Wednesday, December 23, 2015

ஐந்தாம் நாள் போர்த் தொடக்கம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 069

The commence of the fifth day war! | Bhishma-Parva-Section-069 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 27)

பதிவின் சுருக்கம் : போரின் ஐந்தாம் நாள் தொடக்கத்தில் கௌரவர்கள் மகர வியூகத்தையும், பாண்டவர்கள் ஸ்யேன வியூகத்தையும் அமைத்துக் கொண்டு போரைத் துவக்கியது; சிகண்டியைத் தவிர்த்த பீஷ்மர்; துரோணரைத் தவிர்த்த சிகண்டி; பீஷ்மரைக் காக்க சென்ற துரியோதனன்; அவரைத் தாக்க சென்ற பாண்டவர்கள்....

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அந்த இரவு கடந்து, சூரியன் உதித்ததும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்விரு படைகளும் போருக்காக ஒன்றையொன்று அணுகின. ஒன்றையொன்று பார்த்த அந்தப் படைகள், கோபம் தூண்டப்பட்ட மற்றொன்றை நோக்கி அதை வீழ்த்தும் விருப்பத்துடன் ஒன்றுசேர்ந்து சென்றன. உமது தீய கொள்கையின் விளைவாக, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கவசம் பூண்ட பாண்டவர்களும், தார்தராஷ்டிரர்களும் ஒருவரை ஒருவர் தாக்க அணிவகுத்தனர்.


பீஷ்மரால் அனைத்துப் புறங்களிலும் பாதுகாகப்பட்ட படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மகர வடிவத்தில் [1] இருந்தது. அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும், (தங்கள் துருப்புகளைக் கொண்டு) தாங்கள் அமைத்த அணிவகுப்பைப் {வியூகத்தைப்} பாதுகாத்தனர். பிறகு, தேர்வீர்களில் முதன்மையான உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் தேர்ப்படையால் ஆதரிக்கப்பட்டு முன்னணியில் முன்னேறிச் சென்றார். அவர்கள் {கௌரவர்கள்} போருக்குத் தயாராக இருப்பதைக் கண்டவர்களான ஒப்பற்ற பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, அணிவகுப்புகளின் இளவரசனும், ஒப்பற்றதுமான ஸ்யேனம் [2] என்று அழைக்கப்படும் அணிவகுப்பில் {வியூகத்தில்} தங்கள் துருப்புகளை அணிவகுத்தனர்.

[1] முதலையின் சாயலில் இருக்கும் ஓர் அற்புதமான நீர்வாழ்விலங்கு என இங்கே விளக்குகிறார் கங்குலி. சிலரோ மீன் போன்ற உருவ அமைப்பு கொண்ட ஓர் உயிரினம் என்கிறார்கள்.

[2] பருந்தின் வடிவத்தைக் கொண்டு அமைக்கப்பட்டது என இங்கே விளக்குகிறார் கங்குலி. வேறு பதிப்புகளில் இந்த இடத்தில், தங்கள் புரோகிதரான தௌம்யரின் வார்த்தையினால் தான் யுதிஷ்டிரன் ஸ்யேனம் போல அந்த வியூகத்தை அணிவகுத்துப் பகைவர்களின் மனங்களை நடுநடுங்கச் செய்தான் என்று இருக்கிறது.

அதன் அலகில் பெரும் பலம் கொண்ட பீமசேனன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். அதன் கண்கள் இரண்டிலும் சிகண்டியும், பிருஷத குல திருஷ்டத்யும்னனும் இருந்தார்கள். அதன் தலையில் கலங்கடிக்கப்பட முடியா ஆற்றல் கொண்ட வீரன் சாத்யகி இருந்தான். மேலும், அதன் கழுத்தில் காண்டீவத்தை அசைத்தபடியே அர்ஜுனன் இருந்தான்.

அதன் இடது சிறகில் உயர் ஆன்மா கொண்டவனும், அருளப்பட்டவனுமான துருபதன் தனது மகனுடன், அனைத்து வகைப் படைகளையும் கொண்ட ஓர் அக்ஷௌஹிணியால் ஆதரிக்கப்பட்டு இருந்தான். ஓர் அக்ஷௌஹிணியைக் கொண்ட கேகயர்களின் மன்னன் (அந்த அணிவகுப்பின்) வலது சிறகில் அமைந்தான். அதன் {அந்த அணிவகுப்பின்} பின்புறம் திரௌபதியின் மகன்களும், பெரும் ஆற்றலைக் கொண்ட சுபத்திரையின் மகனும் {அபிமன்யுவும்} இருந்தனர். அதன் வால் பகுதியில் இரட்டை சகோதரர்களால் {நகுல சகாதேவர்களால்} ஆதரிக்கப்பட்டவனும், அற்புத ஆற்றலைக் கொண்டவனுமான வீர மன்னன் யுதிஷ்டிரன் இருந்தான்.

அதைத் தொடர்ந்து நடந்த போரில், (கௌரவர்களின்) அந்த மகர வியூகத்தை அதன் வாய் வழியாக ஊடுருவிச் சென்ற பீமன், பீஷ்மரை அடைந்து அவரைத் தன் கணைகளால் மறைத்தான். அப்போது, பெரும் ஆற்றலைக் கொண்ட பீஷ்மர், போருக்கு அணிவகுத்திருந்த பாண்டவர்களின் வீரர்களைத் தன் வலிமைமிக்க ஆயுதங்களால் அந்தப் பெரும்போரில் குழப்பினார்.

இப்படி (பாண்டவப் படையின்) அந்தப் போராளிகள் குழப்பப்பட்ட போது, விரைந்து வந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, போர்க்களத்தின் முன்னணியில் இருந்த பீஷ்மரை ஓராயிரம் {1000} கணைகளால் துளைத்தான். அம்மோதலில் பீஷ்மரால் ஏவப்பட்ட ஆயுதங்களுக்குப் பதிலடி கொடுத்த அர்ஜுனன், உற்சாகமிக்கத் தன் தனிப்பட்ட படைப்பிரிவால் ஆதரிக்கப்பட்ட மோதலுக்குத் தயாராக இருந்தான்.

அப்போது, பெருந்தேர் வீரனும், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான மன்னன் துரியோதனன், பயங்கரமாகக் கொல்லப்படும் தன் துருப்புகளைக் கண்டு, (முந்தைய நாளில்) தன் தம்பிகள் படுகொலை செய்யப்பட்டதையும் நினைவு கூர்ந்து, பரத்வாஜரின் மகனை {துரோணரை} நோக்கி விரைந்து வந்து, அவரிடம், "ஓ! ஆசானே, ஓ! பாவமற்றவரே, எப்போதும் எனது நலத்தை விரும்புபவர் நீரே. உம்மையும், பாட்டனான பீஷ்மரையும் நம்பி போரில் தேவர்களையே வெற்றி கொள்வதில் ஐயமில்லை எனும் போது, சக்தியும் ஆற்றலும் அற்ற பாண்டுவின் மகன்களை வெல்வதில் என்ன இருக்கிறது?

அருளப்பட்டிருப்பீராக, பாண்டவர்கள் கொல்லப்படும் வகையில் செயல்படுவீராக. உமது மகனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்ட துரோணர், சாத்யகியின் பார்வைக்கெதிரிலேயே பாண்டவ அணிவகுப்புக்குள் ஊடுருவினார். அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பரத்வாஜர் மகனை {துரோணரைச்} சாத்யகி தடுத்தான். (அதன் பேரில்), காணப் பயங்கராமன கடுமையான நிகழ்வுகளுடன் கூடிய போர் உண்டானது. இவ்வளவு நேரமும் சிரித்துக் கொண்டிருந்த வரும், பெரும் ஆற்றல் படைத்தவருமான பரத்வாஜரின் மகன் {துரோணர்}, கோபத்தால் தூண்டப்பட்டு, பத்து {10} கணைகளால் சிநியின் பேரனுடைய {சாத்யகியின்} தோள்ப்பூட்டைத் துளைத்தார்.

கோபத்தால் தூண்டப்பட்ட பீமசேனனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையான துரோணரிடம் இருந்து சாத்யகியைக் காக்க விரும்பி (பல கணைகளால்) பரத்வாஜரின் மகனைத் {துரோணரைத்} துளைத்தான்.

துரோணர், பீஷ்மர், சல்லியன் ஆகியோரும் கோபத்தால் தூண்டப்பட்டு, அந்தப் போரில் பீமசேனனைத் தங்கள் கணைகளால் மறைத்தனர். இதனால் சினம்மூண்ட அபிமன்யுவும், திரௌபதியின் மகன்களும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உயர்த்தப்பட்ட ஆயுதங்களைக் கொண்ட அவ்வீரர்கள் அனைவரையும் தங்கள் கூர்முனைக் கணைகாளல் துளைத்தனர்.

பிறகு, அந்தக் கடும்போரில் பெரும் வில்லாளியான சிகண்டி, பாண்டவர்களுக்கு (இப்படி) நேர்ந்ததை நினைத்துக் கோபத்தால் தூண்டப்பட்டு, பீஷ்மர், துரோணர் ஆகிய அந்த வலிமைமிக்க வீரர்கள் இருவரையும் எதிர்த்து விரைந்தான். மேகங்களின் முழக்கங்களை ஒத்த நாணொலி கொண்ட தனது வில்லை உறுதியாகப் பிடித்திருந்த அந்த வீரன் {சிகண்டி}, சூரியனையே மறைக்கும்படி தன் கணைகளால் விரைவாகத் தனது எதிராளிகளை மறைத்தான். எனினும் சிகண்டிக்கு முன் வந்த பாரதர்களின் பாட்டன் {பீஷ்மர்}, அவனது {சிகண்டியின்}, பெண்பால் தன்மையை நினைவு கூர்ந்து அவனைத் {சிகண்டியைத்} தவிர்த்தார்.

பிறகு உனது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்ட துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த அழுத்தத்தில் இருந்து பீஷ்மரைக் காக்க விரும்பி போருக்கு விரைந்தார். எனினும், ஆயுதம் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான அந்தத் துரோணரை அணுகிய சிகண்டி, யுக முடிவில் தோன்றும் நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் அவ்வீரரின் {துரோணரின்} மீது கொண்ட அச்சத்தால் அவரைத் தவிர்த்தான்.

பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும்படையுடன் கூடிய உமது மகன் {துரியோதனன்}, பெரும்புகழை வெல்ல விரும்பி பீஷ்மரைக் காக்கச் சென்றான். வெற்றியில் தங்கள் இதயங்களை உறுதியாக நிலைக்கச் செய்திருந்த பாண்டவர்களும் அங்கே சென்றனர். பிறகு, வெற்றியையும், புகழையும் விரும்பிய அந்த இரு படைகளின் போராளிகளுக்கும் இடையில் அங்கே நடைபெற்ற போர், (பழங்காலத்தில்) தேவர்களுக்கும், தானவர்களுக்கு இடையில் நடந்த போரைப் போன்றே, கடுமையானதாகவும், உயர்ந்த அற்புதங்கள் நிறைந்ததாகவும் இருந்தது" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English