Thursday, December 24, 2015

கடும்போர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 070

The fierce fight! | Bhishma-Parva-Section-070 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 28)

பதிவின் சுருக்கம் : கடுமையாகப் போரிட்ட பீஷ்மர்; அங்கங்களாலும், தலைகளாலும், விலங்குகளாலும், ஆயுதங்களாலும் நிரம்பியிருந்த போர்க்களத்தின் வர்ணனை; போர்க்களத்தில் ஓடிய குருதிப் புனல்....

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பிறகு, சந்தனுவின் மகனான பீஷ்மர், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால், உமது மகன்களைக் காக்கும் பொருட்டுக் கடுமையாகப் போரிட்டார். கௌரவ மற்றும் பாண்டவப் படைகளின் மன்னர்களுக்கிடையில் நடைபெற்ற அந்தப் போர், தீவிர அச்சத்தை உண்டாக்குவதாகவும், பெரிய வீரர்களை அழிப்பதாகவும் இருந்தது.


இவ்வளவு கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும், பிரம்மாண்டமானதாகவும் இருந்த அந்தப் போரில் எழுந்த பேரொலி வானத்தையே தொட்டது. பெரும் யானைகளின் பிளிறல்கள், குதிரைகளின் கனைப்பொலிகள், சங்கொலிகள், பேரிகை ஒலிகள் ஆகியவற்றின் விளைவால் எழுந்த ஆரவாரம் {காதுகளைச்} செவிடாக்குவதாக இருந்தது. வெற்றிக்காகப் போரிட்டவர்களும், பெரும் ஆற்றலைக் கொண்டவர்களுமான வலிமைமிக்கப் போராளிகள், மாட்டுக் கொட்டகையில் {ஒன்றையொன்று நோக்கி} முழங்கும் காளைகளைப் போல ஒருவரை ஒருவர் நோக்கி முழங்கினர்.

அந்தப் போரில், கூர்முனைக் கணைகளால் வெட்டப்பட்டு தொடர்ச்சியாக விழுந்து கொண்டே இருந்த தலைகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வானத்தில் இருந்து கல்மழை விழும் தோற்றத்தை ஏற்படுத்தின. உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, காது குண்டலங்கள், தலைப்பாகைகள், ஒளிரும் தங்க ஆபரணங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்த எண்ணற்ற தலைகள் போர்க்களத்தில் கிடந்தன. பல்லங்களால் துண்டாக்கப்பட்ட அங்கங்களாலும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகளாலும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கரங்களாலும் பூமி மறைக்கப்பட்டிருந்தது.

கவசம் பூண்ட உடல்களும், ஆபரணங்கள் தரித்த கரங்களும், சிவந்த கடைக்கண்களுடன் நிலவைப் போன்றிருந்த அழகிய முகங்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் அனைத்து அங்கங்களும், ஒரு கணத்தில், களம் முழுவதும் பரவிக் கிடந்தன. (போர்வீரர்களால் எழுப்பப்பட்ட) புழுதி, அடத்தியான மேகம் போலவும், அழிவுக்கான பிரகாசமான கருவிகள், மின்னலின் கீற்றுகள் போலவும் தெரிந்தன. ஆயுதங்களால் உண்டான ஒலி, இடியின் முழக்கத்தைப் பிரதிபலித்தது.

குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்}, பாண்டவர்களுக்கும் இடையில் நடந்ததும், கடுமையானதும், அச்சத்தைத் தருவதுமான அந்த ஆயுதங்களின் பாதை {போர்}, அங்கே இரத்த ஆறையே ஓட வைத்தது. பயங்கரமானதும்,, கடுமையானதும், மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதும், அச்சந்தருவதுமான அந்தப் போரில், வீழ்த்தப்பட இயலாத க்ஷத்திரிய வீரர்கள் தங்கள் கணை மாரியைப் பொழிந்தனர்.

உமது படையின் யானைகளும், எதிரிகளின் யானைகளும், அந்தக் கணை மழையால் பீடிக்கப்பட்டு, உரக்க அலறி மூர்க்கத்துடன் இங்கேயும் அங்கேயும் ஓடின. கோபமுள்ளவர்கள், துணிவுள்ளவர்கள், அளவற்ற ஆற்றல் படைத்தவர்களான வீரர்களுடைய விற்களின் நாணொலிகள், விரலுறைகளின் மீது நாண்கயிறுகள் தட்டும் ஒலி ஆகியவற்றில் ஒன்றையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. இரத்தத் தடாகம் போல் காட்சியளித்த களம் முழுவதிலும், தலையில்லா உடல்கள் {முண்டங்கள்} எழுந்து நிற்கவே, மன்னர்கள், தங்கள் எதிரிகளைக் கொல்லும் முனைப்புடன் போருக்கு விரைந்து ஓடினர்.

அளவிலா சக்தி கொண்டவர்களும், கனத்த தடிகளைப் போன்ற கரங்களைக் கொண்டவர்களுமான துணிச்சல்மிக்க வீரர்கள், தங்கள் கணைகளாலும், ஈட்டிகளாலும், கதாயுதங்களாலும், வளைந்த வாள்களாலும் ஒருவரை ஒருவர் கொன்றனர். அங்குசம் மூலம் தங்களை வழிநடத்தும் பாகன்களை இழந்து, கணைகளால் துளைக்கப்பட்ட யானைகளளும், குதிரையோட்டிகள் இல்லாத குதிரைகளும் எல்லாப்புறங்களிலும் மூர்க்கமாக ஓடிக்கொண்டிருந்தன. ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது படையைச் சேர்ந்த பல வீரர்களும், எதிரிப் படையைச் சேர்ந்த பல வீரர்களும் கணைகளால் ஆழமாகத் துளைக்கப்பட்டு எம்பிக் குதித்துக் கீழே விழுந்தனர்.

பீமனுக்கும், பீஷ்மருக்கும் இடையில் நடைபெற்ற அம்மோதலில், கரங்கள் மற்றும் தலைகளின் குவியல்களும், விற்கள், கதாயுதங்கள், பரிகங்கள், கைகள், தொடைகள், கால்கள், ஆபரணங்கள், கங்கணங்கள் ஆகியவற்றின் குவியல்களும் களமெங்கும் பரவிக் கிடந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புறமுதுகிடாதவையும், பெரும் உடல்படைத்தவையுமான யானைகளின் உடல்களும், குதிரைகளின் உடல்களும், தேர்களும் களம் முழுவதும் அங்கேயும், இங்கேயும் எனப் பரவிக் கிடந்தன.

விதியால் ஏவப்பட்ட க்ஷத்திரிய வீரர்கள், கதாயுதங்கள், வாள்கள், வேல்களும் மற்றும் நேரான கணைகள் ஆகியவற்றால் ஒருவரையொருவர் கொன்றனர். பெரும் வீரம் படைத்தவர்களும், போரில் சாதனை படைத்தவர்களுமான பிறர், இரும்பாலான பரிகங்களைப் {முள் பதித்த தண்டாயுதங்களைப்} போன்ற வெறுங்கரங்களால் ஒருவருடன் மற்றவர் மோதினர். உமது படையின் மற்ற பிற துணிச்சல்மிக்க வீரர்கள், பாண்டவப் படையின் போராளிகளுடன் ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மடக்கப்பட்ட கைமுட்டிகளாலும் {முஷ்டிகளாலும்}, கால்முட்டிகளாலும், அறைந்து கொண்டும், குத்திக் கொண்டும் போரில் ஈடுபட்டனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விழுந்த மற்றும் வீழ்ந்து கொண்டிருந்தவர்கள், வேதனையில் தரையில் புரண்டு கொண்டிருந்தவர்கள் ஆகிய வீரர்களுடன் கூடிய போர்க்களம் முழுவதையும் காணப் பயங்கரமாக இருந்தது. தேர்களை இழந்த தேர்வீரர்கள், அற்புத வாள்களைப் பிடித்துக் கொண்டு, படுகொலையை விரும்பி, ஒருவரை நோக்கி ஒருவர் விரைந்தனர்.

கலிங்கர்களின் பெரும்படைப்பிரிவால் சூழப்பட்ட மன்னன் துரியோதனன், பீஷ்மரைத் தலைமையில் நிறுத்திக் கொண்டு, பாண்டவர்களை நோக்கி விரைந்தான். அதே போல, விருகோதரனை {பீமனை} ஆதரித்தவர்களும், விலங்குக் கூட்டங்களைச் சொந்தமாகக் கொண்டவர்களுமான பாண்டவப் போராளிகளும், கோபத்தால் தூண்டப்பட்டு, பீஷ்மரை எதிர்த்து விரைந்தனர்.


ஆங்கிலத்தில் | In English