Sunday, February 28, 2016

யுதிஷ்டிரனுக்குப் பீஷ்மர் சொன்ன உபாயம்! - பீஷ்ம பர்வம் பகுதி – 108ஆ

The means told by Bhishma to Yudhishthira! | Bhishma-Parva-Section-108b | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 66)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனுடன் சேர்ந்து பீஷ்மரைச் சந்தித்த பாண்டவர்கள்; வெற்றி அடையவும், பீஷ்மரைக் கொல்லவும் பீஷ்மரிடமே வழி கேட்ட யுதிஷ்டிரன்; தன்னை வீழ்த்த பீஷ்மர் சொன்ன வழிமுறை...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வார்த்தைகளைக் கேட்ட விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரனிடம், “ஓ! பெரும் ஞானங்கொண்டவரே {யுதிஷ்டிரரே}, உமது வார்த்தைகள் என் சுவைக்கேற்ற வகையில் {நான் விரும்பும் வண்ணம்} இருக்கின்றன. தேவவிரதர் என்றும் அழைக்கப்படும் பீஷ்மர் ஆயுதங்களில் திறம்பெற்றவராவார். அவர் தன் பார்வையிலேயே எதிரியை எரித்துவிடக் கூடியவராவார்.

கடலுக்குச் செல்பவளின் (கங்கையின்) மகனிடமே {பீஷ்மரிடமே}, அவரது மரணத்திற்கான வழிகளைக் கேட்கச் செல்லலாம். குறிப்பாக உம்மால் கேட்கப்பட்டால், அவர் {பீஷ்மர்} நிச்சயம் உண்மையைச் சொல்வார். எனவே, குரு பாட்டனை {பீஷ்மரைக்} கேட்க நாம் செல்வோம். சந்தனுவின் மதிப்புக்குரிய மகனிடம் {பீஷ்மரிடம்} சென்று, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவரது ஆலோசனைகளைப் பெறும் நாம், அவர் {பீஷ்மர்} நமக்கு அளிக்கும் அறிவுரையின்படியே எதிரியுடன் போரிடுவோம்” என்றான் {கிருஷ்ணன்}.


ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் வீரமகன்களும், வீர வாசுதவேனும் {கிருஷ்ணனும்} இப்படித் தீர்மானித்துக் கொண்டு, அனைவருமாகச் சேர்ந்து, தங்கள் கவசங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றைத் துறந்து, பீஷ்மரின் இருப்பிடத்திற்குச் சென்று, அவரது பாசறைக்குள் நுழைந்து, அனைவரும் தங்கள் சிரங்களைத் தாழ்த்தி அவரை {பீஷ்மரை} வணங்கினார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பாரதர்களின் குலக்காளையை {பீஷ்மரை} வழிபட்ட பாண்டுவின் மகன்கள், தங்கள் சிரங்களால் அவரை {பீஷ்மரை} வணங்கி, அவரது பாதுகாப்பை நாடினார்கள்.

பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட குரு பாட்டன் பீஷ்மர் அவர்களிடம், “ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, உனக்கு நல்வரவு. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா} உனக்கு நல்வரவு. ஓ! நீதிமானான மன்னன் யுதிஷ்டிரா உனக்கும், ஓ! பீமா உனக்கும் நல்வரவு. அசுவினிகளே {நகுல, சகாதேவர்களே} உங்களுக்கும் நல்வரவு. உங்கள் மகிழ்ச்சியைப் பெருக்க இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? அடைவதற்கு மிகக் கடினமானதாக அஃது இருப்பினும், என் முழு ஆன்மாவுடன் அதை நான் செய்வேன்” என்றார் {பீஷ்மர்}.

மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் கூடிய மன்னன் யுதிஷ்டிரன், இத்தகு பாசத்துடன் அவர்களிடம் இப்படி மீண்டும் மீண்டும் பேசிய கங்கையின் மைந்தரிடம் {பீஷ்மரிடம்} அன்பாக இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! அனைத்தையும் அறிந்தவரே, நாங்கள் எவ்வாறு வெற்றியை அடைவோம்? நாங்கள் எவ்வாறு அரசுரிமையை அடைவோம்? இந்த உயிரினங்களின் அழிவை எவ்வாறு நிறுத்த முடியும்? ஓ! தலைவா {பீஷ்மரே}, இவை அனைத்தையும் எனக்குச் சொல்லும். உமது மரணத்திற்கான வழியையும் எங்களுக்குச் சொல்லும்.

ஓ! வீரரே {பீஷ்மரே}, போரில் உம்மை நாங்கள் எவ்வாறு தாங்கிக் கொள்ள இயலும்? ஓ! குருக்களின் பாட்டா {பீஷ்மரே}, உமது எதிரிகள் உம்மைத் தேர்ந்தெடுக்க {குறிவைக்க}, நுண்ணியத் துளையையும் கொடுக்கவில்லை [1]. நீர் போரில் எப்போதும் வட்டமாக வளைக்கப்பட்ட வில்லுடனே காணப்படுகிறீர். நீர் எப்போது உமது கணைகளை எடுக்கிறீர், எப்போது அவற்றைக் குறிபார்க்கிறீர், (அவற்றை ஏவ) எப்போது வில்லை வளைக்கிறீர் என்பதை ஒருவராலும் குறிக்க முடியவில்லை.

[1] வேறொரு பதிப்பில் இந்த வரி, “போரில் பகைவர்கள் உமக்குக் கெடுபெருளை விளைவிக்ககூடிய சிறு காலமும் நேர்வதில்லை” என்று இருக்கிறது.

ஓ! பகைவீரர்களைக் கொல்பவரே {பீஷ்மரே}, தேர்களையும், குதிரைகளையும், மனிதர்களையும், யானைகளையும் (நீர் எப்போதும் அடிப்பது போலவே) தொடர்ந்து அடித்துக் கொண்டு, இரண்டாவது சூரியனைப் போலவே உம்மை உமது தேரில் காண்கிறோம். போரில் கணைமாரியைப் பொழிந்து பெரும் அழிவை ஏற்படுத்தும் உம்மை வீழ்த்தத்தக்க மனிதன் அங்கே {போர்க்களத்தில்} எவன் இருக்கிறான்? ஓ! பாட்டா {பீஷ்மரே}, அரசாட்சி எங்களுடையதாக்குவது எவையோ, இறுதியாக இத்தகு அழிவை எனது படைக்கு நேராமல் தடுப்பது எவையோ, போரில் உம்மை வீழ்த்தக்கூடியவை எவையோ அந்த வழிகளை எனக்குச் சொல்லும்” {என்றான் யுதிஷ்டிரன்}.

ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, இந்த வார்த்தைகள் கேட்ட சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, அந்தப் பாண்டு மகனிடம், “ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நான் உயிரோடு இருக்கும் வரை, ஓ! பெரும் ஞானம் கொண்டவனே {யுதிஷ்டிரா}, போரில் வெற்றி உங்களுடையதாக முடியாது. இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். எனினும், பாண்டு மகன்களே, போராட்டத்தில் நான் வீழ்த்தப்பட்ட பிறகு, போரில் நீங்கள் வெற்றி அடையலாம்.

எனவே, போரில் வெற்றியை நீங்கள் விரும்பினால் தாமதமில்லாமல் என்னை அடிப்பீராக. பிருதையின் {குந்தியின்} மகன்களே, நீங்கள் விரும்பியவாறு என்னை அடிக்க நான் உங்களுக்கு அனுமதி அளிக்கிறேன். நற்பேற்றுச் சூழல் {அதிர்ஷ்டவசம்} என்று நான் எதைக் கருதுகிறேனோ, அதில் {அந்தச் சூழலில்} இப்படி {வெல்லப்பட முடியாதவன் என்று} என்னை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் [2]. நான் கொல்லப்பட்டதும், எஞ்சியவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள். எனவே, நான் சொன்னதைப் போலச் செய்வீராக” என்றார் {பீஷ்மர்}.

[2] நான் வெல்லப்பட முடியாதவன் என நீங்கள் கருதுவது நற்பேற்றுச் சூழலே {அதிர்ஷ்டவசமே}, ஏனெனில், இஃதை அறியாவிட்டால், நீங்கள் தொடர்ந்து நெடுநாள் போரிட்டிருப்பீர்கள், அஃது உயிரினங்களின் பேரழிவுக்குக் காரணமாக அமைந்திருக்கும். நீங்கள் அறிந்ததால், அந்த அழிவு தடுக்கப்படலாம் எனப் பீஷ்மர் சொல்வதாக இங்கே கங்குலி விளக்குகிறார்.

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “கதாயுதம் தரித்த அந்தகனைப் போலக் கோபத்தால் தூண்டப்பட்டுப் போரிடும் உம்மைப் போரில் வீழ்த்தச் செய்பவை எவையோ, அந்த வழிகளை எங்களுக்குச் சொல்லும். வஜ்ரதாரியோ {இந்திரனோ}, வருணனோ, யமனோ வீழ்த்தப்படலாம். எனினும், இந்திரனைத் தலைமையில் கொண்டு, ஒன்று சேர்ந்த தேவாசுரர்களாலேயே போரில் நீர் வீழ்த்தப்பட இயலாதவராவீர்” என்றான் {யுதிஷ்டிரன்}.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாண்டுவின் மகனே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {யுதிஷ்டிரா}, நீ சொல்வது உண்மையே. கையில் ஆயுதங்களுடனும், என் பெரிய வில்லுடனும் போரில் நான் கவனமாகப் போரிட்டால் இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவாசுரர்களாலும் நான் வீழ்த்தப்பட முடியாதவனாவேன். எனினும், நான் என் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டால், இந்தத் தேர்வீரர்களாலும் என்னைக் கொல்ல முடியும்.

தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டவர், கீழே விழுந்தவர், கவசம் நழுவியவர், கொடிமரம் விழுந்தவர், தப்பி ஓடுபவர், அச்சமுற்றவர், “நான் உம்மவன்” என்று சொல்பவர், பெண்ணாக இருப்பவர், பெண் பெயரைத் தாங்கியவர், இனிமேலும் தன்னைத் தானே கவனித்துக் {பாதுகாத்துக்} கொள்ளும் திறன் இல்லாதவர், ஒரே மகனைக் கொண்டவர், அருவருப்பான ஒருவர் ஆகிய இவர்களைப் போன்றோருடன் நான் போரிட விரும்புவதில்லை [3].

[3] வேறொரு பதிப்பில் இந்த வரி, “ஆயுதத்தைக் கீழே வைத்தவன், விழுந்தவன், கவசத்தையும் கொடியையும் இழந்தவன், ஓடுகிறவன், பயந்தவன், “உன்னைச் சேர்ந்தவன் நான்” என்று கூறுபவன், பெண்ணால் வெல்லப்பட்டவன், பெண்ணை முக்கியமாகக் கொண்டவன், பெண் என்று பிரபலமாக அறியப்பட்டவன், பெண், பெண் பெயர் கொண்டவன், அங்கம் குறைந்தவன், ஒரே மகன் உள்ளவன், வாரிசு உண்டாக்காதவன், அலியாக இருப்பவன் ஆகியோரிடத்தில் எனக்குப் போரிட மனம் ஒவ்வாது” என்று பீஷ்மர் சொல்வதாக இருக்கிறது.

ஓ! மன்னா, முன்பே நான் கொண்ட தீர்மானத்தையும் கேட்பாயாக. மங்கலமற்ற சகுனத்தைக் கண்டால், நான் போரிடவே மாட்டேன். உன் படையில் இருப்பவனும், சிகண்டி என்ற பெயரில் அறியப்பட்டவனும், போரில் கோபம் நிறைந்தவனும், துணிச்சல் மிக்கவனும், எப்போதும் வெல்பவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தத் துருபதன் மகன் {சிகண்டி}, முன்பு பெண்ணாக இருந்தவன் ஆவான், ஆனால் அதன்பின் ஆண்மையை அடைந்தான் [4]. இவை யாவும் எப்படி நடந்தன என்ற உண்மையை நீங்கள் அறிவீர்கள்.

[4] வேறொரு பதிப்பில் இந்த வரி, “பெரும் வீரன் எனப் பிரபலமாக அறியப்படாத ஒருவனைக் கண்டு, ஒரு போதும் நான் போர் புரியேன். உன் படையில் உள்ள துருபதன் மகன் சிகண்டி போரில் பொறாமையுள்ளவன்; சூரன்; போரில் பகைவரை வெல்பவன்” என்று இருக்கிறது. மேற்கண்ட கங்குலியின் மொழிபெயர்ப்புக்கும் இதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது.

போரில் துணிவுள்ளவனான அர்ஜுனன், கவசம் தரித்துக் கொண்டு, சிகண்டியைத் தனக்கு முன்னே நிறுத்திக் கொண்டு, தன் கூரிய கணைகளால் என்னைத் தாக்கட்டும். மங்கலமற்ற அந்தச் சகுனம், அதிலும் குறிப்பாக முன்னர்ப் பெண்ணாக இருந்தவனின் வடிவத்தில் {அந்தச் சகுனம்} அங்கிருக்கும்போது, கையில் வில்லையும், கணையையும் கொண்டிருந்தாலும், நான் அவனைத் தாக்க ஒரு போதும் முயல மாட்டேன். ஓ! பாரதர்களின் குலக்காளையே {யுதிஷ்டிரா}, அந்த வாய்ப்பை அடையும், பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் கணைகளால் அனைத்துப் புறங்களிலும் என்னை விரைவாகத் துளைக்கட்டும்.

உயர்ந்த அருளைக் கொண்ட கிருஷ்ணன் மற்றும் பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரைத் தவிர, போரில் என்னைக் கொல்ல இயன்ற ஒருவனை மூவுலகிலும் நான் காணவில்லை. எனவே, பீபத்சு {அர்ஜுனன்}, ஆயுதங்கள் தரித்துக் கொண்டு, போரில் கவனமாகப் போராடிபடி, தன் முன்னிலையில் (சிகண்டி அல்லது) வேறு எதையும் நிறுத்திக் கொண்டு, கையில் உள்ள தன் சிறந்த வில்லால் (என் தேரில் இருந்து) என்னைக் கீழே வீசி எறியட்டும். பிறகு, வெற்றி உறுதியாகும். ஓ! பெரும் மன்னா, ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே {யுதிஷ்டிரா}, நான் உன்னிடம் சொல்லும் இதைச் செய்வாயாக. பிறகு, போரில் கூடியிருக்கும் தார்தராஷ்டிரர்கள் அனைவரையும் உன்னால் கொல்ல இயலும்” என்றார் {பீஷ்மர்}. 


ஆங்கிலத்தில் | In English