Thursday, April 07, 2016

வரமளித்த துரோணர்! - துரோண பர்வம் பகுதி – 012

Drona granted boon! | Drona-Parva-Section-012 | Mahabharata In Tamil

(துரோணாபிஷேக பர்வம் – 12)

பதிவின் சுருக்கம் : துரியோதனனுக்கு வரமொன்றை அளிப்பதாகச் சொன்ன துரோணர்; யுதிஷ்டிரனை உயிரோடு பிடிக்க வேண்டிய துரியோதனன்; வரமளித்த துரோணர்; துரோணரின் உறுதியை படையினரிடம் வெளிப்படுத்திய துரியோதனன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சரி, என் கண்களால் அனைத்தையும் கண்டவாறே, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களால் கொல்லப்பட்ட துரோணர் எப்படி வீழ்ந்தார் என்பதை நான் உமக்கு விவரிப்பேன்.


துருப்புகளின் தலைமைப் பொறுப்பை அடைந்த வலிமைமிக்கத் தேர்வீரரான பரத்வாஜர் மகன் {துரோணர்}, உமது மகனிடம் {துரியோதனனிடம்} துருப்புகள் அனைத்தின் மத்தியில் இவ்வார்த்தைகளைச் சொன்னார், “ஓ! மன்னா {துரியோதனா}, கௌரவர்களில் காளையான கடலுக்குச்செல்பவள் (கங்கையின்) மகனுக்கு {பீஷ்மருக்குப்} பிறகு, துருப்புகளின் தலைமைப் பொறுப்பில் உடனே நிறுவி என்னை மதித்த உனது செயலுக்குத் தகுந்த கனியை {பயனை} நீ அடைவாய். உனது எந்தக் காரியத்தை நான் இப்போது அடைய வேண்டும்? நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக” {என்றார் துரோணர்}.

பிறகு, கர்ணன், துச்சாசனன் மற்றும் பிறரிடம் ஆலோசித்த மன்னன் துரியோதனன், வெல்லப்பட முடியாத வீரரும், வெற்றியாளர்கள் அனைவரிலும் முதன்மையானவருமான ஆசானிடம் {துரோணரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான், “நீர் எனக்கு ஒரு வரத்தை அளிப்பதாக இருந்தால், தேர்வீரர்களில் முதன்மையான யுதிஷ்டிரனை உயிருடன் பிடித்து, இங்கே என்னிடம் கொண்டு வருவீராக” {என்றான் துரியோதனன்}.

பிறகு, அந்தக் குருக்களின் ஆசான், உமது மகனின் {துரியோதனனின்} அவ்வார்த்தைகளைக் கேட்டுத் துருப்புகள் அனைத்தையும் மகிழ்விக்கும் வண்ணம் அவனுக்கு {துரியோதனனுக்குப்} பின்வரும் பதிலைச் சொன்னார், “எவனைக் கைப்பற்றுவதை நீ விரும்புகிறாயோ, அந்தக் குந்தியின் மகன் (யுதிஷ்டிரன்) பாராட்டுக்குரியவன். ஓ! வீழ்த்தப்படக் கடினமானவனே {துரியோதனா}, வேறு எந்த வரத்தையோ, (உதராணமாக) அவனது கொலையையோ நீ கேட்கவில்லை. ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, எக்காரணத்திற்காக நீ அவனது மரணத்தை விரும்பவில்லை? ஓ! துரியோதனா, கொள்கையில் அறியாமை கொண்டவனல்ல நீ என்பதில் ஐயமில்லை. எனவே, யுதிஷ்டிரனின் மரணத்தை ஏன் நீ வேண்டவில்லை? நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அவனது மரணத்தை விரும்பும் எந்த எதிரியையும் கொண்டிருக்கவில்லை என்பது பெரும் ஆச்சரியமானதாகும். அவன் உயிரோடிருக்க நீ விரும்புகிறாயானால், (ஒன்று) உன் குலத்தை அழிவிலிருந்து பாதுகாக்க முயல்கிறாய், அல்லது, ஓ! பாரதர்களின் தலைவா {துரியோதனா}, போரில் பாண்டவர்களை வீழ்த்தி அவர்கள் நாட்டை அவர்களுக்கே கொடுத்து (அவர்களுடன்) சகோதர உறவை நிறுவ விரும்புகிறாய். அந்தப் புத்திசாலி இளவரசனின் {யுதிஷ்டிரனின்} பிறப்பு மங்கலகரமானது. நீயே கூட அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} பாசம் கொண்டிருப்பதால், அவன் அஜாதசத்ரு (எதிரிகளற்றவன்) என்று உண்மையாகவே அழைக்கப்படுகிறான்” {என்றார் துரோணர்}.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணரால் இப்படிச் சொல்லப்பட்டதும், உமது மகனின் {துரியோதனனின்} நெஞ்சில் எப்போதும் இருக்கும் உணர்ச்சியானது திடீரெனத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. பிருஹஸ்பதியைப் போன்றோராலும் கூடத் தங்கள் முக உணர்ச்சிகளை மூடிமறைக்க முடியாது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதனால், மகிழ்ச்சியால் நிறைந்த உமது மகன் {துரியோதனன்}, இந்த வார்த்தைகளைச் சொன்னான்,

{துரியோதனன் துரோணரிடம்}, “போரில் குந்தியின் மகனை {யுதிஷ்டிரனைக்} கொல்வதால், ஓ! ஆசானே {துரோணரே}, வெற்றி எனதாகாது. யுதிஷ்டிரன் கொல்லப்பட்டால், பிறகு நம் அனைவரையும் பார்த்தன் {அர்ஜுனன்} கொன்றுவிடுவான் என்பதில் ஐயமில்லை. மேலும், அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரையும் தேவர்களாலும் கொல்ல முடியாது. அவ்வழக்கில், அவர்களில் பிழைக்கும் ஒருவனும் கூட நம் அனைவரையும் அழித்துவிடுவான் [1]. எனினும், யுதிஷ்டிரன் தன் உறுதிமொழிகளில் உண்மைநிறைந்தவனாவான். அவனை {யுதிஷ்டிரனை} இங்கே (உயிருடன்) கொண்டு வந்து, மீண்டும் ஒருமுறை பகடையில் வீழ்த்தினால், பாண்டவர்கள் அனைவரும் யுதிஷ்டிரனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்கள் ஆகையால், அவர்கள் மீண்டும் ஒருமுறை காட்டுக்குச் செல்வார்கள். அப்படிப்பட்ட ஒரு வெற்றியே நீடித்த ஒன்று எனத் தெளிவாகத் தெரிகிறது. இதற்காகவே நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் கொலையை எவ்வழியிலும் நான் விரும்பவில்லை” {என்றான் துரியோதனன்}.

[1] வேறொரு பதிப்பில் இந்த இடம் வேறு மாதிரியாக இருக்கிறது, “பாண்டவர்கள் அனைவரும், தங்கள் மகன்களோடு போரில் கொல்லப்படுவார்களாகில், அப்போது அரசர்கள் அனைவரையும் மிச்சமின்றித் தன் வசப்படுத்திக் கொண்டு, சமுத்திரங்கள், அரண்யங்கள் ஆகியவற்றைக் கொண்டதும், செழிப்புள்ளதுமான அந்தப் பூமியை வென்று புருஷோத்தமான கிருஷ்ணன் திரௌபதிக்காவது, குந்திக்காவது கொடுத்து விடுவான். அந்தப் பாண்டவர்களுள் இந்தக் கிருஷ்ணன் மிச்சமாக இருப்பானாகில் இவனே நம்மை மிஞ்சும்படி செய்யமாட்டான்” என்று இருக்கிறது. மன்மதநாத தத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

பொருளாதாய அறிவியலின் {அர்த்த தத்துவங்களின்} உண்மைகளை அறிந்தவரும், பெரும் புத்திக்கூர்மையைக் கொடையாகக் கொண்டவருமான துரோணர், துரியோதனனின் இந்தக் குறுக்குப் புத்தியை உறுதிசெய்து கொண்டு, சிறிது நேரம் சிந்தித்துப் பின்வரும் வழியில் அந்த வரத்தைக் கட்டுப்படுத்தி அவனுக்கு அளித்தார்.

துரோணர் {துரியோதனிடம்}, “வீரனான அர்ஜுனன், யுதிஷ்டிரனைப் போரில் பாதுகாக்கவில்லை எனில், அந்த மூத்த பாண்டவன் {யுதிஷ்டிரன்} ஏற்கனவே உன் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டதாக நினைத்துக் கொள்வாயாக. பார்த்தனை {அர்ஜுனனைப்} பொறுத்தவரை, இந்திரனின் தலைமையிலான தேவர்கள் மற்றும் அசுரர்களால் கூடப் போரில் அவனை எதிர்க்க இயலாது. இதன் காரணமாகவே, நீ செய்யச் சொல்லி என்னிடம் கேட்பதை நான் செய்யத் துணியேன்.

அர்ஜுனன் சீடன் என்பதிலும், ஆயுதங்களில் நானே அவனது முதல் ஆசான் என்பதிலும் ஐயமில்லை. எனினும், அவன் இளமையானவன், பெரும் நற்பேறைக் கொண்டவன், மேலும் (தன் நோக்கங்களைச் சாதிக்க) அதிகப்படியாக முனைபவனுமாவான். மேலும், அவன் {அர்ஜுனன்} இந்திரன் மற்றும் ருத்ரனிடமிருந்த பல ஆயுதங்களை அடைந்திருக்கிறான். {இவை} தவிரவும், அவன் உன்னால் {கோபம்} தூண்டப்பட்டவனாகவும் இருக்கிறான். எனவே, நீ என்னிடம் கேட்டதைச் செய்ய நான் துணியேன்.

செயல்படுத்தக்கூடிய எவ்வழியிலாவது அர்ஜுனன் போரில் இருந்து நீக்கப்படட்டும். பார்த்தன் {அர்ஜுனன்} விலக்கப்பட்டதும், மன்னன் யுதிஷ்டிரன் ஏற்கனவே வீழ்ந்துவிட்டதாக நீ கருதலாம். ஓ! மனிதர்களில் காளையே {துரியோதனா}, அவனை {யுதிஷ்டிரனைக்} கொல்வதில் அல்ல, அவனைக் கைப்பற்றுவதிலேயே வெற்றி இருக்கிறது. தந்திரத்தால் கூட அவனைக் கைப்பற்றுவது சாதிக்கப்படலாம்.

உண்மையில், மனிதர்களில் புலியான குந்திமகன் தனஞ்சயன் {அர்ஜுனன்} களத்தில் இருந்து விலக்கப்பட்டால், உண்மைக்கும், நீதிக்கும் தன்னை அர்ப்பணித்திருக்கும் அம்மன்னன் {யுதிஷ்டிரன்} போரில் என் முன்னிலையில் ஒருக்கணம் நின்றாலும் கூட அவனைக் கைப்பற்றி இன்றே அவனை உன் கட்டுப்பாட்டின் கீழ் நான் கொண்டு வருவேன் என்பதில் ஐயமில்லை. எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, பல்குனனின் {அர்ஜுனனின்} முன்னிலையில் இந்திரனின் தலைமையிலான தேவர்கள் மற்றும் அசுரர்களாலும் கூடப் போரில் யுதிஷ்டிரன் பிடிக்க இயலாதவனாவான்” என்றார் {துரோணர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இந்த வரம்புகளுக்கு உடன்பட்டு மன்னனை {யுதிஷ்டிரனைக்} கைப்பற்றுவதாகத் துரோணர் உறுதியளித்தாலும், உமது முட்டாள் மகன்கள், யுதிஷ்டிரன் ஏற்கனவே பிடிபட்டதாகவே கருதினர். பாண்டவர்களிடம் துரோணர் கொண்ட சார்பு நிலையை {பாரபட்சத்தை} உமது மகன் (துரியோதனன்) அறிவான். எனவே, துரோணரைத் தன் உறுதிமொழியில் நிலைக்கச் செய்யும் பொருட்டு, அவன் {துரியோதனன்} அந்த ஆலோசனைகளை வெளியிட்டான். பிறகு, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, துரோணர் (மூத்த) பாண்டவனை {யுதிஷ்டிரனைக்} கைப்பற்றுவதாக வாக்குறுதி அளித்த அந்தச் செய்தி, துரியோதனனால் அவனது துருப்பினர் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது {பிரகடனப்படுத்தப்பட்டது}” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English