Arjuna made a pillow for Bhishma! | Bhishma-Parva-Section-122 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 80)
பதிவின் சுருக்கம் : பீஷ்மரிடம் தான் அவரது அடிமை என்று சொன்ன அர்ஜுனன்; அர்ஜுனனிடம் தலையணை கேட்ட பீஷ்மரும், அதை அமைத்துக் கொடுத்த அர்ஜுனனும்; அர்ஜுனனைப் பாராட்டிய பீஷ்மர்; மருத்துவர்களைத் திருப்பிய அனுப்பிய துரியோதனன்; கிருஷ்ணன், யுதிஷ்டிரன் பேச்சு...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தன் பெரிய வில்லில் நாணேற்றி, பாட்டனை {பீஷ்மரை} மரியாதையுடன் வணங்கிய அர்ஜுனன், கண்ணீரால் நிறைந்த கண்களுடன் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! குருக்களில் முதன்மையானவரே, ஆயுதங்களைத் தரிப்போர் அனைவரிலும் முதலானவரே, ஓ! வெல்லப்படமுடியாதவரே {பீஷ்மரே}, நான் உமது அடிமை, எனக்குக் கட்டளையிடுவீராக. ஓ! பாட்டா {பீஷ்மரே}, நான் என்ன செய்ய வேண்டும்?” {என்றான் அர்ஜுனன்}.
அதற்குச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! ஐயா {அர்ஜுனா}, என் தலை தொங்குகிறது. ஓ! குருக்களில் முதன்மையானவனே, ஓ! பல்குனா {அர்ஜுனா}, எனக்குத் தலையணை தருவாயாக. உண்மையில், ஓ! வீரா {அர்ஜுனா}, எனக்குப் படுக்கையாகத் தகுந்ததைத் தாமதமில்லாமல் எனக்குத் தருவாயாக. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, விற்கள் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான நீயே அதற்குத் தகுந்தவன். க்ஷத்திரியர்களின் கடமைகளை அறிந்தவன் நீயே, மேலும், புத்திக்கூர்மையையும், நற்குணத்தையும் கொண்டவன் நீயே” என்றார் {பீஷ்மர்}.
பிறகு, “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன பல்குனன் {அர்ஜுனன்} பீஷ்மர் சொன்னதைச் செய்ய விரும்பினான். காண்டீவத்தையும், நேரான கணைகள் சிலவற்றையும் எடுத்து, மந்திரங்களால் அவற்றைத் தூண்டி, பாரதக் குலத்தின் வலிமைமிக்கத் தேர்வீரரான அந்த ஒப்பற்றவரிடம் அனுமதி பெற்ற அர்ஜுனன், பிறகு, பெரும் சக்தியுடன் கூடிய மூன்று கூரிய கணைகளைக் கொண்டு பீஷ்மரின் தலையைத் தாங்கினான் {தூக்கி நிறுத்தினான்}.
பிறகு, பாரதர்களின் தலைவரும், அறத்தின் உண்மைகளை அறிந்தவரும், அற ஆன்மா கொண்டவருமான பீஷ்மர், தமது எண்ணத்தை அறிந்து, அந்தச் சாதனையை அடைந்த அர்ஜுனனைக் கண்டு மிகவும் மனம் நிறைந்தார். இப்படி அவருக்கு {பீஷ்மருக்கு} அந்தத் தலையணை கொடுக்கப்பட்டதும், அவர் {பீஷ்மர்} தனஞ்சயனை {அர்ஜுனனைப்} புகழ்ந்தார்.
அங்கிருந்த பாரதர்கள் அனைவரின் மீதும் தன் கண்களைச் செலுத்திய அவர் {பீஷ்மர்}, போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், தன் நண்பர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனுமான குந்தியின் மகன் அர்ஜுனனிடம், “ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, எனக்குப் படுக்கையாகக் கூடிய ஒரு தலையணையை நீ எனக்குக் கொடுத்துவிட்டாய். நீ வேறுவகையில் செயல்பட்டிருந்தாயானால், கோபத்தால் நான் உன்னைச் சபித்திருப்பேன். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, தன் கடமைகளை நோற்ற க்ஷத்திரியன் ஒருவன், கணைகளாலான தன் படுக்கையில், போர்க்களத்தில் இப்படியே உறங்க வேண்டும்”, என்றார்.
பீபத்சுவிடம் {அர்ஜுனனிடம்} இப்படிப் பேசிய அவர் {பீஷ்மர்}, பிறகு அப்போது அங்கிருந்த மன்னர்கள் மற்றும் இளவரசர்களிடம், “பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} எனக்குக் கொடுத்திருக்கும் தலையணையைக் காண்பீராக. சூரியன் வடகோட்டிற்கு {உத்தர அயனத்திற்குத்} திரும்பும் வரை நான் இந்தப் படுக்கையிலேயே உறங்குவேன் {கிடப்பேன்}. அப்போது என்னிடம் வரும் மன்னர்கள் என்னைக் காண்பார்கள் (உயிரை விடும் என்னைக் காண்பார்கள்). சூரியன் ,பெரும் வேகம் கொண்டதும், ஏழு குதிரைகள் பூட்டப்பட்டதுமான தன் தேரில் வைஸ்ரவணன் {குபேரன்} இருக்கும் திசையை நோக்கிச் செல்லும்போது, அன்புக்குரிய நண்பனை விட்டுப் பிரியும் அன்பு நண்பனைப் போல நான் என் உயிரை விடுவேன். மன்னர்களே {நான் இருக்கும் இந்த} என் இடத்தைச் சுற்றி அகழ் ஒன்று தோண்டப்பட வேண்டும். இப்படி நூறு கணைகளால் துளைக்கப்பட்ட நான் சூரியனுக்கு என் துதிகளைச் செலுத்தப் போகிறேன். உங்களைப் பொறுத்தவரை, மன்னர்களே, பகையைக் கைவிட்டு, போரிடுவதை நிறுத்துவீராக” என்றார் {பீஷ்மர்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு, கணைகளைப் பிடுங்குவதில் திறம்பெற்றவர்களும், (தங்கள் தொழிலுக்குத்) தேவையான அனைத்து உபகரணங்களுடன் கூடியவர்களும், (தங்கள் அறிவியலில்) நன்கு பயிற்சி கொண்டவர்களுமான அறுவைசிகிச்சை நிபுணர்கள் சிலர் அவரிடம் {பீஷ்மரிடம்} அங்கே வந்தனர்.
அவர்களைக் கண்ட கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, உமது மகனிடம் {துரியோதனனிடம்}, “இந்த மருத்துவர்களுக்கு உரிய மரியாதைகளை வழங்கி, செல்வங்களைப் பரிசளித்து அனுப்புவாயாக. இந்நிலையை அடைந்தும் எனக்கு மருத்துவர்களால் என்ன தேவை இருக்கிறது? க்ஷத்திய செயல்பாடுகளில் மிகவும் மெச்சத்தகுந்த மிக உயர்ந்த நிலையை நான் வென்றிருக்கிறேன் {அடைந்திருக்கிறேன்}. மன்னர்களே, கணைகளின் படுக்கையில் கிடக்கும் நான் மருத்துவர்களின் சிகிச்சையை ஏற்பது எனக்குத் தகாது. மனிதர்களின் ஆட்சியாளர்களே, என் உடலில் உள்ள இந்தக் கணைகளுடனே நான் எரிக்கப்பட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.
அவரது {பீஷ்மரின்} வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் துரியோதனன், மருத்துவர்களுக்குத் தகுந்த மரியாதைகளைச் செலுத்தி அவர்களை அனுப்பி வைத்தான். பல்வேறு ஆட்சிப்பகுதிகளின் மன்னர்களான அவர்கள், அளவிலா சக்தி கொண்ட பீஷ்மர், அறத்தில் நிலையான உறுதியை வெளிப்படுத்தியதைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தனர். இப்படி உமது தந்தைக்குத் தலையணை கொடுத்தவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும் அந்த மனிதர்களின் ஆட்சியாளர்களுமான பாண்டவர்களும், கௌரவர்களும், அந்தச் சிறந்த படுக்கையில் கிடந்த உயர் ஆன்ம பீஷ்மரை மீண்டும் ஒன்றுசேர்ந்து அணுகினர். உயர் ஆன்மா கொண்ட அவரை {பீஷ்மரை} மரியாதையுடன் வணங்கி, அவரை மும்முறை வலம் வந்து, அவரது பாதுகாப்புக்காகச் சுற்றிலும் காவலர்களை நிறுத்தி அவ்வீரர்கள் {பாண்டவர்களும், கௌரவர்களும்}, மேனியெங்கும் குருதியால் நனைந்து, தங்கள் இதயங்கள் துயரத்தில் மூழ்கி, தாங்கள் கண்டவற்றை நினைத்துக் கொண்டே, மாலை வேளையில் ஓய்வுக்காகத் பாசறைகளுக்குச் சென்றனர்.
பிறகு, வலிமைமிக்க மாதவன் {கிருஷ்ணன்}, பீஷ்மரின் வீழ்ச்சியால் இன்பத்தில் நிறைந்து, ஒன்றாகச் சேர்ந்து மகிழ்ச்சியாக அமர்ந்திருந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்களைச் சரியான நேரத்தில் அணுகி, தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! குருகுலத்தவரே {யுதிஷ்டிரரே}, நற்பேறாலேயே வெற்றி உமதானது. நற்பேறாலேயே மனிதர்களால் கொல்லப்பட இயலாதவரும், கலங்கடிக்கப்பட இயலாத வலிமைமிக்கத் தேர்வீரருமான பீஷ்மர் வீழ்த்தப்பட்டார். அல்லது, ஒருவேளை, விதிவசத்தால், அனைத்து ஆயுதங்களிலும் கரைகண்டவரான அந்தப் போர்வீரர் {பீஷ்மரை}, உமது கண்களால் மட்டுமே கொல்ல முடிந்தவரான உம்மை எதிரியாக அடைந்து, கோபம் நிறைந்த உமது பார்வையால் எரிக்கப்பட்டார்” {என்றான் கிருஷ்ணன்}.
கிருஷ்ணனால் இப்படிச் சொல்லப்பட்டதும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அந்த ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்}, “உன் அருளாலேயே வெற்றி {கிடைக்கும்}, உன் கோபத்தாலேயே தோல்வியும் {கிடைக்கும்}! உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டோரின் அச்சங்களை விலக்குபவன் நீயே! எங்கள் புகலிடம் நீயே! ஓ! கேசவா {கிருஷ்ணா} யாரை போரில் எப்போதும் நீ காக்கிறாயோ, யாருடைய நன்மைக்காக எப்போதும் நீ ஈடுபடுகிறாயோ, அவர்கள் வெற்றியை அடைவது அச்சரியமில்லை. எங்கள் புகலிடமாக உன்னை அடைந்த நான் எதையுமே ஆச்சரியமானதாகக் கருதவில்லை” என்றான் {யுதிஷ்டிரன்}. இப்படி அவனால் {யுதிஷ்டிரனால்} சொல்லப்பட்டதும், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} புன்னகைத்தவாறே, “ஓ! மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, உம்மிடம் இருந்து மட்டுமே இவ்வார்த்தைகள் வர முடியும்” என்று பதிலுரைத்தான்” {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |