Sunday, February 28, 2016

கிருஷ்ணனிடம் ஆலோசித்த யுதிஷ்டிரன்! - பீஷ்ம பர்வம் பகுதி – 108அ

Yudhishthira’s counsel with Krishna! | Bhishma-Parva-Section-108a | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 66)

பதிவின் சுருக்கம் : போரை நிறுத்திய கௌரவர்களும் பாண்டவர்களும்; பீஷ்மரைப் புகழ்ந்த துரியோதனன் மகன்கள்; பாண்டவர்கள் ஒன்று கூடி செய்த ஆலோசனை; கிருஷ்ணனிடம் புலம்பிய யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் கவலைக்கு ஆறுதல் சொன்ன கிருஷ்ணன்; தானே போரிட்டு பீஷ்மரை அழிக்க உத்தரவிடுமாறு யுதிஷ்டிரனைக் கேட்ட கிருஷ்ணன்; கிருஷ்ணன் தான் முன்னர்க் கூறியிருந்தபடியே நீடிக்க வேண்டும் என்ற யுதிஷ்டிரன்; தனக்கும் பீஷ்மருக்கும் முன்பு ஏற்பட்டிருந்த ஓர் ஒப்பந்தத்தைக் குறித்துச் சொல்லும் யுதிஷ்டிரன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அவர்கள் {அந்தக் கௌரவ மற்றும் பாண்டவ வீரர்கள்} போர் புரிந்து கொண்டிருக்கையில், சூரிய மறைவின் உதவியால் சந்திப் பொழுது அங்கே தோன்றியது, {எனவே}, அதற்கு மேலும் போரைக் காண முடியவில்லை. பிறகு, மன்னன் யுதிஷ்டிரன், சந்திப்பொழுது வந்ததையும், பீஷ்மரால் கொல்லப்பட்ட தன் துருப்பினர், தங்கள் ஆயுதங்களை வீசி எறிந்து விட்டு, அச்சத்தால் பீடிக்கப்பட்டுக் களத்தில் இருந்து புறங்காட்டி தப்பி ஓட முயல்வதையும் கண்டு, வலிமைமிக்கத் தேர்வீரரான பீஷ்மர், கோபத்தால் தூண்டப்பட்டு, போரில் அனைவரையும் பீடிப்பதையும் கண்டு, சோமகர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் வீழ்த்தப்பட்டு, அவர்கள் அனைவரும் உற்சாகமிழந்திருப்பதையும் கவனித்து, சிறிது சிந்தித்த பிறகு, அந்தத் துருப்புகளைத் திரும்பும்படி ஆணையிட்டான்.


பிறகு மன்னன் யுதிஷ்டிரன் தன் படைகளைத் திரும்பப் பெற்றான். அதேபோல, உமது படைகளைத் திரும்பப் பெறுதலும் அதே நேரத்தில் நடந்தது. பிறகு, போரில் சிதைக்கப்பட்டவர்களான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், ஓ! குருக்களில் தலைவரே {திருதராஷ்டிரரே}, தங்கள் படைகளைத் திரும்ப அழைத்துக் கொண்டு தங்கள் பாசறைகளுக்குள் நுழைந்தனர். பீஷ்மரின் கணைகளால் பீடிக்கப்பட்ட பாண்டவர்கள், போரில் அந்த வீரரின் {பீஷ்மரின்} சாதனைகளை நினைவுகூர்ந்தபடி மன அமைதியை  இழந்தனர். பீஷ்மரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போரில் பாண்டவர்களையும், சிருஞ்சயர்களை வீழ்த்தியபிறகு, உமது மகன்களால் வழிபடப்பட்டு, அவர்களால் புகழவும் பட்டார். மகிழ்ச்சி மிக்கக் குருக்களோடு {கௌரவர்களோடு} அவர் {பீஷ்மர்} தன் பாசறைக்குள் நுழைந்தார்.

பிறகு உயிரினங்கள் அனைத்தின் உணர்வுகளையும் இழக்கச் செய்யும் இரவும் வந்தது. அப்போது அந்த இரவின் கடும்பொழுதில், பாண்டவர்கள், விருஷ்ணிகள், வெல்லப்படமுடியாதவர்களான சிருஞ்சயர்கள் ஆகியோர் ஒரு கலந்தாய்வுக்காக {ஆலோசனைக்காக} அமர்ந்தனர். சபையில் தீர்மானங்களை எட்டுவதில் திறம்பெற்றவர்களான அந்த வலிமைமிக்க நபர்கள் அனைவரும், தங்கள் சூழ்நிலையின் பார்வையில் எது உடனடி நன்மையை அளிக்கும் என நிதானமாகக் கலந்தாய்ந்தனர்.

பிறகு மன்னன் யுதிஷ்டிரன், நெடுநேரம் சிந்தித்தபிறகு, தன் கண்களை வாசுதேவன் {கிருஷ்ணன்} மேல் செலுத்தி இந்த வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! கிருஷ்ணா, கடும் ஆற்றலைக் கொண்ட உயர் ஆன்ம பீஷ்மரைப் பார். கோரைப்புல் காடு ஒன்றை நசுக்கும் யானையைப் போல என் துருப்புகளை அவர் {பீஷ்மர்} நசுக்குகிறார். அந்த உயர் ஆன்ம வீரரைக் காண்பதற்கும் நாம் துணியவில்லை. மூண்டெழும் காட்டுத்தீயைப் போல அவர் {பீஷ்மர்} எனது துருப்புகளை நக்குகிறார் {துடைத்தழிக்கிறார்}. கூரிய ஆயுதங்களைக் கொண்ட வீரப் பீஷ்மர், போரில் கோபத்தால் தூண்டப்பட்டு, கையில் வில் பிடித்துக் கணைகளை ஏவும்போது, கடும் நச்சுக் கொண்ட வலிமைமிக்க நாகன் தக்ஷகனைப் போலக் கடுமையாகிறார்.

உண்மையில், கோபக்கார யமனோ, வஜ்ரத்தைத் தரித்திருக்கும் தேவர்களின் தலைவனோ {இந்திரனோ}, கையில் சுருக்குக் கயிற்றை {பாசத்தைக்} கொண்ட வருணனோ, கதாயுதம் தரித்த யக்ஷர்களின் தலைவனோ {குபேரனோ} கூட வீழ்த்தப்பட இயன்றவர்களே. ஆனால் கோபம் தூண்டப்பட்ட பீஷ்மர், போரில் வெல்லப்பட இயலாதவராவார். வழக்கு இதுவாயிருக்கையில், ஓ! கிருஷ்ணா, என் புரிதலில் உள்ள பலவீனத்தினால், நான் போரில் பீஷ்மரை (எதிரியாக) அடைந்து துன்பக்கடலில் மூழ்கிவிட்டேன்.

ஓ! வெல்லப்பட முடியாதவனே {கிருஷ்ணா}, நான் காட்டுக்குள் ஓயப் போகிறேன் {காட்டிற்கே செல்கிறேன்}. ஓ! கிருஷ்ணா, போரை நான் இனியும் விரும்பவில்லை. பீஷ்மர் எப்போதும் நம்மைக் கொல்கிறார். சுடர்விடும் நெருப்புக்குள் விரையும் பூச்சியொன்று மரணத்தைச் சந்திப்பதைப் போல, நானும் பீஷ்மரை நோக்கி விரைந்தேன். ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, என் அரசாட்சிக்காக {நாட்டுக்காக} ஆற்றலை முன்வைத்த நான், ஐயோ, அழிவையே அடைந்தேன்.

துணிவுமிக்க என் தம்பிகள் அனைவரும் கணைகளால் பெரிதும் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் அண்ணனான என் மீது அவர்கள் கொண்ட பாசத்தின் விளைவால், அவர்கள் அரசாட்சியை இழந்து காட்டுக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, என்னாலேயே கிருஷ்ணை {திரௌபதி} இத்தகுத் துயரத்தில் மூழ்கியிருக்கிறாள். உயிரானது உயர்ந்த மதிப்பைக் கொண்டது என நான் கருதுகிறேன். உண்மையில், அந்த உயிரும் காக்கப்படுவது கடினம் என இப்போது தெரிகிறது. (என்னால் அந்த உயிரைக் காக்க முடிந்தால்), எஞ்சிய பின்னதை {வாழ்நாளை} சிறந்த அறப்பயிற்சியில் கழிக்கப் போகிறேன் {தர்மத்தை அனுஷ்டிக்கப் போகிறேன்}.

ஓ! கேசவா {கிருஷ்ணா}, என் தம்பிகளுடன் கூடிய நான், உனது உதவிக்குத் {தயவுக்குத்} தகுந்தவனானால், ஓ! கிருஷ்ணா, என் {க்ஷத்திரிய} வகைக்கான கடமைகளை மீறாமல் என் நன்மைக்கானது எது என்பதை எனக்குச் சொல்வாயாக” {என்றான் யுதிஷ்டிரன்}.

(நிலைமையை விளக்கும்) அவனது {யுதிஷ்டிரனது} வார்த்தைகளை விரிவாகக் கேட்ட கிருஷ்ணன், கருணையினால், யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் மறுமொழியாக இந்த வார்த்தைகளைச் சொன்னார், “ஓ! தர்மனின் மகனே, ஓ! உண்மையில் உறுதியாக இருப்பவரே {யுதிஷ்டிரரே}, எதிரிகளைக் கொல்பவர்களான இந்த வெல்லப்பட முடியாத வீரர்களை உமது தம்பியாகக் கொண்ட நீர் துயரடையாதீர். அர்ஜுனன், பீமசேனர் ஆகியோர் அக்னி மற்றும் வாயுவின் சக்தியைக் கொண்டவர்களாவர். மாத்ரியின் மகன்கள் {நகுலன், சகாதேவன்} இருவரும் தேவர்களின் தலைவனைப் {இந்திரனைப்} போன்ற வீரத்தைக் கொண்டவர்களாவர்.

நமக்குள் நிலவும் நல்ல புரிதலின் மூலம் நீர் என்னையும் இந்தப் பணியில் நிறுவுவீராக. ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, நானும் பீஷ்மருடன் போரிடுவேன். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, உம்மால் வழிநடத்தப்பட்டால் பெரும்போரில் என்னால் செய்ய முடியாதது அங்கே என்ன இருக்கிறது? மனிதர்களில் காளையான அந்தப் பீஷ்மரைக் கொல்லப் பல்குனன் {அர்ஜுனன்} விரும்பாவிட்டால், அவரைச் சவாலுக்கழைக்கும் நான், தார்தராஷ்டிரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே போரில் அவரைக் {பீஷ்மரைக்} கொல்வேன். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, வீரப் பீஷ்மரின் படுகொலையால் வெற்றி உறுதி என நீர் கண்டால், நானே தனித்தேரில் சென்று, அந்தக் குருக்களின் முதிர்ந்த பாட்டனைக் {பீஷ்மரைக்} கொல்வேன்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, போரில் மகேந்திரனுக்கு இணையான என் ஆற்றலைக் காண்பீராக. எப்போதும் வலிமைமிக்க ஆயுதங்களையே ஏவும் அந்த வீரரை {பீஷ்மரை}, அவரது தேரில் இருந்து நான் வீழ்த்துவேன். பாண்டுவின் மகன்களுக்கு எவன் எதிரியோ, அவன் என் எதிரியுமாவான் என்பதில் ஐயமில்லை. யாரெல்லாம் உம்முடையவர்களோ {உமது எதிரிகளோ} அவர்கள் எனதுமாவார்கள் {என்னுடைய எதிரிகளுமாவர்}, அதே போல யாரெல்லாம் என்னுடையவர்களோ {எனது எதிரிகளோ} அவர்கள் உம்முடையவர்களுமாவர்கள் {உமது எதிரிகளுமாவார்கள்} [1]. உமது தம்பி (அர்ஜுனன்}, என் நண்பனும், உறவினனும், சீடனுமாவான். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நான் அர்ஜுனனுக்காக என் சதைகளையே கூட அறுத்துக் கொடுப்பேன். மனிதர்களில் புலியான இவனும் {அர்ஜுனனும்}, எனக்காகத் தன் உயிரையே விடுவான். ஓ! ஐயா {யுதிஷ்டிரரே}, ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்வோம் என்பதே நமது புரிந்துணர்வாகும் {ஒப்பந்தம்}. எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, எவ்வழியில் {எவ்வகையில்} நான் போரிட வேண்டும் என்று எனக்கு ஆணையிடுவீராக.

[1] வேறு ஒரு பதிப்பில் இந்த வரி, “எவை உமது பொருட்களோ அவை என்னுடையவையே. எவை என்னுடைய பொருள்களோ அவை உம்முடையவையே” என்று இருக்கிறது.

முன்னர், உபப்லாவ்யத்தில், பலரின் முன்னிலையில் பார்த்தன் {அர்ஜுனன்}, “கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நான் கொல்வேன்” என்று சூளுரைத்தான் {உறுதியேற்றான்}. புத்திசாலி பார்த்தனின் {அர்ஜுனனின்} இவ்வார்த்தைகளை (நடைமுறையில்) பின்பற்ற வேண்டும். உண்மையில், பார்த்தன் {அர்ஜுனன்} என்னை வேண்டினால், அந்தச் சூளை {உறுதியை} நான் நிறைவேற்றுவேன் என்பதில் ஐயமில்லை. அல்லது, இது போரில் பல்குனனின் {அர்ஜுனனின்} பணியாகவே இருக்கட்டும். இஃது அவனுக்குப் {அர்ஜுனனுக்கு} பாரமானதில்லை. பகை நகரங்களை அடக்குபவரான பீஷ்மரை அவன் கொல்வான். வேகமாகச் செயல்படும் தேவர்களையும், அவர்களோடு தைத்தியர்களையும், தானவர்களையும் போரில் அர்ஜுனனால் கொல்ல முடியும்.

எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பீஷ்மரைக் குறித்து என்ன சொல்லப்பட வேண்டும்? பெரும் சக்தி கொண்டவரான சந்தனுவின் மகன் பீஷ்மர், நீதிநெறிபிறழ்ந்து, புத்திக் கூர்மை சிதைந்து, சிற்றறிவு படைத்தவராக, தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதிருக்கிறார் என்பதில் ஐயமில்லை” {என்றான் கிருஷ்ணன்}.

கிருஷ்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! மதுகுலத்தோனே {கிருஷ்ணா}, நீ சொல்வது போலவே இஃது இருக்கிறது. இவை அனைத்தும் சேர்ந்தாலும் உன் சக்தியை இவற்றால் தாங்க இயலாது. ஓ! மனிதர்களில் புலியே {கிருஷ்ணா}, நான் எதை விரும்பினாலும், என் தரப்பில் நான் உன்னைக் கொண்டிருக்கிறேன் என்பதில் எப்போதும் உறுதியாக இருக்கிறேன். ஓ! வெற்றியாளர்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, என் பாதுகாவலனாக உன்னைக் கொண்ட நான், ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களையே கூட வெற்றி கொள்வேன்.

எனவே, பீஷ்மர் வலிமைமிக்கத் தேர்வீரராக இருந்தாலும், {அவரைக் குறித்து} நான் என்ன சொல்ல முடியும்? ஆனால், ஓ! கிருஷ்ணா, என் மகிமைக்காக {சுய புகழுக்காக}, நான் உன் வார்த்தைகளைப் பொய்யாக்கத் துணிய மாட்டேன். எனவே, ஓ! மாதவா {கிருஷ்ணா}, உன்னால் முன்பே உறுதிகூறப்பட்டபடி, எனக்காகப் போரிடாமலே எனக்கு உதவியைத் தருவாயாக.

இந்தப் போரில், பீஷ்மருடன் நான் ஓர் ஒப்பந்தத்தைச் செய்துள்ளேன். அவர் {பீஷ்மர்}, “துரியோதனனுக்காக நான் போரிட வேண்டியிருப்பதால், நான் உனக்கு ஆலோசனை வழங்குவேனேயன்றி, உனக்காக ஒருபோதும் போரிட மாட்டேன். இஃதை உண்மையென்றே அறிவாயாக” என்று சொன்னார். எனவே, ஓ! தலைவா {கிருஷ்ணா}, எனக்கு நல்ல ஆலோசனையை வழங்குவதால், ஓ! மாதவா {கிருஷ்ணா}, பீஷ்மரால் எனக்கு அரசாட்சியைக் {நாட்டைக்} கொடுக்க முடியும். ஆதலால், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, உன்னுடன் சேர்ந்த நாமனைவரும், மீண்டும் தேவவிரதரிடம் {பீஷ்மரிடம்} அவரது மரணத்திற்கான வழி குறித்துக் கேட்பதற்காகச் செல்வோமாக.

பிறகு, ஓ! மனிதர்களில் சிறந்தவனே {கிருஷ்ணா}, நாமனைவரும் தாமதமில்லாமல் பீஷ்மரிடம் ஒன்றாகச் சென்று, அந்தக் குரு குலத்தோனின் {பீஷ்மரின்} அறிவுரையை விரைவாகக் கேட்போம். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அவர் நல்ல ஆலோசனையை நமக்கு உண்மையில் தருவார்; மேலும், ஓ! கிருஷ்ணா, அவர் சொல்வதை நான் போரில் செய்வேன். தவ நோன்புகளைக் கொண்ட அவர் {பீஷ்மர்} நமக்கு ஆலோசனையையும், வெற்றியையும் தருவார்.

நாங்கள் குழந்தைகளாகவும், அநாதைகளாகவும் இருந்தோம். அவராலேயே {பீஷ்மராலேயே} நாங்கள் வளர்க்கப்பட்டோம். ஓ! மாதவா {கிருஷ்ணா}, எங்கள் முதிர்ந்த பாட்டனான; எங்கள் தந்தைக்குத் தந்தையான அவரை {பீஷ்மரை} நான் கொல்ல விரும்புகிறேன். ஓ! க்ஷத்திரியத் தொழிலை நிந்திக்க வேண்டும்” என்றான் {யுதிஷ்டிரன்}.


ஆங்கிலத்தில் | In English