Thursday, February 11, 2016

பகதத்தன் செய்த போர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 096

The battle of Bhagadatta! | Bhishma-Parva-Section-096 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 54)

பதிவின் சுருக்கம் :  கடோத்கசனிடம் அடைந்த தோல்வியை நினைத்துப் பீஷ்மரிடம் வருந்தும் துரியோதனன்; துரியோதனனுக்கு ஆறுதல் கூறிய பீஷ்மர், கடோத்கசனை நோக்கி பகதத்தனை ஏவிய பீஷ்மர்; பீமன் மற்றும் கடோத்கசனுடன் பகதத்தன் செய்த போர்; அரவான் மரணம் குறித்துக் கிருஷ்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் தெரிவித்த பீமன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தப் பெரும்போருக்குப் பிறகு, கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} அணுகிய மன்னன் துரியோதனன், பணிவுடன் அவரை வணங்கி, கடோத்கசன் பெற்ற வெற்றி, தன் தோல்வி ஆகிய அனைத்தையும் அவருக்கு விவரிக்கத் தொடங்கினான்.

வெல்லப்பட முடியாத அந்த வீரன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டபடி, குருக்களின் பாட்டனான பீஷ்மரிடம் இவ்வார்த்தைகளைக் கூறினான், “ஓ! தலைவா {பீஷ்மரே}, எதிரிக்கு வாசுதேவன் {கிருஷ்ணன்} (துணையாக இருப்பது) போல, உம்மைத் துணையாகக் கொண்டே பாண்டவர்களுடனான ஒரு கடும்போர் என்னால் தொடங்கப்பட்டது [1]. கொண்டாடப்படும் துருப்புகளான எனது இந்தப் பதினோரு {11} அக்ஷெஹிணிகளும், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {பீஷ்மரே}, உமது கட்டளைக்குக் கீழ்ப்படிந்தே என்னுடன் இருக்கின்றன. ஓ! பாரதர்களில் புலியே {பீஷ்மரே}, நிலைமை இப்படியிருந்தாலும், பீமசேனனின் தலைமையில், கடோத்கசனை சார்ந்திருந்த பாண்டவ வீரர்களால் போரில் நான் தோற்கடிக்கப்பட்டேன். இது காய்ந்த மரத்தை நெருப்பு எரிப்பது போல என் அங்கங்களை எரிக்கிறது. ஓ! அருளப்பட்டவரே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {பீஷ்மரே}, எனவே, ஓ! பாட்டா, வெல்லப்பட முடியாதவரான உமது துணையுடன், ராட்சசர்களில் இழிந்தவனான கடோத்கசனை நானே கொல்ல விரும்புகிறேன். அந்த எனது விருப்பத்தை நிறைவேறச் செய்வதே உமக்குத் தகும்” என்றான் {துரியோதனன்}.


[1] “உம்மையும், துரோணரையும் ஆதாரமாகக் கொண்டு பாண்டவர்களுடன் கடும்போர் என்னால் தொடங்கப்பட்டது” என்று வேறு ஒரு பதிப்பில் இருக்கிறது.

மன்னனின் {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டவரும், பாரதர்களில் முதன்மையானவரும், சந்தனுவின் மகனுமான பீஷ்மர் துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார், “ஓ! மன்னா, ஓ! குரு குலத்தோனே, ஓ! எதிரிகளைத் தண்டிப்போனே {துரியோதனா}, எப்போதும் நீ நடந்து கொள்ள வேண்டிய வழி குறித்து, உனக்கு நான் சொல்லப்போகும் வார்த்தைகளைக் கேட்பாயாக. ஓ! எதிரிகளை அடக்குபவனே {துரியோதனா}, அனைத்துச் சூழ்நிலைகளிலும் ஒருவன் போரில் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். ஓ! பாவமற்றவனே {துரியோதனா}, நீ எப்போதும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுடனோ, அர்ஜுனனுடனோ, இரட்டையர்களுடனோ {நகுல சகாதேவனுடனோ}, பீமசேனனுடனோ தான் போரிட வேண்டும். ஒரு மன்னனின் கடமையைக் கொண்டிருக்கும் மன்னன் ஒருவன், மற்றொரு மன்னனையே தாக்குவான்.

நான், துரோணர், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சாத்வத குலத்தின் கிருதவர்மன், சல்லியன், சோமதத்தனின் மகன் {பூரிஸ்ரவஸ்}, வலிமைமிக்கத் தேர்வீரனான விகர்ணன், துச்சாசனன் தலைமையிலான உனது வீரத் தம்பிகள் ஆகியோர் அனைவரும் உன் நிமித்தமாக வலிமைமிக்க அந்த ராட்சசர்களை எதிர்த்துப் போரிடுவோம். அல்லது, ராட்சசர்களில் கடுமையான இளவரசனைக் {கடோத்கசனைக்} குறித்த உன் துயரம் பெரிதானதாக இருக்குமேயானால், போரில் புரந்தரனுக்கு {இந்திரனுக்கு} இணையானவனான இந்த மன்னன் பகதத்தன் அந்தப் பொல்லாத வீரனைப் {கடோத்கசனைப்} போரில் எதிர்த்துச் செல்லட்டும்” {என்றார் பீஷ்மர்}.

மன்னனிடம் {துரியோதனனிடம்} இதைச் சொல்லிவிட்டு, பேச்சில் வல்லவரான பாட்டன் {பீஷ்மர்}, (குரு) மன்னனின் {துரியோதனனின்} முன்னிலையில் பகதத்தனிடம் பேசினார், “ஓ! பெரும் ஏகாதிபதியே {பகதத்தா}, ஹிடிம்பையின் மகனான அந்த வெல்லப்பட முடியாத வீரனை {கடோத்கசனை} எதிர்த்து விரைவாகச் செல்வாயாக. பழங்காலத்தில் தாரகனை {தாரகாசுரனை} எதிர்த்த இந்திரனைப் போல, வில்லாளிகள் அனைவரும் பார்க்கும்போதே, தீச்செயல்கள் புரியும் அந்த ராட்சசனைக் {கடோத்கசனைக்} கவனத்துடன் இந்தப் போரில் நீ எதிர்ப்பாயாக. உன் ஆயுதங்கள் தெய்வீகமானவை. எதிரிகளைத் தண்டிப்பவனே {பகதத்தா}, உன் ஆற்றலும் பெரியதே. பழங்காலத்தில் பல அசுரர்களுடன் [2] மோதல்கள் பலவற்றில் நீ ஈடுப்பட்டிருக்கிறாய், ஓ! மன்னர்களில் புலியே {பகதத்தா}, பெரும்போரில் நீயே அந்த ராட்சசனுக்கு {கடோத்கசனுக்கு} இணையானவனாவாய். உன் துருப்புகளால் பலமாக ஆதரிக்கப்பட்டபடி சென்று, ஓ! மன்னா {பகதத்தா}, அந்த ராட்சசர்களில் காளையைக் {கடோத்கசனைக்} கொல்வாயாக” {என்றார் பீஷ்மர்}.

[2] பழங்காலத்தில் பல தேவர்களோடு உனக்கு யுத்தம் நேர்ந்ததுண்டு, மன்னர்களில் சிறந்தவனே, பெரும்போரில் நீ ஒருவனே அவனை எதிர்த்துப் போர்புரியும் வல்லமை பொருந்தியவானாவாய்” என்று வேறொரு பதிப்பில் இருக்கிறது.

(கௌரவப்படையின்} படைத்தலைவரான பீஷ்மரின் இந்த வார்த்தைகள் கேட்ட பகதத்தன், எதிரிகளின் படையணிகளை நோக்கி சிங்க முழக்கத்துடன் சென்றான். முழங்கும் முகில்களின் மொத்துகையைப் {திரளைப்} போலத் தங்களை நோக்கி முன்னேறி வரும் அவனை {பகதத்தனைக்} கண்டப் பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களில் பலர், கோபத்தால் எரிந்து அவனை {பகதத்தனை} எதிர்த்துச் சென்றனர். பீமசேனன், அபிமன்யு, ராட்சசன் கடோத்கசன், திரௌபதியின் மகன்கள், சத்யதிருதி, க்ஷத்ரதேவன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சேதிகளின் ஆட்சியாளனான வசுதானன், தசார்ணர்களின் மன்னன் {சுதர்மன் [3]}ஆகியோரே அவர்கள்.

[3] சபாபர்வம் பகுதி 28ல், தசார்ண நாட்டின் மன்னன் சுதர்மனைப் பீமன் தன் தளபதிகளில் முதன்மையானவனாக நியமித்ததாக ஒரு குறிப்பு இருக்கிறது.

அப்போது, சுப்ரதீகம் என்று அழைக்கப்பட்ட தன் யானையின் மீது இருந்த பகதத்தன் அவர்களை எதிர்த்து விரைந்தான். பிறகு பாண்டவர்களுக்கும், பகதத்தனுக்கும் இடையில் கடுமையானதும், பயங்கரமானதும், யமலோகத்திலிருப்போரின் எண்ணிக்கையைப் பெருக்கியதுமான ஒரு போர் தொடங்கியது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பயங்கர சக்தியும், பெரும் மூர்க்கமும் கொண்ட கணைகள் தேர்வீரர்களால் ஏவப்பட்டு, யானைகள் மீதும், தேர்களின் மீதும் பாய்ந்தன. நெற்றிப்பொட்டுகள் பிளந்தவையும் {மதங்கொண்டவையும்}, தங்கள் பாகன்களால் (போரிடப்) பயிற்றுவிக்கப்பட்டவையுமான பெரும் யானைகள், அச்சமற்ற வகையில் ஒன்றையொன்று அணுகி ஒன்றின் மேல் ஒன்றாகப் பாய்ந்தன. தங்கள் உடல்களில் வழியும் மத நீரின் விளைவால் (சீற்றத்துடன்) குருடாகி, சினத்தால் தூண்டப்பட்டு, பருத்த தடிகளைப் போன்ற தங்கள் தந்தங்களால் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டு, அவ்வாயுதங்களின் {தந்தங்களின்} முனைகளால் ஒன்றையொன்று துளைத்தன.

சிறந்த வால்களைக் கொண்ட குதிரைகள், வேல்கள் தரித்த வீரர்களால் செலுத்தப்பட்டு, அந்த ஓட்டுநர்களின் தூண்டுதலால், அச்சமற்றும், பெரும் மூர்க்கத்துடனும் ஒன்றின் மேல் ஒன்றாகப் பாய்ந்தன. காலாட்படை வீரர்கள் ஈட்டிகளும், வேல்களும் தரித்த {எதிரி} காலாட்படையினரால் தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் பூமியில் விழுந்தனர்.

தேர்களில் இருந்த தேர்வீரர்கள், கர்ணிகள், நாளீகங்கள் {துப்பாக்கி போன்ற ஆயுதங்கள்} [4], தோமரங்கள் ஆகியவற்றின் மூலம் வீரமிக்கத் தங்கள் எதிரிகளைக் கொன்று சிங்க முழக்கமிட்டனர். பெரும் வில்லாளியான அந்தப் பகதத்தன், மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கும் அந்தப் போரின் போது, மழைக்குப் பிறகு தன்சாரலில் பாய்ந்து வரும் (பல) சிற்றோடைகளோடு கூடிய மலையொன்றைப் போல, கன்னப்பொட்டுகள் பிளந்து, ஏழு ஊற்றுகளாக மதநீர் ஒழுகும் தன் யானையைச் செலுத்திக் கொண்டு பீமசேனனை நோக்கி விரைந்தான். ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, ஐராவதத்தின் மேலிருக்கும் சிறப்புவாய்ந்த புரந்தரனையே {இந்திரனையே} போல, அவன் {பகதத்தன்}, (தான் இருந்த) சுப்ரதீகத்தின் {சுப்ரதீகம் எனும் யானையின்} தலையில் இருந்து கொண்டு ஆயிரக்கணக்கான கணைகளைத் திசைகள் அனைத்திலும் பொழிந்தபடியே வந்தான்.

[4] இந்தக் குறிப்பிடப்பட்டிருக்கும் நாளீகம் என்ற ஆயுதத்தைக் கைத்துப்பாக்கிகள் என்று பொருள் கொண்டிருக்கும் கங்குலி, “மூலத்தில் இங்கே நாளீகம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது” என்று சொல்கிறார். மேலும் தொடரும் கங்குலி, “சில காலங்களுக்கு முன்பு, “பாரதம்” என்ற வங்கப் பத்திரிகை ஒன்றில், “போர்முறையில் இந்து ஆயுதங்கள்” என்ற கட்டுரையில், ராமாயணத்தில் இருந்தும், மகாபாரதத்தில் இருந்தும் குறிப்பிட்ட சில மேற்கோள்களைச் சுட்டிக் காட்டி, நாளீகம் என்பது ஏதோ ஒரு வகையான வெடிப்பு சக்தியின் விளைவாக இரும்புக்குண்டுகளை உமிழும் ஒரு வகையான துப்பாக்கி என்று வாதிடப்பட்டுள்ளது என்றும், நாளீகங்கள் என்பன காட்டுமிராண்டித்தனமான ஒன்று என்றும், வரப்போகும் கலிகாலத்தின் மன்னர்களுக்கே அது தகுந்தது என்றும் தீர்மானித்த முனிவர்கள் அவற்றின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தவில்லை” என்றும் இங்கே விளக்குகிறார்.

கோடை கழிந்ததும் மழைத்தாரைகளால் மலைச்சாரலைத் தாக்கும் மேகங்களைப் போல, மன்னன் பகதத்தன் தன் கணைமழையால் பீமசேனனைப் பீடித்தான். எனினும், சினத்தால் தூண்டப்பட்ட அந்த வலிமைமிக்க வில்லாளியான பீமசேனன், பகதத்தனின் பக்கங்களையும் {இரு பக்கங்களையும்}, பின்புறத்தையும் பாதுகாப்போரில், நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான போராளிகளைத் [5] தன் கணை மழையால் கொன்றான். அவர்கள் கொல்லப்படுவதைக் கண்ட வீர பகதத்தன் சினத்தால் நிறைந்து, தனது யானைகளின் இளவரசனை {சுப்ரதீகத்தைப்} பீமசேனனின் தேரை நோக்கிச் தூண்டினான். இப்படி அவனால் {பகதத்தனால்} தூண்டப்பட்ட அந்த யானை வில்லின் நாணில் இருந்து உந்தப்பட்ட ஒரு கணையைப் போல, எதிரிகளைத் தண்டிப்பவனான பீமசேனனை நோக்கி மூர்க்கமாக விரைந்தது.

[5]  உண்மையில் இங்கே குறிப்பிடப்படும் Padarakshan பாதரக்ஷகர்கள் என்ற பதம் (குறிப்பிடத்தக்க வீரர்களின்) பாதங்களைப் பாதுகாப்போர் என்ற பொருளைத் தரும். இவர்கள் அந்த வீரனின் பக்கங்களிலும், பின்புறமும் நின்று எப்போதும் அவனைப் பாதுகாப்பவர்களாவார்கள். ஒருவேளை தேர்வீரர்களாக இருந்தால் இவர்கள் chakra-rakshas (protectors of the wheels) {சக்கரங்களைப் பாதுகாப்போர்} என்று அழைக்கப்படுவார்கள். அதே போல இன்னும் Parshni-rakshas and Prishata-rakshas என்று பலர் இருக்கிறார்கள் என இங்கே விளக்குகிறார் கங்குலி.

ஆனால், சம்ஸ்க்ருதம் அறிந்தோர் சொல்வது பின்வருமாறு: ரக்ஷகர்கள் என்பவர்கள் பாதுகாவலர்கள் ஆவர். இங்கே குறிப்பிடப்படும் பாதரட்சகர்கள் - பகதத்தன் யானையின் பாதங்களைப் பாதுகாப்பவர்கள் ஆவர். தேரென்றால் சக்கரங்களைப் பாதுகாப்பவர்கள் இருப்பார்கள் அல்லவா? அதே போல, யானையின் பாதங்கள் கீழே கிடக்கும் கூர்மையான ஆயுதங்கள் மீது பட்டால் காயம்பட்டு விழுந்து விடுமே.. அப்படி நடக்காமல் பாதங்களைச் சுற்றி இருந்து பாதுகாப்பார்கள்.

பிருஷ்டம் என்பது பின்புறத்தைக் குறிப்பதாகும். இது பின்புறத்தை பாதுகாப்பவர்களைக் குறிக்கும். பிருஷ்னி என்பதும் பின்பக்கத்தையே குறிக்கும். ஒரு மன்னன் மற்றும் அவன் வாகனம் மீது வீசப்படும் ஆயுதங்கள் பக்கவாட்டிலோ, பின்புறத்திலோ தாக்காமல் அவனைக் காப்பதும், இப்பகுதிகளைத் தேர் அல்லது யானை ஆகியவை நகரத் தடங்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வதும் இவர்களின் வேலையாகும்.

அந்த யானை {பகதத்தனின் யானை} முன்னேறுவதைக் கண்ட பீமசேனனை தலைமையாகக் கொண்ட பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், தாங்களே அதை நோக்கி விரைந்தார்கள். கேகய இளவரசர்கள் (ஐவர்) [6], அபிமன்யு, திரௌபதியின் மகன்கள் (ஐவர்), தசார்ணர்களின் ஆட்சியாளன் {சுதர்மன்}, க்ஷத்ரதேவன் [7], ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சேதிகளின் ஆட்சியாளன் {திருஷ்டகேது} மற்றும் சித்ரகேது [8] ஆகியோரே அவர்கள்

[6] குந்தியின் சகோதரி சுரூதகீர்த்தியின் மகன்கள் இவர்கள் என்றும் பாகவதம் சொல்கிறது. இவர்களில் மூத்தவன் பெயர் பிருஹத்க்ஷத்ரன்

[7] இந்த க்ஷத்ரதேவன் சிகண்டியின் மகனாவான் என்ற குறிப்புத் துரோணபர்வம் பகுதி 23ல் இருக்கிறது.

[8] கருடனின் வம்சாவளியில் வருபவன் இவன் என உத்யோகபர்வம் பகுதி 101ல் குறிப்பு இருக்கிறது. அந்தப் பகுதியில் நாரதர் சொல்லும் சித்ரகேதுவும் இவனும் ஒருவரா என்பது தெரியவில்லை.

வலிமைமிக்க வீரர்களான இவர்கள் அனைவரும், கோபத்தால் எரிந்து, சிறப்புமிக்கத் தங்கள் தெய்வீக ஆயுதங்களை வெளிப்படுத்தியபடியே வந்தார்கள். மேலும் கோபத்தில் இருந்த இவர்கள் அனைவரும் (தங்கள் எதிரி செலுத்திவந்த) அந்தத் தனி யானையைச் {சுப்ரதீகத்தைச்} சூழ்ந்து கொண்டனர். பல கணைகளால் துளைக்கப்பட்டுத் தன் காயங்களில் வழிந்த ஊனீரால் போர்த்தப்பட்டிருந்த அந்தப் பெரும் யானை {சுப்ரதீகம்}, (மழைக்குப் பிறகு நீர்மமாக்கப்பட்ட) செம்மண்ணோடு கூடிய மலைகளின் இளவரசனைப் போலப் பிரகாசத்துடன் காணப்பட்டது.

பிறகு தசார்ணர்களின் ஆட்சியாளன் {சுதர்மன்} மலையைப் போன்ற ஒரு யானையில் பகதத்தனின் யானையை நோக்கி விரைந்தான். எனினும் யானைகளின் இளவரசனான சுப்ரதீகம், சீறும் கடலைத் தாங்கிக் கொள்ளும் நிலத்தைப் {நிலத்தின் கரையைப்} போலத் தன்னை எதிர்த்து வரும் தனக்கு இணையான யானையைத் (அதன் வேகத்தைத்) தாங்கிக் கொண்டது. உயர் ஆன்ம தசார்ண மன்னனின் {சுதர்மனின்} அந்த யானை இப்படித் தடுக்கப்பட்டதைக் கண்ட பாண்டவத் துருப்புகளே கூட, “நன்று, நன்று!” என்று மெச்சிக் கூச்சலிட்டனர். பிறகு, மன்னர்களில் சிறந்தவனான அந்தப் பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, சினத்தால் தூண்டப்பட்டு, அந்த {சுதர்மனின்} யானையின் மேல் பதினான்கு {14} வேல்களை ஏவினான். எறும்புப்புற்றில் நுழையும் பாம்புகளைப் போல, அவை {வேல்கள்}, அந்த விலங்கின் உடலில் தரித்திருந்த தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட சிறந்த கவசத்தின் ஊடாக விரைந்து ஊடுருவி அதற்குள் {அந்த யானைக்குள்} நுழைந்தன.

ஆழத் துளைக்கப்பட்டு, வலியை உணர்ந்த அந்த யானை, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அதன் சீற்றம் தணிக்கப்பட்டு, பெரும் சக்தியுடன் விரைவாகப் புறமுதுகிட்டது. வேகத்துடன் மரங்களை முறிக்கும் பெருங்காற்றைப் {புயலைப்} போல, பாண்டவப் படையணியினரை நசுக்கிக் கொண்டும், அச்சத்தால் பிளிறிக் கொண்டும், அந்த {சுதர்மனின்} யானை பெரும் வேகத்துடன் தப்பி ஓடியது. அந்த யானை (இப்படி) வெல்லப்பட்ட பிறகு, பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், சிங்கங்களைப் போல உரக்கக்கூச்சலிட்டபடி போரிட அணுகினர்.

பீமனைத் தங்கள் தலைமையில் கொண்ட அவர்கள் பல்வேறு விதங்களிலான கணைகளையும், பல்வேறு விதங்களிலான ஆயுதங்களையும் இறைத்துக்கொண்டு பகதத்தனை நோக்கி விரைந்தனர். சினமும், பழியுணர்ச்சியும் பெருகியபடி முன்னேறி வரும் அந்த வீரர்களின் கடும் கூச்சல்களைக் கேட்ட பெரும் வில்லாளியான அந்தப் பகதத்தன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்து, முற்றிலும் அச்சமற்ற வகையில் தன் யானையைத் தூண்டினான். அங்குசத்தாலும், கால்பெருவிரலாலும் இப்படித் தூண்டப்பட்ட அந்த யானைகளின் இளவரசன் {சுப்ரதீகம்}, விரைவில் (யுகத்தின் முடிவில் தோன்றுவதும். அனைத்தையும் அழிப்பதுமான) சம்வர்த்த நெருப்பின் {ஊழித் தீயின்} வடிவத்தை ஏற்றது.

அது {சுப்ரதீகம்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில், தேர்கள், தனக்கு இணையான (பகை) யானைகள், குதிரையோட்டிகளுடன் கூடிய குதிரைகள் ஆகியவற்றை நசுக்கியபடி அங்கேயும் இங்கேயும் திரும்பத் தொடங்கியது. சினத்தால் நிறைந்த அது {சுப்ரதீகம்}, நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான காலாட்படையினரையும் நசுக்கியது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த யானையால் தாக்கப்பட்டு, கலங்கடிக்கப்பட்ட அந்தப் பாண்டவர்களின் பெரும் படை, நெருப்பில் {அதன் வெம்மையில்} காட்டப்பட்ட தோல் துண்டு ஒன்றைப் போல அளவில் சுருங்கியது {எண்ணிக்கையில் குறைந்தது}.

புத்திசாலியான அந்தப் பகதத்தனால் உடைக்கப்பட்ட பாண்டவ வியூகத்தைக் கண்ட கடுமுகம் கொண்ட கடோத்கசன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுடர்விடும் முகம் மற்றும் நெருப்பு போன்ற கண்களுடன் சினத்தால் நிறைந்து அவனை {பகதத்தனை} நோக்கி விரைந்தான். பயங்கர வடிவை ஏற்றுக் கோபத்தால் எரிந்த அவன் {கடோத்கசன்}, மலைகளையே பிளக்கவல்ல பிரகாசமான ஒரு சூலத்தை எடுத்தான். பெரும் பலத்தைக் கொண்ட அவன் {கடோத்கசன்}, அந்த யானையை {சுப்ரதீகத்தைக்} கொல்ல விரும்பி, அனைத்துப் பக்கங்களிலும் நெருப்புத் தழல்களை வெளியிட்டு சுடர்விட்ட  அந்தச் சூலத்தை வலுவுடன் வீசினான்.

தன்னை நோக்கிப் பெரும் மூர்க்கத்துடன் வரும் அதை {அந்தச் சூலத்தைக்} கண்ட பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, அழகானதும், ஆனால் கடுமையானதுமான அர்த்தச்சந்திரக் கணையொன்றை அதன் {அந்த சூலத்தின்} மேல் ஏவினான். பெரும் சக்தி படைத்த அவன் {பகதத்தன்}, அந்தச் சூலத்தைத் தன் கணையால் {அர்த்தச்சந்திரக் கணையால்} துண்டாக்கினான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தச் சூலம், இந்திரனால் ஏவப்பட்டு ஆகாயத்தினூடாக மின்னிக் கொண்டே வரும் வஜ்ரத்தைப் போல, இப்படி இரண்டாகப் பிளந்து கீழே தரையில் விழுந்தது.

(தன் எதிரியின்) அந்தச் சூலம் இரண்டாகப் பிளந்து தரையில் விழுந்ததைக் கண்ட பகதத்தன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கக் கைப்பிடி கொண்டதும், நெருப்பின் தழல் போன்ற பிரகாசத்துடன் கூடியதுமான ஒரு பெரிய ஈட்டியை எடுத்துக் கொண்டு, “நில், நில்” என்று சொன்னபடி அந்த ராட்சசன் {கடோத்கசன்} மீது வீசினான். இடியைப் போல வானத்தினூடாகத் தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் அதை {ஈட்டியைக்} கண்ட அந்த ராட்சசன் {கடோத்கசன்}, உயரக் குதித்து அதைப் {அந்த ஈட்டியைப்} பிடித்து உரக்கக் கூச்சலிட்டான். விரைவாக அதை {ஈட்டியை} தன் முழங்காலில் வைத்த அவன் {கடோத்சகசன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மன்னர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதை {ஈட்டியை} உடைத்தான். இவையனைத்தும் மிக அற்புதமானவையாகத் தெரிந்தன. வானத்திலிருந்த தேவர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள் ஆகியோர் வலிமைமிக்க அந்த ராட்சசன் {கடோத்கசன்} செய்த அந்த அருஞ்செயலைக் கண்டு அதிசயித்தனர். பீமசேனனின் தலைமையிலான பாண்டவ வீரர்களும், “நன்று, நன்று” என்ற கூச்சல்களால் பூமியை நிறைத்தனர் .

எனினும், பெரும் வில்லாளியான வீர பகதத்தனால், மகிழ்ச்சியடைந்த பாண்டவர்களின் அந்த உரத்த கூச்சல்களைத் (பொறுமையாகத்) தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்திரனின் வஜ்ரத்தைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய தன் பெரும் வில்லை வளைத்த அவன் {பகதத்தன்}, பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் கண்டு, பெரும் சக்தியுடன் முழங்கிய அதே வேளையில், நெருப்பைப் போன்ற பிரகாசம் கொண்டவையும், பெரும் கூர்மை கொண்டவையுமான கணைகள் பலவற்றைஅவர்கள் மீது ஏவினான்.

பீமனை ஒரு கணையாலும், அந்த ராட்சசனை {கடோத்கசனை} ஒன்பதாலும் {9} துளைத்தான்.

அபிமன்யுவை மூன்றாலும் {3}, கேகயச் சகோதரர்களை ஐந்தாலும் {5} துளைத்தான்.

முழுமையாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்ட நேரான மற்றொரு கணையால், அந்தப் போரில் க்ஷத்ரதேவனின் வலக்கரத்தைத் துளைத்தான். அதன் காரணமாக நாணில் கணை பொருத்தப்பட்ட பின்னவனின் {க்ஷத்ரதேவனின்} வில் அவன் கையில் இருந்து கீழே விழுந்தது.

பிறகு அவன் {பகதத்தன்}, ஐந்து {5} கணைகளால் திரௌபதியின் மகன்களைத் தாக்கினான்.

மேலும் கோபத்தால் அவன் {பகதத்தன்} பீமசேனனின் குதிரைகளைக் கொன்றான். பிறகு அவன் {பகதத்தன்}, சிங்க வடிவம் பொறிக்கப்பட்டிருந்த பீமசேனனின் கொடிமரத்தை, இறகுகளால் சிறகமைந்த மூன்று கணைகளால் வெட்டி வீழ்த்தினான். மேலும் அவன் {பகதத்தன்}, வேறு மூன்று கணைகளால் பீமசேனனின் தேரோட்டியையும் {தேரோட்டி விசோகனையும்} துளைத்தான். ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் பகதத்தனால் ஆழத்துளைக்கப்பட்டுப் பெரும் வலியை உணர்ந்த விசோகன், கீழே அந்தத் தேர்த்தட்டிலே அமர்ந்தான்.

பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இப்படித் தன் தேரை இழந்த அந்தத் தேர்வீரர்களில் முதன்மையான பீமன், தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தன் பெரிய வாகனத்தில் இருந்து விரைவாகக் கீழே குதித்தான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிகரத்துடன் கூடிய மலையைப் போல, உயர்த்தப்பட்ட கதாயுதத்துடன் கூடிய அவனை {பீமனைக்} கண்ட உமது துருப்பினர் அனைவரும் பெரும் அச்சத்தால் நிறைந்தனர்.

சரியாக இதே நேரத்தில், கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தான் வந்த வழியெங்கும் எதிரிகளைக் கொன்றபடி, வலிமைமிக்கத் தேர்வீரர்களும், தந்தையும் மகனுமான பீமனும், கடோத்கசனும், பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளனுடன் {பகதத்தனுடன்} போரிட்டுக் கொண்டிருந்த இடத்தில் தோன்றினான். ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே} அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான தன் சகோதரர்கள் போரிட்டுக் கொண்டிருப்பதைக் கண்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் கணைகளை அளவில்லாமல் இறைத்தபடி போரிடத் தொடங்கினான்.

பிறகு, அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான மன்னன் துரியோதனன், தேர்களாலும், யானைகளாலும் நிறைந்திருந்த தன் துருப்புகளின் ஒரு பிரிவை விரைவாகத் தூண்டினான். மூர்க்கத்துடன் இப்படி விரைந்து வரும் கௌரவர்களின் அந்தப் படைப்பிரிவை நோக்கி, வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனனும் பெரும் மூர்க்கத்துடன் விரைந்தான். தன் யானையில் இருந்த பகதத்தனும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டவப் படையணியினரை நசுக்கியபடி யுதிஷ்டிரனை நோக்கி விரைந்தான். பிறகு பகதத்தனுக்கும், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, ஆயுதங்களை உயர்த்திய பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள், கேகயர்கள் ஆகியோருக்கும் இடையில் ஒரு கடும்போர் தொடங்கியது.

அப்போது பீமசேனன், அந்தப் போரில் கேசவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவருக்கும் இராவத் {அரவான்} கொல்லப்பட்டதை உள்ளபடியே விவரமாகக் சொன்னான்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English