Friday, April 08, 2016

அர்ஜுனனின் உறுதிமொழி! - துரோண பர்வம் பகுதி – 013

Arjuna’s assurance! | Drona-Parva-Section-013 | Mahabharata In Tamil

(துரோணாபிஷேக பர்வம் – 13)

பதிவின் சுருக்கம் : துரோணரின் உறுதிமொழியை அறிந்த யுதிஷ்டிரன்; பாண்டவர்கள் ஆலோசனை; யுதிஷ்டிரனைத் தேற்றிய அர்ஜுனன்; போரின் தொடக்கமும், துரோணரின் ஆற்றலும்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த வரம்புகளுக்கு உட்பட்டு மன்னனை {யுதிஷ்டிரனைப்} பிடிக்கத் துரோணர் உறுதியளித்த பிறகு, உமது துருப்பினர், யுதிஷ்டிரன் பிடிபடபோவதைக் ({துரோணரின் அந்த உறுதிமொழியைக்) கேட்டுச் சங்கொலிகள் மற்றும் தங்கள் கணைகளின் “விஸ்” ஒலிகள் ஆகியவற்றுடன் கலந்து தங்கள் சிங்க முழக்கங்களைப் பலவாறு வெளியிட்டனர். எனினும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பரத்வாஜர் மகனின் {துரோணரின்} நோக்கம் குறித்த அனைத்தையும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் தன் ஒற்றர்கள் மூலம் விரைவில் விரிவாக அறிந்தான்.


பிறகு தன் சகோதரர்கள் அனைவரையும், தன் படையின் பிற மன்னர்கள் அனைவரையும் அழைத்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, துரோணரின் நோக்கத்தைக் குறித்துக் கேட்டாய். எனவே, அக்காரியம் சாதிக்கப்படுவதைத் தடுக்கத் தக்க நடவடிக்கைகளைப் பின்பற்றுவோமாக. எதிரிகளைக் கலங்கடிப்பவரான துரோணர் தன் உறுதிமொழியை வரம்புகளுக்குட்பட்டுச் செய்திருக்கிறார் என்பது உண்மையே, எனினும், ஓ! பெரும் வில்லாளியே {அர்ஜுனனே}, அவை {அந்த வரம்புகள்} உன்னைச் சார்ந்தவையே. எனவே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, துரியோதனன், தன் விருப்பத்தின் கனியை {பலனை} துரோணரிடம் அடையாதவாறு நீ இன்று என் அருகிலேயே நின்று போரிடுவாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “எப்படி ஒருபோதும் என்னால் எனது ஆசானை {துரோணரைக்} கொல்ல முடியாதோ, அப்பட்டியே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உம்மையும் என்னால் விட இயலாது. ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, என் ஆசானை {துரோணரை} எதிர்த்துப் போரிடுவதைக் காட்டிலும் நான் போரில் என் உயிரையே விட்டுவிடுவேன் [1]. இந்தத் திருதராஷ்டிர மகன் {துரியோதனன்}, போரில் உம்மைக் கைப்பற்றி, அரசுரிமையை அடைய விரும்புகிறான். இவ்வுலகில் அவன் அந்த விருப்பத்தின் கனியை {பலனை} ஒருபோதும் அடையப் போவதில்லை. நட்சத்திரங்களுடன் கூடிய ஆகாயம் விழலாம், பூமி துண்டுகளாகச் சிதறிப் போகலாம், எனினும், நிச்சயம் நான் உயிரோடுள்ளவரை உம்மைப் பிடிப்பதில் துரோணரால் வெல்லவே முடியாது.

[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, “நான் போரில் உயிரை இழந்தாலுமிழப்பேன்; ஆசாரியரை எதிர்ப்பேன்; எவ்விதத்தாலும் உம்மைக் கைவிடேன்” என்று இருக்கிறது.

வஜ்ரதாரி {இந்திரன்}, அல்லது விஷ்ணுவின் தலைமையிலான தேவர்களே அவருக்கு {துரோணருக்குப்} போரில் உதவினாலும், களத்தில் உம்மைக் கைப்பற்றுவதில் அவரால் {துரோணரால்} வெல்லவே முடியாது. நான் உயிரோடுள்ளவரை, ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, அவர் {துரோணர்} ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவரே ஆனாலும், அந்தத் துரோணரிடம் நீர் அச்சங்கொள்வது உமக்குத் தகாது. ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, என் உறுதிமொழிகள் ஒருபோதும் நிறைவடையாமல் இருந்ததில்லை என்பதையும் நான் உமக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

எப்போதும் நான் பொய்மை ஏதும் பேசியிருப்பதாக எனக்கு நினைவில்லை.

எப்போதும் நான் வீழ்த்தப்பட்டதாகவும் எனக்கு நினைவில்லை.

எப்போதும் நான் ஓர் உறுதிமொழியைச் செய்துவிட்டு, அதில் ஒரு பகுதியை நிறைவேற்றாமல் இருந்ததாக எனக்கு நினைவில்லை” என்றான் {அர்ஜுனன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு பாண்டவ முகாமில், சங்குகள், பேரிகைகள், படகங்கள், மிருதங்கங்கள் ஆகியன ஒலிக்கப்பட்டு முழங்கின. உயர் ஆன்ம பாண்டவர்கள் சிங்க முழக்கங்களைச் செய்தனர். இவையும், அவர்களது வில்லின் பயங்கர நாணொலிகளும், உள்ளங்கை தட்டல்களும் சொர்க்கத்தையே எட்டின. பாண்டுவின் வலிமைமிக்க மகன்களின் முகாமில் இருந்து எழுந்த உரத்த சங்கொலிகளைக் கேட்டு, உமது படைப்பிரிவுகளிலும் பல்வேறு கருவிகள் இசைக்கப்பட்டன. பிறகு உமது படைப்பிரிவுகளும், அவர்களுடையனவும் போருக்காக அணிவகுக்கப்பட்டன. பிறகு போரை விரும்பிய அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து மெதுவாக முன்னேறினர். பாண்டவர்கள், குருக்கள் {கௌரவர்கள்}, துரோணர் மற்றும் பாஞ்சாலர்களுக்கு இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வண்ணம் கடுமையான ஒரு போர் தொடங்கியது.

சிருஞ்சயர்கள் கடுமையாகப் போரிட்டாலும், துரோணரால் பாதுகாக்கப்பட்ட அந்தப் படையை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. அதே போல, தாக்குவதில் திறம்பெற்ற உமது மகனின் {துரியோதனனின்} வலிமைமிக்கத் தேர்வீரர்களாலும், கிரீடம் தரித்தவனால் (அர்ஜுனனால்) பாதுகாக்கப்பட்ட பாண்டவப் படையை வீழ்த்த முடியவில்லை. துரோணர் மற்றும் அர்ஜுனனால் பாதுகாக்கப்பட்ட அவ்விரு படைகளும், இரவின் அமைதியில் பூத்துக் குலுங்கும் இரு காடுகளைப் போலச் செயலற்று நிற்பதாகத் தெரிந்தது.

பிறகு, தங்கத் தேரைக் கொண்டவர் (துரோணர்), சூரியனைப் போன்ற பெரும் காந்தியைக் கொண்டு, பாண்டவர்களின் படையணிகளை நசுக்கியபடி, தான் விரும்பியவாறெல்லாம் அவர்கள் மத்தியில் திரிந்தார். பாண்டவர்களும், சிருஞ்சயர்களும், தாங்கள் கொண்ட அச்சத்தால், பெரும் வேகத்தோடு விரைவாக முன்னேறி வந்த அந்தத் தனி வீரரை {துரோணரை} பலராகக் கருதினர். அவரால் ஏவப்பட்ட பயங்கரக் கணைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்துப் பக்கங்களிலும் பாய்ந்து பாண்டு மகனின் படையை அச்சுறுத்தின. உண்மையில் துரோணர், நூற்றுக்கணக்கான கிரணங்களுடன் கூடிய நடுநாள் சூரியனைப் போலவே தெரிந்தார்.

இந்திரனைக் காண இயலாத தானவர்களைப் போல, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் கோபம் நிறைந்த பரத்வாஜர் மகனை {துரோணரைக்) காண பாண்டவர்களில் ஒருவராலும் இயலவில்லை. பிறகு பரத்வாஜரின் வீர மகன்{துரோணர்}, (பகைவர்) துருப்புகளைக் குழப்பியபடி, கூரிய கணைகளால் திருஷ்டத்யும்னன் படைப்பிரைவை வேகமாக எரிக்கத் தொடங்கினார். தன் நேரான கணைகளால் திசைகள் அனைத்தையும் மறைத்துத் தடுத்த அவர், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} இருந்த பாண்டவப் படையை நசுக்கத் தொடங்கினார்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English