Sunday, March 20, 2016

வீழ்ந்தார் பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி – 120ஆ

Bhishma fell! | Bhishma-Parva-Section-120b | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 78)

பதிவின் சுருக்கம் : பீஷ்மரை ஒன்றுகூடித் தாக்கிய பாண்டவர்கள்; போர்க்களத்தில் அந்திகால நெருப்பாய்த் திரிந்த பீஷ்மர்; பீஷ்மரின் விற்களை மீண்டும் மீண்டும் வெட்டிய அர்ஜுனன்; தன் மரணத்தை விரும்பிய பீஷ்மர்; அம்முடிவை அங்கீகரித்த முனிவர்களும், வசுக்களும்...

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “தேவர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட, பெரும் ஆன்மிகத் தகுதி கொண்ட சந்துனுவின் மகன் பீஷ்மர், அனைத்துக் கவசங்களையும் ஊடுருவவல்ல கூரிய கணைகளால் தானே துளைக்கப்பட்டிருந்தாலும், பீபத்சுவை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தார். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்ட சிகண்டி ஒன்பது கூரிய கணைகளால் அந்தப் பாரதர்களின் பாட்டனின் {பீஷ்மரின்} மார்பைத் தாக்கினான்.


எனினும், குரு பாட்டனான பீஷ்மர், போரில் அவனால் {சிகண்டியால்} இப்படித் தாக்கப்பட்டாலும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பூகம்பத்திலும் அசையாமல் நீடிக்கும் ஒரு மலையைப் போலவே அவர் {பீஷ்மர்} நடுங்காதிருந்தார். பிறகு, தன் வில்லான காண்டீவத்தை வளைத்த பீபத்சு {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே, இருபத்தைந்து {25} கணைகளால் கங்கையின் மைந்தரை {பீஷ்மரைத்} துளைத்தான். கோபத்தால் தூண்டப்பட்டவனும், பெரும் வேகம் கொண்டவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, நூற்றுக்கணக்கான கணைகளால் மீண்டும் அவரது முக்கிய அங்கங்களைத் தாக்கினான்.

பிறராலும் ஆயிரக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்டவரான வலிமைமிக்கத் தேர்வீரர் பீஷ்மர், அந்தப் பிறரை பெரும் வேகத்துடன் பதிலுக்குத் துளைத்தார். அந்த வீரர்கள் ஏவிய கணைகளைப் பொறுத்தவரை, போராற்றலைக் கொண்ட பீஷ்மர், அந்தப் போரில் கலங்கடிக்கபட முடியாத அவை அனைத்தையும்  தன் நேரான கணைகளால் தடுத்தார். எனினும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், {சாணை} கல்லில் கூர்தீட்டப்பட்டவையும், சிகண்டியால் ஏவப்பட்டவையுமான அந்தக் கணைகள் பீஷ்மருக்குச் சிறு வலியையேனும் ஏற்படுத்தவில்லை.

பிறகு, சினத்தால் தூண்டப்பட்ட அந்தக் கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்), சிகண்டியைத் தன் முன் கொண்டு, பீஷ்மரை அருகில் அணுகி அவரது வில்லை மீண்டும் அறுத்தான். மேலும் பத்து {10} கணைகளால் பீஷ்மரைத் துளைத்த அவன் {அர்ஜுனன்}, பின்னவரின் {பீஷ்மரின்} கொடிமரத்தையும் ஒன்றால் {ஒரு கணையால்} அறுத்தான். மேலும் அர்ஜுனன், பத்து கணைகளால் பீஷ்மரின் தேரைத் தாக்கி அவரையும் {பீஷ்மரையும்} நடுங்கச் செய்தான்.

பிறகு அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} வலுவான மற்றொரு வில்லை எடுத்தார். எனினும், அந்த வில் எடுக்கப்படும்போதே, அதை அர்ஜுனன் மூன்று பல்லங்களால் உண்மையில் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மூன்று துண்டுகளாக வெட்டினான். இப்படியே அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பீஷ்மரின் விற்கள் அனைத்தையும் வெட்டினான்.

அதன்பிறகு சந்தனுவின் மகனான பீஷ்மர், அர்ஜுனனுடன் மேலும் போரிட விரும்பவில்லை [1]. எனினும், பின்னவன் {அர்ஜுனன்} அவரை {பீஷ்மரை} இருபத்தைந்து {25} கணைகளால் {க்ஷுத்ரகம் எனும் கணைகளால்} துளைத்தான்.

[1] வேறொரு பதிப்பில், “சந்தனுவின் மகனான பீஷ்மர் ஆற்றலினால் அர்ஜுனனை மீறவில்லை” என்று இருக்கிறது.

இப்படிப் பெரிதும் துளைக்கப்பட்ட அந்தப் பெரும் வில்லாளி {பீஷ்மர்}, {தன் அருகில் இருந்த} துச்சாசனனிடம், “பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரனும், போரில் கோபத்தால் தூண்டப்பட்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, பல்லாயிரம் கணைகளால் என்னை மட்டுமே துளைப்பதைப் பார். இவன் {அர்ஜுனன்}, போரில் வஜ்ரபாணியாலும் {இந்திரனாலும்} வெல்லப்படமுடியாதவனாவான். என்னைப் பொறுத்தவரையும் கூட, ஓ! வீரா {துச்சாசனா}, தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள் ஆகியோர் இணைந்து வந்தாலும் {அவர்களால்} வீழ்த்தப்பட முடியாதவனாகவே இருக்கிறேன். {இப்படி இருக்கையில்} மனிதர்களுக்கு மத்தியில் உள்ள வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் குறித்து நான் என்ன சொல்வேன்?” என்றார் [2]. பீஷ்மர் துச்சாசனனிடம் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது, பல்குனன் {அர்ஜுனன்}, அந்தப் போரில் சிகண்டியை முன் கொண்டு, கூரிய கணைகளால் பீஷ்மரைத் துளைத்தான்.

[2] வேறொரு பதிப்பில் பீஷ்மர் பேசுவது, “துச்சாசனா, பாண்டவர்களில் பெரும் தேர்வீரனான இந்தப் பார்த்தன் போரில் கோபம் கொண்டு பல்லாயிரக்கணக்கான கணைகளால் என்னையே எதிர்த்தடிக்கிறான். இந்த அர்ஜுனன் வஜ்ரபாணியான இந்திரனாலும் போரில் வெல்லப்படமுடியாதவன். வீரர்களான தேவர்கள், அசுரர்கள், ராட்சசர்கள் ஆகிய இவர்களனைவரும் ஒன்று சேர்ந்தாலும் என்னையும் வெல்வதற்கு சக்தியுள்ளவர்களாகார். அவ்வாறிருக்கு மிக்கக் கோபம் கொண்ட அர்ஜுனனைத் தவிரப் பெரும் தேர்வீரர்களான மனிதர்கள் என்னை வெல்வதற்கு சக்தியற்றவர்கள் என்பதில் ஐயெமென்ன? இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்று இருக்கிறது.

பிறகு பீஷ்மர், காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} கூர்முனை கணைகளால் ஆழமாகவும் அதீதமாகவும் துளைக்கப்பட்டு, மீண்டும் துச்சாசனனிடம் புன்னகையுடன், “நேரானவையும், நன்றாகத் தீட்டப்பட்டவையும், ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து தொடுக்கப்படுகின்றவையும், வானத்தின் இடியின் {வஜ்ரத்தின்} தீண்டலுக்கு ஒப்பானவையுமான இந்தக் கணைகள் அர்ஜுனனாலேயே ஏவப்படுகின்றன. இவை சிகண்டியுடையவை அல்ல.

என் முக்கிய அங்கங்களை வெட்டி, கடுமையான என் கவசத்தையே துளைத்து, முசலங்களின் {உலக்கைகளின்} சக்தியுடன் என்னைத் தாக்கும் இக்கணைகள் சிகண்டியுடைவையல்ல.

(தண்டனையளிக்கும்) பிராமணக் கோல் {பிரம்மதண்டம்} [3] போலக் கடுந்தீண்டல் கொண்டவையும், வஜ்ரத்தைப் போன்ற தாங்கமுடியாத மூர்க்கத்தைக் கொண்டவையுமான இந்தக் கணைகள் என் முக்கியப் பகுதிகளைப் பீடிக்கின்றன. இவை சிகண்டியுடையவையல்ல.

[3] “மூங்கில் தடியான "பிரம்ம தண்டம்" என்பது உண்மையில் பிராமணக் கோல் என்றே பொருள் படும். பிராமணனுடைய தவச் சக்தியின் விளைவால், (பிராமணனுடைய தண்டிக்கும் சக்தியின் குறியீடாகிய) இந்த மெலிதான கோல், இந்திரனின் வஜ்ரத்தைவிடவும் அளவிலாத வகையில் மிகவும் சக்தி வாய்ந்தது. பின்னதால் {வஜ்ரத்தால்} ஒருவரை மட்டுமே தாக்க முடியும், ஆனால் முன்னதால் {பிரம்மதண்டத்தால்} நாடுகள் முழுமையையும், தலைமுறை முதல் தலைமுறை வரையிலான மொத்த குலத்தையும் தாக்க முடியும். இந்த ஒரு பிரம்ம தண்டத்தை மட்டுமே கொண்டுதான், ராமாயணத்தில், பாலகாண்டம் பகுதி 56ல் விஸ்வாமித்திரர் பயன்படுத்திய வலிமைமிக்க தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும் வசிஷ்டர் கலங்கடித்தார்” என இங்கே விளக்குகிறார் கங்குலி.

கதாயுதம், பரிகாயுதங்கள் போலத் தாக்குபவையும், காலனால் (அந்தக் கடும் மன்னனாலேயே) ஏவப்பட்ட தூதர்கள் {யமதூதர்கள்} போல வருபவையுமான இந்தக் கணைகள் என் உயிர் சக்திகளை அழிக்கின்றன. இவை சிகண்டியுடையவையல்ல.

தங்கள் நாவுகளை வெளியே விடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளைப் போல இவை என் உயிர்நிலைகளை ஊடுருவுகின்றன. குளிர்காலத்தின் குளுமை பசுக்களின் முக்கிய அங்கங்களை வெட்டுவதைப் {பிளப்பதைப்} போல இவை என் முக்கிய அங்கங்களை வெட்டுகின்றன [4]. இவை சிகண்டியுடையவையல்ல.

[4] வேறொரு பதிப்பில் “நண்டுக் குஞ்சுகள் பிறக்கும்போது, தாய் நண்டைப் பிளப்பது போல இந்த அர்ஜுனனின் பானங்கள் என் அங்கங்களைப் பிளக்கின்றன” என்று இருக்கிறது.

வீர காண்டீவதாரியான குரங்குக்கொடி ஜிஷ்ணுவை {அர்ஜுனனைத்} தவிர, மற்ற மன்னர்கள் அனைவரில் எவரும் எனக்கு வலியை உண்டாக்க இயன்றவர்களில்லை” என்றார் {பீஷ்மர்}.

இவ்வார்த்தைகளைச் சொன்ன சந்தனுவின் வீர மகன் பீஷ்மர், பாண்டவர்களை எரிக்கும் நோக்கில், பார்த்தன் {அர்ஜுனன்} மீது ஈட்டி ஒன்றை எறிந்தார். எனினும், பார்த்தன் {அர்ஜுனன்}, உமது படையின் குருவீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த போதே, மூன்று கணைகளால் அதை மூன்று துண்டுகளாக வெட்டி கீழே விழச் செய்தான்.

பிறகு, கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, மரணத்தையோ, வெற்றியையோ அடைய விரும்பி ஒரு வாளையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கேடயத்தையும் எடுத்தார். எனினும், அவர் {பீஷ்மர்} தனது தேரை விட்டுக் கீழே இறங்குவதற்கு முன்பே அர்ஜுனன் தன் கணைகளின் மூலம் அந்தக் கேடயத்தை நூறு துண்டுகளாக வெட்டினான். அவனின் {அர்ஜுனனின்} அந்தச் சாதனை மிக அற்புதமானதாகத் தெரிந்தது.

பிறகு மன்னன் யுதிஷ்டிரன் தன் துருப்புகளைத் தூண்டி, “கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி விரைவீராக. கிஞ்சிற்றும் அஞ்சாதீர்” என்றான். பிறகு அவர்கள் அனைவரும் {பாண்டவப் படையினர் அனைவரும்}, தோமரங்கள், வேல்கள், கணைகள், கோடரிகள் {பட்டசங்கள்}, சிறந்த வாள்கள், பெருங்கூர்மையுள்ள நாராசங்கள், வத்ஸதந்தங்கள், பல்லங்கள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு அந்தத் தனி வீரரை {பீஷ்மரை} நோக்கி அனைத்துப் பக்கங்களில் இருந்தும் விரைந்தனர். அப்போது அந்தப் பாண்டவப் படைக்கு மத்தியில் உரத்த கூச்சல்கள் எழுந்தன. பிறகு உமது மகன்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் வெற்றியை விரும்பி அவரைச் சூழ்ந்து கொண்டு சிங்க முழக்கம் செய்தனர்.

அந்தப் பத்தாம் {10} நாளில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரும், அர்ஜுனனும் சந்தித்துக் கொண்டபோது, உமது துருப்புகளுக்கும், எதிரியின் துருப்புகளுக்கும் இடையில் அங்கே நடைபெற்ற போர் கடுமையானதாக இருந்தது. கங்கை கடலைச் சந்திக்கும் இடத்தில் உண்டாகும் நீர்ச்சுழலைப் போல, இரு தரப்பு படைகளின் துருப்புகளும் சந்தித்து ஒருவரை ஒருவர் தாக்கி வீழ்த்திய அந்த இடத்தில் ஒரு குறுகிய காலத்திற்குச் [5] சுழல் உண்டானது {வீரர்கள் சுழன்றனர்}. இரத்தத்தால் நனைந்த பூமியானவள் கொடும் வடிவத்தை அடைந்தாள். அவளது பரப்பில் உள்ள சமமான மற்றும் சமமற்ற இடங்களை அதற்கு மேலும் வேறுபடுத்திப் பார்க்கமுடியவில்லை.

[5] ஒரு முகூர்த்த காலம் என்று வேறொரு பதிப்பில் கண்டேன்.

பீஷ்மரின் முக்கிய அங்கங்கள் அனைத்தும் துளைக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பத்தாம் {10} நாளில், பத்தாயிரம் {10000} வீரர்களைக் கொன்ற அவர் போரில் (அமைதியாக) நின்று கொண்டிருந்தார். பிறகு, பெரும் வில்லாளியான பார்த்தன் {அர்ஜுனன்}, தன் துருப்புகளுக்குத் தலைமையில் நின்று கொண்டே குரு படையின் நடுப்பகுதியைப் பிளந்தான். தன் தேரில் வெண்குதிரைகளைக் கொண்டிருந்த குந்தியின் மகன் தனஞ்சனிடம் {அர்ஜுனனிடம்} அச்சம் கொண்ட நாங்கள், அவனது பளபளப்பான ஆயுதங்களால் பீடிக்கப்பட்டுப் போரில் இருந்து தப்பி ஓடினோம்.

சௌவீரர்கள், கிதவர்கள், கிழக்கத்தியர்கள், மேற்கத்தியர்கள், வடக்கத்தியர்கள், மாலவர்கள், அபீஷாஹர்கள், சூரசேனர்கள், சிபிக்கள், வஸாதிகள், சால்வர்கள், சயர்கள், திரிகர்த்தர்கள், அம்பஷ்டர்கள், கைகேயர்கள் [6] ஆகியோரும், இன்னும் பல சிறந்த வீரர்களும், கணைகளால் பீடிக்கப்பட்டும், தங்கள் காயங்களால் வலியை உணர்ந்தும், கிரீடம் தரித்தவனோடு (அர்ஜுனனோடு) அந்தப் போரில் போரிட்டுக் கொண்டிருந்த பீஷ்மரைக் கைவிட்டனர் {கைவிட்டு ஓடினர்}. பிறகு, பெரும் வீரர்கள் பலர், அந்தத் தனி வீரரை {பீஷ்மரை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டு, (அவரைப் பாதுகாத்துக் கொண்டிருந்த) குருக்களை வீழ்த்தி, கணைமாரியால் அவரை {பீஷ்மரைத்} துளைத்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, “கீழே வீசு”, “பிடி”, “போரிடு”, “துண்டுகளாக வெட்டு” என்ற கடுமுழக்கங்களே பீஷ்மரின் தேரின் அருகில் கேட்கப்பட்டன.

[6] "வங்கப் பதிப்புகளில் உள்ள சால்வர்கள், சயர்கள் மற்றும் திரிகர்த்தர்கள் என்பதற்குப் பதில் "(மன்னன்) சால்வனை நம்பியிருந்த திரிகர்த்தர்கள்" என்று பம்பாய் உரைகளில் இருக்கிறது. எனினும், சால்வனின் ஆட்சியில் இருந்த திரிகர்த்தர்கள் என்பதை நான் எங்கும் கண்டதில்லை. அந்நேரத்தில் சுசர்மனே அவர்களது ஆட்சியாளனாக இருந்தான்" என இங்கே கங்குலி விளக்குகிறார்.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரில் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் (எதிரிகளைக்) கொன்ற அந்தப் பீஷ்மரின் உடலில் கணைகளால் துளைக்கப்படாத இடைவெளி என்று இரண்டு விரல்களின் அகலம் அளவுக்குக் கூட இடம் இல்லை. இப்படியே உமது தந்தை {பீஷ்மர்}, அந்தப் போரில் பல்குனனின் {அர்ஜுனனின்} கூர்முனைக் கணைகளால் சிதைக்கப்பட்டிருந்தார். பிறகு, சூரியன் மறைவதற்குச் சற்று நேரத்திற்கு முன் உமது மகன்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர் {பீஷ்மர்}, கிழக்குப்பக்கமாகத் தலையைக் கொண்டு {கிழக்கு முகமாக} தன் தேரில் இருந்து கீழே விழுந்தார்.

பீஷ்மர் விழுந்த போது, தேவர்களும், பூமியின் மன்னர்களும் “ஓ!” என்றும், “ஐயோ!” என்று அலறியது ஆகாயத்தில் கேட்கப்பட்டது. உயர் ஆன்மப் பாட்டன் {பீஷ்மர்} (தன் தேரில் இருந்து) விழுந்ததைக் கண்ட எங்கள் அனைவரின் இதயங்களும் அவரோடு சேர்ந்து விழுந்தன. வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான அந்த வலிய கரங்களைக் கொண்ட வீரர் {பீஷ்மர்}, வேரோடு சாய்ந்த இந்திரனின் கொடிமரம் {இந்திரத்வஜம்} போல, பூமியையே நடுங்கச் செய்தபடி கீழே விழுந்தார். எங்கும் கணைகளால் துளைக்கப்பட்டிருந்த அவரது {பீஷ்மரது} உடல் தரையைத் தொடவில்லை.

அக்கணத்திலேயே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கணைப்படுக்கையில் {சரதல்பத்தில்} கிடந்த அந்தப் பெரும் வில்லாளியை தெய்வீக இயல்பு வந்தடைந்தது {பீஷ்மர் தெய்வீகத்தன்மையை அடைந்தார்}. மேகங்கள் அவர் மீது (குளிர்ந்த நீரைப்) பொழிந்தன, மேலும் பூமியும் நடுங்கினாள்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English