Wednesday, March 23, 2016

துரியோதனனை வேண்டிய பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி – 123

Bhishma's solicitation to Duryodhana! | Bhishma-Parva-Section-123 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 81)

பதிவின் சுருக்கம் : பதினோராம் நாள் காலையில் பீஷ்மரைச் சந்தித்த கௌரவர்களும், பாண்டவர்களும்; மன்னர்களிடம் தண்ணீர் கேட்ட பீஷ்மர்; அருஞ்செயலால் தண்ணீர் கொணர்ந்த அர்ஜுனன்; அர்ஜுனனைப் புகழ்ந்த பீஷ்மர்; அர்ஜுனனின் மகிமை; துரியோதனனை அறிவுறுத்திய பீஷ்மர்; பீஷ்மரின் அறிவுரைகளை ஏற்காத துரியோதனன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த இரவு கடந்ததும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னர்கள் அனைவரும், பாண்டவர்களும், தார்தராஷ்டிரர்களும் பாட்டனிடம் {பீஷ்மரிடம்} சென்றனர். அந்த க்ஷத்திரியர்கள், தங்கள் வகையைச் சார்ந்த காளையும், குருக்களில் முதன்மையனவரும், வீரப்படுக்கையில் கிடந்த அந்த வீரரை {பீஷ்மரை} வணங்கி, அவர் முன்னிலையில் நின்றனர்.

அந்த இடத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான கன்னியர், அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} மீது சந்தனப் பொடிகளையும், பொரிகளையும், மலர்மாலைகளையும் பொழிந்தனர். பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள், சாதாரணப் பார்வையாளர்கள் ஆகியோர் அனைவரும், சூரியனைக் காண விரும்பும் உலக உயிரினங்களைப் போல, சந்தனுவின் மகனை {பீஷ்மரைக் காண} அணுகினர். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எக்காளங்கள், நர்த்தகர்கள், கைவினைஞர்கள் ஆகியோரும் முதிர்ந்த குரு பாட்டனிடம் {பீஷ்மரிடம்} வந்தனர்.


குருக்களும், பாண்டவர்களும் போரை நிறுத்தி, தங்கள் கவசங்களை அகற்றி, தங்கள் ஆயுதங்களை ஒருபுறம் கிடத்திவிட்டு, எதிரிகளைத் தண்டிப்பவரும் வெல்லப்பட முடியாதவருமான தேவவிரதரிடம் {பீஷ்மரிடம்} ஒன்று சேர்ந்து வந்தனர். பழங்காலத்தைப் போலவே ஒன்றாகக் கூடி வந்த அவர்கள், தங்கள் தங்கள் வயதுக்கேற்றபடி ஒருவரோடொருவர் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டனர்.

நூற்றுக்கணக்கான பாரத மன்னர்களால் நிறைந்த அந்தச் சபையானது, பீஷ்மரால் அலங்கரிக்கப்பட்டு, சொர்க்கத்தில் உள்ள தேவர்களின் சபையைப் போலச் சுடர்விட்டபடி அழகாகத் தெரிந்தது. கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} மதிக்கும் மன்னர்களால் ஆன அந்தச் சபை, தங்கள் தலைவனான பாட்டனை (பிரம்மனை) வழிபடும் தேவர்களின் சபையைப் போல அழகாகத் தெரிந்தது.

எனினும் பீஷ்மர், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, (தன் மேனியில் தைத்திருந்த) கணைகளால் எரிந்து கொண்டிருந்தாலும் மனோ பலத்தால் தன் வேதனைகளை அடக்கிக் கொண்டு, பாம்பொன்றைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தார். அந்தக் கணைகளால் எரிச்சலடைந்த தன் உடலுடன், ஆயுதக் காயங்களின் விளைவால், கிட்டத்தட்ட தன் உணர்வுகளை இழந்த நிலையில் இருந்த பீஷ்மர், அந்த மன்னர்களின் மேல் தன் கண்களைச் செலுத்தி, {அவர்களிடம்} தண்ணீர் கேட்டார்.

அப்போது அந்த க்ஷத்திரியர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிறந்த உணவுப் பொருட்களையும், குளிர்ந்த நீர் கொண்ட குடங்கள் பலவற்றையும் அங்கே கொண்டு வந்தனர். தனக்காகக் கொண்டுவரப்பட்ட அந்த நீரைக் கண்ட சந்தனுவின் மகன், “மனித மகிழ்ச்சிக்குகந்த {பயன்பாட்டுக்குரிய} எந்தப் பொருளையும் என்னால் இப்போது பயன்படுத்த இயலாது. மங்கிய மாந்தர் இனத்தில் இருந்து நான் நீக்கப்பட்டுவிட்டேன். நான் கணைகளின் படுக்கையில் கிடக்கிறேன். சந்திரனும், சூரியனும் திரும்புவதை எதிர்பார்த்தே நான் இங்குத் தங்கியிருக்கிறேன்” என்றார். இவ்வார்த்தைகளைப் பேசிய பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அம்மன்னர்களை நிந்தித்த அவர் {பீஷ்மர்}, “நான் அர்ஜுனனைக் காண விரும்புகிறேன்” என்றார். பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அர்ஜுனன், அங்கே வந்து, இருகரங்களையும் கூப்பிப் பாட்டனை {பீஷ்மரை} மரியாதையுடன் வணங்கியபடி, “நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.

நீதிமிக்க ஆன்மா கொண்ட பீஷ்மர், தன் முன்னிலையில் இப்படி நின்று, மரியாதை நிரம்பிய வணக்கங்களைத் தனக்குச் செலுத்திய பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கண்டு, மகிழ்ச்சியுடன் அந்தத் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, “உனது கணைகளால் முழுவதும் மறைக்கப்பட்டுள்ள என் உடல் பெரிதும் எரிகிறது! என் உடலின் முக்கிய அங்கங்கள் யாவும் வேதனையை அனுபவிக்கின்றன. என் வாய் உலர்ந்திருக்கிறது. ஓ! அர்ஜுனா, வேதனையால் பீடிக்கப்பட்டிருக்கும் உடலைக் கொண்ட எனக்குத் தண்ணீரைத் தருவாயாக. நீ ஒரு பெரும் வில்லாளியாவாய். முறையாக எனக்குத் தண்ணீரைத் தர நீயே இயன்றவனாவாய்” என்றார் {பீஷ்மர்}.

“அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன வீர அர்ஜுனன், தன் தேரில் ஏறி, தன் காண்டீவத்தைப் பலமாகத் தட்டி, அதை வளைக்கத் தொடங்கினான். அவனது {அர்ஜுனனது} வில்லின் நாணொலியையும், இடிமுழக்கத்திற்கு ஒப்பான அவனது உள்ளங்கைத் தட்டல்களையும் கேட்ட மன்னர்கள் அனைவரும் அச்சத்தால் தூண்டப்பட்டனர். பிறகு, அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, தன் தேரில் ஏறி, படுத்துக் கிடந்தவரும், ஆயுதபாணிகள் அனைவரிலும் முதன்மையானவருமான பாரதர்களின் தலைவரை {பீஷ்மரை} வலம் வந்தான். மந்திரங்களால் தூண்டப்பட்ட, பர்ஜன்ய ஆயுதத்தின் அடையாளத்தைக் கொண்ட சுடர்மிக்கக் கணையொன்றைக் குறிபார்த்தப் பாண்டுவின் மகன் பார்த்தன் {அர்ஜுனன்}, {அவ்வாயுதத்தைக் கொண்டு}, முழுப் படையும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பீஷ்மர் கிடந்த இடத்திற்கும் சிறிது தெற்கில் [1] பூமியைத் துளைத்தான். பிறகு அங்கே, தூய்மையானதும், மங்கலகரமானதும், குளுமையானதும், அமுதத்துக்கு ஒப்பானதும், தேவ மணமும், சுவையும் கொண்டதுமான நீரூற்று ஒன்று எழுந்தது. பார்த்தன் {அர்ஜுனன்}, அந்தக் குளிர்ந்த நீரூற்றைக் கொண்டு, தேவர்களைப் போன்ற செயல்களும், ஆற்றலும் கொண்டவரும், குருக்களில் காளையுமான அந்தப் பீஷ்மரை மனம் நிறையச் செய்தான்.

[1] வேறொரு பதிப்பில் பீஷ்மருக்கு வலப்பக்கத்தில் என்றிருக்கிறது.

சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பான செயல்பாடுகளைக் கொண்ட பார்த்தனின் அந்த அருஞ்செயலால், பூமியின் மன்னர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர். ஆச்சரியத்தால் நிறைந்தவர்களான அங்கே இருந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் ஆடைகளை (காற்றில்) அசைத்தனர். சங்குகளின் முழக்கமும், பேரிகைகளின் ஒலியும் களமெங்கும் உரக்கக் கேட்கப்பட்டன.

தன் தாகம் தணிந்த சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த மன்னர்கள் அனைவரின் முன்னிலையிலும் ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} உயர்வான இவ்வார்த்தைகளால் புகழ்ந்தார், அவர் {பீஷமர்} “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே ஓ! குருகுலத்து மகனே {அர்ஜுனா}, உன்னிடம் {காணப்படும்} இஃது ஆச்சரியமானதல்ல, ஓ! அளவிலா காந்தி கொண்டவனே {அர்ஜுனா}, நீ ஒரு புராதன முனிவன் என்று நாரதரே சொல்லியிருக்கிறார்! உண்மையில், வாசுதேவனை {கிருஷ்ணனை} உனது கூட்டாளியாகக் கொண்ட நீ, தேவர்கள் அனைவருடனும் கூடிய தேவர்களின் தலைவனே {இந்திரனே} அடையத் துணியாத வலிமையான அருஞ்செயல்கள் பலவற்றை அடைவாய். இது போன்ற விஷயங்களில் {தேவ ரகசியங்களில்} அறிவு கொண்டோர், க்ஷத்திரிய குலம் முழுவதையும் அழிப்பவன் நீ என்று அறிவர். உலகத்தில் உள்ள வில்லாளிகளில் நீ ஒருவனே வில்லாளியாவாய். மனிதர்களில் முதன்மையானவன் நீயே.

இவ்வுலகில், உயிரினங்களில் அனைத்திலும் முதன்மையான மனிதர்கள், சிறகு படைத்த உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையான கருடன், நீர் கொள்ளிடங்கள் அனைத்திலும் முதன்மையான கடல், நான்கு கால் உயிரினங்களில் முதன்மையான பசு, ஒளிப் பொருட்கள் அனைத்திலும் முதன்மையான சூரியன், மலைகள் அனைத்திலும் முதன்மையான இமயம்; சாதிகள் அனைத்திலும் முதன்மையான பிராமணன் ஆகியவற்றைப் போல வில்லாளிகள் அனைவரிலும் நீயே முதன்மையானவன் ஆவாய். என்னாலும், விதுரன், துரோணர், ராமர் {பரசுராமர்} [2], ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} ஆகியோராலும் சஞ்சயனாலும் கூட மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட வார்த்தைகளைத் திருதராஷ்டிரன் மகன் (துரியோதனன்) கேட்கவில்லை. ஒரு முட்டாளைப் போல அறிவற்ற துரியோதனன் அந்த வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. அனைத்து வழிமுறைகளையும் மீறிய அவன் {துரியோதனன்} பீமனின் வல்லமையால் வீழ்த்தப்பட்டு எப்போதும் கிடக்க வேண்டியிருக்கும் என்பது உறுதி” என்றார் {பீஷ்மர்}.

[2] இவர் பரசுராமராகவே இருக்க வேண்டும், இருப்பினும் வேறொரு பதிப்பில் இது பலராமன் என்று குறிக்கப்படுகிறது.

அவரது இவ்வார்த்தைகளைக் கேட்ட குரு மன்னன் துரியோதனன், இதயத்தால் மகிழ்ச்சியற்றவனானான். அவனை {துரியோதனனைக்} கண்ட சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, “ஓ! மன்னா {துரியோதனா}, கேட்பாயாக. உன் கோபத்தைக் கைவிடுவாயாக! ஓ! துரியோதனா, அமுத மணம் கொண்ட குளுமையான அந்த நீரூற்றைப் புத்திசாலிப் பார்த்தன் {அர்ஜுனன்} எவ்வாறு உண்டாக்கினான் என்பதை நீ கண்டாய். இத்தகு அருஞ்செயலைச் செய்யக்கூடிய வேறு எவனும் இவ்வுலகில் இல்லை. அக்னி, வருணன், சோமன், வாயு, விஷ்ணு ஆகியோருக்கு உடையவையும், இந்திரன், பசுபதி, பரமேஷ்டி {பிரம்மன்}, பிரஜாபதி, தாத்ரி {தாதா}, தாஷ்ட்ரி {தவஷ்டா}, சாவித்ரி {ஸவிதா}, விவஸ்வான் ஆகியோருக்கு உடையவையுமான இவ்வாயுதங்கள் அனைத்தையும் மனிதர்களின் இவ்வுலகில் தனஞ்சயன் {அர்ஜுனன்} மட்டுமே அறிவான் [3]. தேவகியின் மகனான கிருஷ்ணனும் அவற்றை அறிவான். ஆனால் அவற்றை அறிந்தவன் என வேறு எவனும் இல்லை. ஓ! ஐயா {துரியோதனா}, இந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, போரில் தேவர்களும் அசுரர்களும் இணைந்து வந்தாலும் வீழ்த்தப்பட முடியாதவனாவான். இந்த உயர் ஆன்மாவின் {அர்ஜுனனின்} சாதனைகள் மனித சக்திக்கு அப்பாற்பட்டவையாகும்.

[3] வேறொரு பதிப்பில் இப்பத்தி, “அர்ஜுனன், ஆக்னேயாஸ்திரம், வாருணாஸ்திரம், ஸௌம்யாஸ்திரம், வாயவ்யாஸ்திரம், வைஷ்ணாவாஸ்திரம், ஐந்திராஸ்திரம், பாசுபதாஸ்திரம், உலகங்களைப் படைத்த பிரம்ம தேவனிடம் கிடைத்த பிரம்மாஸ்திரம், தாதாவையும். தவஷ்டாவையும், ஸவிதாவையும், விவஸ்வானையும் தேவதையாகக் கொண்ட அஸ்திரங்கள் ஆகிய இவை அனைத்தையும் அறிவான். இம்மண்ணுலகனைத்திலும் தனஞ்சயன் ஒருவனே இவ்வஸ்திரங்களை அறிகிறான்” என்று இருக்கிறது.

உண்மையான வீரனும், போரின் ஆபரணமும், போரில் சாதித்தவனுமான அந்தப் போர்வீரனை {அர்ஜுனனைக்} கொண்டு, ஓ! மன்னா {துரியோதனா} விரைவில் அமைதி ஏற்படுத்தப்படட்டும். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணன் கோபத்துக்கு ஆட்படாமல் இருக்கும்போதே, ஓ! குருக்களின் தலைவா {துரியோதனா} வீரர்களான பார்த்தர்களுடன் {பாண்டர்வளுடன்}, ஓ! ஐயா {துரியோதனா} அமைதி ஏற்படுத்தப்படுவதே தகும். ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, எஞ்சியிருக்கும் இந்த உனது தம்பிகள் கொல்லப்படாமல் இருக்கும்போதே,  அமைதி {சமாதானம்} ஏற்படட்டும். கோபத்தால் எரியும் கண்களுடன் கூடிய யுதிஷ்டிரன், போரில் உனது துருப்புகளை எரிக்காதிருக்கும்போதே அமைதி ஏற்படட்டும். பாண்டுவின் மகன்களான நகுலன், சகாதேவன், பீமசேனன் ஆகியோர் உன் படையை நிர்மூலமாக்காமல் இருக்கும்போதே, ஓ ஏகாதிபதி {துரியோதனா} வீரப் பாண்டவர்களுக்கும், உனக்கும் இடையில் நட்புறவுகள் மீட்கப்பட வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஓ! ஐயா, இந்தப் போர் என் மரணத்தோடு முடியட்டும்! பாண்டவர்களுடன் அமைதி {சமாதானம்} கொள்வாயாக. ஓ! பாவமற்றவனே {துரியோதனா}, என்னால் உனக்குச் சொல்லப்படும் இவ்வார்த்தைகள் உனக்கு ஏற்புடையனவாகட்டும். உனக்கும், (குரு) குலத்திற்கும் இதுவே நன்மையைத் தரும் என நான் கருதுகிறேன். உன் கோபத்தைக் கைவிட்டு, பார்த்தர்களுடன் அமைதியை ஏற்படுத்துவாயாக. ஏற்கனவே பல்குனன் {அர்ஜுனன்} செய்திருப்பதே போதுமானது. பீஷ்மனின் மரணத்தோடு நட்புறவுகள் மீட்கப்படட்டும்! எஞ்சிய இவர்கள் (இந்த வீரர்கள்) வாழட்டும்!

ஓ! மன்னா {துரியோதனா}, மனம் இரங்குவாயாக! பாண்டவர்களுக்கு நாட்டில் பாதியைக் கொடுப்பாயாக. நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை இந்திரப்பிரஸ்தத்திற்குப் போகட்டும். ஓ! குருக்களின் தலைவா {துரியோதனா}, உறவினர்களுக்குள் பிளவினை ஏற்படுத்தும் அற்பத்தனத்திற்கான நிந்தனையைப் பெற்று, பூமியின் மன்னர்களிடம் பழிச்சொல்லை அடையாதே. என் மரணத்தோடு அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும்! பூமியின் ஆட்சியாளர்களான இவர்கள் ஒருவரோடொருவர் மகிழ்ச்சியாகக் கலக்கட்டும்! மகன் தந்தையை அடையட்டும், சகோதரியின் மகன் தாய்மாமனை அடையட்டும்! இந்நேரத்திற்குத் தகுந்த என்னுடைய சரியான வார்த்தைகளை மூடத்தனத்தாலோ, புத்தி குறைவாலோ நீ கேளாமற்போனால் பிறகு நீ பெரிதும் வருந்த வேண்டியிருக்கும். நான் சொல்வது உண்மையேயாகும். எனவே, இப்போதே {போரில் இருந்து} விலகுவாயாக” என்றார் {பீஷ்மர்}.

கடலுக்குச் செல்வபளின் (கங்கையின்) மகன் {பீஷ்மர்}, மன்னர்களுக்கு மத்தியில் இருந்த துரியோதனனிடம் பாசத்தால் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அமைதியானார். கணைக்காயங்களால் தன் முக்கிய உறுப்புகள் எரிந்து கொண்டிருந்தாலும், தன் வேதனைகளை அடக்கிக் கொண்ட அவர் {பீஷ்மர்}, தன்னை யோகத்தில் ஆழ்த்தினார்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அறம், பொருள் ஆகிய இரண்டும் நிறைந்த இந்த நன்மையான அமைதிநிறைந்த வார்த்தைகளை உமது மகன் {துரியோதனன்} கேட்டாலும், சாகும் மனிதன் மருந்தை மறுப்பதைப் போல அவற்றை ஏற்றானில்லை” {என்றான் சஞ்சயன்}. 


ஆங்கிலத்தில் | In English