Monday, January 11, 2016

பிற்பகலில் நடந்த பயங்கரப் போர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 079

The dreadful battle on afternoon! | Bhishma-Parva-Section-079 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 37)

பதிவின் சுருக்கம் : துரியோதனன் தம்பிகளுடன் போரிட்ட பீமனும், அபிமன்யுவும்; விகர்ணனின் குதிரைகளைக் கொன்ற அபிமன்யு; சித்திரசேனனையும், விகர்ணனையும் தாக்கிய அபிமன்யு; துரியோதனனுடன் மோதிய திரௌபதியின் மகன்கள்; பீஷ்மரால் பீடிக்கப்பட்ட பாண்டவப் படை; போர் வர்ணனை...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "உமது மகன்களைத் தொடர்ந்து சென்ற பீமசேனனுடன் சேர்ந்த அபிமன்யு, அவர்கள் {உமது மகன்கள்} அனைவரையும் பீடித்தான். துரியோதனனுடன் சேர்த்து, உமது படையைச் சார்ந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பிறரும், (கௌரவத்) துருப்புகளுக்கு மத்தியில் இருந்த பிருஷதன் மகனுடன் {திருஷ்டத்யும்னனுடன்} அபிமன்யுவும், பீமசேனனும் சேர்ந்ததைக் கண்டு, தங்கள் விற்களை எடுத்து, அந்த வீரர்கள் இருந்த இடத்திற்கு வேகமான தங்கள் குதிரைகளில் சென்றனர். அந்தப் பிற்பகலில் [1], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படை மற்றும் எதிரியின் படையைச் சார்ந்த வலிமைமிக்கப் போராளிகளுக்கிடையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பயங்கரம் நிறைந்த ஒரு மோதல் நடைபெற்றது.


[1] வேறு பதிப்புகளில் இஃது அபராண்ணகாலம் என்று குறிக்கப்படுகிறது. 18 நாழிகைக்கு மேல் 24 நாழிகைக்குள்ளான 6 நாழிகைக் காலமே அபராண்ணகாலமாகும். 1 நாழிகை என்பது 24 நிமிடங்கள் என்றால், 18 நாழிகை என்பது 7 மணிநேரம் 12 நிமிடங்களாகும். 24 நாழிகை என்பது 9 மணிநேரம் 36 நிமிடங்கள் ஆகும். 60 நாழிகையைக் கொண்டது ஒரு நாள். காலை 6 மணியில் இருந்து நாள் தொடங்குவதாக இருந்தால் 18வது நாழிகை என்பது மதியம் 1 மணி 12 நிமிடத்தையும், 24 நாழிகை என்பது மாலை 3 மணி 36 நிமிடத்தையும் குறிக்கும். இதற்கு இடைப்பட்ட காலத்திலேயே மேற்கண்ட போர் நடைபெற்றது என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்தக் கடும்போரில் விகர்ணனின் குதிரைகளைக் கொன்ற அபிமன்யு, அவனை {விகர்ணனை} இருபத்தைந்து {25} குறுங்கணைகளால் துளைத்தான். குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரைக் கைவிட்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான விகர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சித்திரசேனனின் ஒளிமிக்கத் தேரில் ஏறினான். இப்படி ஒரே தேரில் இருந்த அந்தக் குருகுலத்தின் சகோதரர்கள் {சித்திரசேனனும், விகர்ணனும்} இருவரையும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு} கணை மழையால் மறைத்தான். அப்போது துர்ஜெயனும் {சித்திரசேனனும்} [2], விகர்ணனும் அபிமன்யுவை முழுக்க இரும்பாலான ஐந்து கணைகளால் துளைத்தனர். எனினும் மேரு மலையைப் போல உறுதியாக நின்ற அபிமன்யு கிஞ்சிற்றும் நடுங்கவில்லை. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துச்சாசனன் கேகயச் சகோதரர்கள் ஐவருடன் போரிட்டான். ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, இவை அனைத்தும் மிக அற்புதமாகத் தெரிந்தது.

[2] வேறு பதிப்புகளில் இந்த இடத்தில் சித்திரசேனன் என்றே இருக்கிறது.

சினம் தூண்டப்பட்ட திரௌபதியின் மகன்கள் அந்தப் போரில் துரியோதனனைத் தடுத்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மூன்று கணைகளால் உமது மகனைத் துளைத்தார்கள். போரில் ஒப்பற்றவனான உமது மகனும் {துரியோதனனும்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, திரௌபதியின் மகன்களைக் கூரிய கணைகளால் துளைத்தான். (பதிலுக்கு) அவர்களால் துளைக்கப்பட்டு, குருதியில் குளித்த அவன் {துரியோதனன்}, (தன் சாரலில் வழுக்கிச் செல்லும்) பாண்டரங் {சிவப்பு சுண்ணாம்பு} கலந்த நீர் அருவியுடன் கூடிய ஒரு மலையைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.

வலிமைமிக்கப் பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் மந்தையை நையப்புடைக்கும் மந்தையாளனை {இடையனைப்} போல, அந்தப் போரில் பாண்டவப் படையைப் பீடித்தார். அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, படையின் வலப்புறத்தில் [3] எதிரிகளைக் கொன்று கொண்டிருந்த பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} காண்டீவத்தின் நாணொலி கேட்டது. களத்தின் அந்தப் பகுதியில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு துருப்புகளிலும் ஆயிரக்கணக்கில் தலையில்லா முண்டங்கள் எழுந்தன.

[3] வேறு ஒரு பதிப்பில் தென்புறத்தில் என்று இருக்கிறது.

குருதியே நீராக, (போராளிகளால் ஏவப்பட்ட) கணைகளே எதிர்ச்சுழிகளாக அந்தப் போர்க்களமே ஒரு கடலைப் போல இருந்தது. அந்தக் கடலில் யானைகள் தீவுகளாகவும், குதிரைகள் அலைகளாகவும் இருந்தன. துணிச்சல் மிக்க வீரர்கள் அதை {அந்தக் கடலைக்} கடக்கத் தேர்களே படகுகளாக இருந்தன. கரங்கள் வெட்டப்பட்டு, கவசம் இழந்து, அருவருக்கத்தக்க வகையில் சிதைக்கப்பட்டிருந்த துணிச்சல்மிக்கப் போராளிகள் பலர், நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் அங்கே கிடப்பது தெரிந்தது. இரத்தத்தில் குளித்திருந்த உயிரிழந்த மதங்கொண்ட யானைகளின் உடல்களுடன் கூடிய அந்தப் போர்க்களத்தைக் காண, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மலைகள் சிதறிக் கிடப்பதைப் போலத் தோன்றியது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் உமது படையிலும், பாண்டவர்களின் படையிலும் போரிட விரும்பாத ஒரு மனிதனும் இல்லாத அந்த அற்புதக் காட்சியை அந்தப் போரில் நாங்கள் கண்டோம்.

இப்படியே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} உமது படை மற்றும் பாண்டவர்களின் படை ஆகிய இரண்டையும் சார்ந்த அந்தத் துணிச்சல் மிக்க வீரர்கள் புகழ் வேண்டியும், வெற்றியை விரும்பியும் போரிட்டனர்" {என்றான் சஞ்சயன்}.



ஆங்கிலத்தில் | In English