Birth and death of Iravan! | Bhishma-Parva-Section-091 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 49)
பதிவின் சுருக்கம் : குதிரைகளுடன் விரைந்து வந்த அரவான்; அரவான் பிறப்பின் மர்மம்; விதவையான உலூபியை மனைவியாக ஏற்ற அர்ஜுனன்; அரவான் பிறப்பு; இந்திரலோகத்தில் இருந்த அர்ஜுனனுடன் அரவானின் சந்திப்பு; தக்க சமயத்தில் உதவும்படி கேட்ட அர்ஜுனனும், உறுதியளித்த அரவானும்; கௌரவப் படைக்கு அரவான் ஏற்படுத்திய அழிவு; அரவானை எதிர்த்த சகுனியின் தம்பிகள்; தன்னை எதிர்த்து வந்த சகுனியின் தம்பிகள் அறுவரில் ஒருவனைத் தவிர மற்ற ஐவரைக் கொன்ற அரவான்; அரவானை எதிர்த்து அலம்புசனை ஏவிய துரியோதனன்; அலம்புசனும், அரவானும் வெளிப்படுத்திய மாயைகள்; அரவானைக் கொன்ற அலம்புசன்; துரோணரின் ஆற்றல்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பெரும் வீரர்களின் படுகொலைகள் நிறைந்ததான அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுபலனின் புகழ்வாய்ந்த {செல்வப்பெருக்குள்ள} மகன் சகுனி, பாண்டவர்களை எதிர்த்து விரைந்தான்.
பகை வீரர்களைக் கொல்பவனான சாத்வத குலத்தின் ஹிருதிகன் மகனும் {கிருதவர்மனும்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டவப் படையணியினரை எதிர்த்துப் போரிட விரைந்தான்.
நதிகளின் நாட்டில் பிறந்தவையும், காம்போஜ இனத்தில் சிறந்தவையும், ஆரட்டா, மஹீ, சிந்து மற்றும் வனாயுவை {நாடுகளைச்} சேர்ந்தவையும், வெண்ணிறம் கொண்டவையும், இறுதியாக மலை நாடுகளைச் சேர்ந்தவையும் எனப் பெரும் எண்ணிக்கையிலான குதிரைகளைக் கொண்டிருந்தவர்களும், புன்னகைத்துக் கொண்டிருந்தவர்களுமான (உமது தரப்பின்) பல வீரர்கள், (பாண்டவப் படையைச்) சூழ்ந்து கொண்டனர் [1]. அவ்வாறே, காற்றைப் போன்ற பெரும் வேகத்தைக் கொண்டவையும், தித்திரி இனத்தைச் சேர்ந்தவையுமான குதிரைகளால் (இன்னும் பிறர் அந்தப் {பாண்டவப்} படையைச் சூழ்ந்து கொண்டனர்}.
[1] Nadijas என்று இங்கே குறிப்பிடப்படும் குதிரைகள் “நதிகளில் பிறந்தவை” என்ற பொருள் கொண்டவை என்றும், அது பஞ்சாப் அல்லது பல ஆறுகளால் நீரூட்டப்படும் வேறு ஏதாவதொரு நாடாகவும் இருக்கலாம் என்றும் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறு பதிப்பு ஒன்றில் இக்குதிரைகள் அரவானுக்குச் சொந்தமானவை என்று வருகிறது. அது குறித்து அடுத்த அடிக்குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.
மேலும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கவசத்துடன் கூடியவையும், தங்கள் வகையில் முதன்மையானவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையுமான பல குதிரைகளைக் கொண்டிருந்தவனும், எதிரிகளைக் கொல்பவனுமான வலிமைமிக்க அர்ஜுனன் மகன் (அஃதாவது இராவான் {அரவான்}), அந்தப் (கௌரவப்) படையை அணுகினான் [2]. அழகானவனும், இராவான் {அரவான்} என்ற பெயரைக் கொண்டவனுமான அந்த அர்ஜுனனின் வீர மகன் {அரவான்}, புத்திசாலியான பார்த்தனால் {அர்ஜுனனால்}, நாகர்களின் மன்னனுடைய மகளிடம் {உலூபியிடம்} பெறப்பட்டவனாவான். கருடனால் அவளது கணவன் கொல்லப்பட்டதும், ஆதரவற்றவளாகவும், மகிழ்ச்சியற்ற ஆன்மா கொண்டவளாகவும் அவள் {உலூபி} ஆனாள். குழந்தையற்ற அவளை {உலூபியை}, உயர் ஆன்ம {நாக மன்னன்} ஐராவதன் அவனுக்கு (அர்ஜுனனுக்கு) அளித்தான். ஆசையின் {காமத்தின்} ஆதிக்கத்தில் தன்னிடம் வந்த அவளைப் பார்த்தன் {அர்ஜுனன்} தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான். இப்படியே அந்த அர்ஜுனன் மகன் {இராவான்}, வேறொருவன் மனைவியிடத்தில் பெறப்பட்டான் [3].
[2] அரவான் பற்றிய இந்தக் குறிப்பு வேறொரு பதிப்பில் வேறொரு மாதிரியாகச் சொல்லப்படுகிறது. அது பின்வருமாறு: “பிறகு அர்ஜுனனின் மகனும், பலசாலியும், பெரும் ஊக்கம் கொண்டவனும், எதிரிகளை எரிப்பவனும், காந்தியுள்ளவனும், சிறந்த வீரத்தைக் கொண்டவனும், புத்திசாலியான பார்த்தனால் நாகமன்னனின் மகளிடத்தில் உண்டானவனுமான அரவான், காம்போஜ தேசத்தில் தோன்றிய குதிரைகளுள் சிறந்தவைகளும், நதீஜம், மஹீஜம் என்பவைகளும், ஆரட்டா, சிந்து, வனாயு ஆகிய நாடுகளில் பிறந்தவைகளும், வெண்ணிறமுள்ளவைகளும், மலைகளில் வசிக்கின்றவைகளுமான குதிரைகளுடைய பெரும்படைகளாலும், தித்திரி நாட்டில் தோன்றியவைகளும், பொன்னால் அலங்கரிக்கப்பட்டவைகளும், நல்ல கவசமுள்ளவைகளும் நன்றாகப் பழக்கப்பட்டவைகளும், காற்று போன்ற வேகமுள்ளவைகளும், சிறந்தவைகளுமான இன்னும் மற்ற பல குதிரைகளாலும் சூழப்பட்டு எதிரிப் படையை எதிர்த்தான் {அரவான்}. கருடனால் தன் கணவன் கொல்லப்பட்ட நேரத்தில் பரிதாபத்திற்குரியவளும், பேதைமையுள்ளவளும், மகனில்லாதவளுமாக இருந்த உலூபியை, உயர் ஆன்மா கொண்ட ஐராவத நாகனாலே அர்ஜுனனுக்குக் கொடுக்கப்பட்டாள். மன்மதனுக்கு உடன்பட்டவளான அவளை அர்ஜுனன் தன் மனைவியாகக் கைக்கொண்டான். இவ்வாறு இந்த அர்ஜுனின் மகன் இராவான் பிறன் மனைவியிடத்தில் {பரக்ஷேத்திரத்தில்} பெறப்பட்டான்” என்று இருக்கிறது. அர்ஜுனன் உலூபியை அடைந்த விதம் ஆதிபர்வம் பகுதி 216ல் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அதில் உலூபி ஒரு விதவை என்பது சொல்லப்படவில்லை. அஃது இங்கேதான் சொல்லப்படுகிறது.[3] “பிறருக்குச் சொந்தமான மண்ணில்” என்பது இங்கே பொருள் என்றும், மூலத்தில் parakshetre {பரக்ஷேத்திரே} என்று இருப்பதாகவும் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பார்த்தன் {அர்ஜுனன்} மீது வெறுப்பைக் கொண்ட தனது பொல்லாத சிற்றப்பனால் {அஸ்வசேனனால்} கைவிடப்பட்ட அவன் {அரவான்}, தனது தாயால் {உலூபியால்} பாதுகாக்கப்பட்டு நாகலோகத்தில் வளர்ந்தான். அழகனாகவும், பெரும் பலம் கொண்டவனாகவும், பல்வேறு திறமைகள் கொண்டவனாகவும், கலங்கடிக்கப்பட இயலாதவனாகவும் அவன் {அரவான்} இருந்தான்.
அர்ஜுனன் இந்திரலோகத்திற்குச் சென்றிருக்கிறான் எனக் கேள்விப்பட்ட அவன் {அரவான்}, விரைவாக அங்கே சென்றான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், கலங்கடிக்கப்பட இயலாத ஆற்றலைக் கொண்டவனுமான இராவான் {அரவான்}, தன் தந்தையை {அர்ஜுனனை} அணுகி, முறையாக அவனை வணங்கி, கூப்பிய கரங்களுடன் அவனின் {அர்ஜுனனின்} முன்னிலையில் நின்றான். “நான் இராவான் {அரவான்}. நீர் அருளப்பட்டிருப்பீராக, ஓ! தலைவரே {அர்ஜுனரே}, நான் உமது மகனாவேன்” என்று உயர் ஆன்ம அர்ஜுனனிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். தன் தாயை {உலூபியை} அர்ஜுனன் சந்தித்தது தொடர்பான நிகழ்வுகள் அனைத்தையும் பின்னவனுக்கு {அர்ஜுனனுக்கு} அவன் {அரவான்} நினைவூட்டினான்.
அதன் பேரில், அந்த நிகழ்வுகள் அனைத்தையும், அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அவை நடந்தவாறே நினைவுகூர்ந்தான். தன்னைப் போன்றே திறமைசாலியாக இருந்த தனது மகனை அணைத்துக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, அந்த இந்திரலோகத்தில் மகிழ்ச்சியால் நிறைந்தான். பிறகு, தேவலோகத்தில் இருந்த அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட இராவான் {அரவான்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனால் தன் சொந்த காரியத்திற்காக “போர் நடக்கும்போது, நீ உதவ வேண்டும்” என்று (இந்த வார்த்தைகளில்) மகிழ்ச்சியுடன் கட்டளையிடப்பட்டான். “சரி {அப்படியே ஆகட்டும்}” என்று சொன்ன அவன் {அரவான்} அங்கிருந்து சென்றான் [4].
[4] இந்த இடத்தில் வேறொரு பதிப்பில் இன்னும் அதிகமாகச் சொல்லப்பட்டுள்ளது. அது பின்வருமாறு: “வலிமைமிக்க அந்த அரவான் தேவலோகத்தில் அருஜுனனால் தன்னுடைய காரியத்தின் நிமித்தமாக அப்போது அன்புடன் கட்டளையிடப்பட்டான். மனிதர்களில் சிறந்தவனும், புலிக்குச் சமமான ஆற்றல் கொண்டவனுமான அரவானும் அர்ஜுனனை நோக்கி, “மாசற்றவரே! நான் இருக்கிறேன். நான் உமக்கு அடிமையாகவும், மகனாகவுமிருக்கிறேன். நீர் எல்லா விதத்தாலும் எனக்குக் கட்டளையிடலாம். எந்த விருப்பத்தை நான் உமக்கு நிறைவேற்ற வேண்டும்? நீர் எதை விரும்புகிறீர்?” என்று அப்போது கேட்டான். இந்திரனின் மகனான அர்ஜுனன் தன் மகனான அரவானை அன்புடன் கட்டிக் கொண்டு அவனைநோக்கி, “(பகைவர்களுடைய) கர்வத்தையழிப்பவனே! (என் காரியங்களை) மகிழ்ச்சியுடன் செய்வாயாக; (என்னிடம்) அன்போடிருப்பாயாக. போர் நேரும்போது நீ எங்களுக்கு உதவி செய்வாயாக” என்று மறுமொழி கூறினான். அரவானும் “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி போர்க் காலத்தில் இங்கு வந்தான்” என்று இருக்கிறது.
பெரும் வேகமும், அழகிய நிறமும் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான குதிரைகளுடன் கூடிய அவன் {அரவான்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இப்போது இந்தப் போர் நேரத்தில் வந்திருக்கிறான். தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், பல்வேறு நிறங்களிலானவையும், பெரும் வேகம் கொண்டவையுமான அந்தக் குதிரைகள், பெருங்கடலில் உள்ள அன்னங்களை {அன்னப்பறவைகளைப்} போலத் திடீரெனக் களத்தில் ஓடின {துள்ளிக் குதித்தன}. உமது குதிரைகளின் மேல் பெரும் வேகத்துடன் பாய்ந்த அவை {அக்குதிரைகள்}, மார்போடு மார்பாகவும், மூக்கோடு மூக்காகவும் மோதின. (உமது குதிரைகளை எதிர்த்து) மோதிய மூர்க்கத்தனத்தால் பீடிக்கப்பட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திடீரென அவை பூமியில் விழுந்தன.
அந்தக் குதிரைகளும், உமது குதிரைகளும் மோதிக் கொண்டதன் விளைவாக, கருடனின் திடீர்த்தாக்குதலின்போது கேட்கப்படும் பெரும் ஒலிகள் அப்போது கேட்கப்பட்டன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் குதிரைகளைச் செலுத்தியவர்கள் இப்படி அந்தப் போரில் ஒருவரையொருவர் எதிர்த்து மோதி, ஒருவரையொருவர் கடுமையாகக் கொல்லத் தொடங்கினர். கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்த அந்தப் பொது மோதலில், (போரின் அழுத்தத்தில் இருந்து தப்பித்த) இருதரப்பு குதிரைகளும், களமெங்கும் முரட்டுத்தனமாக ஓடிக்கொண்டிருந்தன. ஒருவர் கணைகளால் மற்றவர் எனப் பலவீனமடைந்த துணிச்சல்மிக்க {குதிரை} வீரர்கள், தங்களுக்குக் கீழ் உள்ள குதிரைகள் கொல்லப்பட்டும், முயற்சியால் களைத்துப் போயும், ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு மாண்டு போனார்கள்.
பிறகு அந்தக் குதிரைப் படைப்பிரிவுகள் குறைந்து, எஞ்சியவை மட்டுமே உயிர் பிழைத்த போது, பெரும் அறிவைக் கொண்ட சுபலன் மகனுடைய {சகுனியின்} தம்பிகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (கௌரவப்படையின் வியூகத்தில் இருந்து) வெளிப்பட்டு, வேகம் மற்றும் வலுவான மோதலில் புயலுக்கு ஒப்பானவையும், நன்கு பயிற்சி கொடுக்கப்பட்டவையும், முதிர்ந்ததாகவோ, மிக இளமையாகவோ இல்லாதவையுமான அற்புதமான குதிரைகளில் ஏறிக் களத்தின் முன்னணிக்கு வந்தனர் [5]. பெரும் பலம் படைத்தவர்களும், சகுனியாலும், பெரும் வீரமிக்கத் தங்கள் படையாலும் உதவப்பட்டவர்களும், கவசமணிந்தவர்களும், போரில் நிபுணர்களும், கடுமையான முகத்தோற்றம் கொண்டவர்களும், மிகப்பெரும் வலிமை கொண்டவர்களுமான கயன் {கஜன்}, கவக்ஷன் {கவரக்ஷன்}, விருஷபன் {விருஷகன்}, சர்மவான், ஆர்ஜபன் {ஆர்ஜயன்}, சுகன் என்ற அந்த ஆறு சகோதரர்களும், அந்த வலிமைமிக்க (கௌரவ) வியூகத்தை உடைத்துக் கொண்டு வெளிப்பட்டனர்.
[5] Vayuvega-samsparsam என்பது, உண்மையில் “(அதன் முட்டல் மற்றும் மோதலில் தொடர்புடைய) காற்றின் சக்தியை ஒத்ததாகும்” என்பதே ஆகும். எனவே, இதன் பொருளானது, “அந்தக் குதிரைகள், புயலின் மூர்க்கத்துடன் பகையணியினரை எதிர்த்து மோதின” என்பதாகும் என இங்கே விளக்குகிறார் கங்குலி.
(பாண்டவர்களின்) வெல்லப்பட முடியாத குதிரைப்படையைப் பிளந்தவர்களும், முறியடிக்கப்படக் கடினமானவர்களும், பெரும் படையின் துணை கொண்டவர்களுமான அந்தக் காந்தார வீரர்கள் {சகுனியின் தம்பிகள்}, சொர்க்கத்தை விரும்பி, வெற்றிக்காக ஏங்கி, மகிழ்ச்சியில் நிறைந்தபடியே அதற்குள் {பாண்டவர்களின் குதிரைப்படைக்குள்} ஊடுருவினர்.
மகிழ்ச்சி நிறைந்தவர்களாக இருக்கும் அவர்களைக் கண்ட வீர இராவான் {அரவான்}, பல்வேறு விதமான ஆபரணங்கள் மற்றும் ஆயுதங்களைத் தரித்திருந்த தனது வீரர்களிடம், “எதன் விளைவாக இந்தத் திருதராஷ்டிர வீரர்களின் ஆயுதங்கள் மற்றும் விலங்குகள் அழியுமோ, அந்த மேலான திட்டத்தை மேற்கொள்வீராக.” என்றான். “சரி {அப்படியே ஆகட்டும்}” என்று சொன்ன இராவானின் {அரவானின்} அந்த வீரர்கள் அனைவரும், வலிமைமிக்கவர்களும், வெல்லப்பட முடியாதவர்களுமான தார்தராஷ்டிரப் படைவீரர்களைக் கொல்லத் தொடங்கினர்.
இராவானின் {அரவானின்} படைப்பிரிவால் தங்கள் வீரர்கள் தூக்கி வீசப்படுவதைக் {கொல்லப்படுவதைக்} கண்ட அந்தச் சுபலனின் மகன்கள் அனைவரும், அதைப் பொறுக்க இயலாமல், இராவனை நோக்கி விரைந்து அனைத்துப் புறங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். இராவானைப் பின்தொடர்பவர்களை வேல்களால் தாக்க {தங்களைப் பின்தொடர்பவர்களுக்குக்} கட்டளையிட்ட அந்த வீரர்கள் {சகுனியின் தம்பிகள்}, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியபடி களத்தில் திரிந்தார்கள்.
அந்த உயர் ஆன்ம வீரர்களின் வேல்களால் துளைக்கப்பட்ட இராவான் {அரவான்}, வேணுகத்தால் தாக்கப்பட்ட யானையைப் போலத் (தன் காயங்களில் இருந்து) ஒழுகும் இரத்தத்தால் நனைந்தான். மார்பு, முதுகு, விலாப்பகுதிகள் ஆகியவற்றில் ஆழமான காயத்தை அடைந்து, தனியாளாகப் பலரோடு மோதினாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவன் {அரவான்}, தனது (இயல்பான) உறுதியில் இருந்து நழுவவில்லை.
உண்மையில், சினத்தால் தூண்டப்பட்ட இராவான் {அரவான்}, அந்தப் போரில் கூர்மையான கணைகளால் அந்த எதிரிகளைத் துளைத்து, அவர்கள் அனைவரையும் உணர்விழக்கச் செய்தான். மேலும் அந்த எதிரிகளைக் கொல்பவன் {அரவான்}, தன் உடலில் இருந்த வேல்களைப் பிடுங்கி, அவற்றைக் கொண்டே போரில் சுபலன் மகன்களைத் தாக்கினான். பிறகு, பளபளக்கும் தன் வாளை உறையில் இருந்து உருவி கொண்டு, ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, சுபலன் மகன்களை அம்மோதலில் கொல்ல விரும்பியவனாகக் காலாளாகவே விரைந்தான்.
எனினும், தங்கள் உணர்வுகள் மீண்ட சுபலனின் மகன்கள் கோபத்தால் தூண்டப்பட்டு மீண்டும் இராவானை {அரவானை} நோக்கி விரைந்தனர் {எதிர்த்தனர்}. இருப்பினும், தன் பலத்தில் செருக்குடையவனான இராவான் {அரவான்}, தன் கரவேகத்தை வெளிப்படுத்தியபடி, தன் வாளுடன் அவர்கள் அனைவரையும் நோக்கிச் சென்றான். அவனைப் {அரவானைப்} போலவே பெரும் சுறுசுறுப்புடன் அந்தச் சுபலனின் மகன்கள், வேகமான தங்கள் குதிரைகளில் சென்றாலும், (காலாளாக நின்ற) அந்தவீரனைத் {அரவானைத்} தாக்கும் வாய்ப்பை அவர்கள் காணவில்லை. அப்போது காலாளாக நின்ற அவனை {அரவானைக்} கண்ட அவனது எதிரிகள், நெருக்கமாக அவனைச் சூழ்ந்து கொண்டு, அவனைச் சிறைபிடிக்க விரும்பினர்.
எதிரிகளை நொறுக்குபவனான அவன் {அரவான்} பிறகு, தன் அருகிலே நெருங்கிய அவர்களைக் கண்டு, தன் வாளால் அவர்களது வலது மற்றும் இடது கரங்களை வெட்டி, அவர்களது மற்ற அங்கங்களையும் சிதைத்தான். அப்போது, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அவர்களது கரங்களும், அவர்களது ஆயுதங்களும், கீழே பூமியில் விழுந்தன. மேலும் அங்கங்கள் சிதைந்த அவர்களும் உயிரிழந்து கீழே களத்தில் விழுந்தனர். தன் மேனியில் பல காயங்களுடன் கூடிய விருஷபன் {விருஷகன்} மட்டுமே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வீரர்களை அழித்த அந்தப் பயங்கரப் போரில் இருந்து (உயிருடன்) தப்பித்தான்.
போர்க்களத்தில் கிடந்த அவர்களைச் {சகுனியின் தம்பிகளைக்} கண்ட உமது மகன் துரியோதனன், கோபத்தால் தூண்டப்பட்டு, பயங்கர முகத்தோற்றம் கொண்ட ராட்சசனும், மாயை அறிந்த பெரும் வில்லாளியும், எதிரிகளைத் தண்டிப்பவனும், பகன் கொல்லப்பட்டதன் விளைவால் பீமசேனனிடம் பகையுணர்வு கொண்டவனுமான ரிஷ்யசிருங்கனின் மகனிடம் [6] {ஆர்ஸ்யசிருங்கியிடம்} (அலம்புசனிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! வீரா {அலம்புசா}, வலிமைமிக்கவனும், மாயை அறிந்தவனுமான பல்குனன் மகன் {அர்ஜுனன் மகனான அரவான்}, எப்படி எனது படைகளை அழித்து, எனக்குக் கடும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறான் என்பதைப் பார். நீயும், ஓ! ஐயா {அலம்புசா}, விரும்பிய எந்த இடத்திற்கும் செல்ல இயன்றவனாகவும், மாயசக்திகள் கொண்ட ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கிறாய். பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} நீ பகைமையை விரும்புபவனாகவும் இருக்கிறாய். எனவே, இவனை {அரவானை} நீ போரில் கொல்வாயாக” என்றான் {துரியோதனன்}. “சரி {அப்படியே ஆகட்டும்}” என்று சொன்ன அந்தப் பயங்கர முகம் கொண்ட ராட்சசன் {அலம்புசன்}, வலிமைமிக்கவனும், இளமையானவனுமான அர்ஜுனன் மகன் {அரவான்} இருந்த இடத்திற்குச் சிங்க முழக்கத்துடன் சென்றான்.
[6] இங்கு குறிப்பிடப்படுவது இராமாயணத்தில் தசரதனுக்குப் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து வைத்ததாகச் சொல்லப்படும் பெரும் முனிவர் ரிஷ்யசிருங்கராக இருக்காது. இது ரிஷ்யசிருங்கன் என்ற ராட்சசனாக இருத்தல் வேண்டும். வேறு ஒரு பதிப்பில் அலம்புசனை ரிஷ்யசிருங்கன் மகன் என்று குறிப்பிடாமல் ஆர்ஸ்யசிருங்கி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவன் {அலம்புசன்}, போரில் நிபுணர்களும், பளபளக்கும் வேல்களைக் கொண்டு போரிடுபவர்களும், {விலங்குகள் அல்லது வாகனங்களில்} நல்லேற்றம் கொண்டவர்களும், தாக்குவதில் திறன்மிக்கவர்களுமானத் தன் படைப்பிரிவின் வீரர்களால் ஆதரிக்கப்பட்டிருந்தான். வலிமைமிக்க இராவத்தைப் {அரவானைப்} போரில் கொல்ல விரும்பிய அவன் {அலம்புசன்}, (கௌரவர்களிடம்) எஞ்சியிருந்த அந்தச் சிறந்த குதிரைப்படைப் பிரிவுடன் சென்றான். சினத்தால் தூண்டப்பட்டு, அந்த ராட்சசனைக் கொல்ல விரும்பி விரைந்து சென்றவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்த வீர இராவத் {அரவான்}, அவனை {அலம்புசனை} எதிர்க்கத் தொடங்கினான்.
எதிர்த்து வரும் அவனை {அரவானைக்} கண்ட அந்த வலிமைமிக்க ராட்சசன் {அலம்புசன்}, தன் மாய சக்திகளை வெளிக்காட்டும்படி, விரைவாகத் தன்னை அமைத்துக் கொண்டான் {மாயையை வெளிப்படுத்த தொடங்கினான்}. பிறகு அந்த ராட்சசன் {அலம்புசன்}, ஈட்டிகள் மற்றும் கோடரிகளைத் தரித்தவர்களான பயங்கர ராட்சசர்களால் செலுத்தப்பட்ட மாயக் குதிரைகள் பலவற்றை உண்டாக்கினான். எனினும், சினத்துடன் எதிர்த்தவர்களும், நன்றாகத் தாக்கும் திறமை கொண்டவர்களுமான அந்த இரண்டாயிரம் {2000} பேரும் (இராவானின் {அரவானின்} படைகளுடன் மோதலுக்காகப் பாய்ந்த போது) விரைவாக யமலோகம் அனுப்பப்பட்டனர் [7]. இருவரின் படைகளும் அழிந்ததும், போரில் வெல்லப்பட இயலாதவர்களான அவ்விருவரும், விருத்திரனையும், வாசவனையும் {இந்திரனையும்} போலத் தங்களுக்குள் மோதிக் கொண்டனர்.
[7] அந்த குதிரைகளும், ராட்சசர்களும் மாயத்தினால் ஆனவர்கள். உண்மையானவர்கள் அல்ல. அப்படி இருக்கும் போது அவர்கள் எப்படி யமனுலகு செல்வார்கள்? மாயை விலகியது என்பதையே கங்குலி யமலோகம் செல்வது என்று சொல்வதாகவும் இங்கே நாம் எடுத்துக் கொள்ளலாம்.
போரில் வெல்லக் கடினமான அந்த ராட்சசன் {அலம்புசன்}, தன்னை நோக்கி வருவதைக் கண்ட வலிமைமிக்க இராவத் {அரவான்}, சினத்தால் தூண்டப்பட்டு, அவனது தாக்குதலைத் தடுக்கத் தொடங்கினான். அந்த ராட்சசன் {அலம்புசன்} தன்னருகே வந்ததும், தன் வாளால் வேகமாக அவனது வில்லை அறுத்த இராவத் {அரவான்}, அவனது கணைகள் ஒவ்வொன்றையும் ஐந்து துண்டுகளாக வெட்டினான். தன் வில் வெட்டப்பட்டதைக் கண்ட அந்த ராட்சசன் {அலம்புசன்}, கோபத்தில் இருந்த இராவத்தை {அரவானைத்} தன் மாயையால் குழப்பியபடி விரைவாக ஆகாயத்தில் எழுந்தான்.
உடலின் முக்கிய அங்கங்களைப் பற்றிய அறிவுடையவனும், விரும்பிய எவ்வுருவத்தையும் ஏற்க வல்லவனும், அணுகப்பட முடியாதவனுமான இராவத்தும் {அரவானும்}, அந்த ராட்சசனை {அலம்புசனைத்} தன் மாயையால் குழப்பி வானத்தில் எழுந்து, பின்னவனின் {அலம்புசனின்} அங்கங்களை வெட்டத் தொடங்கினான். இப்படியே அந்த ராட்சசனின் அங்கங்கள் பல துண்டுகளாக வெட்டப்பட்டன [8].
[8] நேர்மையாகச் சொல்வதென்றால், தொடர்ச்சியாக இரண்டு பக்கங்களுக்கு, இந்த ராட்சசன் {அலம்புசன்} {இயல்புக்கு மீறியவனாகப்} பெரிதாகக் காட்டி நிறுத்தப்படுகிறான் என இங்கே கங்குலி விளக்குகிறார்.
எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது அந்த ராட்சசன் {அலம்புசன்} இளமையான தோற்றத்துடன் மீண்டும் பிறந்தான். அவர்களுக்கு மாயை இயல்பானதாக இருந்தது. மேலும் அவர்களது வயதும், உருவமும் அவ்விருவரின் விருப்பத்தைப் பொறுத்தே இருந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துண்டுகளாக வெட்டப்பட்ட அந்த ராட்சசனின் {அலம்புசனின்} அங்கங்கள் அழகாகக் காட்சி அளித்தன. சினத்தால் தூண்டப்பட்ட இராவத் {அரவான்}, தன் கூரிய கோடரியால் வலிமைமிக்க அந்த ராட்சசனை {அலம்புசனை} மீண்டும் மீண்டும் வெட்டினான்.
வலிமைமிக்க இராவத்தால் {அரவானால்} இப்படி ஒரு மரத்தைப் போன்று துண்டுகளாக வெட்டப்பட்ட அந்தத் துணிச்சல்மிக்க ராட்சசன் {அலம்புசன்} கடுமையாக முழங்கினான். அவனது அந்த முழக்கங்கள் {மற்றவர்களை} செவிடாக்குபவையாக இருந்தன. கோடரியால் சிதைக்கப்பட்ட அந்த ராட்சசன் {அலம்புசன்}, இரத்தத்தை வெள்ளமாகச் சிந்தினான். பிறகு, ரிஷ்யசிருங்கனின் அந்த வலிமைமிக்க மகன் (அலம்புசன்), சக்தியால் தன் எதிரி சுடர்விடுவதைக் கண்டு, தணியாத கோபம் கொண்டு அம்மோதலில் தன் ஆற்றலைப் பயன்படுத்தினான்.
கடுமையான மிகப் பெரிய வடிவை ஏற்ற அவன் {அலம்புசன்}, அர்ஜுனனின் வீர மகனான புகழ்பெற்ற இராவத்தைப் {அரவானைப்} பிடிக்கக் கடுமையாக முயன்றான். அங்கிருந்த போராளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, போரின் முன்னணியில் அந்தப் பொல்லாத ராட்சசனால் உண்டாக்கப்பட்ட மாயையைக் கண்டவனும் மாயையை அறிந்தவனுமான இராவத் {அரவான்}, கோபத்தால் தூண்டப்பட்டு, அந்த மாயையைத் தணிக்கும் வகையில் தானும் மாயையைக் கைக்கொண்டான் {பதிலுக்கு மாயையின் மூலம் போர் புரிந்தான்}.
போரில் இருந்து எப்போதும் பின்வாங்காதவனான அந்த வீரன் {அரவான்} கோபத்தால் தூண்டப்பட்ட போது, அவனது தாய்வழியைச் சேர்ந்தவனான நாகன் {?} ஒருவன் அவனிடம் {அரவானிடம்} வந்தான். அந்தப் போரில் அனைத்துப் புறங்களிலும் நாகர்களால் சூழப்பட்ட அந்த நாகன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனந்தனைப் போன்ற வலிமைமிக்கப் பெரும் வடிவை ஏற்றான் [9]. பிறகு, பல்வேறு வகைகளிலான நாகர்களால் அவன் அந்த ராட்சசனை மறைத்தான். அந்த நாகர்களால் மறைக்கப்பட்ட போது, ராட்சசர்களில் காளையான அவன் {அலம்புசன்}, ஒருக்கணம் சிந்தித்து, கருட வடிவை ஏற்று, அந்தப் பாம்புகளை விழுங்கினான்.
[9] வேறொரு பதிப்பில் இந்தப் பகுதி சற்றே மாறுபட்டிருக்கிறது. அது பின்வருமாறு: “கோபம் நிறைந்தவனும், போரில் திரும்பாதவனுமான அந்த அரவானுடைய தாயின் வம்சம் அவனை வந்தடைந்தது. அந்த இராவான் பல நாகங்களால் யுத்தத்தில் சூழப்பட்டு, சிறந்த உடல் கொண்ட நாக மன்னன் அனந்தனைப் போல மிகப் பெரிய வடிவை எடுத்தான். பலவிதமான நாகங்களால் அவன் அந்த ராட்சசனை மூடினான். பாம்புகளால் மூடப்பட்ட அந்த ராட்சசனோ {அலம்புசனோ} தியானம் செய்து கருடனின் வடிவை ஏற்று அந்தப் பாம்புகளை விழுங்கினான்” என்றிருக்கிறது. தனியான நாகன் குறித்த குறிப்பேதும் அதில் இல்லை.
தன் தாயின் வழி வந்த அந்த நாகன் மாயையின் மூலம் விழுங்கப்பட்ட போது, இராவான் {அரவான்} குழப்பமடைந்தான் {திகைத்து நின்றான்}. {அரவான்} அந்நிலையில் இருந்த போதே, அந்த ராட்சசன் {அலம்புசன்} தன் வாளால் அவனைக் {அரவானைக்} கொன்றான். காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதும், கிரீடத்துடன் கூடியதும், தாமரையையோ, சந்திரனையோ போன்று அழகானதுமான இராவத்தின் {அரவானின்} தலையை அலம்புசன் பூமியில் வீழ்த்தினான்.
அர்ஜுனனின் அந்த வீர மகன் {அரவான்}, அந்த ராட்சசனால் {அலம்புசனால்} இப்படிக் கொல்லப்பட்டபோது, மன்னர்கள் அனைவருடன் கூடிய அந்தத் தார்தராஷ்டிரப் படை துயரில் இருந்து விடுபட்டது. இவ்வளவு கடுமையாக இருந்த அந்தப் பெரும்போரில், இரு படைப்பிரிவுகளுக்குள்ளும் நேர்ந்த படுகொலைகள் மிக மோசமானவையாக இருந்தன. ஒன்றோடொன்று சிக்கிக் கொண்ட குதிரைகள், யானைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோர் யானைகளால் கொல்லப்பட்டனர். காலாட்படை வீரர்களால் பல குதிரைகளும், யானைகளும் கொல்லப்பட்டன. அந்தப் பொதுவான மோதலில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படை மற்றும் அவர்களது படை ஆகிய இரண்டையும் சேர்ந்த காலாட்படை வீரர்களும், தேர்ப் படைகளும், பெரும் எண்ணிக்கையிலான குதிரைகளும் தேர்வீரர்களால் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையில், தன் மடியில் பிறந்த மகன் {அரவான்} கொல்லப்பட்டதை அறியாத அர்ஜுனன், பீஷ்மரைப் பாதுகாத்த பல மன்னர்களை அப்போரில் கொன்றான். மேலும் உமது படையின் வீரர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிருஞ்சயர்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு (போரெனும் நெருப்பில்) தங்கள் உயிர்களையே ஆகுதியாக ஊற்றினர். கலைந்த கேசத்துடன் கூடிய தேர்வீரர்கள் பலர், தங்கள் கைப்பிடியில் இருந்து வாள்களும், விற்களும் விழுந்த நிலையில் வெறுங்கைகளாலேயே ஒருவரோடொருவர் மோதினர்.
உயிரையே ஊடுருவவல்ல கணைகளைக் கொண்ட வலிமைமிக்கப் பீஷ்மரும், வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரைக் கொன்று, பாண்டவப் படையை (அப்போது) நடுங்கச் செய்தார். யுதிஷ்டிரனின் படையைச் சேர்ந்த போராளிகள் பலரும், யானைகள், குதிரைவீரர்கள், தேர்வீரர்கள், குதிரைகள் பலவும் அவரால் {பீஷ்மரால்} கொல்லப்பட்டன. அந்தப் போரில் பீஷ்மரின் ஆற்றலைக் கண்ட போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அது {அவ்வாற்றல்} சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையானதாக எங்களுக்குத் தோன்றியது.
பீமேசனனின் ஆற்றலும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} பார்ஷதனின் {திருஷ்டத்யும்னனின்} ஆற்றலும் (பீஷ்மரின் ஆற்றலுக்குச்) சற்றும் குறைந்ததாக இல்லை. அதே போல, சாத்வத குலத்தின் பெரும் வில்லாளியின் {சாத்யகியின்} ஆற்றலும் அதற்கு நிகரான கடுமையைக் கொண்டிருந்தது. இருப்பினும், துரோணரின் ஆற்றலைக் கண்ட பாண்டவர்கள் அச்சத்தால் பீடிக்கப்பட்டனர். உண்மையில் அவர்கள் {பாண்டவப் படையினர்}, “துரோணரால் நம் துருப்புகள் அனைத்தையும் தனியாகவே கொல்ல முடியும். அப்படி இருக்கையில், உலகத்தில் தங்கள் துணிச்சலுக்காகப் புகழ்பெற்ற போர் வீரர்களின் பெரும்படையால் சூழப்பட்டிருக்கும் அவரைக் குறித்து என்ன சொல்ல முடியும்?” என்றே நினைத்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரால் பீடிக்கப்பட்ட பார்த்தனும் {அர்ஜுனனும்} இதையே சொன்னான் [10].
[10] நான் ஒப்புநோக்கும் இரண்டு நூல்களிலும், துரோணரைக் கண்டு அர்ஜுனனும் நடுங்கினான் என்ற குறிப்பேதும் இல்லை.
அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்த போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, எந்தப் படையின் துணிச்சல் மிக்கப் போராளிகளும், எதிர்தரப்பினரை மன்னிக்கவில்லை {பொறுத்துக் கொள்ளவில்லை}. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது படை மற்றும் பாண்டவப்படை ஆகிய இரண்டையும் சேர்ந்த வலிமைமிக்க வில்லாளிகள், கோபத்தால் தூண்டப்பட்டு, ஏதோ தாங்கள் ராட்சசர்களாலும், பேய்களாலும் {அசுரர்களாலும்} பீடிக்கப்பட்டவர்களைப் போல ஒருவரோடொருவர் சீற்றத்துடன் போரிட்டனர். உண்மையில், பேய்களின் {அசுரர்களின்} போராகக் கருதப்படுவதும், உயிர்களுக்குப் பெரும் அழிவை ஏற்படுத்துவதுமான அந்தப் போரில் தன் உயிரை வைத்துக் கொள்ள நினைப்பவன் ஒருவனையும் நாங்கள் [11] காணவில்லை” என்று கூறினான்.
[11] கங்குலியின் மொழிபெயர்ப்பில் We என்று இருக்க வேண்டிய இந்த இடத்தில் He என்றிருக்கிறது. ஒருவேளை இஃது அச்சுப்பிழையாக இருக்கலாம். அதை நாம் We என்று எடுத்துக் கொள்ளலாம். He என்று எடுத்துக் கொண்டால் அது துரோணரைக் குறிக்கும். வேறொரு பதிப்பில் இந்த இடத்தில் “தேவாசுரப் போரைப் போல விளங்கும் அந்தப் போரில் போர்வீரர்களுள் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நினைப்பவன் ஒருவனையும் நாங்கள் காணவில்லை” என்று இருக்கிறது.
தென்னகத்தில் வேறு மாதிரியாகவும் சொல்லப்படும் அரவானின் கதை குறித்து அறிய https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D என்ற லிங்குக்குச் செல்லவும்.
ஆங்கிலத்தில் | In English |