Monday, March 21, 2016

“நான் உயிரோடிருக்கிறேன்” என்ற பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி – 120இ

“I am alive” said Bhishma! | Bhishma-Parva-Section-120c | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 78)

பதிவின் சுருக்கம் : உத்தர அயனத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பீஷ்மரிடம், அன்னப்பறவைகளை அனுப்பிய கங்கை; அன்னங்களிடம் தன் உறுதியைச் சொன்ன பீஷ்மர்; துக்கத்தில் ஆழ்ந்த கௌரவர்கள்; பாண்டவப் படையினரின் மகிழ்ச்சி; யோகத்தில் ஆழ்ந்த பீஷ்மர்...

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “அவர் {பீஷ்மர்} விழுந்து கொண்டிருந்தபோது, சூரியன் தென் கோட்டில் {தக்ஷிணாயனத்தில்} இருப்பதைக் கவனித்தார். எனவே, அவ்வீரர் {பீஷ்மர்}, (மரணத்திற்கான) காலத்தை (காலம் மங்கலமற்றதாக இருப்பதை) நினைத்து, தன் புலன் உணர்வுகளைப் போக அனுமதிக்கவில்லை {நினைவு தப்பாமல் இருந்தார்} [1]. “ஏன், ஆயுதப் போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, {சூரியனின்} தெற்குச் சரிவின் போது, ஓ! ஏன் தன் உயிரை விட வேண்டும்?” என்ற தேவக் குரல்களை வானமெங்கும் அவர் {பீஷ்மர்} கேட்டார். இவ்வார்த்தைகளைக் கேட்ட கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, “நான் உயிரோடிருக்கிறேன்” என்று பதிலளித்தார். குரு பாட்டனான பீஷ்மர் பூமியில் விழுந்தாலும், {சூரியனின்} வடக்குச் சரிவை {உத்தர அயனத்தை} எதிர்பார்த்து தன் உயிரை விடவில்லை [2].


[1] வேறு பதிப்பில் “வீரரான பீஷ்மர் காலத்தை ஆலோசித்துப் பிரஜ்ஞையையடைந்தார்” என்றிருக்கிறது.

[2] வேறொரு பதிப்பில் இந்தப் பத்தி, “”மகாத்மாவும், கங்கையின் மைந்தரும், வில்லாளிகள் அனைவரிலும் சிறந்தவரும், மனிதர்களில் சிறந்தவருமான பீஷ்மர் தக்ஷிணாயனம் நேர்ந்திருக்குங்காலத்தில் எவ்வாறு உயிரை விட்டார்?” என்ற திவ்ய வாக்குகளை ஆகாயத்தின் அனைத்துப் பக்கங்களிலும் கேட்டார். காங்கேயர், அவைகளைக் கேட்டு நல்ல கதியை அடைய வேண்டுமென்ற விருப்பத்தோடு, “உத்தராயணத்தை விரும்பியவனான நான் இதோ உயிரோடிருக்கிறேன். பூமியில் விழுந்தாலும் நான் உயிரைத் தரிப்பேன்” என்று தேவர்களைப் பார்த்து மறுமொழி கூறினார்” என்று இருக்கிறது.

ஹிமவத்தின் {ஹிமவானின் - இமயத்தின்} மகளான கங்கை, இதையே அவரது {பீஷ்மரின்} தீர்மானமாகக் கொண்டு, அவரிடத்தில் {பீஷ்மரிடத்தில்} அன்னத்தின் வடிவத்தில் இருந்த பெருமுனிவர்களை அனுப்பினாள். மானஸத் {மானசரோவர்} தடாகவாசிகளும், அன்னத்தைப் போன்ற வடிவம் கொண்டவர்களுமான அந்த முனிவர்கள் விரைவாக எழுந்து, குரு பாட்டனான பீஷ்மரைக் காண்பதற்காக, அந்த மனிதர்களில் முதன்மையானவர் {பீஷ்மர்} கணைகளின் படுக்கையில் கிடந்த அந்த இடத்திற்கு ஒன்றாக வந்தனர்.

அன்னங்களைப் போன்ற வடிவங்களில் இருந்த அந்த முனிவர்கள், பீஷ்மரிடம் வந்து, கணைகளின் படுக்கையில் கிடந்த அந்தக் குரு குலக் கொழுந்தை {பீஷ்மரைக்} கண்டனர். பாரதர்களின் தலைவரான உயர் ஆன்ம கங்கையின் மைந்தரை {பீஷ்மரைக்} கண்டு, அவரை வலம் வந்து, சூரியன் தென்கோட்டில் இருந்ததால், அவர்கள் தங்களுக்குள், “உயர் ஆன்ம மனிதனான பீஷ்மர் {சூரியனின்} தென் சரிவின்போது ஏன் (இவ்வுலகத்தை விட்டு) செல்ல வேண்டும்?” என்ற வார்த்தைகளைச் சொன்னார்கள். இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த அன்னங்கள் தென் திசையை நோக்கிச் சென்றன.

அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பெரும் புத்திக் கூர்மை கொண்ட பீஷ்மர், அவற்றைக் கண்டு ஒருக்கணம் சிந்தித்தார். பிறகு அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} அவர்களிடம், “சூரியன் தென்கோட்டில் உள்ள வரை நான் (இவ்வுலகத்தைவிட்டு) செல்ல மாட்டேன். இதுவே என் தீர்மானமாகும். சூரியன் வடகோட்டை அடையும்போதே, நான் என் புராதன வசிப்பிடத்திற்குச் செல்வேன். அன்னங்களே, இதை நான் உங்களுக்கு உண்மையாகவே சொல்கிறேன். {சூரியனின்} வடக்குச் சரிவை எதிர்பார்த்து நான் என் உயிரைப் பிடித்துக் கொள்ளப் போகிறேன். உயிரை விடுவதில் முழுக் கட்டுப்பாடும் என்னிடம் உள்ளதால், வடக்குச் சரிவின் போதான மரணத்தை எதிர்பார்த்து நான் அதை {உயிரைப்} பிடித்துக் கொள்வேன்.

என் மரணம் என் விருப்பதைப் பொறுத்தே அமையும் என்று என் ஒப்பற்ற தந்தையால் {சந்தனுவால்} எனக்குக் கொடுக்கப்பட்ட வரமானது, ஓ! உண்மையாகட்டும். என் உயிரை விடுவதில் நான் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதால் என் உயிரைப் பிடித்துக் கொள்வேன்” என்றார். அன்னங்களிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அவர் {பீஷ்மர்}, கணைகளின் படுக்கையிலேயே தொடர்ந்து கிடந்தார்.

குரு குலச் சிகரமான பெரும் சக்தி படைத்த பீஷ்மர் விழுந்தபோது, பாண்டவர்களும், சிருஞ்சயர்களும் சிங்க முழக்கம் செய்தனர். குருக்கள் அனைவரும் முழுமையாகத் தங்கள் புலனுணர்வுகளை இழந்தனர். கிருபர் மற்றும் துரியோதனனின் தலைமையிலான குருக்கள் பெருமூச்சுவிட்ட படியே அழுதனர். துக்கத்தால் அவர்கள் நீண்ட நேரத்திற்கு உணர்விழந்தபடியே இருந்தனர். அவர்கள், ஓ! ஏகாதிபதி, போரில் தங்கள் இதயங்களைச் செலுத்தாமல் முற்றிலும் அசையாதிருந்தனர். பாண்டவர்களை எதிர்த்துச் செல்லாத அவர்கள், ஏதோ தொடை பிடிப்பு ஏற்பட்டவர்களைப் போல அசைவற்றிருந்தனர்.

கொல்லப்பட இயலாதவரான (என்று கருதப்பட்ட) வலிமைமிக்க சக்தி கொண்ட சந்தனுவின் மகன் பீஷ்மர் கொல்லப்பட்டபோது, குரு மன்னனின் {துரியோதனனின்} அழிவு அருகிலேயே இருக்கிறது என்று நாங்கள் அனைவரும் நினைத்தோம். சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வீழ்த்தப்பட்டும், எங்கள் முதன்மையான வீரர்கள் கொல்லப்பட்டும், கூரிய கணைகளால் சிதைக்கப்பட்டும் இருந்த எங்களுக்கு {மேற்கொண்டு} என்ன செய்வது என்பது தெரியவில்லை. பரிகாயுதங்களைப் போன்று தெரியும் பெரிய கரங்களைக் கொண்ட வீரப் பாண்டவர்கள் அனைவரும், வெற்றியை அடைந்தும், அடுத்த உலகத்தின் உயர்ந்த அருள்நிலையை வென்றும் தங்கள் பெரும் சங்குகளை முழங்கினர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சோமகர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். ஆயிரக்கணக்கான பேரிகைகள் முழங்கிய போது, வலிமைமிக்கப் பீமசேனன் தன் கக்கங்களை {தோள்களைத்} தட்டிக் கொண்டு உரத்த கூச்சலிட்டான். மிகவும் சக்திவாய்ந்தவரான கங்கையின் மகன் {பீஷ்மர்} கொல்லப்பட்ட போது, வீரமான இரு படைகளின் போர்வீரர்களும், தங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, சிந்தனையில் மூழ்கத் தொடங்கினர்.

சிலர் உரக்க அலறினர், சில தப்பி ஓடினர், சிலர் தங்கள் உணர்வுகளை இழந்தனர் {மயக்கமடைந்தனர்}. சிலர் க்ஷத்திரிய வகையினரின் நடைமுறைகளை நிந்தித்தனர், சிலர் பீஷ்மரைப் போற்றினர். முனிவர்களும், பித்ருக்கள் அனைவரும் உயர் நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைப் போற்றினர். பாரதர்களின் {இறந்து போன} மூதாதையர்களும் பீஷ்மரைப் புகழ்ந்தனர். அதே வேளையில், புத்திக்கூர்மையுள்ளவரும், சந்தனுவின் மகனுமான வீர பீஷ்மர், பெரும் உபநிஷத்துகளில் சொல்லப்பட்டுள்ள யோகத்தை அடைந்து, மனத்துதிகளில் ஈடுபட்டுத் தன் நேரத்தை எதிர்பார்த்து அமைதியில் நீடித்தார்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English