Sankha killed by Drona! | Bhishma-Parva-Section-083 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 41)
பதிவின் சுருக்கம் : திரிகர்த்த மன்னன் சுசர்மனிடம் பேசிய துரியோதனன்; அர்ஜுனனைக் கண்டு நடுங்கிய திருதராஷ்டிரப் படை; சுசர்மனின் திரிகர்த்தப் படையினரால் பாதுகாக்கப்பட்ட பீஷ்மர்; துரோணருக்கும் விராடனுக்கும் இடையில் நடந்த மோதல்; விராடனின் மகன் சங்கனைக் கொன்ற துரோணர்; அச்சத்தால் ஓடிய விராடன்; சிகண்டிக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த மோதல்; தேரை இழந்த சிகண்டி சாத்யகியின் தேரில் ஏறியது; சாத்யகிக்கும் ராட்சசன் அலம்புசனுக்கும் இடையில் நடந்த போர்; சாத்யகிக்கு அஞ்சி ஓடிய அலம்புசன்; திருஷ்டத்யும்னனுக்கும், துரியோதனனுக்கும் இடையில் நடந்த போர்; தேரை இழந்த துரியோதனன் சகுனியின் தேரில் ஏறியது; கிருதவர்மனுக்கும், பீமனுக்கும் இடையில் நடந்த போர்; தேரை இழந்த கிருதவர்மன் சகுனியின் தம்பியான விருஷகனின் தேரில் ஏறியது; கௌரவப்படையை அழிக்கத் தொடங்கிய பீமன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "இப்படிப் போர் நடந்து, {திரிகர்த்த மன்னன்} சுசர்மன் போரிடுவதை நிறுத்திய போது, (குரு படையின்) துணிவுமிக்க வீரர்கள் {மன்னர்கள்} அனைவரும், உயர் ஆன்மப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} போரில் முறியடிக்கப்பட்டனர். உண்மையில், கடலைப் போன்றே இருந்த உமது படை விரைவாகக் கலங்கியது. விஜயனின் {அர்ஜுனனின்} தேரை எதிர்த்து கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} விரைவாக முன்னேறினார்.
போரில் பார்த்தனின் {அர்ஜுனனின்} ஆற்றலைக் கண்ட மன்னன் துரியோதனன், {அர்ஜுனனிடம் தோற்ற} அந்த மன்னர்களிடம் விரைந்து சென்று, அவர்களிடமும், அவர்களின் முன்பு நின்ற வலிமைமிக்கவனும், துணிவுமிக்கவனுமான {திரிகர்த்த மன்னன்} சுசர்மனிடமும் பேசி, அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் இந்த வார்த்தைகளைச் சொன்னான். "குருக்களில் முதன்மையானவரும், சந்தனுவின் மகனுமான இந்தப் பீஷ்மர், தனது உயிரையே துச்சமாக மதித்து, தன் முழு ஆன்மாவுடன் தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்துப் போரிட விரும்புகிறார். உங்கள் துருப்புகளின் துணையுடன், ஒன்றுகூடி முயற்சி செய்பவர்களே, எதிரிப்படையை எதிர்த்துச் செல்லும் பாரதக் குலத்தின் பாட்டனை {பீஷ்மரை} நீங்கள் அனைவரும் காப்பீராக" என்றான் {துரியோதனன்}.
"சரி" என்று சொன்ன அந்த மன்னர்களின் படைப்பிரிவினர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாட்டனைப் {பீஷ்மரைப்} பின்தொடர்ந்து சென்றனர். பிறகு, (இப்படிப் போரிட விரையும்) சந்தனுவின் மகனான வலிமைமிக்கப் பீஷ்மர், வெண்குதிரைகள் பூட்டப்பட்டதும், கடுமையான குரங்கைத் {அனுமனைத்} தாங்கியிருக்கும் கொடிமரத்தைக் கொண்டதும், மேகங்களைப் போன்ற ஆழ்ந்த சடசடப்பொலி கொண்டதும், பெரும் பிரகாசத்தைக் கொண்டதுமான பெரிய தேரில், தன்னை நோக்கி வந்த பாரதக் குலத்தின் அர்ஜுனனிடம் விரைவாக வந்தார். இப்படிப் போரிட வந்து கொண்டிருந்தவனும், கிரீடம் தரித்தவனுமான தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்ட உமது படை முழுவதும், அச்சத்தால் வியப்பின் பேரொலிகளை வெளியிட்டன.
நடுப்பகலின் {மதிய காலச்} சூரியனைப் போன்ற காந்தியுடனும், கையில் கடிவாளங்களுடனும் இருந்த கிருஷ்ணனைக் கண்ட உமது துருப்புகளால், அவனை {கிருஷ்ணனை} கண்ணெடுத்தும் பார்க்க முடியவில்லை. அதே போலவே, வெண்குதிரைகளுடனும், வெள்ளை வில்லுடனும், ஆகாயத்தில் எழுந்த சுக்கிரக் {வெள்ளிக்} கோளைப் போல இருந்த சந்தனுமகன் பீஷ்மரை நோக்கும் சக்தியற்றவர்களாகவே பாண்டவர்களும் இருந்தனர். தனது தம்பிகள், மகன்கள் மற்றும் பிற வலிமைமிக்கத் தேர்வீரர்களுடன் இருந்த தங்கள் மன்னனின் {சுசர்மனின்} தலைமையில் திரிகர்த்தர்களின் உயர் ஆன்மப் போர்வீரர்களால் {பாதுகாக்கப்படும்படி} பின்னவர் {பீஷ்மர்} அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்டிருந்தார்.
அதேவேளையில், பரத்வாஜரின் மகன் {துரோணர்}, சிறகு படைத்த தனது கணைகளால், போரில் மத்ஸ்யர்களின் மன்னனை {விராடனைத்} துளைத்தார். அம்மோதலில் அவர் {துரோணர்}, ஒரு கணையால் பின்னவனின் {விராடனின்} கொடிமரத்தை அறுத்து, மற்றொரு கணையால் அவனது வில்லையும் அறுத்தார். பிறகு, ஒரு பெரும் படையின் தலைவனான விராடன், இப்படி வெட்டப்பட்ட அந்த வில்லை விட்டு, பெரும் பலத்தைத் தாங்கும் திறன் கொண்டதும், வலுவானதுமான மற்றொரு வில்லை விரைவாக எடுத்தான். மேலும் அவன் {விராடன்}, கொடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்ற சுடர்மிகும் கணைகள் பலவற்றையும் எடுத்தான். (அவற்றைக் கொண்டு) மூன்றால் துரோணரையும், நான்கால் அவரது (நான்கு) குதிரைகளையும் துளைத்தான். பிறகு மற்றொரு கணையை எடுத்த அவன் துரோணரின் கொடிமரத்தையும், ஐந்தால் அவரது தேரோட்டியையும் துளைத்தான். மேலும் ஒரு கணையால் அவன் {விராடன்} துரோணரின் வில்லைத் துளைத்தான். (இவை அனைத்தினாலும்) அந்த அந்தணர்களில் காளை {துரோணர்} மிகவும் கோபமடைந்தார்.
பிறகு துரோணர், நேரான எட்டு கணைகளால் விராடனின் குதிரைகளைக் கொன்று, ஓ! பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, ஒரு கணையால் அவனது {விராடனின்} தேரோட்டியையும் கொன்றார். தன் தேரோட்டி கொல்லப்பட்ட விராடன், குதிரைகளும் கொல்லப்பட்ட தனது தேரில் இருந்து கீழே குதித்தான். அதன் பிறகு, தேர்வீரர்களில் முதன்மையான அவன் {விராடன்}, (தனது மகன்) சங்கனின் தேரில் விரைவாக ஏறினான். ஒரே தேரில் நின்ற தந்தையும் {விராடனும்}, மகனும் {சங்கனும்}, பரத்வாஜர் மகனின் {துரோணரின்} அடர்த்தியான கணைமாரியை பெரும் வலிமையுடன் தடுக்கத் தொடங்கினர்.
அப்போது அம்மோதலில் கோபத்தால் தூண்டப்பட்ட பரத்வாஜரின் வலிமைமிக்க மகன் {துரோணர்}, கடும்நஞ்சுமிக்கப் பாம்பை ஒத்த கணையொன்றை சங்கன் மீது விரைந்து ஏவினார். சங்கனின் மார்பைத் துளைத்த அந்தக் கணை, அவனது குருதியைக் குடித்து, இரத்தத்தில் நனைந்து ஈரத்துடன் பூமியில் விழுந்தது. பரத்வாஜர் மகனின் {துரோணரின்} கணையால் தாக்கப்பட்ட சங்கன், தன் தந்தையின் {விராடனின்} முன்னிலையிலேயே, தனது வில் மற்றும் கணைகளில் இருந்த தன் பிடி தளர, தனது தேரில் இருந்து வேகமாக விழுந்தான். தன் மகன் {சங்கன்} கொல்லப்பட்டதைக் கண்ட விராடன், திறந்த வாய்க் கொண்ட அந்தகனைப் போல இருந்த துரோணரைப் போரில் தவிர்த்து, அச்சத்தால் ஓடினான். பிறகு ஒரு கணத்தையும் இழக்காத பரத்வாஜர் மகன் {துரோணர்}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான போராளிகளுடன் போரிட்டு வலிமைமிக்க அந்தப் பாண்டவர்களின் கூட்டத்தைத் {படையைத்} தடுத்தார் [1].
[1] வேறு தேரில் துரோணர் ஏறினாரா என்ற குறிப்பு இல்லை. ஒருவேளை காலாளாகவே போரிட்டும் இருக்கலாம்.
சிகண்டியோ, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} அடைந்து, வேகமாகச் செல்லும் மூன்று கணைகளால் அவனது புருவங்களுக்கு மத்தியில் பின்னவனைத் {அஸ்வத்தாமனைத்} தாக்கினான். அந்தக் கணைகளால் துளைக்கப்பட்ட மனிதர்களில் புலியான அஸ்வத்தாமன், மூன்று நெடிய தங்க முகடுகளைக் கொண்ட மேரு மலையைப் போல அழகாகத் தெரிந்தான். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் கோபத்தால் தூண்டப்பட்ட அஸ்வத்தாமன், கண்ணிமைக்க ஆகும் பாதி நேரத்தில், சிகண்டியின் தேரோட்டி, கொடிமரம், குதிரைகள், ஆயுதங்கள் ஆகியவற்றைப் பெரும் எண்ணிக்கையிலான தன் கணைகளால் மறைத்து, அவற்றை வீழ்த்தினான்.
எதிரிகளை எரிப்பவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான அந்தச் சிகண்டி, குதிரைகள் கொல்லப்பட்டத் தனது தேரில் இருந்து கீழே குதித்து, பளபளப்பான, கூரிய வாளையும், கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, சினத்தால் தூண்டப்பட்டு, ஒரு பருந்தைப் போன்றப் பெரும் சுறுசுறுப்புடன் களத்தில் நகர்ந்தான். கையில் வாளுடனும், பெரும் சுறுசுறுப்புடன் அவன் {சிகண்டி} களத்தில் சென்றபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (அவனைத் தாக்கும்) சந்தர்ப்பம் எதையும் காணத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} தவறினான். இவை அனைத்தையும் காண அற்புதமாக இருந்தது. பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பெரும் கோபக்காரனான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} பல்லாயிரம் கணைகளை ஏவினான். ஆனால், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையான அந்தச் சிகண்டியோ, தன்னை நோக்கி வந்தக் கடும் கணைமாரியைத் தன் கூரிய வாளால் வெட்டினான்.
எதிரிகளை எரிப்பவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான அந்தச் சிகண்டி, குதிரைகள் கொல்லப்பட்டத் தனது தேரில் இருந்து கீழே குதித்து, பளபளப்பான, கூரிய வாளையும், கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, சினத்தால் தூண்டப்பட்டு, ஒரு பருந்தைப் போன்றப் பெரும் சுறுசுறுப்புடன் களத்தில் நகர்ந்தான். கையில் வாளுடனும், பெரும் சுறுசுறுப்புடன் அவன் {சிகண்டி} களத்தில் சென்றபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (அவனைத் தாக்கும்) சந்தர்ப்பம் எதையும் காணத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} தவறினான். இவை அனைத்தையும் காண அற்புதமாக இருந்தது. பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பெரும் கோபக்காரனான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} பல்லாயிரம் கணைகளை ஏவினான். ஆனால், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையான அந்தச் சிகண்டியோ, தன்னை நோக்கி வந்தக் கடும் கணைமாரியைத் தன் கூரிய வாளால் வெட்டினான்.
பிறகு, அந்தத் துரோண மகன் {அஸ்வத்தாமன்}, அழகானதும், ஒளிமிக்கதும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்துமான {சிகண்டியின்} கேடயத்தையும், சிகண்டியின் வாளையும் துண்டுகளாக வெட்டினான். மேலும் அவன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிறகுபடைத்தவையும், பெரும் எண்ணிக்கையிலானவையுமான கணைகளால், பின்னவனின் {சிகண்டியின்} மேனியைத் துளைத்தான். பிறகு, சுடர்மிகும் பாம்புகளைப் போன்றவையான அஸ்வத்தாமனின் கணைகளால் வெட்டப்பட்டதும், (தன் கையில் இருந்ததுமான) உடைந்த வாளைச் சுழற்றிய சிகண்டி, அஃதை {வாளை} அவன் {அஸ்வத்தாமன்} மீது வேகமாக வீசினான். எனினும் அந்தப் போரில் தன் கர வேகத்தைக் காட்டிய துரோண மகன் {அஸ்வத்தாமன்}, தன்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்ததும், யுகத்தின் முடிவில் எழும் சுடர்மிகும் நெருப்பைப் போன்றதுமான (அந்த உடைந்த வாளை) அதை வெட்டினான். மேலும் அவன் {அஸ்வத்தாமன்}, இரும்பாலான எண்ணிலாக் கணைகளால் சிகண்டியைத் துளைத்தான். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கூரிய கணைகளால் மிகவும் துன்பப்பட்ட சிகண்டி, அந்த மது குலத்தின் உயர் ஆன்மக் கொழுந்தின் {சாத்யகியின்} தேரில் விரைந்து ஏறினான்.
பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட சாத்யகி, அந்தப் போரில் தன் பயங்கரக் கணைகளால் கொடிய ராட்சசன் அலம்புசனை அனைத்துப் புறங்களிலும் துளைத்தான். அப்போது, அந்த ராட்சசர்களின் இளவரசன் {அலம்புசன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அர்த்தச்சந்திரக் {பிறைவடிவக்} கணையொன்றால் அம்மோதலில், சாத்யகியின் வில்லை அறுத்து, பல கணைகளால் சாத்யகியையும் துளைத்தான். தன் ராட்சச சக்திகளால் ஒரு மாயையை உண்டாக்கிய அவன் {அலம்புசன்}, சாத்யகியைக் கணைமாரியால் மறைத்தான். ஆனால், அந்தக் கூரிய கணைகளால் எவ்வளவுதான் தாக்குண்டாலும், அவன் {சாத்யகி} அச்சத்திற்கு ஆளாகாததை நாங்கள் கண்டோம். அந்தச் சினி பேரனின் {சாத்யகியின்} ஆற்றல் அற்புதமாக இருந்தது.
மறுபுறம், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த விருஷ்ணி குலத்தின் மகன் {சாத்யகி}, (மந்திரங்களுடன் கூடிய) ஐந்திர ஆயுதத்தை ஏவினான். மதுகுலத்தின் ஒப்பற்ற அந்த வீரன் {சாத்யகி}, விஜயனிடம் {அர்ஜுனனிடம்} இருந்து அவ்வாயுதத்தைப் பெற்றிருந்தான் [2]. அந்த அசுர மாயையைச் சாம்பலாக்கிய அவ்வாயுதம் {ஐந்திரம்}, மழைக்காலத்தில் மழைநீரால் மலைச்சாரலை மறைக்கும் மேகங்களின் திரளைப் போல, அலம்புசனைச் சுற்றிலும் பயங்கரக் கணைகளால் மறைத்தது. இதன் பேரில், அந்த மதுகுலத்து வீரனால் {சாத்யகியால்} இப்படிப் பீடிக்கப்பட்ட ராட்சசன் {அலம்புசன்}, போரில் சாத்யகியைத் தவிர்த்துவிட்டு, அச்சத்தால் ஓடிவிட்டான்.
[2] சாத்யகி, அர்ஜுனனின் சீடனாக இருந்தவனாவான். விஜயன் என்பது அர்ஜுனனின் மற்றுமொரு பெயர் என இங்கே விளக்குகிறார் கங்குலி.
அப்போது அந்தச் சினியின் பேரன் {சாத்யகி}, மகவத்தாலேயே {இந்திரனாலேயே} வீழ்த்தப்பட முடியாத அந்த ராட்சசர்களின் இளவரசனை {அலம்புசனை} வீழ்த்திவிட்டு, உமது துருப்புகள் பார்த்துக் கொண்டிருக்கும்போது உரத்த முழக்கத்தை வெளியிட்டான். கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்ட சாத்யகி, பிறகு, எண்ணிலடங்கா கணைகளைக் கொண்டு உமது துருப்புகளைக் கொல்ல ஆரம்பித்தான். அதன் பேரில் பின்னவர்கள் {உமது துருப்பினர்} அச்சத்தால் ஓடிவிட்டனர்.
அதே வேளையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துருபதனின் வலிமைமிக்க மகனான திருஷ்டத்யும்னன், உமது அரச மகனைப் {துரியோதனனை} போரில் எண்ணிலடங்கா நேரான கணைகளைக் கொண்டு மறைத்தான். எனினும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் கணைகளால் திருஷ்டத்யும்னன் அவனை {துரியோதனனை} இப்படி மூடிக் கொண்டிருந்தாலும், உமது அரச மகன் {துரியோதனன்} கலக்கமடையவோ, அச்சங்கொள்ளவோ இல்லை. மறுபுறம் அவன் {துரியோதனன்}, போரில் திருஷ்டத்யும்னனை (முதலில்) அறுபது {60} கணைகளாலும், (பிறகு) முப்பது {30} கணைகளாலும் விரைவாகத் துளைத்தான். இவை அனைத்தும் மிக அற்புதமாகத் தெரிந்தன.
அப்போது அந்தப் பாண்டவப் படைத்தலைவன் {திருஷ்டத்யும்னன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டு, அவனது {துரியோதனனது} வில்லை அறுத்தான். மேலும் அம்மோதலில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {திருஷ்டத்யும்னன்}, உமது மகனின் {துரியோதனனின்} நான்கு குதிரைகளைக் கொன்று, கூர்முனை கொண்ட ஏழு கணைகளால் அவனையும் {துரியோதனனையும்} துளைத்தான். அதன் பேரில் (உமது மகன்), பெரும் பலமும், வலிமையான கரங்களும் கொண்ட அந்த வீரன் {துரியோதனன்}, குதிரைகள் கொல்லப்பட்ட தன் தேரில் இருந்து கீழே குதித்து, பட்டாக்கத்தியை உயர்த்தியபடி பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி கால் ஆளாகவே ஓடினான் [3].
[3] திருஷ்டத்யும்னனைத் துரியோதனன் அந்தப் பட்டாக்கத்தியால் தாக்கினானா என்ற குறிப்பு இல்லை.
மன்னனிடம் {துரியோதனனிடம்} அர்ப்பணிப்புள்ளவனும், வலிமைமிக்கவனுமான சகுனி, விரைவாக அந்த இடத்திற்கு வந்து, அனைவரும் பார்க்கும்போதே, உமது அரச மகனைத் {துரியோதனனைத்} தனது தேரில் ஏறச் செய்தான். எதிரிகளைக் கொல்பவனான அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, மன்னனை {துரியோதனனை} வீழ்த்திய பிறகு, அசுரர்களைக் கொல்லும் வஜ்ரபாணியைப் {இந்திரனைப்} போல உமது துருப்புகளைக் கொல்லத் தொடங்கினான்.
மேலும், அந்தப் போரில் கிருதவர்மன், வலிமைமிக்கத் தேர்வீரனான பீமனைத் தன் கணைகளால் மறைத்தான். உண்மையில், சூரியனை மறைக்கும் வலிமைமிக்க மேகங்களின் திரளைப் போல, பின்னவனை {பீமனை} முழுமையாக மறைத்தான். பிறகு, எதிரிகளைத் தண்டிப்பவனான பீமசேனன், கோபத்தால் தூண்டப்பட்டுச் சிரித்துக் கொண்டே, கிருதவர்மன் மீது சில கணைகளை எய்தான். அதனால் தாக்குண்ட சத்வத குலத்தின் அந்த அதிரதன் {கிருதவர்மன்}, அனைவரையும் வலிமையில் விஞ்சும் வகையில் நடுங்காதிருந்தான். ஆனால் (அதற்குப் பதிலாக), ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல கூரிய கணைகளால் பீமனைத் துளைத்தான்.
வலிமைமிக்கப் பீமசேனன் அப்போது, கிருதவர்மனின் நான்கு குதிரைகளைக் கொன்று, பின்னவனின் {கிருதவர்மனின்} தேரோட்டியையும், அதன் பிறகு அவனது அழகிய கொடிமரத்தையும் வீழ்த்தினான். மேலும், அந்தப் பகைவீரர்களைக் கொல்பவன் (பீமன்), பல்வறு வகைகளிலான பல கணைகளால் கிருதவர்மனையும் துளைத்தான். மேனியெங்கும் துளைக்கப்பட்ட கிருதவர்மனின் ஒவ்வொரு அங்கமும் மிகக் கடுமையாகச் சிதைக்கப்பட்டதைப் போலத் தோன்றியது [4].
[4] இதே இடம் வேறொரு பதிப்பில் வேறு மாதிரியாகச் சொல்லப்பட்டுள்ளது. அது பின்வருமாறு: அனைத்து அங்கங்களும் துளைக்கப்பட்ட கிருதவர்மன், முட்களால் நிறைந்த முள்ளம்பன்றியைப் போல விளங்கினான்.
பிறகு கிருதவர்மன், உமது மகன் {துரியோதனன்} மற்றும் சல்லியன் ஆகிய இருவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரில் இருந்து விரைந்து சென்று விருஷகனின் [5] தேரில் ஏறிக் கொண்டான். பிறகு, சினத்தால் தூண்டப்பட்ட பீமசேனன், உமது துருப்புகளைப் பீடிக்கத் தொடங்கினான். தண்டத்தைக் கையில் கொண்ட யமனைப் போலக் கோபத்தின் பாதையில் சென்று, அவர்கள் {உமது துருப்பினர்} அனைவரையும் அவன் {பீமன்} கொல்லத் தொடங்கினான்" {என்றான் சஞ்சயன்}.
[5] இதே இடம் வேறொரு பதிப்பில் வேறு மாதிரியாகச் சொல்லப்பட்டுள்ளது. அது பின்வருமாறு: பிறகு குதிரைகள் கொல்லப்பட்ட கிருதவர்மன், உமது மகன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, உமது மைத்துனனான சகுனியின் தேரைக் குறித்து விரைவாக ஓடினான். இப்படியே அதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இது தவறாக இருக்கக்கூடும். ஏனெனில், சகுனியின் தேரில்தான் அப்போது துரியோதனனும் இருந்தான். இங்கே கங்குலி சொல்வதே சரியாகப் படுகிறது. விருஷகன் என்பவன் சகுனியின் சகோதரனாவான்.
ஆங்கிலத்தில் | In English |