Karna’s eulogy on Arjuna! | Drona-Parva-Section-003 | Mahabharata In Tamil
(துரோணாபிஷேக பர்வம் – 03)
பதிவின் சுருக்கம் : பீஷ்மர் இருக்குமிடம் சென்ற கர்ணன்; பீஷ்மரிடம் அர்ஜுனனின் பெருமைகளைச் சொல்லி, போரிட அனுமதி வேண்டிய கர்ணன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “க்ஷத்திரியர்கள் அனைவரையும் கொல்பவரும், நீதிமிக்க ஆன்மாவும், அளவிலா சக்தியும் கொண்ட வீரரும், பெரும் வில்லாளியும், தெய்வீக ஆயுதங்களைக் கொண்டு சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} (தன் தேரில் இருந்து) வீழ்த்தப்பட்டவருமான மதிப்புக்குரிய பாட்டன் பீஷ்மர், வலிமைமிக்கக் காற்றால் வற்ற செய்யப்பட்ட பரந்த பெரும் கடலைப் போலக் கணைகளின் படுக்கையில் கிடப்பதைக் கண்டு, உமது மகன்களுக்கு வெற்றி மீதான நம்பிக்கையும், மன அமைதியும் அவர்களது கவசங்களோடு காணாமல் போனது.
அடியற்ற பெருங்கடலைக் கடக்க முயன்று அதில் மூழ்குபவர்களுக்கு ஒரு தீவாக எவர் இருந்தாரோ அவரை {பீஷ்மரை} கண்டு, யமுனையின் ஊற்று போலத் தொடர்ச்சியான கணைகளால் அனைத்துப் பக்கங்களிலும் எவர் சூழப்பட்டிருந்தாரோ அந்த வீரரை {பீஷ்மரை} கண்டு, பெரும் இந்திரனால் பூமியில் தள்ளப்பட்ட தாங்க முடியாத சக்தி கொண்ட மைநாக மலையைப் போல எவர் இருந்தாரோ அந்த வீரரை, ஆகாயத்திலிருந்து பூமியில் விழுந்திருக்கும் சூரியனைப் போல எவர் கிடந்தாரோ அந்த வீரரை, பழங்காலத்தில் விருத்திரனிடம் வீழ்ந்துக் காணப்படா நிலையில் இருந்த இந்திரனைப் போல எவர் இருந்தாரோ அவரை, போர் வீரர்கள் அனைவரின் புலன்களையும் எவர் மயங்கச் செய்தாரோ அவரை, போராளிகள் அனைவரிலும் முதன்மையான அவரை, வில்லாளிகள் அனைவருக்கும் அடையாளமான {கொடி போன்ற} அவரை, மனிதர்களில் காளையும், வீரரும், உமது தந்தையுமான அந்தப் பீஷ்மர், போரில் வீழ்த்தப்பட்டு, அர்ஜுனனின் கணைகளால் மறைக்கப்பட்டு, வீரப் படுக்கையில் கிடக்கும் அந்தப் பாரதர்களின் பாட்டனைக் கண்டு, துயரால் நிறைந்து, கிட்டத்தட்ட உணர்வற்ற நிலையில் இருந்த அந்த அதிரதன் மகன் (கர்ணன்), பெரும் பாசத்துடன் தன் தேரில் இருந்து இறங்கினான். (சோகத்தால்) பீடிக்கப்பட்டு, கண்ணீரால் கலங்கிய கண்களுடன் இருந்த அவன் {கர்ணன்} கால்நடையாக {நடந்தே} சென்றான்.
கூப்பிய கரங்களுடன் அவரை {பீஷ்மரை} வணங்கிய அவன் {கர்ணன்}, அவரிடம் {பீஷ்மரிடம்}, “நான் கர்ணன்! நீர் அருளப்பட்டிருப்பீராக! ஓ! பாரதரே {பீஷ்மரே}, புனிதமான, மங்கலகரமான வார்த்தைகளை என்னிடம் பேசுவீராக, கண்களைத் திறந்து என்னைக் காண்பீராக. முதிர்ந்தவரும், மரியாதைக்குரியவரும், அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவருமான நீரே கொல்லப்பட்டுத் தரையில் கிடைப்பதால், எந்த மனிதனும் தன் நற்செயல்களின் கனிகளை {புண்ணியப் பலன்களை} இவ்வுலகில் அனுபவிக்கமாட்டான் என்பது நிச்சயமாகிறது.
ஓ! குருக்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, அவர்களில் {குருக்களில்} கருவூலத்தை நிரப்புவதிலும், ஆலோசனைகள் கூறுவதிலும், துருப்புகளைப் போர்வியூகத்தில் அணிவகுக்கச் செய்வதிலும், ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும் (உம்மைப் போல) வேறு யாரையும் நான் காணவில்லை. ஐயோ, நீதிமிக்கப் புரிதல் கொண்ட ஒருவர், ஆபத்துகள் அனைத்திலும் குருக்களை எப்போதும் பாதுகாக்கும் ஒருவர், எண்ணற்ற போர்வீரர்களைக் கொண்ட ஒருவர் பித்ருக்களின் உலகிற்குச் செல்கிறார். இந்நாளிலிருந்து, ஓ! பாரதர்களின் தலைவரே {பீஷ்மரே}, கோபத்தில் தூண்டப்படும் பாண்டவர்கள் மான்களைக் கொல்லும் புலிகளைப் போலக் குருக்களைக் கொல்லப் போகின்றனர்.
இன்று, காண்டீவ நாணொலியின் சக்தியை அறியும் கௌரவர்கள், வஜ்ரதாரியை {இந்திரனை} அச்சத்துடன் கருதும் அசுரர்களைப் போல, இன்று சவ்யசச்சினை {அர்ஜுனனைக்} மதிக்கப் போகின்றனர் [1]. இன்று காண்டீவத்தில் இருந்து ஏவப்படும் கணைகளின் இடிக்கொப்பான ஒலி, குருக்களையும், பிற மன்னர்களையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தப்போகிறது. இன்று, ஓ! வீரரே {பீஷ்மரே}, கொடுந்தழல்களாலான நெருப்பு ஒரு காட்டை எரிப்பது போல, கிரீடியின் {அர்ஜுனனின்} கணைகள் தார்தராஷ்டிரர்களை எரிக்கும்.
[1] வேறொரு பதிப்பில் இவ்வரி பின்வருமாறு இருக்கிறது, “சவ்யசாசியின் வீரத்தை அறிந்தவர்களான கௌரவர்கள், அசுரர்கள் வஜ்ராயுதத்தின் ஒலியினால் பயத்தை அடைவதைப் போல, காண்டீவத்தின் ஒலியினால் இன்று அச்சமடையப்போகிறார்கள்”
காற்றும் நெருப்பும் சேர்ந்து காட்டின் எந்தப் பகுதிகளிலெல்லாம் செல்லுமோ, அப்பகுதிகளிலுள்ள செடிகள், கொடிகள் மற்றும் மரங்கள் அனைத்தையும் அவை எரிக்கின்றன. பார்த்தன் {அர்ஜுனன்}, பற்றியெரியும் நெருப்பைப் போன்றவன் என்பதில் ஐயமில்லை, ஓ! மனிதர்களில் புலியே {பீஷ்மரே}, கிருஷ்ணன் காற்றைப் போன்றவன் என்பதிலும் ஐயமில்லை. ஓ! பாரதரே {பீஷ்மரே}, பாஞ்சஜன்யத்தின் முழக்கத்தையும், காண்டீவத்தின் நாணொலியையும் கேட்கும் கௌரவத் துருப்புகள் அனைத்தும் அச்சத்தால் நிறையப் போகின்றன.
அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவன் {அர்ஜுனன்} (மன்னர்களை நோக்கி) முன்னேறும்போது, அவனுக்குச் சொந்தமானதும், குரங்குக் கொடிக் கொண்டதுமான அந்தத் தேரின் சடசடப்பொலியை {பீஷ்மரான} நீரில்லாமல் அவர்களால் {மன்னர்களால்} தாங்கிக் கொள்ள இயலாது. விவேகிகளால் விவரிக்கப்படுவதைப் போல மனிசக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளைக் கொண்ட அர்ஜுனனை எதிர்க்க உம்மைத் தவிர மன்னர்களில் வேறு யார் தகுந்தவர்?
உயர் ஆன்மாவான முக்கண்ணனோடு (மகாதேவனோடு) அவன் {அர்ஜுனன்} செய்த போர் மனித சக்திக்கு அப்பாற்பட்டதே. அவன் {அர்ஜுனன்}, புனிதமற்ற ஆன்மாக்களையுடையவர்களால் அடையப்பட முடியாத வரத்தை அவனிடம் {சிவனிடம்} இருந்தே அடைந்திருகிறான். மேலும், போரில் மகிழ்பவனான மாதவனால் {கிருஷ்ணனால்} அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} பாதுகாக்கப்படுகிறான்.
தேவர்கள் மற்றும் தானவர்களால் வழிபடப்படுபவரும், க்ஷத்திரிய குலத்தை அழித்தவரும், போரில் ராமரையே {பரசுராமரையே} வீழ்த்தியவரும், பெரும் சக்தி கொண்டவருமான உம்மாலேயே எவன் முன்பு வெல்லப்படவில்லையோ, அவனை {அர்ஜுனனைப்} போரில் வெல்ல வேறு எவன் தகுந்தவனாவான்.
போர்க்களத்தில் வீரர்களில் முதன்மையான அந்தப் பாண்டுவின் மகனோடு {அர்ஜுனனோடு} ஒப்பிடப்பட முடியாதவனான நான், வெறும் பார்வையாலேயே தன் எதிரிகளைக் கொல்பவனும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பானவனும், துணிவுமிக்கவனுமான அந்தக் கடும் வீரனை {அர்ஜுனனை}, என் ஆயுதங்களின் சக்தியால் உமது அனுமதியின் பேரில் கொல்லத்தகுந்தவனாவேன்” என்றான் {கர்ணன்}” {என்றான் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}.
ஆங்கிலத்தில் | In English |