Friday, January 15, 2016

துரியோதனனை உற்சாகப்படுத்திய பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 081

Bhishma made Duryodhana cheerful! | Bhishma-Parva-Section-081 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 39)

பதிவின் சுருக்கம் : ஏழாம் நாள் போர்த் தொடக்கம்; துரியோதனனுக்கும் பீஷ்மருக்கும் இடையில் நடந்த கருத்துப் பரிமாற்றம்; பீஷ்மரின் பேச்சைக் கேட்டு மகிழ்ந்த துரியோதனன்; போருக்குப் புறப்பட்ட படை குறித்த சஞ்சயன் வர்ணனை...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஒருவர் மேல் ஒருவர் பகையுணர்வுகளை வளர்த்து வந்தவர்களும், இரத்தம் தோய்ந்த மேனியுடையவர்களுமான அந்த வீரர்கள் {ஆறாம் நாள் போர் முடிவில்} ஓய்ந்திருக்கத் தங்கள் பாசறைக்குச் சென்றனர். விதிகளுக்கு ஏற்புடைய வகையில் சிறிது நேரம் {அன்றிரவு} இளைப்பாறி (அந்த நாளைய சாதனைகளுக்காக) ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்ட அவர்கள், மீண்டும் போர்புரியக் கருதி கவசம் தரித்தவர்களாகக் காணப்பட்டார்கள்.


பிறகு, துயரில் மூழ்கியவனான உமது மகன் {துரியோதனன்}, (தன் காயங்களில்) இருந்து சொட்டிய குருதியால் நனைந்தபடி, பாட்டனிடம் {பீஷ்மரிடம் துரியோதனன்} [1], "நமது துருப்புகள் மூர்க்கமானவையாகவும், பயங்கரமானவையாகவும், எண்ணிலடங்கா கொடிமரங்களைச் சுமப்பவையாகவும் இருக்கின்றன. மேலும், அவை முறையாக அணிவகுக்கப்பட்டும் இருக்கின்றன. எனினும், துணிவுமிக்கவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான பாண்டவர்கள் (நமது அணிவகுப்பிற்குள்) ஊடுருவி (நமது துருப்புகளைப்} பீடித்து, படுகொலை செய்து, காயப்படாமல் தப்பிக்கிறார்கள். நம் அனைவரையும் குழப்பும் அவர்கள் போரில் பெரும் புகழை வென்றுள்ளனர்.

[1] தான் ஏற்றிருக்கும் பம்பாய் உரையில், 2வது வரியின் தொடக்கத்தில் visravat என்றிருக்கிறது என்றும், வங்க உரைகளிலோ visramvat என்றிருக்கிறது என்றும், அதன் பொருள் "பாசத்துடன் கூடிய விசாரணை நோக்கங்களினால்" என்பதாகும் என்றும். அதுவே "நம்பிக்கையின் காரணமாக" என்றும் பொருள் படலாம் என்றும் இங்கே விளக்குகிறார் கங்குலி.

இடியைப் போன்ற வலிமையுடன் இருந்த நமது மகர [2] அணிவகுப்புக்குள் ஊடுருவிய பீமன், காலனின் கணை {யமதண்டங்களைப்} போன்ற பயங்கரக் கணைகளால் என்னைப் பீடித்தான். கோபத்தால் தூண்டப்பட்ட அவனை {பீமனைக்} கண்ட நான், ஓ! மன்னா {பீஷ்மரே}, எனது புலன் உணர்வுகளை இழந்தேன் {அச்சத்தால் மயக்கமடைந்தேன்}. இப்போதும் எனது மன அமைதியை என்னால் மீட்க முடியவில்லை. உமது அருளால், ஓ! உண்மையில் {சத்தியத்தில்} உறுதியுள்ளவரே {சத்தியசந்தரே, பீஷ்மரே}, பாண்டு மகன்களைக் கொன்று வெற்றியை அடைய நான் விரும்புகிறேன் [3]" என்றான் {துரியோதனன்}.

[2] ஆறாம் நாள் போரில் பாண்டவர்கள் மகர வியூகமும், கௌரவர்கள் கிரௌஞ்ச வியூகமும் அமைத்ததாகப் பீஷ்மபர்வம் பகுதி 075 கூறுகிறது. ஆனால் இங்கே துரியோதனனோ "நமது மகர அணிவகுப்பு" என்கிறான். ஒரு வேளை ஐந்தாம் நாள் போரைக் குறித்துச் சொல்கிறானோ என்னவோ? ஐந்தாம் நாள் போரில்தான் கௌரவர்கள் மகர அணிவகுப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

[3] பின்வருவன வேறு பதிப்புகளில் துரியோதனன் பேசுவதாகக் காணக்கிடைப்பதாகும்: "துணிவுமிக்கவர்களான அந்தப் பாண்டவர்கள் மூர்க்கமானவைகளும், பயங்கரமானவைகளும், அணிவகுக்கப் பட்டவைகளும், சிறந்த பல கொடிமரங்களைக் கொண்டவைகளுமான {நமது} படைகளைப் பிளந்தும், வீரர்களைக் கொன்றும் போரில் நம் அனைவரையும் குழப்பி வெற்றியடைந்து மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறார்கள். காலனுக்கு ஒப்பான அந்த மகர வியூகத்தினுள் புகுந்த பீமனின் யமதண்டங்களைப் போன்ற கொடிய கணைகளால் போரில் நான் தாக்கப்பட்டேன். மன்னா {பீஷ்மரே}, கோபங்கொண்டிருக்கிற அந்தப் பீமசேனனைக் கண்டு அஞ்சிய நான், இப்போதும் மனத்தில் ஆறுதலை அடையவில்லை. சத்திய சந்தரே {பீஷ்மரே}, உம்முடைய அருளால் வெற்றியை அடைவதற்கும், பாண்டவர்களைக் கொல்வதற்கும் நான் விரும்புகிறேன்" என்றான் துரியோதனன்.

அவனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்டவரும், ஆயுதம் தரித்தவர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், பெரும் மனோ சக்தி கொண்டவருமான கங்கையின் உயர் ஆன்ம மகன் {பீஷ்மர்}, துரியோதனன் கொண்ட துயரைப் புரிந்து கொண்டு, உற்சாகமற்றிருந்தாலும் சிரித்தவாறே அவனிடம் {பீஷ்மர் துரியோதனனிடம்}, "விடா முயற்சியுடனும், எனது முழு ஆன்மாவுடனும் (அவர்களது) படைக்குள் ஊடுருவி, ஓ! இளவரசே {துரியோதனா}, உனக்கு வெற்றியையும் மகிழ்ச்சியையும் தர நான் விரும்புகிறேன். உனக்காக நான் ஒரு போதும் பாசாங்கு செய்வதில்லை. பாண்டவர்களின் கூட்டாளிகளாக உள்ளவர்கள் மூர்க்கமானவர்களாகவும், எண்ணிலடங்காதவர்களாகவும் இருக்கின்றனர். பெரும் புகழ்பெற்று வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் மிகத் துணிவுள்ளவர்களாகவும், ஆயுதங்களில் சாதித்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

களைப்படைய இயலாத அவர்கள் {பாண்டவர்கள்} தங்கள் கோபத்தையே கக்குகிறார்கள். ஆற்றலில் வளர்ந்து, உன் மீது பகையை வளர்த்திருக்கும் அவர்கள் {பாண்டவர்கள்}, எளிதில் வெல்லப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, என் முழு ஆன்மாவுடனும், என் உயிரை விட்டும் நான் அந்த வீரர்களுடன் போராடுவேன். ஓ! பெரும் மகிமை கொண்டவனே {துரியோதனா}, இன்று உனக்காகவே, இந்தப் போரில் என் உயிர் துச்சமாக வெளிப்படும். {உனக்காக என்னுடைய உயிரானது இப்போது காப்பாற்றத்தக்கதன்று}. இங்கிருக்கும் உன் எதிரிகளை விடு, உன் பொருட்டுத் தேவர்களுடனும், தைத்தியர்களுடனும் கூடிய உலகங்கள் அனைத்தையும் கூட நான் எரித்துவிடுவேன். ஓ! மன்னா {துரியோதனா}, அந்தப் பாண்டவர்களுடன் போரிட்டு, உனக்கு ஏற்புடைய அனைத்தையும் நான் செய்வேன்" என்று மறுமொழி கூறினார் {பீஷ்மர்}.

இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன், பெரும் நம்பிக்கையும் ஊக்கமும் பெற்றதால், அவனது இதயம் மகிழ்ச்சியால் நிரம்பியது. (தனது படையின்) துருப்புகள் அனைத்தையும், மன்னர்கள் அனைவரையும் முன்னேறும்படி மகிழ்ச்சியாக அவன் {துரியோதனன்} உத்தரவிட்டான். அந்த உத்தரவின் பேரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் மற்றும் யானைகளைக் கொண்ட அவனது {துரியோதனனது} படை முன்னேறத் தொடங்கியது. பல்வேறு விதமான ஆயுதங்களைத் தரித்திருந்த அந்தப் பெரும்படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அதிக மகிழ்ச்சியுடன் இருந்தது.

யானைகள், குதிரைகள் மற்றும் காலாட்படை வீரர்கள் அடங்கிய அந்த உமது படை, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் மிகவும் அழகாகத் தெரிந்தது. பல்வேறு விதமான ஆயுதங்கள் தரித்த அரசப் போராளிகள் பலர் உமது துருப்புகளுக்கு மத்தியில் தெரிந்தனர். தேர்கள், காலாட்படைவீரர்கள், யானைகள், பெரு உடல்களைக் கொண்ட குதிரைகள் ஆகியவை களத்தில் நகர்ந்ததனால் எழுப்பப்பட்ட புழுதியானது காலைச் சூரியன் போலச் சிவந்து, சூரியக் கதிர்களை மறைத்த படி மிக அழகாகத் தெரிந்தது.

பாற்கடல் கடைதல்
காற்றில் அசைந்து, வானத்தில் நகர்ந்து கொண்டிருந்தவையும், தேர்கள் மற்றும் யானைகளில் இருந்தவையுமான வண்ணக் கொடிகள் பல, மேகங்களுக்கு மத்தியில் உள்ள மின்னலின் கீற்றுகளைப் போல அழகாகத் தெரிந்தன. கிருதயுகத்தில் தேவர்களாலும், பெரும் அசுரர்களாலும் கடையப்பட்ட கடலின் முழக்கத்தைப் போல, மன்னர்களால் வளைக்கப்பட்ட விற்களின் நாணொலிகளின் முழக்கம் கடுமையானவையாகவும், பேரொலியாகவும் இருந்தன. பல்வேறு நிறங்கள், வடிவங்ககள் ஆகியவற்றை (உடைய போராளிகளைக்) கொண்டவையும், செருக்குடன் காணப்பட்டவையும், பகை வீரர்களைக் கொல்ல இயன்றவையுமான உமது மகன்களின் அந்தப் படை, யுக முடிவின் போது ஏற்படும் மேகங்களின் திரள்களைப் போல மூர்க்கமாக இரைந்தன" {என்றான் சஞ்சயன்}.

ஆங்கிலத்தில் | In English