Saturday, February 13, 2016

எட்டாம்நாள் போரின் முடிவு! - பீஷ்ம பர்வம் பகுதி - 097

End of the eighth day war! | Bhishma-Parva-Section-097 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 55)

பதிவின் சுருக்கம் : இராவத்தின் கொலை குறித்துத் தெரிவிக்கப்பட்ட அர்ஜுனன்; கிருஷ்ணனிடம் அர்ஜுனன் வேதனையில் க்ஷத்திரியத் தொழிலை நிந்தித்துப் பேசியது; பீமனை எதிர்த்த துரியோதனன் தம்பிகள்; துரியோதனன் தம்பிகள் ஒன்பது பேரைக் கொன்ற பீமன்; அர்ஜுனனை எதிர்த்த பெரும் வீரர்கள்; அபிமன்யுவின் சாதனை; போர்க்களத்தின் வர்ணனை...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தன் மகன் இராவத் {அரவான்} கொல்லப்பட்டதைக் கேட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} பெரும் துயரால் நிறைந்து ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டான்.

போரின் மத்தியில் வாசவனிடம் {கிருஷ்ணனிடம்} அவன் {அர்ஜுனன்} இவ்வார்த்தைகளைச் சொன்னான், “உயர் ஆன்மா கொண்ட பெரும் அறிவாளி விதுரர், கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நேரும் இந்தப் பயங்கர அழிவைத் (தன் மனக்கண்ணால்) முன்பே கண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை. மன்னன் திருதராஷ்டிரரை அவர் {விதுரர்} இதற்காகவே தடுத்தார். இந்தப் போரில், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இதர பல வீரர்கள் கௌரவர்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர், அதேபோலக் கௌரவர்களில் பலர் நம்மால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.


ஓ! மனிதர்களில் சிறந்தவனே {கிருஷ்ணா}, செல்வத்தின் பொருட்டே இழிந்த செயல்கள் செய்யப்படுகின்றன. எதன் பொருட்டுச் சொந்தங்களின் படுகொலை இப்படி நிகழ்த்தப்படுகிறதோ, அந்தச் செல்வத்தை நிந்திக்க வேண்டும். செல்வம் இல்லாத ஒருவனுக்கு, சொந்தங்களின் படுகொலையின் மூலம் கிடைக்கும் செல்வத்தை விட மரணம் கூட மேலானதே. ஓ! கிருஷ்ணா, கூடியிருக்கும் சொந்தங்களைக் கொல்வதன் மூலம் நாம் என்ன ஈட்டப் போகிறோம்? ஐயோ, துரியோதனன் மற்றும் சுபலனின் மகன் சகுனியின் தவறாலும், கர்ணனின் தீய ஆலோசனைகளாலும், க்ஷத்திரிய குலம் அழிவை அடைகிறது.

ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, பாதி நாட்டை மட்டுமோ, இல்லை அதற்குப் பதிலாக ஐந்து கிராமங்களை மட்டுமோ கூடச் சுயோதனனிடம் {துரியோதனனிடம்} இரந்து கேட்டு மன்னன் {யுதிஷ்டிரர்} விவேகமாக நடந்து கொண்டார் என நான் இப்போது புரிந்து கொள்கிறேன். ஐயோ, தீய ஆன்மா கொண்ட அந்த இழிந்தவனால் {துரியோதனனால்} அதுகூடக் கொடுக்கப்படவில்லையே {அந்தப் பொல்லாதவன் அதைக் கூடக் கொடுக்கவில்லையே}. துணிச்சலான க்ஷத்திரியர்கள் பலர் போர்க்களத்தில் (இறந்து) கிடப்பதைக் காணும் நான், க்ஷத்திரியத் தொழில் நிந்திக்கத்தக்கது என்று சொல்லி என்னை நானே நிந்தித்துக் கொள்கிறேன்.

போரில் சக்தியற்றவனாக [1] க்ஷத்திரியர்கள் என்னைக் கருதுவார்கள் என்பதால் மட்டுமே நான் போரிடுகிறேன். இல்லையெனில், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா} சொந்தங்களுடனான இந்தப் போர் எனக்கு அருவருப்பானதாகவே {வெறுக்கத்தக்கதாகவே} இருக்கிறது. தார்தராஷ்டிரப் படையை நோக்கி குதிரைகளை வேகமாகத் தூண்டுவாயாக. கடப்பதற்கு அரிதான இந்தப் போர்க் கடலின் அடுத்தக் கரையை என் இரு கைகளால் நான் அடைவேன். ஓ! மாதவா {கிருஷ்ணா}, இழப்பதற்கு நேரமேதும் இல்லை [2]” {என்றான் அர்ஜுனன்}.

[1] “நியாயமற்ற வகையில் சொந்தங்கள் இறந்து போவார்களே என்று எண்ணிக் கருணையால் நான் போரிடாமல் இருந்தால் இந்த க்ஷத்ரியர்கள் என்னைச் சக்தியற்றவனாக நினைப்பார்கள். எனவேதான் நான் போரை அங்கீகரித்தேன்” என்று வேறு ஒரு பதிப்பில் இருக்கிறது.

[2] அதாவது, விரைவில் இந்தப் போரை முடிக்க வேண்டும் என்று அர்ஜுனன் சொல்வதாக இங்கே பொருள் கொள்ளலாம்.

பகைவீரர்களைக் கொல்பவனான கேசவன் {கிருஷ்ணன்}, பார்த்தனால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்டுக் காற்றின் வேகத்தையுடைய அந்த வெண்ணிறக் குதிரைகளைத் தூண்டினான். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, புயலால் கலங்கடிக்கப்படும் அலைகள் நிறைந்த பெருங்கடலின் ஒலியைப் போல [3] உமது துருப்புகளுக்குள் பேரொலி {பேரிரைச்சல்} கேட்டது.

[3] அதாவது, கடலின் மூர்க்கத்தனம் காற்றால் கலக்கப்படும் போது எனப் பொருள் கொள்ள வேண்டுமெனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிற்பகலில், பீஷ்மருக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட போரானது முகில்களின் முழக்கத்தை ஒத்த ஒலியால் குறிக்கப்பட்டது. பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வாசவனை {இந்திரனைச்} சூழ்ந்திருக்கும் வசுக்களைப் போலத் துரோணரைச் சூழ்ந்திருந்த உமது மகன்கள், பீமேசனனை எதிர்த்துப் போரிட விரைந்தனர்.

அப்போது, சந்தனுவின் மகனான பீஷ்மர், தேர்வீரர்களில் முதன்மையான கிருபர், பகதத்தன், {திரிகர்த்த மன்னன்} சுசர்மன் ஆகியோர் அனைவரும் தனஞ்சயனை {அர்ஜுனனை} நோக்கிச் சென்றனர்.

ஹிருதிகனின் மகன் (கிருதவர்மன்) மற்றும் பாஹ்லீகன் ஆகியோர் சாத்யகியை நோக்கி விரைந்தனர்.

மன்னன் அம்பஷ்டன் {அம்பஷ்டகன்} [4], அபிமன்யுவின் முன்னால் தன்னை நிறுத்திக் கொண்டான்.

[4] இவன் அம்பஷ்ட நாட்டின் மன்னனாக இருக்க வேண்டும். மன்னன் அம்பஷ்டன் என்ற பெயர்க் குறிப்பு மகாபாரதத்தில் இந்தப் பகுதியைத் தவிர வேறு எங்கும் காணக்கிடைக்கவில்லை. அம்பஷ்டர்கள் என்று அந்த நாட்டினரைக் குறிக்கும் குறிப்புகளே கிடைக்கின்றன.

மேலும் பெரும் தேர்வீரர்கள் பிறர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் தேர்வீரர்களான {வேறு} பிறருடன் மோதினர். பிறகு காணப் பயங்கரமான ஒரு கடும்போர் தொடங்கியது.

உமது மகன்களைக் கண்ட பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (ஆகுதியான) தெளிந்த நெய்யுடன் கூடிய நெருப்பைப் போல அந்தப் போரில் கோபத்தால் சுடர்விட்டு எரிந்தான். எனினும் உமது மகன்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மழைக்காலத்தில் மலைச்சாரலை நனைக்கும் மேகங்களைப் போலத் தங்கள் கணைகளால் அந்தக் குந்தியின் மகனை {பீமனை} மறைத்தார்கள். புலி போலச் செயல்படும் அந்த வீரன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (இப்படி) உமது மகன்களால் பல்வேறு வழிகளில் மறைக்கப்பட்டபோது தன் கடைவாயை நாவால் நனைத்தான் {நக்கினான்}.

பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கூர்மையான க்ஷுரப்ரம் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட கணை} ஒன்றால் வியுதோரோஷ்கனை [5] வீழ்த்தினான். அதன்பேரில் அந்த உமது மகன் {வியுதோரோஷ்கன்} உயிரை இழந்தான்.

[5] துரியோதனனின் தம்பியாக இங்கே குறிக்கப்படும் இந்தப் பெயர் மகாபாரதத்தில் இந்தப் பகுதியைத் தவிர வேறு எங்கும் குறிப்பிடப்படவில்லை. வேறு பதிப்பில், “பெருங்கோபங்கொண்ட பீமன் கூர்மைமிக்கதும், நன்கு அடிக்கப்பட்டதுமான க்ஷுரப்ரத்தினால் அந்தப் பெரும்போரில் மன்னன் துரியோதனனை அடித்தான். துரியோதனன் பொறிகள் கலங்கிப் போனான்” என்று இருக்கிறது. கங்குலி இவனை Vyudoroska என்று அழைக்கிறார். மன்மதநாத தத்தரோ இவனை Vyudoraska என்று அழைக்கிறார்.

செம்பதமாக்கப்பட்டதும் {நன்கு கடுமையாக்கப்பட்டதும்}, கூர்மையானதுமான வேறு ஒரு பல்லத்தினால் அவன் {பீமன்}, சிங்கம் சிறு விலங்கொன்றை வீழ்த்துவதைப் போலக் குண்டிலினை வீழ்த்தினான்.

பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது (மற்ற) மகன்களைக் (தன் கணைகள் செல்லும் தூரத்திற்குள்) கொண்டு வந்து, கூர்மையானதும், செம்பதமாக்கப்பட்டதுமான பல கணைகளை [6] எடுத்துக் கொண்டு, அவற்றைக் கவனமாகக் குறிபார்த்து அவர்கள் மீது ஏவினான்.  அந்த வலிமையான வில்லாளியான பீமசேனனால் ஏவப்பட்ட அந்தக் கணைகள், வலிமைமிக்கத் தேர்வீரர்களான உமது மகன்களை அவர்களது வாகனங்களில் இருந்து விழச்செய்தன. {அவர்கள்} (இப்படிக் கொல்லப்பட்ட உமது மகன்கள்) அநாதிருஷ்டி, குண்டபேதின், விராஜன், தீர்கலோசனன் {தீப்தலோசனன்}, தீர்க்கபாகு, சுபாகு, கன்யாகத்யஜன் {மகரத்வஜன்} ஆகியோராவர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வசந்தகாலத்தில் மலர்ந்திருக்கும் பலவண்ணங்களிலான மாமரங்கள் விழுந்தால் எப்படி இருக்குமோ, அப்படி அந்த வீரர்கள் (தங்கள் தேர்களில் இருந்து) விழுந்த போது பிரகாசமாகத்தெரிந்தனர். பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரே}, உமது பிற மகன்கள், வலிமைமிக்க அந்தப் பீமசேனனைக் காலனாகவே கருதி அங்கிருந்து தப்பி ஓடினார்கள் [7].

[6] இங்கு, பீமன் ஏழு கணைகளை ஏவியதாக வேறு பதிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

[7] பீஷ்ம பர்வம் பகுதி 64ல் கௌரவர்களில் எட்டு பேரையும், பீஷ்ம பர்வம் பகுதி 89ல் எட்டு பேரையும் கொன்ற பீமன், இப்போது இந்தப் பகுதியில் ஒன்பது பேரைக் கொன்றிருக்கிறான். ஆக, இதுவரை கௌரவர்களில் இருபத்தைந்து பேரை பீமன் கொன்றிருக்கிறான். வேறொரு பதிப்பில் இந்தப் பகுதியிலும் எட்டு பேரையே கொன்றான் என்ற குறிப்பு இருக்கிறது. இதில் விடுபடுவது  இந்தப் பகுதியில் கங்குலியில் வரும் வியுதோரோஷ்கன் ஆவான். அப்படி எடுத்துக் கொண்டால் பீமன் இதுவரை கொன்றது இருபத்து நாலு பேரை ஆகும்.

அப்போது துரோணர், உமது மகன்களை இப்படி எரித்துக் {அழித்துக்} கொண்டிருந்த அந்த வீரனை {பீமனை}, மலைச்சாரலில் மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போல அனைத்துப் புறங்களில் இருந்தும் கணைகளால் மறைத்தார். அந்தப் போரில் துரோணரால் தடுக்கப்பட்டாலும், உமது மகன்களைக் கொன்ற அந்தக் குந்தியின் மகனுடைய {பீமனின்} ஆற்றல் மிக அற்புதமாக இருந்ததை நாங்கள் கண்டோம். உண்மையில், மேலிருந்து விழும் மழைப்பொழிவைத் தாங்கிக் கொள்ளும் காளையைப் போலத் துரோணரால் ஏவபட்ட கணைகளின் மழையை அந்தப் பீமன் மகிழ்ச்சியாகத் தாங்கிக் கொண்டான். துரோணரால் தடுக்கப்பட்ட போதும், அந்தப் போரில் உமது மகன்களை அங்கே கொன்று, விருகோதரனால் {பீமனால்} அடையப்பட்ட அந்தச் சாதனை அற்புதமானதாக இருந்தது.

உண்மையில் அந்த அர்ஜுனனின் அண்ணன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மான்கூட்டத்தில் ஒரு வலிமைமிக்கப் புலியைப் போல வீரர்களான உமது மகன்களுடன் விளையாடினான். மான்கூட்டத்துக்கு மத்தியில் ஓநாய் ஒன்று இருந்து, அந்த விலங்குகளை {மான்களை} விரட்டி அச்சுறுத்துவது போலவே, விருகோதரனும் அந்தப் போரில் உமது மகன்களை விரட்டி அச்சுறுத்தினான்.

அதேவேளை, கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, பகதத்தன் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரரான கௌதமர் {கிருபர்} ஆகியோர் பாண்டுவின் மூர்க்கமான மகன் அர்ஜுனனைத் தடுக்கத் தொடங்கினார்கள். அந்தப் போரில் தன் எதிரிகளின் ஆயுதங்களைத் தன் ஆயுதங்களால் கலங்கடித்த அந்த அதிரதன் {அர்ஜுனன்}, உமது படையில் முக்கியமான பல வீரர்களை யமனுலகு அனுப்பிவைத்தான்.

தன் கணைகளால் அபிமன்யுவும், புகழ்பெற்றவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான மன்னன் அம்பஷ்டனின் தேரை இழக்கச் செய்தான். தன் தேரை இழந்த அந்த மன்னன் {அம்பஷ்டன்}, சுபத்திரையின் புகழ்பெற்ற மகனால் கொல்லப்படுவதற்கு முன்னர், விரைந்து அவமானத்தால் தன் தேரில் இருந்து கீழே குதித்து, அந்தப் போரில் உயர் ஆன்ம அபிமன்யுவின் மேல் தன் வாளை எறிந்தான். பிறகு, அந்த வலிமைமிக்க ஏகாதிபதி {அம்பஷ்டன்}, ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} தேரில் ஏறினான். போரில் நகர்வுகள் அனைத்தையும் அறிந்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன்னை நோக்கி வரும் அந்த வாளைக் கண்டு லாகவத்தால் {தன் நகர்வுகளின் வேகத்தால்} அதைக் கலங்கடித்தான். அந்தப் போரில் சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்}, அந்த வாள் இப்படிக் கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட அந்தத் துருப்புகளுக்கு மத்தியில், “நன்று”, “நன்று” என்ற பெருங்கூச்சல்கள் கேட்டன.

திருஷ்டத்யும்னனின் தலைமையிலான பிற வீரர்கள் உமது துருப்பினருடன் போரிட்டன. அதே வேளையில் உமது துருப்பினர் அனைவரும் அந்தப் பாண்டவர்களுடன் {பாண்டவத் துருப்புகளுடன்} போரிட்டனர். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உம்மவருக்கும், அவர்களுடையவர்களுக்கும் இடையில் நடைபெற்ற அந்தக் கடுமையான மோதலில் போராளிகள் பெரும் சக்தியுடன் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு கடினமான சாதனைகளை அடைந்தார்கள். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் முடிகளைப் பற்றிய அந்தத் துணிச்சல் மிக்கப் போராளிகள், தங்கள் நகங்கள், பற்கள், கைமுட்டிகள், கால்முட்டிகள், உள்ளங்கைகள், வாள்கள், நல்ல விகிதங்களில் அமைந்த தங்கள் கரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திப் போரிட்டனர் [8].

[8] “இறுமாப்புடையவர்களான வீரர்கள் போரில் ஒருவரையொருவர் மயிர்ப்பிடித்துக் கொண்டு, நகங்களாலும், பற்களாலும், கைக்குத்துகளாலும், முழங்காலின் இடிகளாலும், (கன்னத்தில்) அறைதல்களினாலும், கத்திகளாலும், நன்றாகப் போரிடப்பழக்கப்பட்ட கைகளாலும் போர் புரிந்தார்கள்” என்று வேறு ஒரு பதிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

{போரில்} ஒருவர் தாமதத்தை மற்றவர் பயன்படுத்திக் கொண்டு {இப்படியே} அவர்கள் ஒருவரையொருவர் யமலோகத்திற்கு அனுப்பினார்கள். தந்தை மகனைக் கொன்றான், அதே போல மகன் தந்தையைக் கொன்றான். உண்மையில் அந்தப் போராளிகள் ஒவ்வொருவரும் தங்கள் ஒவ்வொரு அங்கங்களையும் பயன்படுத்திப் போரிட்டனர்.

போரில் கொல்லப்பட்ட வீரர்களின் பிடியில் இருந்து நழுவியவையான தங்கப் பிடிகளையுடைய அழகிய விற்களும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, விலையுயர்ந்த ஆபரணங்களும், தங்கம் அல்லது வெள்ளிச் சிறகுகளைக் கொண்ட, எண்ணெயிலிட்டுத் தீட்டப்பட்டிருந்த கூரிய கணைகள்  (அப்படிக் {வீரர்களின் பிடியில் இருந்து நழுவி} களத்தில் சிதறிக் கிடந்த போது) பிரகாசமாகத் தெரிந்தன. அதிலும் குறிப்பாக, பின்னவை {கணைகள்} சட்டை உரித்த பாம்புகளைப் போல இருந்தன. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுத் தந்தப் பிடிகளைக் கொண்டிருந்த வாட்களும், தங்கத்துடன் பல வண்ணங்களில் இருந்த வில்லாளிகளின் கேடயங்களும் அவர்களது {வீரர்களின்} பிடியில் இருந்து நழுவி களத்தில் கிடந்தன.

தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையான பராசங்கள், கோடரிகள், வாள்கள், எறிவேல்கள், அழகிய கவசங்கள், கனமான குறுகிய தடிகள், பரிகங்கள், போர்க்கோடரிகள், பிண்டிபாலங்கள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பல்வேறு வடிவங்களிலான யானை அம்பாரிகள், சாமரங்கள், விசிறிகள் ஆகியனவும் களத்தில் சிதறிக் கிடந்தன. தங்கள் கைகளிலோ, தங்களின் அருகிலோ பல்வேறு விதங்களிலான ஆயுதங்களுடன் களத்தில் கிடந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் உயிர்மூச்சுப் போயிருந்தாலும் உயிருடன் இருப்பது போலவே தோன்றினர். கதாயுதங்களால் நொறுக்கப்பட்ட அங்கங்களுடனும், தண்டங்களாலோ, யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றாலோ நொறுக்கப்பட்ட தலைகளுடனும் மனிதர்கள் அந்தக் களத்தில் கிடந்தனர்.

கொல்லப்பட்ட குதிரைகள், மனிதர்கள், யானைகள் ஆகியவற்றின் உடல்கள் சிதறிக் கிடந்த பூமியின் பல பகுதிகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலைகள் சிதறிக் கிடப்பது போல அழகாகத் தெரிந்தன. விழுந்து கிடந்த ஈட்டிகள் {சக்திகள்}, வாள்கள் {ரிஷ்டிகள்}, கணைகள் {அம்புகள்}, வேல்கள் {தோமரங்கள்}, பட்டாக்கத்திகள், கோடரிகள், பராசங்கள், கன்னக்கோல்கள் {அவஸ்கந்தகங்கள்}, போர்க்கோடரிகள், பரிகங்கள், பிண்டிபாலங்கள், சதக்னிகள் [9] ஆகியவற்றாலும், ஆயுதங்களால் சிதைக்கப்பட்ட உடல்களாலும் அந்தப் போர்க்களம் மறைக்கப்பட்டிருந்தது.

[9] சதக்னி {சதம்+அக்னி} என்றால் நூறு கொல்லிகள் என்று பொருள்; ஏவுகணைகளில் {ராக்கெட்டுகளில்} ஒருவகையாக இருக்க வேண்டும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! எதிரிகளைக் கொல்பவரே {திருதராஷ்டிரரே}, போர்வீரர்களில் உயிரையிழந்த சிலர், மரண அமைதியிலும், {உயிரிழக்காத} பிறர் தீனமான முனகல்களுடனும் என இரத்தத்தில் போர்த்தப்பட்டு, களத்தில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்தனர். அந்த உடல்களால் விரவிக் கிடந்த அந்தப் பூமி வண்ணமயமான காட்சி ஒன்றை அளித்தது. சந்தனக்குழம்பு பூசப்பட்டு, தோலுறைகளும், தோள்வளைகளும் தரித்திருந்த பலம்நிறைந்த வீரர்களின் கரங்களாலும், யானைகளின் துதிக்கைகளைப் போன்ற {அவர்களின்} கூம்பும் தொடைகளாலும், ரத்தினங்கள் இணைக்கப்பட்ட தலைப்பாகைகளுடன் கூடியவையும், பெரிய கண் படைத்த போராளிகளின் காது குண்டலங்களுடன் கூடியவையுமான வீழ்த்தப்பட்ட {அவர்களின்} தலைகளாலும் விரவிக் கிடந்த பூமி அழகிய காட்சியைக் கொண்டது. குருதியும், சாயம்பூசப்பட்ட கவசங்களும், பல வகையான ஆபரணங்களும் பரவிக்கிடந்த அந்தப் போர்க்களம், நெருப்பின் மென் தழல்கள் (சிதறிக்) கிடந்ததைப் போல மிக அழகாகத் தெரிந்தது.

தங்கள் நிலைகளில் இருந்து விழுந்த பல்வேறு விதமான ஆபரணங்களாலும், விழுந்து கிடக்கும் விற்களாலும், சுற்றிலும் சிதறிக் கிடக்கும் தங்கச் சிறகுகளைக் கொண்ட கணைகளாலும், மணிவரிசைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த உடைந்த பல தேர்களாலும், ரத்தத்தால் போர்த்தப்பட்டும், நாக்குகள் வெளித்தள்ளப்பட்டும் கொல்லப்பட்டுச் சிதறிக் கிடந்த பல குதிரைகளாலும், தேர்களின் அடிமரங்கள், கொடிமரங்கள், அம்பறாத்தூணிகள், கொடிகள், பெரும்வீரர்களுக்குச் சொந்தமானவையான பெரிய பால்வெள்ளை சங்குகள் ஆகியவற்றாலும், நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்த துதிக்கைகளற்ற யானைகளாலும் இந்தப் பூமியானவள், பல்வேறு விதமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அழகிய காரிகை ஒருத்தியைப் போலத் தெரிந்தாள்.

அங்கே, வேல்களால் {தோமரங்களால்} துளைக்கப்பட்டு, பெரும் வேதனையில் தங்கள் துதிக்கைகளால் மெல்லிய முனகல்களை அடிக்கடி வெளியிட்ட பெரும் யானைகளோடு கூடிய அந்தப் போர்க்களம், நகரும் மலைகளைக் கொண்டதைப் போல அழகாகத் தெரிந்தது. பல்வேறு நிறங்களிலான விரிப்புகள் மற்றும் யானைகளின் அம்பாரிகளாலும், வைடூரியம்-ரத்தினங்கள் இழைக்கப்பட்ட பிடிகளுடன் கூடிய விழுந்து கிடந்த மாவெட்டிகளாலும், பெரும் யானைகளை அலங்கரித்து விழுந்து கிடந்த மணிகளாலும், பலவண்ணங்களில் இருந்த சுத்தமான துணிகளாலும், ரங்கு மான் தோல்களாலும், யானைகளின் அழகிய கழுத்து ஆரங்களாலும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கச்சைகளாலும், பல்வேறு வகைகளிலான உடைந்த பொறிகளாலும், தங்கத்தாலான பராசங்களாலும், புழுதியால் பழுப்பானவையும், சித்திர வேலைப்பாடுகளுடன் கூடியவையுமான குதிரைகளின் கவசங்களாலும், தோள்வளை பூண்ட குதிரைப்படை வீரர்களின் வெட்டப்பட்ட கரங்களாலும், பளபளக்கும் கூரிய வேல்களாலும், பிரகாசமான வாள்களாலும், (தலைகளில் இருந்து) விழுந்த பலவண்ணங்களிலான தலைப்பாகைகளாலும், பரவி கிடந்த தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அழகிய அர்த்தச்சந்திரக் கணைகளாலும், கிழிபட்டு, நசுங்கிய ரங்குமான் தோல்களாலான குதிரைகளின் சேனங்களாலும், விழுந்து கிடந்தவையான விலையுயர்ந்த ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மன்னர்களின் அழகிய தலைப்பாகைகள், குடைகள், சாமரங்கள், விசிறிகள் ஆகியவற்றாலும், அழகிய காதுகுண்டலங்களைக் கொண்டவையும், நன்கு வெட்டப்பட்ட தாடிகளை {மீசைகளைக்} கொண்டவையும், தாமரையையோ சந்திரனையோ போன்று பிரகாசமானவையும், பிற தங்க ஆபரணங்களால் ஒளிர்பவையுமான கீழே விழுந்து கிடந்த போர்வீரர்களின் முகங்களாலும் இந்தப் பூமி கோள்கள் மற்றும் நட்சத்திரங்களால் நிறைந்த ஆகாயம் போலத் தெரிந்தது.

இப்படியே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உம்முடையவரும், அவர்களுடையவருமான அந்த இரு படையினரும் போரில் ஒருவரோடொருவர் மோதி, ஒருவரை ஒருவர் நசுக்கினர். அந்தப் போராளிகள் களைப்படைந்து, முறியடிக்கப்பட்டு, நசுக்கப்பட்ட பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கருமையான இரவு வந்ததால் மேற்கொண்டு அந்தப் போரைப் பார்க்க முடியவில்லை.

அந்தக் காரிருள் கொண்ட இரவு வந்தபோது குருக்களும், பாண்டவர்களும் தங்கள் படைகளை விலக்கிக் கொண்டனர். அப்படித் துருப்புகளை விலக்கிக் கொண்ட குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இருவரும், தங்கள் தங்கள் பாசறைகளுக்குச் சென்று இரவில் ஓய்வெடுத்தனர்” {என்றான் சஞ்சயன்}.

எட்டாம் நாள் போர் முற்றும்


ஆங்கிலத்தில் | In English