The valour of Iravat, the flee of Ghatotkatcha and the swoon of Salya | Bhishma-Parva-Section-084 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 42)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் கவலை; திருதராஷ்டிரனைக் கண்டித்த சஞ்சயன்; அரவானுக்கும், அவந்தியின் விந்தானுவிந்தர்களுக்கும் இடையில் நடைபெற்ற போர்; தேரோட்டியை இழந்த விந்தானுவிந்தர்களின் தேர் களத்தைவிட்டு ஓடியது; கடோத்கசனுக்கும், பகதத்தனுக்கும் இடையில் நடந்த மோதல்; அஞ்சி ஓடிய கடோத்கசன்; சல்லியனுக்கும், நகுலசகாதேவர்களுக்கும் இடையில் நடைபெற்ற போர்; சகாதேவனின் கணையால் தாக்கப்பட்ட சல்லியன் மயக்கமடைந்தது; சல்லியனை அவனது தேரோட்டி களத்தைவிட்டே கொண்டு சென்றது...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, பாண்டவர்கள் மற்றும் எனது வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற பல தனிப்போர்களைக் குறித்து, நீ சொல்லி நான் கேட்டவை அற்புதம் நிறைந்தவையாக இருக்கின்றன. எனினும், ஓ! சஞ்சயா, (இத்தகு நேரங்களில்) என்தரப்பைச் சேர்ந்தவர்களில் எவரும் மகிழ்ச்சியுடன் இருந்ததாக நீ சொல்லவில்லை. பாண்டு மகன்கள் மகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும், முறியடிக்கப்படாமல் இருப்பவர்களாகவும், ஓ! சூதா {சஞ்சயா}, என்னவர்கள் மகிழ்ச்சியற்று, சக்தியற்று, போரில் தொடர்ச்சியாக வீழ்த்தப்படுவதாகவுமே எப்போதும் நீ சொல்கிறாய். இவை அனைத்தும் விதியே என்பதில் ஐயமில்லை" என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உம்முடையவர்கள் வல்லமையுடன் தங்கள் பெரும் வீரத்தை வெளியிட்டு, தங்கள் சக்திக்கேற்றபடியும், ஊக்கத்திற்குத் தகுந்தபடியுமே முயற்சி செய்கிறார்கள். தெய்வீக ஓடையான கங்கையின் இனிய நீர், கடலின் தன்மைகளுடன் தொடர்பு கொண்டு, உப்பாவது போல, உமது படையில் உள்ள ஒப்பற்ற வீரர்களின் வீரமும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் பாண்டுவின் வீர மகன்களை அடைந்ததும் வீணாகிறது. தங்கள் சக்திக்குத்தக்க வகையில் முயன்று, மிகக்கடுஞ்சாதனைகளை அடையும் உமது துருப்புகளிடம், ஓ! குருக்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, நீர் குறை காணக்கூடாது.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, யமனின் உலகத்தைப் (அதில் உள்ளவர்கள் எண்ணிக்கையைப்) பெருக்குவதும், அச்சந்தருவதுமான இந்தப் பயங்கரமான உலக அழிவு உமது சீர்கேட்டாலும், உமது மகன்களின் தவறான நடத்தையாலுமே உண்டானது. உமது தவறால் உண்டானவைக்காக, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் வருந்துவது உமக்குத் தகாது. இவ்வுலகில் மன்னர்கள் தங்கள் உயிரை எப்போதுமே காத்துக் கொள்வதில்லை. பூமியின் இந்த ஆட்சியாளர்கள், அறவோரின் உலகங்களை {சொர்க்கத்தைப்} போரால் வெல்ல விரும்பி, (பகை) அணியினருக்குள் ஊடுருவி, சொர்க்கத்தையே தங்கள் இலக்காகக் கொண்டு தினமும் போரிடுகின்றனர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (பழங்காலத்தில்) தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையிலான போரில் நடந்தது போலவே, அந்நாளின் முற்பகலில் நடந்த படுகொலைகள் பெரிதாக இருந்தன. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிதறாத கவனத்துடன் அதைக் கேட்பீராக.
வலிமைமிக்கவர்களும், போரில் கடுமையான அற்புதப் போர்வீரர்களும், பெரும் வில்லாளிகளுமான அவந்தியின் இளவரசர்கள் {விந்தன், அனுவிந்தன்} இருவரும், இராவத்தைக் {இராவானைக் [அ] அரவானைக்}[1] கண்டு, அவனை எதிர்த்துச் சென்றனர். அவர்களுக்கிடையில் நடைபெற்ற கடும்போர், மயிர்க்கூச்சம் ஏற்படுத்தும் வகையில் இருந்தது. அப்போது, சினத்தால் தூண்டப்பட்ட இராவத் {அரவான்}, தெய்வீக வடிவங்களைக் கொண்ட அந்தச் சகோதரர்கள் இருவரையும், நேரான மற்றும் கூரிய கணைகள் பலவற்றால் துளைத்தான். எனினும், போர்வகைகள் அனைத்தையும் அறிந்த அந்த இருவரும், அந்தப் போரில் பதிலுக்கு அவனை {அரவானை} துளைத்தனர். எதிரியைக் கொல்லச் சிறப்பாகப் போராடி, ஒவ்வொருவரின் அருஞ்செயலையும் எதிர்க்க விரும்பித் தங்களுக்குள் போரிட்ட அவர்களுக்குள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.
[1] வேறு ஒரு பதிப்பில் இது யுதாமன்யு என்று குறிப்பிடப்படுகிறது. யுதாமன்யு என்பவன் பாஞ்சால இளவரசனாவான். கங்குலி இங்கே அர்ஜுனன் மகன் இராவத் {அரவான்} என்றே குறிப்பிடுகிறார். இதே பதிவில் பின்னர் உலூபியின் மகன் என்றும் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
பிறகு இராவத் {அரவான்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நான்கு கணைகளால், அனுவிந்தனின் நான்கு குதிரைகளை யமலோகம் அனுப்பிவைத்தான். மேலும் கூரிய இரண்டு பல்லங்களால் அவன் {அரவான்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அனுவிந்தனின் வில்லையும், கொடிமரத்தையும் அறுத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்த அருஞ்செயல் அற்புதம் மிகுந்ததாக இருந்தது. பிறகு அனுவிந்தன், தன் தேரை விட்டு விட்டு விந்தனின் தேரில் ஏறிக் கொண்டான். பெரும் வலிமையைத் தாங்கவல்லதும், பலமானதும், சிறப்பானதுமான ஒரு வில்லை எடுத்த அனுவிந்தன் மற்றும் அவனது அண்ணனான விந்தன் ஆகிய அவந்தியின் தேர்வீர்களில் முதன்மையான அவர்கள், ஒரே தேரில் நின்று கொண்டு, உயரான்ம இராவத்தின் {அரவானின்} மேல் பல கணைகளை விரைவாக ஏவினார்கள். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், வேகமாகச் செல்லக்கூடியவையுமான அவர்கள் ஏவிய கணைகள், காற்றில் சென்ற போது ஆகாயத்தையே மறைத்தன [2].
[2] மூலத்தில் Divakaram prapya என்று இருப்பதாகவும், அதன் பொருள் "வானத்தில் செல்லும்போது, சூரியனின் பாதையை அடைந்து" என்பதாகும் என்றும் இங்கே விளக்குகிறார் கங்குலி.
அப்போது சினம் தூண்டப்பட்ட அரவான், வலிமைமிக்கத் தேர்வீரர்களான, அந்த (அவந்தியைச் சேர்ந்த) சகோதரர்கள் இருவர் மீதும் தன் கணைமாரியைப் பொழிந்து, அவர்களின் தேரோட்டியை வீழ்த்தினான். அந்தத் தேரோட்டி உயிரிழந்து பூமியில் விழுந்த போது, கட்டுப்பாட்டை இழந்த குதிரைகள் தேருடன் {அங்கிருந்து} ஓடின. அந்த வீரர்கள் இருவரையும் வீழ்த்தியவனும், நாக மன்னனின் மகளுடைய {உலூபியின்} மகனுமான அவன் {அரவான்}, தனது ஆற்றலை வெளிப்படுத்தியபடி, பெருஞ்சுறுசுறுப்புடன் உமது படையணியினரை எரிக்கத் தொடங்கினான். போரில் இப்படிக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த அந்த வலிமைமிக்கத் தார்தராஷ்டிரப் படை, நஞ்சைக் குடித்த மனிதனைப் போலப் பல திசைகளிலும் ஓடத் தொடங்கியது.
அப்போது, ஹிடிம்பையின் வலிமைமிக்க மகனான ராட்சச இளவரசன் {கடோத்கசன்}, கொடிமரத்துடன் கூடியதும், சூரியப்பிரகாசம் கொண்டதுமானத் தனது தேரில் பகதத்தனை எதிர்த்து விரைந்தான். அந்தப் பிராக்ஜோதிஷ ஆட்சியாளன் {பகதத்தன்}, யானைகளின் இளவரசனான தன் யானையின் மீது அமர்ந்தபடி, பழங்காலத்தில் தாரகனை {தாராகாசுரனை} அழித்த போரில் வஜ்ரபாணி {இந்திரன்} பிரகாசித்தது போலப் பிரகாசித்தான். தேவர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள் ஆகியோர் அனைவரும் அங்கே வந்தனர். எனினும், ஹிடிம்பையின் மகனுக்கும் {கடோத்கசனுக்கும்} பகதத்தனுக்கும் இடையில் அவர்களால் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.
கோபத்தால் தூண்டப்பட்ட தேவர்கள் தலைவன் {இந்திரன்}, தானவர்களை அச்சங்கொள்ளச் செய்ததைப் போலவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பகதத்தனும், பாண்டவ வீரர்களை அச்சுறுத்தினான். அனைத்துப் புறங்களிலும் அவனால் அச்சுறுத்தப்பட்ட பாண்டவப்படையின் வீரர்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கள் படையணியினருள் தங்களைக் காப்பவர் எவரையும் காணத் தவறினர்.
எனினும் அங்கே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் தேரில் இருந்த பீமனின் மகனைக் {கடோத்கசனைக்} கண்டோம். வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பிறர் மகிழ்ச்சியற்ற இதயங்களுடன் சிதறி ஓடினர். அந்தப் போரில், பாண்டவர்களின் துருப்புகள் மீண்டும் திரும்பி வந்த போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளுக்கு மத்தியில் அச்சந்தரும் பேரொலி எழுந்தது. அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கரப் போரில், மேருவின் {மேரு மலையின்} சாரலில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலப் பகதத்தனைத் தன் கணைகளால் கடோத்கசன் மறைத்தான். ராட்சசனின் {கடோத்கசனின்} வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும் கலங்கடித்த அந்த மன்னன் {பகதத்தன்}, பீமசேனன் மகனின் {கடோத்கசனின்} முக்கிய அங்கங்கள் அனைத்தையும் விரைவாகத் தாக்கினான்.
எண்ணிலடங்கா நேரான கணைகளால் தாக்கப்பட்டாலும், அந்த ராட்சச இளவரசன் {கடோத்கசன்}, (கணைகளால்) துளைக்கப்பட்ட மலையைப் போல (அசையாமல்) நடுங்காதிருந்தான். பிறகு, அம்மோதலில், கோபத்தால் தூண்டப்பட்டவனான பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, பதினான்கு தோமரங்களை ஏவினான். எனினும், அவை அனைத்தும் அந்த ராட்சசனால் {கடோத்கசனால்} வெட்டப்பட்டன. தன் கூரிய கணைகளால் அந்தத் தோமரங்களை அறுத்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த ராட்சசன் {கடோத்கசன்}, எழுபது {70} கணைகளால் பகதத்தனைத் துளைத்தான். அவை ஒவ்வொன்றும் வஜ்ரத்தின் சக்திக்கு ஒப்பானவையாக இருந்தன.
அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, சிரித்தபடியே அந்த ராட்சசனின் {கடோத்கசனின்} நான்கு குதிரைகளையும் யமலோகம் அனுப்பி வைத்தான். எனினும், பெரும் வீரம் கொண்ட அந்த ராட்சசர்களின் இளவரசன் {கடோத்கசன்}, குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரிலேயே இருந்து கொண்டு, பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளனுடைய {பகதத்தனின்} யானையின் மேல் பெரும் சக்தியுடன் ஓர் ஈட்டியை எறிந்தான். மன்னன் பகதத்தன், தன்னை நோக்கி விரைவாக வந்து கொண்டிருந்ததும், தங்கப்பிடியுடன் கூடியதுமான அந்த வேகமான ஈட்டியை மூன்று துண்டுகளாக வெட்டினான். அதன்பேரில் அது {அந்த ஈட்டி} தரையில் விழுந்தது. தன் ஈட்டி வெட்டப்பட்டதைக் கண்ட ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, பழங்காலத்தில் இந்திரனுடன் நடந்த போரில் தைத்தியர்களில் முதன்மையான நமூசி பயந்தோடியதைப் போல {அங்கிருந்து} ஓடினான். யமனாலோ, வருணனாலோ கூடப் போரில் வீழ்த்தப்பட முடியாதவனும், புகழ்பெற்ற ஆற்றலைக் கொண்டவனும், பெரும் வீரத்தைக் கொண்டவனுமான அந்த வீரனை {கடோத்கசனை} வீழ்த்திய பகதத்தன், தன் யானையுடன் சேர்ந்து (தடாகத்தில்) தன் நடையால் தாமரைத்தண்டுகளை நசுக்கும் காட்டு யானையைப் போலப் பாண்டவத் துருப்புகளை நசுக்கத் தொடங்கினான்.
அப்போது, மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, தன் தங்கையின் {மாத்ரியின்} மகன்களான இரட்டையருடன் {நகுலன் மற்றும் சகாதேவனுடன்} போரில் ஈடுபட்டு, அந்தப் பாண்டு மகன்களைக் கணைகளின் மேகங்களால் மூழ்கடித்தான். தன் தாய்மாமனை {சல்லியனைக்} கண்ட சகாதேவன், (அவனுடன் {சல்லியனுடன்}) போரில் ஈடுபட்டு, நாளை உண்டாக்கபவனை {சூரியனை} மூடும் மேகங்களைப் போலத் தன் கணைகளால் அவனை {சல்லியனை} மறைத்தான். அந்தக் கணை மேகங்களால் மறைக்கப்பட்ட மத்ர ஆட்சியாளன் {சல்லியன்} மகிழ்ச்சியான உணர்வை வெளிப்படுத்தினான். இரட்டையர்களும் தங்கள் தாயின் {மாத்ரியின்} நிமித்தமாகப் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தனர் [3]. பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனான சல்லியன், அந்தப் போரில் திறமையுடன் போரிட்டு, சிறப்பான நான்கு கணைகளை ஏவி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நகுலனின் நான்கு குதிரைகளை யமனுலகிற்கு அனுப்பி வைத்தான்.
[3] தன் தங்கை மகன்களின் திறனைக் கண்டு சல்லியன் மனநிறைந்து மகிழ்ந்தான் என்றும், தங்கள் தாய் மூலம் உறவுகொண்ட ஒருவனின் முன்பு தங்கள் திறனை வெளிப்படுத்தியதில் இரட்டையர்களும் மகிழ்ந்தார்கள் என்றும் பொருள் வருவதாகத் தெரிகிறது எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வலிமைமிக்கத் தேர்வீரனான நகுலனும், குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரில் இருந்து விரைவாகக் கீழே குதித்து, புகழ்பெற்ற தன் தம்பியின் {சகாதேவனின்} தேரில் ஏறிக் கொண்டான். போரில் கடுமையானவர்களும், சினத்தால் தூண்டப்பட்டவர்களும், ஒரே தேரில் இருந்தவர்களுமான அந்த வீரர்கள் இருவரும், பெரும் பலத்துடன் தங்கள் விற்களை வளைத்து, (தங்கள் கணைகளால்) மத்ரர்களின் ஆட்சியாளனுடைய {சல்லியனுடைய} தேரை மறைக்கத் தொடங்கினர். ஆனாலும், தன் தங்கை மகன்களின் நேரான எண்ணற்ற கணைகளால் இப்படி மூடப்பட்ட அந்த மனிதர்களில் புலி {சல்லியன்}, (அசையாது நிற்கும்) ஒரு மலையைப் போலவே கிஞ்சிற்றும் நடுங்காதிருந்து, சிரித்துக் கொண்டே (பதிலுக்குத்) தன் கணைமாரிகளால் அவர்களைத் தாக்கினான்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அப்போது, கோபம் தூண்டப்பட்டவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான சகாதேவன், (சக்திமிக்க) ஒரு கணையை எடுத்து, மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} நோக்கி விரைந்து வந்து, அவன் மீது அஃதை {கணையை} ஏவினான். கருடனின் வேகத்தைக் கொண்ட அந்தக் கணை, மத்ரர்களின் ஆட்சியாளனைத் {சல்லியனைத்} துளைத்து, {அவனது உடலை} ஊடுருவி பூமியில் விழுந்தது. அதன்பேரில் ஆழமாகத் துளைக்கப்பட்டு, பெரும் வலியை உணர்ந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சல்லியன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேர்த்தட்டில் அமர்ந்து மயக்கமடைந்தான். இரட்டையர்களால் (இப்படிப்) பாதிக்கப்பட்டு, உணர்விழந்து தேரில் கிடக்கும் அவனைக் {சல்லியனைக்} கண்ட அவனது தேரோட்டி, களத்தைவிட்டே தன் வாகனத்தில் அவனை {சல்லியனை} அகற்றிச் சென்றான்.
(போரில் இருந்து) பின்வாங்கும் மத்ரர்கள் ஆட்சியாளனின் {சல்லியனின்} தேரைக் கண்டத் தார்தராஷ்டிரர்கள் அனைவரும் மகிழ்ச்சியற்றுப் போய், அவன் {சல்லியன்} அவ்வளவுதான் என நினைத்தார்கள். அப்போது, தங்கள் தாய்மாமனைப் போரில் வீழ்த்தியவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்த மாத்ரியின் மகன்கள் இருவரும், தங்கள் சங்குகளை எடுத்து மகிழ்ச்சியாக ஊதி, சிங்க முழக்கமிட்டார்கள். பிறகு அவர்கள் {நகுல, சகாதேவர்கள்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தைத்திய படையை நோக்கி விரையும் தேவர்களான இந்திரனையும், உபேந்திரனையும் போல, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது படைகளை நோக்கி மகிழ்ச்சியாக விரைந்தனர்" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |