Sunday, January 10, 2016

துரியோதனாதிகளுடன் மோதிய பீமன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 078

The encounter between Bhima and Duryodhana Brothers! | Bhishma-Parva-Section-078 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 36)

பதிவின் சுருக்கம் : பீமனும் துரியோதனனும் மோதிக்கொண்டது; பீமனால் தாக்கப்பட்ட துரியோதனனைக் கண்ட அவனது தம்பிகள் பீமனை எதிர்க்க விரைந்தது; அவர்கள் அனைவரையும் தாக்கிய பீமன்; அபிமன்யு தலைமையில் பனிரெண்டு வீரர்களை அனுப்பிய யுதிஷ்டிரன்; இதைக் கண்ட துரியோதனன் தம்பிகள் பீமனைக் கைவிட்டு அவர்களுடன் மோதியது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பிறகு தன் புலனுணர்வுகள் மீண்ட மன்னன் துரியோதனன், மீண்டும் தன் கணை மழைகளால் பீமனைத் தடுக்கத் தொடங்கினான். வலிமைமிக்கத் தேர்வீரர்களான உமது மகன்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் பீமசேனனிடன் வீரத்துடன் போரிடத் தொடங்கினார்கள். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமசேனனும், தன் தேரை அடைந்து, அஃதில் ஏறி, உமது மகன்கள் இருந்த இடத்திற்குச் சென்றான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், வலிமையானதும், கடினமானதும், எதிரிகளின் உயிரை எடுக்கவல்லதுமான ஒரு வில்லை எடுத்த அவன் {பீமன்}, அம்மோதலில் உமது மகன்களைத் தனது கணைகளால் துளைத்தான்.


மன்னன் துரியோதனன் மிகக்கூரிய நாராசம் {நெடிய கணை} ஒன்றினால் வலிமைமிக்கப் பீமசேனனின் முக்கிய உறுப்புகளைத் தாக்கினான். இப்படி உமது மகனால் {துரியோதனனால்} ஆழமாகத் துளைக்கப்பட்ட அந்த வலிமைமிக்க வில்லாளி {பீமன்}, கோபத்தினால் கண்கள் சிவந்து, துரியோதனனின் இரு கரங்களையும், மார்பையும் மூன்று கணைகளால் தாக்கினான். ஆனால் இப்படித் தாக்கப்பட்டாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நடுங்காத அவன் {துரியோதனன்} மலைகளின் இளவரசனைப் போல நின்றான்.

கோபத்தால் தூண்டப்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டிருந்த அந்த இரு வீரர்களையும் கண்டவர்களும், வீரர்களுமான துரியோதனனின் தம்பிகள் அனைவரும், தங்கள் உயிரைவிடத் துணிந்து, பயங்கரச் செயல் புரியும் விருகோதரனைத் {பீமனைத்} தாக்க முன்பே திட்டமிட்டிருந்தபடி, உறுதியான தீர்மானத்துடன் அவனைத் தாக்கச் சென்றனர்.

அப்படி அவர்கள் அந்தப் போரில் அவன் {பீமன்} மீது பாய்ந்த போது, பெரும்பலம்படைத்த பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனக்கு இணையான எதிரியைத் தாக்க விரையும் யானையைப் போல அவர்களை நோக்கி விரைந்தான். சினத்தால் தூண்டப்பட்டவனும், பெரும் சக்தியைக் கொண்டவனும், கொண்டாடப்படும் வீரனுமான அவன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நாராசம் {நெடிய கணை} ஒன்றினால் உமது மகன் சித்திரசேனனைத் பீடித்தான். அந்தப் போரில் உமது {மற்ற} மகன்களைப் பொறுத்தவரை, பரதனின் வழித்தோன்றலான அவன் {பீமன்}, தங்கச்சிறகுகள் கொண்டவையும், பெரும் வேகம் கொண்டவையுமான பல்வேறு வகையான கணைகளால் அவர்கள் அனைவரையும் தாக்கினான்.

தன் படைப்பிரிவுகள் அனைத்தையும் முறையாகச் செலுத்திய நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அபிமன்யுவையும், பிறரையும் சேர்த்து வலிமைமிக்கப் பனிரெண்டு {12} தேர்வீரர்களைப் பீமசேனனைப் பின் தொடந்து செல்லும்படி அனுப்பினான். அவர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்க வில்லாளிகளான உமது மகன்களை எதிர்த்துச் சென்றனர். சூரியனைப் போன்றோ, நெருப்பைப் போன்றோ தங்கள் தேர்களில் பிரகாசித்தவர்களும், சுடர்மிகும் ஒளியுடன் திகழ்ந்தவர்களும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு அந்தப் பயங்கரப்போரில் மிகப் பிரகாசமாகத் தெரிந்தவர்களுமான அந்த வலிமைமிக்க வில்லாளிகளைக் கண்ட வல்லமை மிக்க உமது மகன்கள் (தாங்கள் போரிட்டுக் கொண்டிருந்த) பீமனைக் கைவிட்டனர். எனினும், தன்னைக் கைவிட்டு உயிரோடு போகும் {தப்பிச் செல்லும்} அவர்களைக் கண்ட குந்தியின் மகனால் {பீமனால்} [1] அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை [2]" {என்றான் சஞ்சயன்}.

[1] இங்கே கங்குலி, The sons of Kunti என்று பன்மையில் சொல்லியிருக்கிறார். இந்த இடத்தில் இது பொருத்தமற்று இருப்பதால் அது பீமனைக் குறிப்பதாகப் புரிந்து கொண்டு ஒருமையில் மாற்றியிருக்கிறேன்.

[2] வேறு பதிப்புகளில் மறுபடியும் பீமன் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான் என்று இருக்கிறது.

ஆங்கிலத்தில் | In English