Thursday, March 17, 2016

துச்சாசனனை முறியடித்த அர்ஜுனன்! - பீஷ்ம பர்வம் பகுதி – 118

Arjuna routed Dussasana! | Bhishma-Parva-Section-118 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 76)

பதிவின் சுருக்கம் : பீஷ்மரைத் துளைத்த சிகண்டி; சிகண்டியைத் தூண்டிய அர்ஜுனன்; சிகண்டியை அலட்சியம் செய்த பீஷ்மர்; துச்சாசனன் வெளிப்படுத்திய ஆற்றல்; துச்சாசனனை வீழ்த்திய அர்ஜுனன்;  படைவீரர்களுடன் பேசிய துரியோதனன்; துச்சாசனனின் குதிரைகளையும், தேரோட்டியையும் வீழ்த்திய அர்ஜுனன்; அர்ஜுனனிடம் வீழ்ந்த  கிருபர், சல்லியன், துச்சாசனன், விகர்ணன், விவிம்சதி ஆகியோர் களத்தில் இருந்து தப்பி ஓடியது; அர்ஜுனனின் ஆற்றல்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, போரில் பீஷ்மரை அணுகிய சிகண்டி, பத்து பல்லங்களால் அவரது {பீஷ்மரின்} நடுமார்பைத் தாக்கினான். எனினும், அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கோபத்துடன் பாஞ்சால இளவரசனான சிகண்டியைப் பார்வையால் எரித்துவிடுவதைப் போலப் பார்க்க மட்டுமே செய்தார். அவனது பெண்தன்மையை நினைவுகூர்ந்த பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனைத் தாக்காதிருந்தார். எனினும், சிகண்டி அதைப் புரிந்து கொள்ளவில்லை.


பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன் சிகண்டியிடம், “வேகமாக விரைந்து பாட்டனைக் {பீஷ்மரைக்} கொல்வாயாக. ஓ! வீரா {சிகண்டியே}, உனக்குச் சொல்ல என்ன தேவையிருக்கிறது? வலிமைமிக்கத் தேர்வீரரான பீஷ்மரைக் கொல்வாயாக. ஓ! மனிதர்களில் புலியே {சிகண்டியே}, போரில் பீஷ்மருடன் போரிடத் தகுந்த வேறெந்த வீரனையும் நான் யுதிஷ்டிரரின் படையில் காணவில்லை. இதை நான் உண்மையாகவே சொல்கிறேன்” என்றான்.

இப்படிப் பார்த்தனால் சொல்லப்பட்ட சிகண்டி, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பல்வேறு விதங்களிலான ஆயுதங்களால் பாட்டனை {பீஷ்மரை} விரைவாக மறைத்தான். அந்தக் கணைகளை அலட்சியம் செய்த உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, தன் கணைகளைக் கொண்டு அந்தப் போரில் கோபக்கார அர்ஜுனனை மட்டுமே தடுத்தார்.

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர் {பீஷ்மர்}, கூர்முனை கொண்ட தன் கணைகளால் பாண்டவர்களின் மொத்த படையையும் அடுத்து உலகத்திற்கு அனுப்பத் தொடங்கினார். அதே போலப் பாண்டவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் பெரிய படையால் ஆதரிக்கப்பட்டு, பகலை உண்டாக்குபவனை {சூரியனை} மறைக்கும் மேகங்களைப் போலப் பீஷ்மரை மூழ்கடிக்கத் தொடங்கினர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டிருந்த அந்தப் பாரத வீரர் {பீஷ்மர்}, (எண்ணற்ற மரங்களை) எரிக்கும் காட்டுத்தீயைப் போலத் துணிவுமிக்க வீரர்கள் பலரை எரித்தார்.

அந்தப் போரில் பாட்டனை {பீஷ்மரைப்} பாதுகாத்துக் கொண்டும், பார்த்தனோடு {அர்ஜுனனோடு} போரிட்டுக் கொண்டும் என நாங்கள் அங்கே கண்ட உமது மகனின் (துச்சாசனனின்) ஆற்றல் அற்புதமானதாக இருந்தது. சிறப்பான வில்லாளியான உமது மகன் துச்சாசனனின் அந்தச் சாதனையால், மக்கள் அனைவரும் மனம் நிறைந்தனர். பாண்டவர்கள் அனைவருடனும், அவர்களுக்கு மத்தியில் இருந்த அர்ஜுனனுடனும் அவன் {துச்சாசனன்} தனியாகப் போரிட்டான்; பாண்டவர்களால் அவனைத் தடுக்க இயலாத வீரியத்துடன் அவன் {துச்சாசனன்} போரிட்டான். அந்தப் போரில் துச்சாசனனால் தேர்வீரர்கள் பலர் தங்கள் தேர்களை இழந்தனர். குதிரையின் முதுகில் இருந்த வலிமைமிக்க வில்லாளிகள் பலரும், வலிமைமிக்க வீரர்கள் பலரும், யானைகளும், துச்சாசனனின் கூர்மையான கணைகளால் துளைக்கப்பட்டுக் கீழே பூமியில் விழுந்தன. அவனது {துச்சாசனனின்} கணைகளால் பீடிக்கப்பட்ட பல யானைகள் அனைத்துத் திசைகளிலும் ஓடிக் கொண்டிருந்தன. எரிபொருள் {விறகு} ஊட்டப்பட்ட நெருப்பின் பிரகாசமான தழல்கள் சுடர்விட்டு எரிவதைப் போலப் பாண்டவப் படையை எரித்து உமது மகன் {துச்சாசனன்} சுடர்விட்டெரிந்தான்.

வெண் குதிரைகளைக் கொண்டவனும், கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்டவனுமான இந்திரனின் மகனை {அர்ஜுனனைத்} தவிர, பாண்டவப் படையைச் சேர்ந்த எந்த வீரனும் பெரிய வடிவம் கொண்ட அந்த வீரனை {துச்சாசனனை} வீழ்த்தவோ, எதிர்க்கவோ துணியவில்லை. பிறகு விஜயன் என்றும் அழைக்கப்படும் அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் துச்சாசனனை வீழ்த்தி, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பீஷ்மரை எதிர்த்து விரைந்தான். உமது மகன் {துச்சாசனன்} வீழ்த்தப்பட்டாலும், பீஷ்மரின் வலிமையை ஆதரமாகக் கொண்டு, தன் தரப்புக்கு அடிக்கடி ஆறுதலளித்து, பாண்டவர்களுடன் மிகக் கடுமையாகப் போரிட்டான்.

அந்தப் போரில் தன் எதிரிகளுடன் போரிட்ட அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மிகப் பிரகாசமாகத் தெரிந்தான். பிறகு அந்தப் போரில் சிகண்டி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இடியின் தீண்டலைக் கொண்டதும், பாம்பின் நஞ்சைப் போல மரணத்தைத் தரவல்லதுமான கணைகள் பலவற்றால் பாட்டனைத் {பீஷ்மரைத்} துளைத்தான். எனினும் அந்தக் கணைகள் உமது தந்தைக்குச் சிறு வலியையே கொடுத்தன, ஏனெனில் அவற்றை அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} சிரித்துக் கொண்டே ஏற்றார். உண்மையில், வெப்பத்தால் பீடிக்கப்பட்ட ஒருவன் மழைத்தாரைகளை ஏற்பதைப் போலவே கங்கையின் மைந்தரும் {பீஷ்மரும்}, சிகண்டியின் கணைகளை ஏற்றார்.

மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கிருந்த க்ஷத்திரியர்கள், அந்தப் போரில் உயர் ஆன்ம பாண்டவர்களின் துருப்புகளைத் தொடர்ச்சியாக எரிக்கும் கடும் முகம் கொண்டவராகவே பீஷ்மரைக் கண்டனர். பிறகு உமது வீரர்களிடம் பேசிய உமது மகன் {துரியோதனன்}, அவர்களிடம், “அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பல்குனனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைவீராக. படைத்தலைவர் ஒருவரின் கடமைகளை அறிந்தவரான பீஷ்மர் உங்களைக் காப்பார்” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட கௌரவத் துருப்புகள், அச்சமனைத்தையும் விட்டுப் பாண்டவர்களுடன் போரிட்டனர். (பிறகு துரியோதனன், மீண்டும் அவர்களிடம்), “தங்கப் பனைமர வடிவத்தைத் தாங்கிய தனது உயர்ந்த கொடிமரத்துடன் கூடிய பீஷ்மர், தார்தராஷ்டிர வீரர்கள் அனைவரின் மதிப்பையும், கவசங்களையும் பாதுகாத்தபடி நிலை கொண்டிருக்கிறார். தேவர்களே கூட மிகக் கடுமையாக முயன்றாலும், சிறப்புமிக்கவரும், வலிமைமிக்கவருமான பீஷ்மரை வீழ்த்தமுடியாது. எனவே, இறப்பவர்களான {மனிதர்களான} பார்த்தர்களைக் குறித்து என்ன சொல்ல வேண்டும்? எனவே, வீரர்களே பல்குனனை {அர்ஜுனனை} எதிரியாக அடைந்து களத்தில் இருந்து ஓடாதீர்கள். பூமியின் தலைவர்களான உங்களுடன் நானும் சேர்ந்து, இன்று மிகக் கடுமையாக முயற்சியுடன் பாண்டவர்களுடன் போரிடுவேன்” என்றான் {துரியோதனன்}.

வில்லைக் கையில் கொண்ட உமது மகனின் {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டவர்களும், விதேஹர்கள், கலிங்கர்கள், தாசேரகர்களின் பல்வேறு இனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுமான வலிமைமிக்கப் போராளிகளில் பலர், சினத்தால் தூண்டப்பட்டுப் பல்குனன் {அர்ஜுனன்} மீது பாய்ந்தனர். அதேபோல, நிஷாதர்கள், சௌவீரர்கள், பாஹ்லீகர்கள், தாரதர்கள், மேற்கத்தியர்கள், வடக்கத்தியர்கள், மாலவர்கள், அபிகதர்கள், சூரசேனர்கள், சிபிகள், வசாதிகள், சால்வர்கள், சாகர்கள், திரிகர்த்தர்கள், அம்பஷ்டர்கள், கேகயர்கள் ஆகியோரைச் சேர்ந்த போராளிகள் பலரும், நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகளைப் போலப் பார்த்தனின் {அர்ஜுனனின்} மேல் பாய்ந்தனர்.

பீபத்சு என்றும் அழைக்கப்படும் தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தெய்வீக ஆயுதங்கள் பலவற்றை மனதில் நினைத்து, அவற்றைக் கொண்டு படைப்பிரிவுகளின் தலைமையில் நின்ற அந்தப் பெரும் தேர்வீரர்களைக் குறிபார்த்து, விட்டில் பூச்சிகளை எரிக்கும் நெருப்பைப் போல, பெரும் சக்தி கொண்ட அந்த ஆயுதங்களின் மூலமாக அவர்கள் அனைவரையும் விரைவாக எரித்தான். உறுதிமிக்க அந்த வில்லாளி (தன் தெய்வீக ஆயுதங்களின் மூலமாக) காண்டீவத்தால் ஆயிரமாயிரம் கணைகளை உண்டாக்கிய போது,  ஆகாயத்தில் மிகப் பிரகாசமாகத் தெரிந்தது.

பிறகு, அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டவர்களும், உயர்ந்த தங்கள் கொடிமரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டவர்களுமான அந்த க்ஷத்திரியர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஒன்றாகச் சேர்ந்து, அந்தக் குரங்குக் கொடியோனை (பார்த்தனை {அர்ஜுனனை}) அணுகவும் முடியவில்லை. கிரீடியின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்ட தேர்வீரர்கள் தங்கள் கொடிமரங்களுடனும், குதிரைவீரர்கள் தங்கள் குதிரைகளுடனும், யானை வீரர்கள் தங்கள் யானைகளுடனும் கீழே விழுந்தனர். அர்ஜுனனின் கரங்களால் ஏவப்பட்ட கணைகளின் விளைவாக முறியடிக்கப்பட்டுப் பின்வாங்கிச் செல்லும் அம்மன்னர்களின் துருப்புகளால் விரைவில் பூமியானது அனைத்துப் பக்கங்களிலும் மறைக்கப்பட்டது.

பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கௌரவப் படையை முறியடித்த பார்த்தன் {அர்ஜுனன்}, துச்சாசனன் மேல் பல கணைகளை ஏவினான். இரும்புத் தலைகளைக் கொண்ட அக்கணைகள் அனைத்தும், உமது மகன் துச்சாசனனைத் துளைத்து ஊடுருவி, எறும்புப் புற்றுக்குள் ஊடுருவி செல்லும் பாம்புகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன. பிறகு அர்ஜுனன், துச்சாசனனின் குதிரைகளைக் கொன்று, பிறகு அவனது {துச்சாசனனின்} தேரோட்டியையும் வீழ்த்தினான். தலைவன் அர்ஜுனன், இருபது {20} கணைகளால் விவிம்சதியைத் தேரிழக்கச் செய்து, மேலும் ஐந்து {5} நேரான கணைகளால் அவனை {விவிம்சதியைத்} தாக்கினான். வெண்குதிரைகளைக் கொண்ட அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, முழுவதும் இரும்பாலான பல கணைகளால் கிருபர், விகர்ணன், சல்லியன் ஆகியோரைத் துளைத்து, அவர்கள் அனைவரையும் தேரிழக்கச் செய்தான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இப்படித் தங்கள் தேர்களை இழந்து, போரில் சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வீழ்த்தப்பட்ட கிருபர், சல்லியன், துச்சாசனன், விகர்ணன், விவிம்சதி ஆகியோர் அனைவரும் தப்பி ஓடினார்கள் {போரைவிட்டு ஓடினார்கள்}.

வலிமைமிக்கத் தேர்வீரர்களை முற்பகலில் வீழ்த்திய பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, புகையற்ற நெருப்பைப் போல அந்தப் போரில் சுடர்விட்டெரிந்தான். சூரியன் ஒளிக்கதிர்களைப் பொழிவதைப் போலச் சுற்றிலும் தன் கணைகளை இறைத்த பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பிற மன்னர்கள் பலரையும் வீழ்த்தினான். தன் கணைகளின் மூலம் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் களத்தைவிட்டுப் புறமுதுகிடச் செய்த அர்ஜுனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, குருக்கள் மற்றும் பாண்டவர்களின் படைகளுக்கிடையில் நடைபெற்ற அந்தப் போரில் குருதிப் புனலைக் கொண்ட பெரிய ஆறை அங்கே ஓடச் செய்தான் [1].

[1] வேறொரு பதிப்பில் இந்தப் பத்தி இத்துடன் முடியாமல், “ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மிகப் பயங்கரமானதும், சிறந்த வீரர்களுக்கு அழிவைச் செய்வதுமான அந்தப் போரில் பாண்டவர்கள் சிருஞ்சயர்களுடன் சேர்ந்து பீஷ்மருக்காகத் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினர். போரில் ஆற்றலுடன் பிரகாசிக்கும் பாட்டனைக் கண்டு உமது மகன்கள் பிரம்மலோகத்தை முன்னிட்டு பின்வாங்காதிருந்தனர். போரில் வெறிக் கொண்ட உமது வீரர்கள் சொர்க்கத்தை நோக்கமாகக் கொண்டு போரில் மரணத்தை விரும்பி பாண்டவர்களை எதிர்த்தார்கள். ஓ பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, வீரப் பாண்டவர்கள், உமது மகன்களுடன் சேர்ந்து தங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட துன்பங்கள் பலவற்றை நினைவுகூர்ந்து, போரில் அச்சத்தை விலக்கி, சொர்க்கத்தை நோக்கமாகக் கொண்டு மகிழ்ச்சியுடன் உமது வீரர்களோடும், உமது மகன்களோடும் போரிட்டனர்” என்று முடிகிறது.

தேர்வீரர்களால் பெரும் எண்ணிக்கையிலான யானைகளும், குதிரைகளும், தேர்வீரர்களும் கொல்லப்பட்டன. யானைகளால் கொல்லப்பட்ட தேர்வீரர்கள் பலராக இருந்தனர், மேலும், காலாட்படை வீரர்களால் கொல்லப்பட்ட குதிரைகளும் பலவாக இருந்தன. யானைவீரர்கள், குதிரைவீரர்கள், தேர்வீரர்கள் ஆகியோரின் உடலும், அவர்களது தலைகளும் நடுவில் பிளக்கப்பட்டு, போர்க்களத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விழுந்தன. காது குண்டலங்கள், தோள்வளைகள் ஆகியவற்றை அணிந்தவர்களும், கீழே விழுந்தவர்களும், வீழ்த்தப்படுகிறவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான (கொல்லப்பட்டுக் கிடந்த) இளவரசர்களால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களமானது விரவி கிடந்தது. தேர்ச்சக்கரங்களால் அறுக்கப்பட்டோ, யானைகளால் மிதிக்கப்பட்டோ தேர்வீரர்கள் பலரின் உடல்கள் விரவிக் கிடந்தன.

காலாட்படை வீரர்களும், குதிரைகளுடன் கூடிய குதிரைவீரர்கள் தப்பி ஓடினார்கள். அனைத்துப் பக்கங்களிலும் பல யானைகளும் தேர்வீரர்களும் விழுந்தனர். சக்கரங்கள், நுகத்தடிகள், கொடிமரங்கள் முறிக்கப்பட்ட பல தேர்களும் களமெங்கும் சிதறிக் கிடந்தன. யானைகள், குதிரைகள், தேர்வீரர்கள் ஆகியோரின் குருதியால் நனைக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் இருந்த போர்க்களம் கூதிர் கால வானின் சிவந்த மேகம் போல அழகாகத் தெரிந்தது. நாய்கள், காகங்கள், கழுகுகள், ஓநாய்கள், நரிகள் மற்றும் பிற பயங்கர விலங்குகளும், பறவைகளும், தங்கள் முன் கிடக்கும் உணவைக் கண்டு உரக்க ஊளையிட்டன. காற்றானது அனைத்துத் திசைகளில் இருந்து பல்வேறு விதங்களில் வீசியது. உரக்க முழக்கமிடும் ராட்சசர்களும், தீய ஆவிகளும் அங்கே காணப்பட்டனர்.

தங்கத்தால் இழைக்கப்பட்ட சங்கிலிகளும், விலையுயர்ந்த கொடிகளும் காற்றால் அசைக்கப்படுவது தெரிந்தது. ஆயிரக்கணக்கான குடைகளும், கொடிமரங்களோடு இணைக்கப்பட்ட பெரும் தேர்களும் களத்தில் சிதறிக் கிடந்தது காணப்பட்டது [2].

[2] வேறொரு பதிப்பில் இந்தப் பத்தி இத்துடன் முடியாமல், “கொடிகளுடன் கூடிய யானைகள் கணைகளால் துன்புற்றுத் திக்குகளில் ஓடின. ஓ மனிதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, கதாயுதம், ஈட்டி, வில் ஆகியவற்றைத் தரித்த க்ஷத்திரியர்களும் அனைத்து இடங்களிலும் பூமியில் விழுந்தவர்களாகக் காணப்பட்டனர். அம்புகளாலும், நாராசங்களாலும் ஆயிரக்கணக்காக அடிக்கப்பட்ட பெரிய யானைகள் ஆங்காங்கு பலவீனமான ஒலியை வெளியிட்டபடி கீழே விழுந்தன. வலிமைமிக்கத் தேர்வீரனான படைத்தலைவனோ {திருஷ்டத்யும்னனோ}, “வீரர்களே, கங்கையின் மைந்தரை எதிர்த்துச் செல்லுங்கள். அதுவன்றி, நீங்கள் செய்யும் காரியத்தில் என்ன பயன்?” என்று கட்டளையிட்டான். படைத்தலைவனின் வார்த்தைகளைக் கேட்ட சோமகர்கள், சிருஞ்சயர்களுடன் நான்கு பக்கங்களிலும் கணைமாரியைப் பொழிந்த படி கங்கையின் மைந்தரை எதிர்த்தனர்” என்று முடிகிறது.

பிறகு, பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தெய்வீக ஆயுதமொன்றைத் தூண்டியெழுப்பி, வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே குந்தியின் மகனிடம் {அர்ஜுனனிடம்} விரைந்தார். கவசம் பூண்ட சிகண்டி, அர்ஜுனனை நோக்கி விரையும் பீஷ்மரிடம் விரைந்தான். அதன் பேரில், (பிரகாசத்திலும், சக்தியிலும்) நெருப்புக்கு ஒப்பான அந்த ஆயுதத்தைப் பீஷ்மர் திரும்பப்பெற்றார். அதேவேளையில், வெண்குதிரைகளைக் கொண்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, பாட்டனை {பீஷ்மரைக்} குழப்பியபடி உமது துருப்புகளைக் கொன்றான் [3].

[3] இந்த 60வது வரிக்குப் பிறகும் பம்பாய்ப் பதிப்பில் இன்னும் மூன்று வரிகள் உள்ளன, அவனைப் பின்வருமாறு: "கொடிமரங்களைத் தங்கள் முதுகில் கொண்ட யானைகள் பல, திசைகள் அனைத்திலும் ஓடுவது தெரிந்தது. கதாயுதங்கள், ஈட்டிகள், விற்கள் ஆகியவற்றைத் தரித்திருந்த க்ஷத்திரியர்கள் பலர், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, களத்தில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பதும் காணப்பட்டது" என்று பம்பாய்ப் பதிப்பில் உள்ள வரிகளை இங்கே மேற்கோளில் அளித்திருக்கிறார் கங்குலி. 


ஆங்கிலத்தில் | In English