Karna proposed Drona! | Drona-Parva-Section-005 | Mahabharata In Tamil
(துரோணாபிஷேக பர்வம் – 05)
பதிவின் சுருக்கம் : படைத்தலைவரை நியமிப்பதில் கர்ணனின் ஆலோசனையைக் கேட்ட துரியோதனன்; துரோணரை முன்மொழிந்த கர்ணன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மனிதர்களில் புலியான கர்ணன் தன் தேரில் ஏறுவதைக் கண்ட துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியால் நிறைந்து இவ்வார்த்தைகளைச் சொன்னான், “உன்னால் பாதுகாக்கப்படும் இந்தப் படை, இப்போது உரிய தலைவனைக் கொண்டிருக்கிறது என நான் நினைக்கிறேன். எனினும், எது முறையானதோ, எது நமது சக்திக்குட்பட்டதோ, அஃது இப்போது தீர்மானிக்கப்பட வேண்டும்” என்றான் {துரியோதனன்}.
கர்ணன் {துரியோதனனிடம்}, “ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, மன்னர்களில் விவேகி என்பதால் நீயே எங்களுக்கு அதைச் சொல்வாயாக. ஒருவன் எதைக் காண்கிறானோ, அந்தக் காரியத்தை, நிச்சயம் வேறு ஒருவனால் சிறப்பாகக் காண முடியாது. {தலைவன் செய்ய வேண்டிய காரியத்தை, அவனை விடச் சிறப்பாக வேறு எவனும் அறியமாட்டான்}. நீ என்ன சொல்லப் போகிறாய் என்பதைக் கேட்க மன்னர்கள் அனைவரும் விரும்புகின்றனர். தகாத வார்த்தைகள் எதையும் நீ உச்சரிக்க மாட்டாய் என்ற உறுதி எனக்கு இருக்கிறது” என்றான் {கர்ணன்}.
துரியோதனன் {கர்ணனிடம்}, “வயது, ஆற்றல், கல்வி ஆகியவற்றைக் கொண்ட பீஷ்மர், நம் வீரர்கள் அனைவராலும் ஆதரிக்கப்பட்டு {இதுவரை} நமது படையின் தலைவராக இருந்தார். ஓ! கர்ணா, பெரும் மகிமையைக் கொண்ட அந்த உயர் ஆன்மா {பீஷ்மர்}, பெரும் எண்ணிக்கையிலான என் எதிரிகளைக் கொன்று, பத்து நாட்களாக நன்றாகப் போரிட்டு நம்மைக் காத்தார். அடைவதற்கு மிக அரிதான சாதனைகளை அவர் அடைந்தார். ஆனால் இப்போதோ அவர் {பீஷ்மர்} சொர்க்கத்திற்கு உயர இருக்கிறார். ஓ! கர்ணா, அவருக்குப் பிறகு நமது படைத்தலைவராக இருக்கத் தகுந்தவர் என யாரை நீ நினைக்கிறாய்?
கடலில் படகோட்டி இல்லாத படகைப் போல, ஓ! போரில் முதன்மையானவனே {கர்ணா}, போரில் படைத்தலைவனில்லாத ஒரு படை, போரில் குறுகிய காலம் கூட நிலைக்க முடியாது. உண்மையில், படகோட்டி இல்லாத படகைப் போலவோ, தேரோட்டி இல்லாத தேர் போலவோ தலைவனில்லாத படை அச்சத்தால் பீடிக்கப்பட்டு எங்கே வேண்டுமானாலும் செல்லக்கூடும் {சிதறி ஓடக்கூடும்}. தான் செல்லும் நாட்டின் வழிகளை அறியாத வணிகன் அனைத்து வகைத் துயர்களிலும் விழுவதைப் போலவே, தலைவனில்லாத படையும் அனைத்து வகைத் துயருக்கும் வெளிப்பட்டு நிற்கும்.
எனவே, நமது படையின் உயர் ஆன்ம வீரர்களுக்கு மத்தியில், சந்தனுவின் மகனுக்குப் {பீஷ்மருக்குப்} பின்பு தலைவராக இருக்கத் தகுந்த ஒருவரைக் கண்டுபிடிப்பாயாக. போரில் தகுந்த தலைவராக யாரை நீ கருதுகிறாயோ, அவரையே நாம் அனைவரும் சேர்ந்து தலைவராக்குவோம் என்பதில் ஐயமில்லை” என்றான் {துரியோதனன்}.
கர்ணன் {துரியோதனனிடம்}, “மனிதர்களில் முதன்மையான இவர்கள் அனைவரும் உயர் ஆன்மா கொண்டோரே. இவர்களில் ஒவ்வொருவரும் நமது தலைவராக இருக்கத் தகுந்தவரே. {அதில்} சிறு சோதனைக்குக் கூட இங்கு அவசியமில்லை. உன்னதமான பரம்பரைகளைச் சேர்ந்த இவர்கள், தாக்கும் கலைகளையும் அறிந்திருக்கின்றர். ஆற்றலும், புத்திக் கூர்மையும் கொண்ட இவர்கள் அனைவரும், போரில் பின்வாங்காதவர்களாகவும், விவேகம் கொண்டவர்களாகவும், சாத்திரங்களை அறிந்தோராகவும், கவனம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.
எனினும், ஒரே நேரத்தில் அனைவரும் தலைவர்களாக இருக்க முடியாது. எவரிடம் சிறப்புத் தகுதிகள் இருக்கின்றனவோ, அந்த ஒருவரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இவர்கள் அனைவரும் தங்களை ஒருவருக்கொருவர் இணையானவர்களாகவே கருதுகின்றனர். எனவே இவர்களில் எவராவது ஒருவர் கௌரவிக்கப்பட்டால் {தலைவனாக்கப்பட்டால்} மற்றவர்கள் அதிருப்தி கொள்வர்; அதற்கு மேலும் அவர்கள் உனக்கு நன்மை செய்ய விரும்பி போரிட மாட்டார்கள் என்பதும் தெளிவானதாகும்.
எனினும், இந்த வீரர்கள் அனைவருக்கும் (ஆயுதங்களில்) ஆசானுமான இவர் {துரோணர்}, வயதில் முதிர்ந்தவராகவும், மரியாதைக்குத் தகுந்தவருமாக இருக்கிறார். எனவே, ஆயுதங்கள் தரிப்போர் அனைவரிலும் முதன்மையான இந்தத் துரோணரே தலைவராக்கப்பட வேண்டும். பிரம்மத்தை அறிந்தோரில் முதன்மையானவரும், சுக்ரனுக்கோ, பிருஹஸ்பதிக்கோ இணையானவரான வெல்லப்பட முடியாத இந்தத் துரோணர் இங்கே இருக்கையில், தலைவராகத் தகுந்தவன் வேறு எவன் இருக்கிறான்?
ஓ! பாரதா {துரியோதனா}, உன் படையில் உள்ள மன்னர்கள் அனைவரிலும், துரோணரைப் பின்தொடர்ந்து போருக்குச் செல்லாத ஒரு வீரனும் இருக்க மாட்டான் [1]. படைத்தலைவர்கள் அனைவரிலும், ஆயுததாரிகள் அனைவரிலும், புத்திசாலி மனிதர்கள் அனைவரிலும் இந்தத் துரோணர் முதன்மையானவர் ஆவார். அதையும் தவிர, ஓ! மன்னா {துரியோதனா}, இவர் (ஆயுதங்களில்) உனது ஆசானாகவும் இருக்கிறார்.
[1] துரோணருக்குப் பின்னால் நடப்பதைத் தனக்கு அவமானமாக எவன் கருதுவான்? என இங்கே மேற்கண்ட வரியை விளக்குகிறார் கங்குலி
எனவே, ஓ! துரியோதனா, அசுரர்களை வீழ்த்துவதற்காக, போரில் கார்த்திகேயனை {முருகனைத்} தங்கள் தலைவனாக்கிய தேவர்களைப் போல, தாமதமில்லாமல், இவரை உனது படைகளுக்குத் தலைவராகக் கொள்வாயாக” என்றான் {கர்ணன்}” {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |