Tuesday, February 02, 2016

பீஷ்மரை மட்டுமே எதிர்த்த பலர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 090

Many rushed against Bhishma alone! | Bhishma-Parva-Section-090 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 48)

பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் வேதனை; விதுரனின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த திருதராஷ்டிரன்; திருதராஷ்டிரனைக் கண்டித்த சஞ்சயன்; பாண்டவ வீரர்களில் பலர் பீஷ்மரையே குறியாகக் கொண்டு முன்னேறியது; மூன்று பிரிவுகளான பாண்டவப் படையில் ஒரு பிரிவு பீஷ்மரையும், மற்றொரு பிரிவு துரியோதனன் தலைமையிலான மன்னர்களையும், மேலும் ஒரு பிரிவு பிற மன்னர்களையும் எதிர்த்துச் சென்றது; பாஞ்சாலர்களை அழித்த துரோணர்; கௌரவத் துருப்புகளையும், யானைப் பிரிவுகளையும் அழித்த பீமன்; குதிரைப் படை மீது பாய்ந்த இரட்டையர்கள்; அர்ஜுனனால் கௌரவர்களுக்கு நேர்ந்த அழிவு...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, எண்ணிக்கையில் மிகுந்த என் மகன்கள், தனி ஒருவனால் {பீமனால்} கொல்லப்பட்டதைக் கண்ட பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகியோர் அந்தப் போரில் [1] என்ன செய்தார்கள்? ஓ! சஞ்சயா, நாளுக்கு நாள் என் மகன்கள் கொல்லப்பட்டே வருகிறார்கள். அனைத்துவிதங்களிலும் என் மகன்கள் அனைவரும் தோல்வி அடைகிறார்களேயன்றி வெற்றி பெறவில்லை என்பதால், ஓ! சூதா {சஞ்சயா}, தீய விதியாலே அவர்கள் முழுமையாகப் பீடிக்கப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன்.


[1] வங்க உரைகளில் இந்த வரியின் இறுதிச் சொல் சஞ்சயா என்று முடிகிறது; பம்பாய் உரையிலோ, Samyuge {போரில்} என்று இருக்கிறது. பின்னதே {பம்பாய் உரையே} உண்மையானதாகத் தெரிகிறது. ஏனெனில், முதல் வரியில் சஞ்சயா என்று சொல்லிவிட்டு இரண்டாவதிலும் அதையே திருப்பிச் சொல்வது பொருளற்றதாகும் என இங்கே விளக்குகிறார் கங்குலி.

{போரில்} பின்வாங்காத வீரர்களான துரோணர், பீஷ்மர் மற்றும் உயர் ஆன்மக் கிருபர், சோமதத்தனின் வீரமகன் {பூரிஸ்ரவஸ்}, பகதத்தன், அஸ்வத்தாமன் மற்றும் {இன்னும்} பிற துணிச்சல்மிக்க வீரர்களுக்கு [2] மத்தியில் இருக்கும் போதே, ஓ! மகனே {சஞ்சயா}, போரில் என் மகன்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால், விதியைத் தவிர வேறு எதைச் சொல்ல முடியும்? என்னாலும், பீஷ்மராலும், விதுரனாலும் முன்பே எச்சரிக்கப்பட்டாலும், பொல்லாத துரியோதனன் அந்த (எங்கள்) வார்த்தைகளைப் புரிந்து கொள்ளவில்லை.

[2] நாலாம் வரியின் இறுதிச் சொல் anivartinam {புறமுதுகிடாத} என்பதாகும். வங்க உரைகளிலோ இது sumahatmanam {மிகப்பெரிய பெருந்தன்மை} என்று சொல்லப்பட்டுள்ளது எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

எப்போதும் துரியோதனனுக்கு நன்மை செய்யும் நோக்கில், காந்தாரி (அவன் செயல்களைத் தடுத்தாலும்) இருந்தாலும், தீய புரிதல் கொண்ட அவன் {துரியோதனன்}, தன் மூடத்தனத்தில் இருந்து முன்பே விழிப்படையவில்லை [3]. அதுவே (அந்த நடத்தையே) இப்போது கனி {இந்தப் பலனைத்} தருகிறது. சினத்தால் தூண்டப்பட்ட பீமசேனன், அறிவில்லாத என் மகன்களைப் போரில் நாள்தோறும் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைக்கிறான்” என்றான் {திருதராஷ்டிரன்}.

[3] "8ன் முதல் வரியில் உள்ள இறுதிச் சொல் Vichetasa {அறியாமை} என்பதாகும். வங்காள உரைகளில் (பர்தவான் பதிப்பையும் சேர்த்து) இருப்பது Viseshatas (குறிப்பாக) என்பதாகும். வங்க உரையின் படி பார்த்தால் எந்தப் பொருளும் கிடைக்காது" என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது நன்மைக்கானதும், நீர் புரிந்து கொள்ளாததுமான விதுரரின் அந்த மிகச்சிறந்த வார்த்தைகள் இப்போது உணரப்படுகின்றன. “பகடையில் {சூதாட்டத்தில்} இருந்து உமது மகன்களைத் தடுப்பீராக” என்று விதுரர் சொன்னார். காலம் வந்த {முடிந்த} மனிதன், சரியான மருந்தை மறுப்பதைப் போல, (உமது நன்மைக்காக) உமக்கு ஆலோசனை கூறிய நலன்விரும்பிகளான {உமது} நண்பர்களின் வார்த்தைகளை நீர் கேட்கவில்லை. நெறிசார்ந்தோரால் சொல்லப்பட்ட அந்த வார்த்தைகள் இப்போது உமக்கு முன்பாக உணரப்படுகின்றன. விதுரர், துரோணர், பீஷ்மர் மற்றும் நலம்விரும்பிகளான பிறராலும் சொல்லப்பட்ட ஏற்புடைய வார்த்தைகளை மறுத்ததாலேயே, உண்மையில், இப்போது கௌரவர்கள் அழிக்கப்படுகிறார்கள். அந்த அறிவுரைகளை நீர் கேட்க மறுத்ததன் விளைவுகளே இவை [4].

[4] சஞ்சயன் சொல்வதாகக் கங்குலியில் வரும் மேற்கண்ட பத்தி முழுவதும் திருதராஷ்டிரனே சொல்வது போல வேறு ஒரு பதிப்பில் வருகிறது. அது பின்வருமாறு: மிகுந்த கோபம் கொண்ட பீமசேனன் புத்தியில்லாத என் பிள்ளைகளைப் போரில் நாள் தோறும் யமனுடைய வீட்டிற்கு அனுப்பும் காரணத்தால், விதுரனுடைய அந்த மிகச் சிறந்த வார்த்தைகள் இப்போது பலித்துவிட்டன. "பிரபுவே, சூதாட்டத்தினின்று பிள்ளையைத் தடு. பாண்டவர்களுக்குத் துரோகம் செய்யாதே" என்று அப்போது உரைக்கப்பட்ட வார்த்தையை நான் தெரிந்து கொள்ளவில்லை. அந்தந்த விஷயத்தையே உரைக்கிறவர்களும், நன்மையைத் தேடுவதில் விருப்பமுள்ளவர்களுமான சுஹ்ருத்துக்களுடைய வாக்கியத்தை, சாகப்போகிறவன் பத்தியமான ஔஷதத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்ளானோ, அவ்வாறாக முற்காலத்தில் நான் கேட்கவில்லை. நன்றாக எடுத்துரைக்கப்பட்ட அந்த வசனமானது இதோ வந்துவிட்டது. விதுரன், துரோணர், பீஷ்மர், இதத்தைத் தேடுவதில் முயற்சியுள்ள மற்றவர்கள் ஆகிய இவர்களுடைய பத்தியமான வார்த்தையை அனுஷ்டிக்காமல் கௌரவர்கள் நாசமடைகிறார்கள். சஞ்சய! அப்படிப்பட்ட இந்த விஷயம் முந்தியே சென்றுவிட்டது. ஆதலால் எவ்வாறு யுத்தம் நடந்ததோ அதை உள்ளபடியே எனக்கு உரைப்பாயாக" என்றான் திருதராஷ்டிரன்.

எனினும், நடந்தது போன்றே சரியாக நான் உரைக்கப் போவதை இப்போது கேளும் [5]. நடுப்பகல் வேளையில் அந்தப் போர் மிக மோசமானதாக, பெரிய படுகொலைகள் நிறைந்ததாக மாறியது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் விவரிக்கப் போவதைக் கேட்பீராக.

[5] நேரடிப் பதிப்பிற்கு மிக நெருக்கமாக இருப்பது, இங்கே பொதுவான வாசிப்புக்கு உகந்ததாக இல்லை என்பதால், 13ன் முதல் வரியை தான் விரிவாக்கியிருப்பதாகவும், விதுரரின் நலன் பயக்கும் ஆலோசனைகள் முதலில் நிராகரிக்கப்பட்டபோதே, இப்போது வந்திருக்கும் தீய விளைவுகள் உற்பத்தியாகிவிட்டன என்பதே இங்குப் பொருள் என்றும் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பிறகு, சினத்தால் தூண்டப்பட்ட (பாண்டவப் படையின்) துருப்புகள் அனைத்தும், தர்மனின் மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} கட்டளைக்கிணங்க, பீஷ்மரைக் கொல்ல விரும்பி அவரை எதிர்த்து விரைந்தன. தங்கள் தங்கள் படையின் துணையோடு சென்ற திருஷ்டத்யும்னன், சிகண்டி, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் பீஷ்மரை மட்டுமே எதிர்த்துச் சென்றனர்.

வலிமைமிக்கத் தேர்வீரர்களான விராடனும், துருபதனும், சோமகர்கள் அனைவருடன் கூடி அப்போரில் பீஷ்மரை மட்டுமே எதிர்த்து விரைந்தனர்.

கவசம் அணிந்திருந்த கைகேயர்கள் {கேகயர்கள்}, திருஷ்டகேது, குந்திபோஜன் ஆகியோரும் தங்கள் படைகளின் துணையோடு பீஷ்மரை மட்டுமே எதிர்த்து விரைந்தனர்.

அர்ஜுனன், திரௌபதியின் மகன்கள், பெரும் ஆற்றலைக் கொண்ட சேகிதானன் ஆகியோர் துரியோதனனின் கட்டளைக்கு உட்பட்ட மன்னர்கள் அனைவரையும் எதிர்த்துச் சென்றனர்.

வீர அபிமன்யு, வலிமைமிக்கத் தேர்வீரனான ஹிடிம்பையின் {இடும்பியின்} மகன் {கடோத்கசன்}, கோபத்தால் தூண்டப்பட்ட பீமசேனன் ஆகியோர் (பிற) கௌரவர்களை எதிர்த்து விரைந்தனர்.

(இப்படியே) பாண்டவர்கள் {பாண்டவ வீரர்கள்} மூன்று பிரிவுகளாகப் பிரிந்திருந்து, கௌரவர்களைப் {கௌரவ வீரர்களைப்} படுகொலை செய்யத் தொடங்கினர் [6]. அதுபோலவே, கௌரவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் எதிரிகளைக் கொல்லத் தொடங்கினர். தேர்வீரர்களில் முதன்மையானவரான துரோணர், கோபத்தால் தூண்டப்பட்டு, சோமகர்கள் மற்றும் சிருஞ்சயர்களை யமலோகம் அனுப்ப விரும்பி, அவர்களை எதிர்த்து விரைந்தார். கையில் வில் பிடித்த பரத்வாஜரின் மகனால் {துரோணரால்} கொல்லப்பட்ட போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துணிச்சல்மிக்கச் சிருஞ்சயர்கள் மத்தியில் உரத்த கதறல்கள் எழுந்தன. துரோணரால் தாக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான க்ஷத்திரியர்கள் அனைவரும், நோய் வேதனையில் வலிப்பு வந்தவரைப் போல நடுங்குவது தெரிந்தது. பசியால் பீடிக்கப்பட்டோரைப் போல முனகல்களும், அலறல்களும், தேம்பல்களும் களம் முழுவதும் தொடர்ந்து கேட்கப்பட்டன.

[6] வங்க உரைகளில் உள்ள Dwidhabhutais என்பது தவறானது என்றும், பம்பாய் பதிப்பில் உள்ள tridhabhutais என்பதே சரியானது என்றும் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அதைப் போலவே, இரண்டாம் யமனைப் போல இருந்த வலிமைமிக்கப் பீமசேனன், கோபத்தால் தூண்டப்பட்டு, கௌரவத் துருப்புகளுக்கு மத்தியில் பயங்கரப் படுகொலையை நிகழ்த்தினான். அந்தப் பயங்கரப் போரில், வீரர்கள் ஒருவரையொருவர் கொன்றதன் விளைவாகக் குருதியையே அலையாகவும், வெள்ளமாகவும் கொண்ட ஒரு பயங்கர ஆறு {அங்கே} பாயத் தொடங்கியது [7]. குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையிலான அந்தப் போர் கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் ஆகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யமனின் அரசாங்கத்தைப் பெருகச் செய்தது.

[7] வங்க உரைகளில் முதல் வரியில் உள்ள tava {உங்கள்} என்ற சொல் தவறானது என்றும் அது (பம்பாய் உரைகளில் உள்ளது போல) tatra {அங்கே} என்றே இருக்க வேண்டும் என்றும் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பிறகு அந்தப் போரில் கோபத்தால் தூண்டப்பட்ட பீமன், (கௌரவர்களின்) யானைப் பிரிவின் மேல் மூர்க்கத்தனமாகப் பாய்ந்து, {அவற்றில்} பலவற்றைக் காலனின் உலகங்களுக்கு அனுப்பத் தொடங்கினான். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமனின் கணைகளால் தாக்கப்பட்ட அந்தப் பெரிய விலங்குகளில் சில கீழே விழுந்தன, சில செயலிழந்தன, சில (வலியால்) அலறின, மேலும் சிலவோ திக்குகள் அனைத்திலும் ஓடின. துதிக்கை வெட்டப்பட்டு, அங்கங்கள் சிதைக்கப்பட்ட பெரும் யானைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நாரைகளை {அன்றில் பறவைகளைப்} போலக் கதறிக் கொண்டு பூமியில் விழத் தொடங்கின.

நகுலனும், சகாதேவனும் (கௌரவக்) குதிரைப்படையின் மீது பாய்ந்தனர். தலையில் தங்க மாலை அணிந்தவையும், கழுத்துகளிலும், மார்பிலும் தங்க ஆபரணங்களால் அலங்கரிப்பட்டவையுமான பல குதிரைகள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லப்படுவதாகத் தெரிந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பூமி, வீழ்ந்த குதிரைகளால் பரவி கிடந்தது. சில {குதிரைகள்} நாக்கிழந்திருந்தன; சில மூச்சுவிடச் சிரமப்பட்டன; சில தீனமான முனகலை வெளியிட்டன; மேலும் சில உயிரற்றுக் கிடந்தன. ஓ! மனிதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, பல்வேறு வகைகளிலான இத்தகு குதிரைகளுடன் கூடிய பூமியானது மிக அழகானதாகத் தெரிந்தது.

அதே வேளையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனால் அந்தப் போரில் கொல்லப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான மன்னர்களால் அவள் {பூமாதேவி} கடுமையான பிரகாசத்துடனும் தெரிந்தாள். உடைந்து போன தேர்கள், அறுபட்ட கொடிகள், கிழிந்த சாமரங்கள் மற்றும் விசிறிகள், துண்டுகளாக நொறுங்கிய வலிமைமிக்க ஆயுதங்கள், தங்க மாலைகள் மற்றும் ஆரங்கள், காது குண்டலங்களுடன் கூடிய தலைகள், (தலையில் இருந்து) தளர்ந்து விழுந்த தலைப்பாகைகள், கொடிமரங்கள், தேர்களின் அழகிய அடிமரங்கள், கட்டுக்கயிறுகள், கடிவாளங்கள் ஆகியவற்றால் பரவிக்கிடந்த அந்தப் பூமியானவள், வசந்த காலத்தில் மலர்களால் இறைக்கப்பட்டதைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தாள்.

இப்படியே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டவர்களான சந்தனுவின் மகன் பீஷ்மர், தேர்வீரர்களில் முதன்மையான துரோணர், அஸ்வத்தாமன், கிருபர், கிருதவர்மன் ஆகியோரால் பாண்டவப் படை அழிவைச் சந்தித்தது.

அதைப் போலவே உமது படையும், சினத்தால் தூண்டப்பட்ட அடுத்த {எதிர்} தரப்பான பாண்டவ வீரர்களால் அதே போன்ற அழிவைச் சந்தித்தது” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English