Duryodhana requested Drona! | Drona-Parva-Section-006 | Mahabharata In Tamil
(துரோணாபிஷேக பர்வம் – 06)
பதிவின் சுருக்கம் : படைத்தலைவராகும்படி துரோணரை வேண்டிய துரியோதனன்; துரியோதனனின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்த கௌரவப் படையினர்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கர்ணன் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துரியோதனன், துருப்புகளுக்கு மத்தியில் நின்றிருந்த துரோணரிடம் இதைச் சொன்னான்.
துரியோதனன் {துரோணரிடம்}, "உமது பிறப்பு வகையின் மேன்மை, நீர் பிறந்த உன்னதக் குலம், உமது கல்வி, வயது, புத்திக்கூர்மை, ஆற்றல், திறன், வெல்லப்பட இயலாத தன்மை, உலகக் காரியங்களின் உமது அறிவு, கொள்கை, தன்னை வென்ற தன்மை, உமது தவத்துறவு, உமது நன்றியறிதல், அனைத்து அறங்களிலும் மேன்மை ஆகியவற்றைக் கொண்ட உம்மைப் போல நல்ல தலைவராகத் தகுந்தவர் இம்மன்னர்களில் வேறு யாருமில்லை. எனவே, தேவர்களைக் காக்கும் வாசவனை {இந்திரனைப்} போல எங்களை நீர் காப்பீராக.
ஓ! பிராமணர்களில் சிறந்தவரே {துரோணரே}, உம்மைத் தலைவராகக் கொண்டு எங்கள் எதிரிகளை வீழ்த்த நாங்கள் விரும்புகிறோம். ருத்ரர்களில் காபாலி போலவும், வசுக்களில் பாவகன் போலவும், யக்ஷர்களில் குபேரன் போலவும், மருத்துக்களில் வாசவன் {இந்திரன்} போலவும், பிராமணர்களில் வசிஷ்டர் போலவும், ஒளிக்கோள்களில் சூரியன் போலவும், பித்ருக்களில் யமன் போலவும், நீர்வாழ்வனவற்றில் வருணன் போலவும், விண்மீன்களில் நிலைவைப் போலவும், திதியின் மகன்களில் உசனஸ் போலவும், படைத் தலைவர்கள் அனைவரிலும் முதன்மையானவராக நீர் இருக்கிறீர். எனவே, நீர் எங்கள் தலைவராவீராக.
ஓ! பாவமற்றவரே {துரோணரே}, இந்தப் பதினோரு {11} அக்ஷௌஹிணி படைகளும் உமது ஆணைகளுக்குக் கீழ்ப்படியட்டும். இத்துருப்புகளை வியூகத்தில் அணிவகுத்து, தானவர்களைக் கொல்லும் இந்திரனைப் போல நம் எதிரிகளை நீர் கொல்வீராக. தேவர்களின் படைகளுக்குத் தலைமையில் செல்லும் பாவகனின் மகனை (கார்த்திகேயனைப்) போல, எங்கள் அனைவருக்கும் தலைமையில் நீர் செல்வீராக. தலைமைக் காளையைப் பின்தொடர்ந்து செல்லும் காளைகளைப் போல, போரில் நாங்கள் உம்மைப் பின்தொடர்வோம் [1]. கடுமையானவரும், பெரும் வில்லாளியுமான நீர், எங்களுக்குத் தலைமையில் நின்று வில்வளைப்பதைக் கண்டால் அர்ஜுனன் தாக்கமாட்டான். ஓ! மனிதர்களில் புலியே {துரோணரே}, நீர் எங்கள் தலைவரானால், தொண்டர்கள் மற்றும் உறவினர்களுடன் கூடிய யுதிஷ்டிரனை நான் போரில் வீழ்த்துவேன் என்பதில் ஐயமில்லை" என்றான் {துரியோதனன்}.
[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, "பசுவின் கன்றுகள் காளையைத் தொடர்ந்து செல்வதைப் போலப் போரில் உம்மை நாங்கள் பின்தொடர்வோம்" என்றிருக்கிறது.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "துரியோதனன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, (கௌரவப் படையின்) மன்னர்கள் அனைவரும் "துரோணருக்கு வெற்றி" என்று கூச்சலிட்டனர். மேலும் அவர்கள் தங்கள் சிங்க முழக்கங்களால் உமது மகனை {துரியோதனனை} இன்புறச் செய்தனர். மகிழ்ச்சியால் நிறைந்த துருப்புகளும், துரியோதனனைத் தங்கள் தலைமையில் கொண்டு, பெரும்புகழை வெல்ல விரும்பி, அந்த அந்தணர்களில் சிறந்தவரை {துரோணரைப்} புகழத் தொடங்கினர். பிறகு, துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்.
ஆங்கிலத்தில் | In English |