸ்வேஸ்வரன்} நீயே. வாசுதேவன் நீயே. எனவே, உயர்ந்த தெய்வீகத்திற்கும், யோகத்திற்கும் ஆன்மாவான {தேவனும், யோகஸ்வரூபியுமான} உன்னை நான் சரணடைந்தேன்.

பத்மநாத சுவாமி (திருவனந்தபுரம் கோயில்)
அண்டத்தின் தலைமை தெய்வமான உனக்கு வெற்றி {ஜெயம்}. உலகங்களின் நன்மையில் எப்போதும் ஈடுபடும் உனக்கு வெற்றி. யோகத்தின் தலைவனான {யோகீஸ்வரனான} உனக்கு வெற்றி. அனைத்து சக்திகளும் வாய்ந்தவனான உனக்கு வெற்றி. யோகத்திற்கும் முன்பும் பின்பும் ஆனவனான {யோகஸ்வரூபனான} உனக்கு வெற்றி. நாபியில் கமலம் உதித்தவனே {பத்மநாபா}, அகன்ற கண்களை உடையவனே, அண்டத்தின் தலைவர்களுக்கெல்லாம் தலைவனான {பரமேஸ்வரனான} உனக்கு வெற்றி.

ஓ! கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றின் தலைவா, மென்பண்பின் வடிவமான {embodiment of gentleness} உனக்கு வெற்றி. சூரியர்களின் சூரியனே, ஓ! சொல்லப்படாத பண்புகளின் கொள்ளிடமே, அனைத்திற்கும் புகலிடமாக இருப்பவனான உனக்கு வெற்றி. நாராயணன் நீயே, புரிந்து கொள்ளப்பட முடியாதவன் நீயே, சாரங்கம் என்றழைக்கப்படும் வில்லைத் தரிப்பவனான உனக்கு வெற்றி. ஓ! அண்டத்தை உருவமாகக் கொண்டவனே, ஓ! எப்போதும் நலத்துடன் இருப்பவனே {பிறவிப்பிணியற்றவனே}, அனைத்துப் பண்புகளையும் கொண்டவனான உனக்கு வெற்றி. ஓ! அண்டத்தின் தலைவா {விஸ்வேஸ்வரா}, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உலகங்களின் நன்மைக்காக எப்போதும் தயாராக இருப்பவனான உனக்கு வெற்றி. ஓ! பெரும்பாம்பே {ஆதிசேஷஸ்வரூபனே}, ஓ! பெரும் பன்றியே {வராகனே}, ஓ! காரணமுதல்வனே, ஓ! பழுப்புச் சடை கொண்டவனே {ஹரிகேசனே}, எல்லாம் வல்லவனான {விபுவான} உனக்கு வெற்றி.

ஓ! மஞ்சளாடை கொண்டவனே {பீதாம்பரதாரியே}, ஓ! திசைகள் மற்றும் துணை திசைகளின் தலைவா, ஓ! அண்டத்தையே வசிப்பிடமாகக் கொண்டவனே, ஓ! சிதைவற்றவனே, ஓ! தோற்றம் கொண்டவனே, ஓ! தோற்றம் இல்லாதவனே, ஓ! அளவிலா இடம் {அமிதமானஸ்தானங்களைக்} கொண்டவனே, ஓ! புலன்கள் அனைத்தையும் கட்டுக்குள் கொண்டவனே, ஓ! எப்போதும் நன்மையையே அடைபவனே, ஓ! அளவிடப்பட முடியாதவனே, தன்னியல்பைத் தானொருவனே அறிந்தவனே, ஆழமானவனான உனக்கு வெற்றி. ஓ! விருப்பங்கள் அனைத்தையும் தருபவனே, ஓ! முடிவற்றவனே, ஓ! பிரம்மமாக அறியப்படுபவனே, ஓ! நித்தியமானவனே, ஓ! உயிரினங்கள் அனைத்தையும் படைத்தவனே, ஓ! எப்போதும் வெற்றியாளனாய் இருப்பவனே, ஓ! அறிவை வெளிப்படுத்தும் செயல்களையே எப்போதும் செய்பவனே {பேரறிவாளனே}, ஓ! அறநெறி அறிந்தவனே, ஓ! வெற்றியைத் தருபவனே, ஓ! புதிரே உருவமானவனே, ஓ! யோகமனைத்தின் ஆன்மாவாக இருப்பவனே {சர்வயோகேஸ்வரூபனே}, ஓ! இருப்பில் எழுந்த அனைத்தின் காரணமானவனே {வியக்தம அவதாரமே}, ஓ! உயிரினங்கள் அனைத்தின் தன்னறிவானவனே, ஓ! உலகங்களின் தலைவா, உயிரினங்கள் அனைத்தையும் படைத்தவனான உனக்கு வெற்றி.

ஓ! தன்னையே தோற்றமாகக் கொண்டவனே, ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே {மகாபாக்யனே}, ஓ! அனைத்தையும் அழிப்பவனே, ஓ! மன எண்ணங்கள் அனைத்தையும் ஊக்குவிப்பவனே, பிரம்மத்தை அறிந்தவர் அனைவரிலும் அன்பானவனான உனக்கு வெற்றி. ஓ! படைப்பிலும், அழிப்பிலும் ஓய்வில்லாதவனே, ஓ! விருப்பங்களை அனைத்தையும் கட்டுப்படுத்துபவனே, ஓ! உச்சமான தலைவா {பரமேஸ்வரா}, ஓ! அமுதத்தின் காரணனே {மோட்சகாரணனே}, ஓ! அனைத்தும் கொண்டவனே {முக்தாத்மஸ்வரூபனே}, ஓ! யுகத் தொடக்கத்தில் முதலில் தோன்றுபவனே, ஓ! வெற்றியைக் கொடுப்பவனே, ஓ! அனைத்து உயிர்களின் தலைவனுடைய {பிரம்மனின்} தெய்வீகத் தலைவனே, ஓ! நாபியில் கமலம் உதித்திருப்பவனே {பத்மநாபரே}, ஓ! பெரும் பலம்வாய்ந்தவனே, ஓ! தன்னிலே எழுந்தவனே {சத்ஸ்வரூபனே}, ஓ! பழங்கால நிலையைக் கொண்ட பெரும்பூதங்களாக {பஞ்ச பூதங்களாக} இருப்பவனே, ஓ! (அறச்} சடங்குகள் அனைத்தின் ஆன்மாவே, அனைத்தையும் கொடுப்பவனான உனக்கு வெற்றி.

பூமாதேவி உன் இரண்டு பாதங்களைப் பிரதிபலிக்கிறாள், திசைகள் மற்றும் துணை திசைகள் உனது கரங்களையும், ஆகாயம் உனது தலையையும் பிரதிபலிக்கின்றன. உன் வடிவமாக நான் இருக்கிறேன். தேவர்கள் உனது உறுப்புகள் {உடல்}, சூரியனும், சந்திரனும் உன்னிரு கண்கள். ஆன்மத் தவங்களும், அறத்தில் பிறந்த உண்மையும், (அறச்) சடங்குகளும் உனது பலம். நெருப்பே {அக்னியே} உனது சக்தி, காற்றே உனது மூச்சு, உன் வேர்வையில் இருந்து உதித்ததே நீர். அசுவினி இரட்டையர்கள் உனது காதுகள், சரஸ்வதி தேவி உனது நாக்கு. வேதங்களே உனது அறிவு, இந்த அண்டமே உன்னில்தான் நிலைநிற்கிறது.

ஓ! யோகம் மற்றும் யோகியரின் தலைவா, உனது எல்லை, அளவு, சக்தி, ஆற்றல், பலம், தோற்றம் ஆகியவற்றை நாம் அறியோம். ஓ! தெய்வமே, ஓ! விஷ்ணுவே, உன்னிடம் அர்ப்பணிப்பில் நிறைந்து, உன்னையே நம்பி நோன்புகள் மற்றும் தவங்களால் {நியமங்களால்} எப்போதும் உன்னையே உயர்ந்த தலைவனாகவும், தேவர்களின் தேவனாகவும் வணங்குகிறோம்.

முனிவர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பன்னகர்கள், பிசாசங்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வன ஆகிய இவை அனைத்தும் என்னால் படைக்கப்பட்டது உனது கருணையே. ஓ! நாபியில் கமலம் உதித்தவனே {பத்மநாபா}, ஓ! அகன்ற பெரிய கண்களை உடையவனே, ஓ! கிருஷ்ணா, ஓ! துன்பங்கள் அனைத்தையும் விலக்குபவனே, உயிரினங்கள் அனைத்தின் புகலிடம் நீயே, அவற்றின் வழிகாட்டியும் நீயே, அண்டத்தைத் தன் வாயாகக் கொண்டவன் நீயே, ஓ! தேவர்களின் தலைவா {தேவேசனே}, தேவர்கள் எப்போதும் மகிழ்வுடன் இருப்பது உனது கருணையே. பயங்கரங்களில் இருந்து பூமி எப்போதும் விடுபட்டிருப்பது உனது கருணையே.

எனவே, ஓ! பெரிய கண்களைக் கொண்டவனே, யது குலத்தில் நீ பிறப்பாயாக. அறத்தை நிலைநாட்டவும், திதியின் மகன்களைக் {தைத்தியர்களைக்} கொல்லவும், அண்டத்தைத் தாங்கிப் பிடிக்கவும், ஓ! தலைவா, நான் சொன்னதைச் செய்வாயாக. ஓ! வாசுதேவா, உனது இந்த உயர்ந்த புதிர்கள் {பரமரகசியங்கள்}, ஓ! தலைவா, உனது அருளாலேயே என்னால் பாடப்பட்டன. உன்னில் இருந்து நீயே சங்கர்ஷணனைப் {பலராமனைப்} படைத்த பிறகு, ஓ! கிருஷ்ணா, உனக்கு நீயே பிரத்யும்னனாகப் பிறந்தாய். பிரத்யும்னனிலிருந்து நித்தியமான விஷ்ணுவாக அறியப்படும் அநிருத்தனைப் படைத்தாய். அந்த அநிருத்தனே அண்டத்தைத் தாங்குபவனான பிரம்மனாக என்னைப் படைத்தான். வாசுதேவனின் சாரத்தால் படைக்கப்பட்டவன் நான், எனவே, நீயே என்னைப் படைத்தவனாவாய். உன்னையே பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, ஓ! தலைவா, மனிதர்களுக்கு மத்தியில் பிறப்பாயாக.

உலகங்கள் அனைத்தின் மகிழ்ச்சிக்காக அசுரர்களைக் கொன்று, அறத்தை நிறுவி, புகழை வென்று, மீண்டும் நீ யோகத்தை அடைவாயாக. உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவர்களும், பூமியில் உள்ள மறுபிறப்பாள முனிவர்களும், தேவர்களும், உனக்குச் சொந்தமான பெயர்களால் அற்புதனான உன்னைப் பாடுகிறார்கள். ஓ! அற்புதக் கரங்களைக் கொண்டவனே, அனைத்து வகை உயிரினங்களும், வரங்களை அளிப்பவனான உன்னையே புகலிடமாகக் கொண்டு, உன்னிலேயே வசிக்கின்றன. உலகங்களின் பாலமானவனாகவும், முதல், இடை, கடை ஆகியவை அற்றவனாகவும், அளவிலா யோகம்படைத்தவனாகவும்  மறுபிறப்பாளர்கள் உன்னைப் பாடுகின்றனர்" என்றான் {பிரம்மன்}" {என்றார் பீஷ்மர்}.

இந்தப் பகுதியில் வரும் கதைக்குள் கதையாக மகாபாரதம் இன்று வரை: நாராயணனிடம் பிரம்மன் [1] பேசியதை பீஷ்மர் துரியோதனனிடம் சொல்வது [2]; பீஷ்மர் துரியோதனனிடம் பேசியதைச் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொல்வது [3]; சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னதை வியாசர் கணேசருக்குச் சொல்லி, அதைக் கணேசர் எழுதுவது [4]; வியாசர் மீண்டும் அதையே தன் சீடர்களுக்குச் சொல்வது [5]; வியாசரின் சீடரான வைசம்பாயனர் பாம்புவேள்வியில் ஜனமேஜயனுக்குச் சொல்வது [6]; பாம்பு வேள்வியில் கேட்டவற்றைச் சூதரான சௌதி, நைமிசாரண்யத்தில் சௌனகர் முதலான அந்தணர்களுக்குச் சொல்வது [7]; {இதற்கெல்லாம் பிறகு பெயர் சொல்லப்படாத யாரோ ஒருவர் அதை ஏட்டில் வடித்து நமக்கெல்லாம் மேற்கண்ட சம்பவத்தைக் கொடுத்திருப்பது [8]}.

ஆங்கிலத்தில் | In English