Thursday, January 14, 2016

துஷ்கர்ணனைக் கொன்ற சதானீகன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 080

Satanika killed Dhushkarna! | Bhishma-Parva-Section-080 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 38)

பதிவின் சுருக்கம் : துரியோதனனை எச்சரித்த பீமன்; பீமனால் கொடிமரம் வீழ்த்தப்பட்டு மயக்கமடையச் செய்யப்பட்ட துரியோதனன்; துரியோதனனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்ட கிருபர்; பீமனைத் தேர்களால் சூழ்ந்த ஜெயத்ரதன்; விகர்ணனின் மார்பைத் துளைத்த அபிமன்யு; துர்முகனின் கவசத்தை ஈட்டியால் பிளந்து தாக்கிய சுருதகர்மன்; தேரிழந்த சுருதகர்மனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்ட சுதசோமன்; ஜெயத்சேனனின் மார்பைத் துளைத்த சதானீகன்; சதானீகனின் வில்லை அறுத்த துஷ்கர்ணன்; துஷ்கர்ணனைக் கொன்ற சதானீகன்; பாஞ்சாலர்களை அழித்த பீஷ்மர் அன்றைய நாள் போரை நிறுத்திக் கொண்டது; திருஷ்டத்யும்னனையும், பீமனையும் கண்ட யுதிஷ்டிரன் மகிழ்ந்து, ஓய்வெடுக்கத் தனது கொட்டகைக்குச் சென்றது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "சூரியன் சிவப்பு நிறம் ஏற்றதும், போர்விருப்பம் கொண்ட மன்னன் துரியோதனன், பீமனைக் கொல்ல விரும்பி அவனை நோக்கி விரைந்தான். (இப்படி) ஆழ்ந்த பகையைக் கொண்ட அந்தத் துணிவுமிக்க வீரன் {துரியோதனன்} தன்னை நோக்கி வருவதைக் கண்ட பீமசேனன் , கோபத்தால் தூண்டப்பட்டு, "பல வருடங்களாக நான் விரும்பிக் கொண்டிருந்த அந்த நேரம் இப்போது வந்துவிட்டது. போரைவிட்டு நீ விலகாதிருந்தால் இன்றே நான் உன்னைக் கொல்வேன். உன்னைக் கொன்று குந்தி மற்றும் திரௌபதியின் துயரத்தையும், வனவாசத்தின் போது ஏற்பட்ட எங்கள் துன்பங்களையும் இன்று நான் போக்கிக் கொள்வேன்.


செருக்கு நிறைந்த நீ, பாண்டு மகன்களை முன்னர் அவமதித்திருக்கிறாய். ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, அந்தப் பாவம் நிறைந்த நடத்தையின் கொடிய கனியைப் பார். கர்ணன் மற்றும் சுபலன் மகனின் {சகுனியின்} ஆலோசனைகளைப் பின்பற்றி, பாண்டவர்களைச் சிறுமை படுத்திய நீ, உன் விருப்பப்படியே முன்னர் நடந்து கொண்டாய். (அமைதியை) இரந்து கேட்ட கிருஷ்ணனையும் நீ அவமதித்தாய். மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடனும், உனது செய்திகளுடனும் உலூகனை (எங்களிடம்) அனுப்பி வைத்தாய். இவை அனைத்திற்காகவும், உனது சொந்தங்களுடன் கூடிய உன்னை இன்று கொன்று, முந்தைய நாட்களில் நீ செய்த அந்தக் குற்றங்கள் அனைத்திற்காகவும் பழிதீர்த்துக் கொள்வேன்" என்றான் {பீமன்}.

இவ்வார்த்தைகளைச் சொன்ன பீமன் தனது வில்லை வளைத்து, மீண்டும் மீண்டும் இழுத்து, மின்னலைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய எண்ணற்ற பயங்கரமான கணைகளை எடுத்து, சினத்தால் நிறைந்து, முப்பத்தாறு {36} கணைகளைத் துரியோதனன் மீது விரைவாக ஏவினான். சுடர்மிகும் நெருப்பின் தழல்களைப் போன்ற அக்கணைகள் இடி போன்ற சக்தியுடன் நேராகச் சென்றன.

அதன் பிறகு, இரு கணைகளைக் கொண்டு துரியோதனனையும், இன்னும் இரு கணைகளைக் கொண்டு அவனது {துரியோதனனின்} தேரோட்டியையும் துளைத்தான். மேலும் நான்கு கணைகளைக் கொண்டு துரியோதனனின் (நான்கு) குதிரைகளை எமனுலகு அனுப்பி வைத்தான். அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவன் {பீமன்}, பெரும் சக்தியுடைய இரு கணைகளைக் கொண்டு, மன்னனின் {துரியோதனனின்} அற்புதத் தேரில் இருந்த குடையை அந்தப் போரில் வெட்டி வீழ்த்தினான். மேலும் மூன்று கணைகளைக் கொண்டு அவனது அழகிய சுடர்மிகும் கொடிமரத்தை வெட்டி வீழ்த்தினான். அதை வெட்டி வீழ்த்திய அவன் {பீமன்}, உமது மகனின் {துரியோதனனின்} பார்வைக்கு முன்பாகவே பேரொலியுடன் முழங்கினான் {உரக்க கர்ஜித்தான்}.

பல்வேறு ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பின்னவனின் {துரியோதனனின்} அழகிய கொடிமரம், மேகங்களில் இருந்து விழும் மின்னலின் கீற்றைப் போல, அவனது தேரில் இருந்து திடீரெனப் பூமியில் விழுந்தது. ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், சூரியனைப் போலப் பிரகாசிப்பதும், யானைப் பொறியைத் தாங்கியதுமான குருமன்னனின் {துரியோதனனின்} அந்த அழகிய கொடிமரம் (பீமசேனனால்) வெட்டப்பட்டு வீழ்வதை மன்னர்கள் அனைவரும் கண்டார்கள் [1]. வலிமைமிக்கத் தேர்வீரனான பீமன், புன்னகைத்துக் கொண்டே, அங்குசத்தால் வலிமைமிக்க யானையைத் துளைக்கும் வழிகாட்டியைப் {பாகனைப்} போல, அந்தப் போரில் பத்து {10} கணைகளால் துரியோதனனைத் துளைத்தான்.

[1] இதே வர்ணனை வேறு ஒரு பதிப்பில் பின்வருமாறு இருக்கிறது: சூரியனுக்கு ஒப்பாகப் பிரகாசிக்கும் குருமன்னனின் {துரியோதனனின்} மணி மயமான அரவக் {பாம்புக்} கொடி அறுத்துக் கீழே தள்ளப்பட்டதை மன்னர்கள் அனைவரும் கண்டார்கள்.

அப்போது, தேர்வீரர்களில் முதன்மையான சிந்துக்களின் வலிமைமிக்க மன்னன் {ஜெயத்ரதன்}, துணிவுமிக்க வீரர்கள் பலரால் ஆதரிக்கப்பட்டு, துரியோதனன் பக்கத்தில் தன்னை நிறுத்திக் கொண்டான். பெரும் தேர்வீரரான கிருபர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அளவிலா சக்தி கொண்டவனும், குரு குலத்தின் மகனும், பழிவாங்கும் குணம் கொண்டவனுமான துரியோதனனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டார். பீமசேனனால் ஆழமாகத் துளைக்கப்பட்ட மன்னன் துரியோதனன், பெரும் வலியை உணர்ந்து, {மயக்கமடைந்து} அந்தத் தேரின் தட்டில் அமர்ந்தான் [2].

[2] பீமசேனனால் போரில் நன்கு தாக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்ட அந்தத் துரியோதனன் மயக்கத்தினால் உணர்விழந்து தேரின் மத்தியில் அமர்ந்தான் என்று வேறொரு பதிப்புச் சொல்கிறது.

அப்போது, பீமனைக் கொல்ல விரும்பிய ஜெயத்ரதன், பல்லாயிரக் கணக்கான தேர்களுடன் அனைத்துப் புறங்களிலும் அவனை {பீமனைச்} சூழ்ந்து கொண்டான். பிறகு, திருஷ்டகேது, பெரும் சக்தி கொண்ட அபிமன்யு, கேகயர்கள், திரௌபதியின் மகன்கள் ஆகியோர் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களுடன் போரிட்டனர்.

உயர் ஆன்மா கொண்ட அபிமன்யு, தன் அற்புத வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், இடியைப் போன்றோ, காலனைப் போன்றோ தாக்குபவையும் நேரானவையுமான ஐந்து கணைகளால் ஒவ்வொருவரையும் துளைத்து, அவர்கள் அனைவரையும் தாக்கினான். இதன் பேரில் (பொறுமையாக) அதைத் தாங்கிக் கொள்ள முடியாத அவர்கள் அனைவரும், தேர்வீரர்களில் முதன்மையான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு} மீது, மேரு மலைகளின் சாரலில் மழையைப் பொழியும் நீர் நிறைந்த மேகங்களைப் போல, இலக்குத் தவறாமல் கூரிய கணைமாரியை அடித்தார்கள்.

ஆனால், அவர்களால் போரில் இப்படிப் பீடிக்கப்பட்டாலும், ஆயுதங்களை நன்கறிந்த ஒப்பற்ற வீரனான அபிமன்யு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேவாசுரப் போரில் வலிமைமிக்க அசுரர்களை நடுங்கச் செய்த வஜ்ரபாணியைப் {இந்திரனைப்} போல, உமது மகன்கள் அனைவரையும் நடுங்கச் செய்தான். பிறகு, தேர்வீரர்களில் முதன்மையான அவன் {அபிமன்யு}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} கடும்நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்ற கடுமையான பதினான்கு {14} பல்லங்களை {அகன்ற தலை கொண்ட கணைகளை} விகர்ணன் மீது ஏவினான்.

பெரும் ஆற்றல் கொண்ட அவன் {அபிமன்யு}, போரில் நடனமாடுபவனைப் போலச் சென்று, அக்கணைகளால் {14 பல்லங்களால்} விகர்ணனின் கொடிமரத்தை அவனது தேரில் இருந்து விழச் செய்தான். மேலும் அவனது தேரோட்டியையும், குதிரைகளையும் கொன்றான். பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, நன்கு கடினமாக்கப்பட்டவையும், நேராகச் செல்லக்கூடியவையும், கவசங்கள் அத்தனையையும் ஊடுருவக்கூடியவையுமான பிற கணைகள் பலவற்றை விகர்ணன் மீது மீண்டும் ஏவினான். கங்கப் பறவையின் இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தக்கணைகள், விகர்ணனை அடைந்து, அவனது உடலின் ஊடாகக் கடந்து சென்று, {இஸ் என} இரையும் பாம்புகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட சிறகுகளும் முனைகளும் கொண்ட அந்தக் கணைகள், விகர்ணனின் குருதியில் குளித்து, பூமியில் இரத்தத்தைக் கக்குவதைப் போலத் தோன்றின.

இப்படி விகர்ணன் துளைக்கப்பட்டதைக் கண்ட அவனது இரத்தச் சகோதரர்கள், சுபத்திரையின் மகனின் {அபமன்யுவின்} தலைமையிலான தேர்வீரர்களுக்கு எதிராக விரைந்தார்கள். தங்கள் (தனிப்பட்ட) தேர்களில் இருந்த அந்த ஒப்பற்ற வீரர்கள், பல சூரியன்களைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்த (பாண்டவப் படையின்) போராளிகளிடம் வந்து ஒருவரையொருவர் துளைக்கத் தொடங்கினர்.

ஏழு {7} கணைகளால் ஸ்ருதகர்மாவைத் துளைத்த துர்முகன் [3], ஒரு கணையால் அவனது {ஸ்ருதகர்மாவின்} கொடிமரத்தை வெட்டிவீழ்த்தி, ஏழு கணைகளால் அவனது {ஸ்ருதகர்மாவின்} தேரோட்டியைத் துளைத்தான். மேலும் நெருங்கிய அவன் {துர்முகன்}, தங்கக் கவசம் பூண்டவையும், காற்று போன்ற வேகத்தைக் கொண்டவையுமான அவனது {ஸ்ருதகர்மாவின்} குதிரைகளை ஆறு கணைகளால் கொன்று, பிறகு அவனது {ஸ்ருதகர்மாவின்} தேரோட்டியையும் கொன்றான். எனினும், குதிரைகள் கொல்லப்பட்ட தனது தேரிலேயே நின்ற ஸ்ருதகர்மன், பெரும் கோபம் கொண்டு, சுடர்மிகும் கடும் எரி கோள் ஒன்றைப் {தூமகேதுவைப்} போன்ற ஓர் ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} வீசினான். பிரகாசத்துடன் சுடர்விட்ட அந்த ஈட்டி புகழ்பெற்ற துர்முகனின் கடினமான கவசத்தின் ஊடாகக் கடந்து, பூமியைத் துளைத்தது.

[3] ஸ்ருதகர்மன் - சகாதேவனின் மகன், துர்முகன் - துரியோதனனின் தம்பி

அதே வேளையில், தேரை இழந்த சுருதகர்மனைக் கண்ட சுதசோமன் [4] துருப்புகள் அனைத்தின் பார்வைக்கெதிரிலேயே அவனை {ஸ்ருதகர்மனைத்} தன் தேரில் ஏற்றிக் கொண்டான். வீரனான சுருதகீர்த்தி உமது மகனான ஜெயத்சேனனைக் கொல்ல விரும்பி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் புகழ்மிக்கப் போர்வீரனைப் போரில் எதிர்த்து விரைந்தான். அப்போது, உமது மகன் ஜெயத்சேனன், புன்னகைத்தவாறே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது கரங்களை நீட்டி வளைத்தபடி, கூரிய க்ஷுரப்ரத்தம் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட கணை} ஒன்றினால் உயர் ஆன்ம சுருதகீர்த்தியின் வில்லை வெட்டி வீழ்த்தினான்.

[4] பீமனின் மகன் சுதசோமன், அர்ஜுனனின் மகன் சுருதகீர்த்தி

தன் இரத்தச் சகோதரனின் வில் வெட்டப்பட்டதைக் கண்டவனும், பெரும் வீரம் கொண்டவனுமான சதானீகன் [5], சிங்கம் போல அடிக்கடி முழக்கமிட்டபடி அந்த இடத்திற்கு வந்தான். அந்தப் போரில் பெரும் சக்தியுடன் தனது வில்லை இழுத்த சதானீகன், பத்து {10} கணைகளால் ஜெயத்சேனனைத் துளைத்துவிட்டு, மதங்கொண்ட யானையைப் போல முழங்கினான். கவசம் அனைத்தையும் துளைக்கவல்லதும், கூரிய முனை கொண்டதுமான மற்றொரு கணையை எடுத்த அவன் {சதானீகன்}, ஜெயத்சேனனின் மார்பை ஆழமாகத் துளைத்தான்.

[5] நகுலனின் மகன் சதானீகன்

சரியாக அதே நேரத்தில், தன் சகோதரன் (ஜெயத்சேனன்) அருகில் இருந்த துஷ்கர்ணன், கோபத்தால் தூண்டப்பட்டு, சதானீகனின் வில்லையும் கணையையும் அறுத்தான். அப்போது பெரும் சக்தியைத் தாங்க வல்ல மற்றொரு அற்புத வில்லை எடுத்த வலிமைமிக்கச் சதானீகன், பல கூரிய கணைகளைக் குறிபார்த்தான். தன் சகோதரன் (ஜெயத்சேனன்) அருகில் இருந்த துஷ்கர்ணனிடம், "நில்லும்", "நில்லும்" என்று சொன்ன அவன் {சதானீகன்}, பல பாம்புகளைப் போன்ற சுடர்மிகும் கூரிய கணைகளை அவன் {துஷ்கர்ணன்} மீது ஏவினான். ஒரு கணையால் துஷ்கர்ணனின் வில்லை விரைந்து வெட்டிய அவன் {சதானீகன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இரு கணைகளால் அவனது தேரோட்டியைக் கொன்று, ஏழு கணைகளால் துஷ்கர்ணனையும் துளைத்தான்.

களங்கமற்ற அந்தப் போர்வீரன் {சதானீகன்}, மனோ வேகம் கொண்டவையும், பல்வேறு நிறங்களில் இருந்தவையுமான துஷ்கர்ணனின் குதிரைகள் அனைத்தையும் பனிரெண்டு {12} கூரிய கணைகளால் கொன்றான். பெரும் கோபத்தால் தூண்டப்பட்ட சதானீகன், நன்கு குறிபார்க்கப்பட்டதும், விரைந்து செல்லவல்லதுமான மற்றொரு பல்லத்தினால் {அகன்ற தலை கொண்ட கணையால்} துஷ்கர்ணனின் மார்பை ஆழமாகத் துளைத்தான். அதன் பேரில், இடியால் தாக்கப்பட்ட மரம் போலப் பின்னவன் {துஷ்கர்ணன்} பூமியில் விழுந்தான்.

துஷ்கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்ட வலிமைமிக்கப் போர்வீரர்கள் ஐவரும் {கௌரவர்கள்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சதானீகனைக் கொல்ல விரும்பி, அனைத்துப் புறங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். மேலும் அவர்கள் புகழ்மிக்கச் சதானீகனைக் கணைமழையால் தாக்கினர். பிறகு கோபத்தால் தூண்டப்பட்ட கேகயச் சகோதரர்கள் ஐவர் (சதானீகனை மீட்க) அணுகினர். பின்னவர்கள் {கேகயச் சகோதரர்கள்} தங்களை நோக்கி வருவதைக் கண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான உமது மகன்கள், வலிமைமிக்க யானைகளை எதிர்த்து விரையும் யானைகளைப் போல அவர்களை எதிர்த்து விரைந்தனர். (உமது மகன்களில்) துர்முகன், துர்ஜயன், இளைஞனான துர்மர்ஷணன், சத்துருஞ்சயன், சத்துருஸஹன் ஆகிய {ஐந்து} புகழ்பெற்ற வீரர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டுக் கேகயச் சகோதரர்களை (கேகயச் சகோதரர்கள் ஐவரை) எதிர்த்துச் சென்றனர்.

(அரண் அமைக்கப்பட்ட) நகரங்களைப் போன்றவையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் பூட்டப்பட்டவையும், பல்வேறு வண்ணங்களிலான அழகிய கொடிமரங்களால் அருளப்பட்டவையுமான தங்கள் தேர்களில் அற்புத விற்களைத் தாங்கியபடியும், அழகிய கவசங்களைத் தரித்தபடியும், அற்புத கொடிமரங்களைக் கொண்டபடியும் இருந்த அந்த வீரர்கள், ஒரு காட்டில் இருந்து மற்றொரு காட்டுக்குள் நுழையும் சிங்கங்களைப் போலப் பகைவரின் படைக்குள் நுழைந்தனர். தேர்களும், யானைகளும் ஒன்றோடொன்று கலந்து போனதும், அவர்களுக்கும் எதிரிக்கும் இடையில் நடந்ததும், கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போரில் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

சூரியன் மறையும் அந்தக் குறுகிய காலத்திற்குள் ஒருவர் மீது ஒருவர் பகைமை பாராட்டி யமலோகத்தைப் பெருக்கும் {அங்கு செல்பவர்கள் எண்ணிக்கையைப் பெருக்கும்} அந்தப் பயங்கரப் போர் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தேர்வீரர்களும் குதிரைவீரர்களும் களமெங்கும் சிதறிக் கிடந்தனர்.

கோபத்தால் தூண்டப்பட்ட சந்தனுவின் மகன் பீஷ்மர், தன் நேரான கணைகளால் உயர் ஆன்மப் பாண்டவர்களின் துருப்புகளைக் கொல்லத் தொடங்கினார். அவரது கணைகள் பாஞ்சாலப் போராளிகளை யமனுலகு அனுப்பி வைத்தன. பாண்டவர்களின் படையணிகளை இப்படி உடைத்த அந்தப் பாட்டன் {பீஷ்மர்}, {அந்த நாளின்} இறுதியில் தன் துருப்புகளைப் பின்வாங்கச் செய்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓய்வெடுக்கத் தனது பாசறைக்குச் சென்றார். திருஷ்டத்யும்னனையும், விருகோதரனையும் கண்ட மன்னன் யுதிஷ்டிரனும், அவர்களது தலைகளை முகர்ந்து பார்த்து, மகிழ்ச்சியால் நிறைந்து, தனது கொட்டகைக்கு ஓய்வெடுக்கச் சென்றான்" {என்றான் சஞ்சயன்}.

ஆறாம் நாள் போர் முற்றும்


ஆங்கிலத்தில் | In English