Friday, March 18, 2016

பீஷ்மர் ஏற்படுத்திய அழிவு! - பீஷ்ம பர்வம் பகுதி – 119

The destruction cause by Bhishma! | Bhishma-Parva-Section-119 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 77)

பதிவின் சுருக்கம் : பாண்டவப் படையை நடுங்கச் செய்த கௌரவ வீரர்களும், பீஷ்மரும்; கௌரவப் படையினருக்கு அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு;  பாண்டவப் படையைத் தூண்டிய திருஷ்டத்யும்னன்; பத்தாம் நாள் போரில் பீஷ்மர் உண்டாக்கிய பேரழிவு; சதாநீகனைக் கொன்ற பீஷ்மர்; பீஷ்மருக்கு எதிராக அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்; பீஷ்மரை மட்டுமே எதிர்த்து விரைந்த பாண்டவ வீரர்கள்; பீஷ்மரை மீண்டும் மீண்டும் துளைத்த அர்ஜுனன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “எண்ணிக்கையில் வலுவான இரண்டு படைகளின் போராளிகளும், போர்வியூகத்தில் இப்படி நின்றிருந்த போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பின்வாங்காதவர்களான அந்த வீரர்கள் அனைவரும் பிரம்மலோகத்தில் தங்கள் இதயங்களை நிலைநிறுத்தினர் [1]. தொடர்ந்து நடந்த பொதுவான மோதலில், ஒரு வகுப்பைச் சேர்ந்த போராளிகள், அதே வகுப்பைச் சேர்ந்தோருடன் போரிடவில்லை. தேர்வீரர்கள் தேர்வீரர்களோடும், காலாட்படை வீரர்கள், காலாட்படை வீரர்களோடும், குதிரைவீரர்கள் குதிரைவீரர்களோடும், யானை வீரர்கள் யானைவீரர்களோடும் போரிடவில்லை. மறுபுறம், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போராளிகள், பைத்தியக்காரர்களைப் போல ஒருவரோடொருவர் போரிட்டனர். அந்த இருபடைகளையும் அடைந்த பேரிடர் பெரியதாகவும் பயங்கரமானதாகவும் இருந்தது. அந்தக் கடும் படுகொலையில் யானைகளும், மனிதர்களும் களத்தில் தங்களைப் பரப்பிக் கொண்ட போது, அவர்கள் கண்மூடித்தனமாகப் போரிட்டதால், அவர்களுக்குள் இருந்த வேறுபாடுகள் அனைத்தும் இல்லாமல் போனது.


[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, “படைகளில் நன்றாக அணிவகுக்கப்படாமல், பெரும்பான்மையாக ஒன்றையொன்று அனுசரித்து நிற்குமளவில் அனைவரும் பிரம்மலோகத்தை அடைவதில் பற்றுள்ளவர்களானார்கள்” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் இவ்வரி, “எண்ணிக்கையில் பலமானவையும், போருக்காக அணிவகுக்கப்பட்டவையுமான இரு படைப்பிரிவுகளும், ஒன்றையொன்று சந்தித்தபோது, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, பின்வாங்காதவர்களான வீரர்கள் அனைவரும், பிரம்மனின் உலகங்களை நோக்கமாகக் கொண்டு போருக்கு விரைந்தனர்” என்று இருக்கிறது

சல்லியன், கிருபர், சித்திரசேனன், துச்சாசனன், விகர்ணன் ஆகிய வீரர்கள் பிரகாசமான தங்கள் தேர்களில் ஏறி, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டவப் படையை நடுங்கச் செய்தனர். அந்த உயர் ஆன்ம போர்வீரர்களால் போரில் கொல்லப்பட்ட அந்தப் பாண்டவப் படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காற்றால் புரட்டப்படும் நீரில் உள்ள படகைப் போலப் பல்வேறு வழிகளில் சுழலத் தொடங்கியது. குளிர்காலத்தின் குளுமை விரைவாகப் பசுக்களை வெட்டுவதை {சதைகளைப் பிளப்பதைப்} போலவே, பீஷ்மரும் பாண்டுவின் மகன்களை விரைவாக வெட்டினார்.

மேலும், உமது படையைப் பொறுத்தவரை, புதிதாக எழுந்த மேகங்களைப் போலத் தெரிந்த பல யானைகள், சிறப்புமிக்கப் பார்த்தனால் {அர்ஜுனனால்} வீழ்த்தப்பட்டன. போர்வீரர்களில் முதன்மையானோர் பலரும் அந்த வீரனால் {அர்ஜுனனால்} நசுக்கப்படுவது தெரிந்தது. ஆயிரக்கணக்கான கணைகளாலும், நாராசங்களாலும் தாக்கப்பட்டுப் பெரும் யானைகள் பல வலியால் பயங்கரமாகப் பிளிறிபடி கீழே விழுந்தன. சிதறிக் கிடந்தவையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தவையுமான உயிரிழந்த உயர் ஆன்ம வீரர்களின் உடல்களுடனும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகளுடனும் அந்தப் போர்க்களம் அழகாகத் தெரிந்தது.

பெரும் வீரர்களின் அழிவுக்கான அந்தப் போரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரும், பாண்டுவின் மகனானத் தனஞ்சயனும் {அர்ஜுனனும்} தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தியபோது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் துருப்புகள் அனைத்தின் தலைமையில் நின்று கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்த பாட்டனை {பீஷ்மரைக்} கண்ட உமது மகன்கள் அவரை அணுகினர். போரில் தங்கள் உயிர்களை விட விரும்பி, சொர்க்கத்தையே தங்கள் இலக்காகக் கொண்ட அவர்கள், பெரும் படுகொலைகள் நிறைந்த அந்தப் போரில் பாண்டவர்களை அணுகினர். துணிவுமிக்கப் பாண்டவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முன்னர் உம்மாலும், உமது மகனாலும் {துரியோதனனாலும்} தங்கள் மீது சுமத்தப்பட்ட பல்வேறு விதங்களிலான தீங்குகள் பலவற்றை மனதில் தாங்கி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அச்சங்கள் அனைத்தையும் விலக்கி, உயர்ந்த சொர்க்கங்களை வெல்லும் ஆவலில் உமது மகனோடும், உமது படையின் வீரர்கள் பிறருடனும் மகிழ்ச்சியாகப் போரிட்டனர்.

பிறகு பாண்டவப் படையின் படைத்தலைவனான வலிமைமிக்கத் தேர்வீரன் திருஷ்டத்யும்னன், தன் படைவீரர்களிடம், “சிருஞ்சயர்களுடன் கூடிய சோமகர்களே, கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி விரைவீராக” என்றான். தங்கள் படைத்தலைவனின் வார்த்தைகளைக் கேட்ட சோமகர்களும், சிருஞ்சயர்களும், கணைகளின் மழையால் பீடிக்கப்பட்டாலும், கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தனர். இப்படித் தாக்கப்பட்ட உமது தந்தை பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டுச் சிருஞ்சயர்களோடு போரிடத் தொடங்கினார்.

பழங்காலத்தில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, புத்திசாலியான ராமர் {பரசுராமர்}, பகையணிகளுக்கு அழிவைத் தரும் ஆயுதங்களின் கல்வியைப் பெரும் சாதனைகளைக் கொண்ட பீஷ்மருக்கு அளித்தார். அந்தக் கல்வியைக் கொண்டு, எதிரியின் துருப்புகளுக்கு மத்தியில் பெரும் அழிவை ஏற்படுத்திய, பகைவீரர்களைக் கொல்பவரான முதிர்ந்த குரு பாட்டன் பீஷ்மர் நாளுக்கு நாள் பத்தாயிரம் ரத வீரர்களை {தேர்வீரர்களைக்} கொன்றார்.

எனினும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்தப் {போரின்} பத்தாம் {10} நாளில்,  பீஷ்மர், தனியாளாகவே பத்தாயிரம் யானைகளைக் கொன்றார். பிறகு, மத்ஸ்யர்களுக்கும், பாஞ்சாலர்களுக்கும் மத்தியில் இருந்த பெரும் தேர்வீரர்கள் {மகாரதர்கள்} எழுவரையும் கொன்றார். இவை அனைத்திற்கும் மேலாக, அந்தப் பயங்கர போரில், ஐயாயிரம் {5000} காலாட்படை வீரர்களும், தந்தங்களைக் கொண்ட ஓராயிரம் {1000} யானைகளும், பத்தாயிரம் {10000} குதிரைகளும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கல்வியால் அடையப்பட்ட திறமையின் மூலம் உமது தந்தையால் {பீஷ்மரால்} கொல்லப்பட்டன [2].

[2] வேறொரு பதிப்பில் இந்தப் பத்தி, “அந்தப் பத்தாவது நாள் வந்தவுடன், பெரிய பாட்டனாரான பீஷ்மர் தாம் ஒருவராகவே போரில் மாத்ஸ்யர்களின் படைகளிலும், பாஞ்சாலர்களின் படைகளிலும் உள்ள கணக்கிலடங்காத யானைகளையும், குதிரைகளையும் கொன்று, ஏழு மகாரதர்களையும், ஐயாயிரம் ரதிகர்களையும், பதினாலாயிரம் காலாட்களையும் கொன்றார். மனிதர்களின் தலைவா, உமது தகப்பனரான பீஷ்மர், அந்தப் போரில் பல்லாயிரம் யானைகளையும், பதினாயிரம் குதிரைகளையும் பயிற்சியின் பலத்தால் கொன்றார்” என்று இருக்கிறது. மன்மத நாத தத்தரின் பதிப்பில் இந்தப் பத்தி, “On that the tenth day of the battle, O foremost of the Bharatas, from among the Matsyas and the Panchalas, Bhishma, single handed, Having slain ten thousan elephants, slew also seven mighty car-warriors. Then the great gransire also slew five thousand car-warriors. In that fierce battle in addition to all this, fourteen thousand foot-soldiers, one thousand elephants, and ten thousand steeds were slain, O ruler of men, by your father, through his superior education.” அஃதாவது “அந்தப் பத்தாம் நாள் போரில், ஓ பாரதர்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, பீஷ்மர் தனியாளாக, மத்ஸ்யர்களுக்கும் பாஞ்சாலர்களுக்கும் மத்தியில் இருந்த பத்தாயிரம் யானைகளைக் கொன்று, ஏழு வலிமைமிக்கத் தேர்வீரர்களையும் கொன்றார். பிறகு அந்தப் பெரும்பாட்டன் {பீஷ்மர்}, ஐயாயிரம் தேர்வீரர்களையும் கொன்றார். இவை அனைத்துக்கும் மேலாக, ஓ மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, உமது தந்தையின் {பீஷ்மரின்} கல்வியின் மேன்மையால், பதினாலாயிரம் காலாட்படை வீரர்களும், ஓராயிரம் யானைகளும், பத்தாயிரம் குதிரைகளும் அந்தப் பெரும்போரில் கொல்லப்பட்டன” என்று இருக்கிறது. மூன்று பதிப்புகளிலும் எண்ணிக்கைகள் வேறுபடுகின்றன.

மன்னர்கள் அனைவரின் படையணிகளை மெலிதாக்கிய {குறைத்த} அவர் {பீஷ்மர்}, விராடனின் அன்புக்குரிய தம்பி சதாநீகனைக் கொன்றார். அந்த வீரப் பீஷ்மர், போரில் சதாநீகனைக் கொன்று, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் பல்லங்களால் முழுமையாக ஓராயிரம் க்ஷத்திரியர்களைக் கொன்றார். இவற்றைத் தவிர, தனஞ்சயனை {அர்ஜுனனைப்} பின்தொடர்ந்து வந்த பாண்டவப் படையின் க்ஷத்திரியர்கள் அனைவரும் பீஷ்மரை அடைந்ததுமே {அவர்கள்} யமோலோகம் செல்ல வேண்டியிருந்தது. போரில் கௌரவப் படையின் தலைமையில் நின்ற பீஷ்மர், கணைகளின் மழைகளால் பாண்டவப் படையின் அனைத்துப் பக்கங்களையும் மறைத்தார். பத்தாம் நாளில் கையில் வில்லுடன், இரு படைகளுக்கும் மத்தியில் நின்று கொண்டு மகத்தான சாதனைகளை அடைந்து, கோடை வானின் வெப்பமான நடுநாள் {மத்திய வேளை} சூரியனைப் போல இருந்ததால், அவரை {பீஷ்மரை}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னர்கள் எவராலும் காணவும் முடியவில்லை. போரில் தைத்திய படையை எரிக்கும் சக்ரனை {இந்திரனைப்} போலவே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீஷ்மரும் பாண்டவப் படையை எரித்தார்.

தன் ஆற்றலை இப்படி வெளிப்படுத்தும் அவரை {பீஷ்மரைக்} கண்ட மதுசூதனனான தேவகியின் மகன் {கிருஷ்ணன்}, மகிழ்ச்சியுடன் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, “{அதோ} இரு படைகளுக்கும் மத்தியில் சந்தனுவின் மகனான பீஷ்மர் நிற்கிறார். உனது வலிமையை வெளிப்படுத்தி அவரை {பீஷ்மரைக்} கொன்றால், நீ வெற்றியை அடையலாம். அங்கே, அந்த இடத்தில், நமது படைகளை அவர் பிளக்கும்போது, உன் பலத்தை வெளிப்படுத்தி அவரைத் தடுப்பாயாக. ஓ! தலைவா {அர்ஜுனா}, உன்னையன்றி வேறு எவனும் பீஷ்மரின் கணைகளைத் தாங்கத் துணிய மாட்டான்” என்றான் {கிருஷ்ணன்}.

இப்படித் தூண்டப்பட்ட குரங்குக் கொடியோன் அர்ஜுனன், அந்தக் கணத்திலேயே தன் கணைகளின் மூலம் பீஷ்மரின் தேர், குதிரைகள், கொடிமரம் ஆகியவற்றோடு அவரையும் {பீஷ்மரையும்} மறையச் செய்தான். எனினும், குருக்களில் முதன்மையானவரான அந்தக் காளை {பீஷ்மர்}, தன் கணை மழையின் மூலம், பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஏவிய கணைகளின் மழையைத் துளைத்தார் {தடுத்தார்}. பிறகு, பாஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்}, {சேதி மன்னனான} வீர திருஷ்டகேது, பாண்டுவின் மகனான பீமசேனன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், இரட்டையர்கள் (நகுலன் மற்றும் சகாதேவன்), சேகிதானன், கைகேயச் சகோதரர்கள் ஐவர், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சாத்யகி, சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, கடோத்கசன், திரௌபதியின் (ஐந்து) மகன்கள், சிகண்டி, வீரக் குந்திபோஜன், {பாண்டவத் தரப்பைச் சேர்ந்த} சுசர்மன், விராடன் ஆகியோரும், பாண்டவப் படையின் பலமிக்கப் போர்வீரர்கள் பலரும் பீஷ்மரின் கணைகளால் பீடிக்கப்பட்டு, துன்பக்கடலில் மூழ்குவதாகத் தெரிந்தது, எனினும், பல்குனன் {அர்ஜுனன்}, அவர்கள் அனைவரையும் காப்பாற்றினான்.

பிறகு, சிகண்டி, வலிமைமிக்க ஆயுதம் ஒன்றை எடுத்துக் கொண்டு, கிரீடியால் {அர்ஜுனனால்} பாதுகாக்கப்பட்டு, பீஷ்மரை மட்டுமே நோக்கி மூர்க்கமாக விரைந்தான். வெல்லப்பட முடியாதவனான பீபத்சு {அர்ஜுனன்}, எதன் பிறகு எதைச் செய்ய வேண்டும் என்பதை அறிந்து, பீஷ்மரைப் பின்தொடர்ந்தோர் அனைவரையும் கொன்று அதன் பிறகு அவரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தான். சாத்யகி, சேகிதானன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், விராடன், துருபதன், பாண்டுவின் மூலமான மாத்ரியின் இரட்டை மகன்கள் ஆகிய அனைவரும் உறுதிமிக்க அந்த வில்லாளியால் (அர்ஜுனனால்) பாதுகாக்கப்பட்டு, அந்தப் போரில் பீஷ்மரை மட்டுமே எதிர்த்து விரைந்தனர்.

அபிமன்யு, திரௌபதியின் மகன்கள் ஐவர் ஆகியோரும் வலிமைமிக்க ஆயுதங்களை உயர்த்திக் கொண்டு போரில் பீஷ்மருக்கு எதிராக விரைந்தனர். போரில் பின்வாங்காதவர்களான அந்த வலிமைமிக்க வில்லாளிகளான அனைவரும், நன்கு குறிபார்க்கப்பட்ட கணைகளால் பீஷ்மரின் உடலில் பல்வேறு பகுதிகளில் துளைத்தனர். பாண்டவப் படையைச் சேர்ந்த அந்த இளவரசர்களில் முதன்மையானோரால் ஏவப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான அந்தக் கணைகள் அனைத்தையும் அலட்சியம் செய்தவரும், கலக்கமில்லா ஆன்மா கொண்டவருமான பீஷ்மர், பாண்டவப் படையணிக்குள் ஊடுருவினார்.

ஏதோ எந்நேரமும் விளையாடுபவரைப் போல இருந்த பாட்டன் {பீஷ்மர்}, அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்தார். பாஞ்சால இளவரசனான சிகண்டியை அடிக்கடி பார்த்துச் சிரித்து, அவனது பெண்தன்மையை நினைவுகூர்ந்த அவர் {பீஷ்மர்}, அவனை {சிகண்டியை} நோக்கி ஒரு கணையைக் கூடக் குறிப் பார்க்காமல் இருந்தார். மறுபுறம் அவர் {பீஷ்மர்}, துருபதனின் படைப்பிரிவைச் சேர்ந்த பெரும் தேர்வீரர்கள் எழுவரைக் கொன்றார்.

பிறகு, அந்தத் தனி வீரரை {பீஷ்மரை} எதிர்த்து விரைந்த மத்ஸ்யர்கள், பாஞ்சாலர்கள், சேதிகள் ஆகியோருக்கு மத்தியில் குழப்பமான துயரக் குரல்கள் எழுந்தன. அவர்கள் {பாண்டவப் படையினர்}, பெரும் எண்ணிக்கையிலான காலாட்படைவீரர்கள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றுடனும், கணைகளின் மழைகளுடனும், ஓ! எதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே}, பகலை உண்டாக்குபவனை மறைக்கும் மேகங்களைப் போலத் தனி வீரரும், எதிரிகளை எரிப்பவரும், பாகீரதியின் {கங்கையின்} மகனுமான பீஷ்மரைப் மறைத்தனர்.

பிறகு, பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போருக்கு ஒப்பான, அவருக்கும் {பீஷ்மருக்கும்}, அவர்களுக்கும் {பாண்டவப் படையினருக்கும்} இடையிலான அந்தப் போரில், கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்), தன் முன்னிலையில் சிகண்டியை நிறுத்திக் கொண்டு, பீஷ்மரை (மீண்டும் மீண்டும்) துளைத்தான்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English