Wednesday, April 20, 2016

திரிகர்த்தர்களின் உறுதிமொழி! - துரோண பர்வம் பகுதி – 017

The oath of the Trigartas! | Drona-Parva-Section-017 | Mahabharata In Tamil

(சம்சப்தகவத பர்வம் – 01)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனைப் பிடிக்கும் வழி கூறிய துரோணர்; அர்ஜுனனைத் தானே எதிர்ப்பதாகச் சபதமேற்ற திரிகர்த்த மன்னன் சுசர்மன்; திரிகர்த்தர்களின் உறுதிமொழி; அர்ஜுனனைப் போருக்கழைத்த திரிகர்த்தர்கள்; யுதிஷ்டிரனைக் காக்க சத்தியஜித்தை நிறுத்திவிட்டு ஸம்சப்தகர்களை எதிர்த்த அர்ஜுனன்... 

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இரண்டு படைகளின் துருப்புகளும் தங்கள் பாசறைகளுக்குச் சென்ற பிறகு, அவர்கள் அங்கம் வகித்த படைப்பிரிவுகள் மற்றும் துணைப்பிரிவுகளுக்குத் தக்கபடி முறையாகத் தங்கள் தங்கள் இடங்களை அடைந்தனர். துருப்புகளைப் பின்வாங்கச் செய்த பிறகு, உற்சாகமற்ற மனத்துடன் கூடிய துரோணர், துரியோதனனைக் கண்டு வெட்கத்தால் இவ்வார்த்தைகளைச் சொன்னார்: “தனஞ்சயன் {அர்ஜுனன்} யுதிஷ்டிரனிடம் இருக்கையில், தேவர்களாலும் கூடப் போரில் அவன் {யுதிஷ்டிரன்} பிடிக்கப்பட முடியாதவனாவான் என்று நான் ஏற்கனவே உன்னிடம் சொன்னேன். போரில் பார்த்தன் {அர்ஜுனன்} மீது நீங்கள் அனைவரும் பாய்ந்தீர்கள், இருப்பினும் அவன் உங்கள் முயற்சிகளை அனைத்தையும் சலிக்கச் செய்தான். நான் சொல்வதில் ஐயங்கொள்ளாதே, கிருஷ்ணனும், பாண்டுவின் மகனும் (அர்ஜுனனும்) வெல்லப்பட முடியாதவர்களே. எனினும், வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனனை எவ்வழியிலாவது (யுதிஷ்டிரனின் பக்கத்தில் இருந்து) விலக்க முடியுமென்றால், ஓ! மன்னா {துரியோதனா}, பிறகு யுதிஷ்டிரன் விரைவில் உன் கட்டுப்பாட்டின் கீழ் வருவான்.

யாரேனும் ஒருவர் அவனை (அர்ஜுனனைப்) போரில் சவாலுக்கழைத்து, களத்தின் வேறு ஏதாவது ஒரு பகுதிக்கு அவனை இழுத்துச் செல்ல வேண்டும். குந்தியின் மகன் {அர்ஜுனன்} அவனை வீழ்த்தாமல் திரும்ப மாட்டான். அதே வேளையில், அர்ஜுனன் இல்லாத அந்தப் பொழுதில், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, திருஷ்டத்யும்னன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பாண்டவப் படைக்குள் ஊடுருவி நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை நான் பிடிப்பேன். இப்படியே, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, தர்மனின் மகனான யுதிஷ்டிரனையும், அவனது தொண்டர்களையும் கட்டுப்பாட்டின் கீழ் நான் கொண்டு வருவேன் என்பதில் ஐயமில்லை. அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, போரில் ஒருக்கணமாவது என் முன்னிலையில் நின்றானானால், களத்தில் இருந்து அவனை நான் சிறைப்பிடித்துக் கொண்டுவருவேன். (பாண்டவப் படையை வீழ்த்தி அடையும்) வெற்றியை விட அந்த அருஞ்செயல் மிகவும் நன்மை தருவதாக இருக்கும் [1]” என்றார் {துரோணர்}.


[1] இப்பத்தி வேறொரு பதிப்பில் வேறு மாதிரியாக இருக்கிறது. அது பின்வருமாறு, “அர்ஜுனனால் விடப்பட்ட அந்தத் தருமராஜன் பக்கத்தில் செல்லும் என்னைக் கண்டு அஞ்சி ஓடாதிருந்தால், பாண்டு மகனான அவனைப் பிடிபட்டவனென்றே நீ அறிந்து கொள். மாமன்னா, இவ்வாறு ஒருக்கணமாவது என் எதிரில் யுதிஷ்டிரன் நிற்பானானால் அவனைப் பரிவாரத்துடன் இப்போதே உன் வசத்தில் கொண்டு வந்து சேர்ப்பேன். இதில் ஐயமில்லை. யுத்தபூமியில் இருந்து ஓடிப் போய் விடுவானானால், அது (நாம் அடையும்) வெற்றியைக் காட்டிலும் மேலானது” என்று இருக்கிறது.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “துரோணரின் அவ்வார்த்தைகளைக் கேட்ட திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனது தம்பிகளுடன் சேர்ந்து இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! மன்னா {துரியோதனா}, காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} நாங்கள் எப்போதும் அவமதிக்கப்பட்டே வந்திருக்கிறோம். ஓ! பாரதக் குலத்தில் காளையே {துரியோதனா}, நாங்கள் அவனுக்கு எத்தீங்கையும் செய்யாதிருப்பினும், அவன் எப்போதும் எங்களைக் காயப்படுத்தியே வந்தான். அந்தப் பல்வேறு அவமதிப்பு நிகழ்வுகள் அனைத்தையும் நினைத்து நினைத்து கோபத்தால் எரியும் நாங்கள் இரவில் தூங்க முடியாமல் இருக்கிறோம்.

நற்பேறினால், அந்த அர்ஜுனன் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு எங்கள் முன்னிலையில் நிற்பான். எனவே, எது எங்கள் இதயத்தில் இருக்கிறதோ, எதைச் சாதிக்க நாங்கள் முயல்கிறோமோ; எது உனக்கு ஏற்புடையதாக இருக்குமோ, எது எங்களுக்குப் புகழைக் கொண்டு வருமோ, அதை இப்போதே அடைய நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். களத்திற்கு வெளியே அழைத்துச் சென்று அவனைக் {அர்ஜுனனைக்} கொல்வோம். இன்றே இந்தப் பூமி அர்ஜுனன் இல்லாததாகவோ, அல்லது திரிகர்த்தர்கள் இல்லாததாகவோ போகட்டும். உன் முன்னிலையில் இந்த உறுதிமொழியை நாங்கள் உண்மையாக ஏற்கிறோம். இந்த எங்கள் சபதம் பொய்க்கப்போவதில்லை” என்றான் {சுசர்மன்}.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சத்தியரதன், சத்தியவர்மன், சத்தியவிரதன், சத்தியேஷு, சத்தியகர்மன் ஆகிய ஐந்து சகோதரர்களும் ஒன்று சேர்ந்து இது போலவே சொல்லிப் போர்க்களத்தில் உறுதியேற்று, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பத்தாயிரம் {10,000} தேர்களோடு (துரியோதனன் முன்னிலையில்) வந்தனர். மாலவர்களும், ஆயிரம் தேர்களோடு கூடிய துண்டிகேரர்களும், மாவேல்லகர்கள், லலித்தர்கள், மத்திரகர்கள் மற்றும் தன் சகோதரர்கள், பல்வேறு ஆட்சிப்பகுதிகளைச் சேர்ந்த பத்தாயிரம் தேர்கள் ஆகியவற்றுடன் கூடிய மனிதர்களில் புலியான பிரஸ்தல ஆட்சியாளன் சுசர்மனும் உறுதியேற்க முன்வந்தனர். பிறகு நெருப்பைக் கொண்டு வந்த அவர்கள் ஒவ்வொருவரும், தனக்கென்று ஒன்றைப் பற்ற வைத்து, குசப்புல்லாலான ஆடைகளையும், அழகிய கவசங்களையும் அணிந்தனர்.

கவசந்தரித்து, தெளிந்த நெய்யில் குளித்து, குசப்புல் ஆடைகளை அணிந்து, தங்கள் வில்லின் நாண்கயிறுகளைக் கச்சையாகப் {அரைஞாணாகப்} பயன்படுத்தியவர்களும், பிராமணர்களுக்கு நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கில் தானங்களை வழங்கியவர்களும், பல வேள்விகளைச் செய்தவர்களும், குழந்தைகளால் அருளப்பட்டவர்களும், மறுமையில் அருளப்பட்ட உலகங்களுக்குத் தகுந்தவர்களும், இவ்வுலகில் செய்ய வேண்டியவை ஏதுமில்லாதவர்களும், போரில் தங்கள் உயிர்களை விடத் தயாராக இருந்தவர்களும், புகழையும், வெற்றியையும் அடையத் தங்கள் ஆன்மாக்களை அர்ப்பணித்தவர்களும், வேள்விகளாலும், பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடை அளிப்பதாலும், சடங்குகளாலும், இவற்றுக்கெல்லாம் தலைமையாகப் பிரம்மச்சரியம் மற்றும் வேத கல்வியாலும் மட்டுமே அடைய முடிந்த (மறுமையின்) உலகங்களை நல்ல போரின் மூலம் விரைவில் அடைய விரும்புபவர்களும், தங்கம், பசுக்கள், ஆடைகள் ஆகியவற்றைக் கொடுத்துப் பிராமணர்களை மனநிறைவு கொள்ளச் செய்தவர்களுமான அவ்வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் அன்பாகப் பேசிக் கொண்டு நெருப்பை மூட்டி, போரில் அந்தச் சபதத்தை ஏற்றனர். அந்த நெருப்புகளின் முன்னிலையில், உறுதியான தீர்மானத்துடன் அந்தச் சபதத்தை அவர்கள் ஏற்றனர்.

தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கொல்வதாகச் சபதம் செய்த அவர்கள் {திரிகர்த்தர்கள் [சம்சப்தகர்கள்]}, பேரொலியுடன், “தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கொல்லாமல் களத்தில் இருந்து நாங்கள் திரும்பினாலோ, அவனால் வீழ்த்தப்பட்டு, அச்சத்தால் நாங்கள் புறமுதுக்கிட்டாலோ, எந்த நோன்பையும் எப்போதும் நோற்காதோர், மது குடிப்பவன், ஆசானின் மனைவியிடம் ஒழுக்கங்கெட்ட தொடர்பு கொண்டோர், பிராமணனின் உடைமையைத் திருடுவோர், மன்னனின் நிபந்தனையை நிறைவேற்றாமல் அவன் தந்த பரிசை அனுபவிப்பவன், பாதுகாப்பு நாடியவனைக் கைவிட்டவன், தன்னிடம் உதவி கேட்டவனைக் கொல்பவன், வீட்டைக் கொளுத்துவோர், பசுவைக் கொல்வோர், அடுத்தவருக்குத் தீங்கிழைப்போர், பிராமணர்களிடம் பகைமை பாராட்டுவோர், தன் மனைவியின் பருவ காலத்தில் மூடத்தனத்தால் அவளது துணையை நாடாதோர், தங்கள் முன்னோர்களுக்கான சிரார்த்த தினத்தில் பெண்ணின் துணையை நாடுவோர், தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்வோர், நம்பிக்கையுடன் அடைக்கலமாகப் பிறர் கொடுத்த பொருளை அபகரிப்போர், கல்வியை அழிப்போர், அலிகளோடு {ஆண்மையற்றோரோடு} போர்புரிவோர், இழிந்தோரை அண்டுவோர், நாத்திகர்கள், (புனித) நெருப்பையும், தாயையும், தந்தையையும் கைவிடுவோர், பாவங்கள் நிறைந்தோர் ஆகியோர் எந்த உலகங்களை அடைவார்களோ அந்த உலகங்கள் எங்களுடையவையாகும். அதேபோல, உலகில் அடைவதற்கு மிகக் கடினமான சாதனைகளைப் போரில் அடைந்தோமாகில் மிகவும் விருப்பத்திற்குரிய உலகங்களை நாங்கள் அடைவோம் என்பதில் ஐயமில்லை” என்றனர்.

இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தின் தென்பகுதியை நோக்கி அர்ஜுனனை அழைத்தபடி, போருக்கு அணிவகுத்துச் சென்றனர்.

மனிதர்களில் புலியும், பகை நகரங்களை அடக்குபவனுமான அர்ஜுனன், இப்படி அவர்களால் சவாலுக்கழைக்கப்பட்டதும், சற்றும் தாமதிக்காமல் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: {அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம்}, “அழைக்கப்பட்டால், நான் எப்போதும் புறமுதுகிடுவதில்லை. இஃது என் உறுதியான நோன்பாகும். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, வெற்றி அல்லது மரணம் என்ற உறுதியேற்றிருக்கும் இம்மனிதர்கள் {சம்சப்தகர்கள்} பெரும் போருக்காக என்னை அழைக்கிறார்கள். தன் தம்பிகளோடு கூடிய இந்தச் சுசர்மன் என்னைப் போருக்கு அழைக்கிறான். அவனையும் அவனது தொண்டர்களையும் கொல்ல எனக்கு அனுமதியளிப்பதே உமக்குத் தகும். ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரரே}, இந்தச் சவாலை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த எதிரிகள் போரில் (ஏற்கனவே) கொல்லப்பட்டதாக அறிவீராக என்று நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}.

யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, “ஓ! குழந்தாய் {அர்ஜுனா}, துரோணர் எதை அடையத் தீர்மானித்திருக்கிறார் என்ற விபரத்தை நீ கேட்டிருக்கிறாய். அந்த அவரது தீர்மானம் பயனற்றதாகும் வகையில் நீ செயல்படுவாயாக. துரோணர் பெரும் வலிமைகொண்டவராவார். ஆயுதங்களை நன்கறிந்த அவர், களைப்புக்கு மேலான {களைப்படையாத} வீரராவார். ஓ! வலிமைமிக்கத் தேர்வீரனே {அர்ஜுனா}, அவரே {துரோணரே} என்னைப் பிடிக்கச் சபதமேற்றிருக்கிறார்” என்றான் {யுதிஷ்டிரன்}.

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இன்று இந்த {பாஞ்சால இளவரசன்} சத்தியஜித் போரில் உமது பாதுகாவலனாவான். சத்தியஜித் உயிரோடிருக்கும்வரை, ஆசானால் {துரோணரால்} ஒருபோதும் தன் விருப்பத்தை அடைய முடியாது. எனினும், ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, மனிதர்களில் புலியான இந்தச் சத்தியஜித் போரில் கொல்லப்பட்டால், நமது வீரர்கள் அனைவரும் உம்மைச் சூழ்ந்திருந்தாலும் களத்தில் நீர் நீடித்திருக்கக் கூடாது [2]” என்றான் {அர்ஜுனன்}.
[2] இதே பத்தி வேறொரு பதிப்பில், “ஓ மன்னா, இந்தச் சத்தியஜித்தானவன் போரில் இப்போது உம்மைக் காப்பான். பாஞ்சால இளவரசன் உயிரோடிருக்கையில் ஆசாரியர் தம் மனோரதத்தை அடையப்போவதில்லை. தலைவா, மனிதர்களில் புலியான சத்தியஜித்தானவன் போரில் கொல்லப்படுவானானால், அனைவரும் ஒன்றுசேர்ந்தும் எவ்விதத்தாலும் (போரில்) நிற்க முடியாது” என்று அர்ஜுனன் சொல்வதாக இருக்கிறது. இங்குக் கங்குலி சொல்வதே சரியாகத் தெரிகிறது.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு மன்னன் யுதிஷ்டிரன் (அர்ஜுனன் வேண்டிய) விடுப்பை (அவனுக்கு) அளித்தான். மேலும் அவன் {யுதிஷ்டிரனிடம்}, அர்ஜுனனைத் தழுவிக்கொண்டு பாசத்துடன் அவனைப் பார்த்தான். மேலும் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} பல்வேறு வாழ்த்துகளை {ஆசீர்வாதங்களை} அவனுக்குத் தெரிவித்தான். (யுதிஷ்டிரனின் பாதுகாப்புக்கான) இந்த ஏற்பாட்டைச் செய்த வலிமைமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்}, பசி கொண்ட சிங்கம் தன் பசியைப் போக்குவதற்காக மான் கூட்டத்தை நோக்கிச் செல்வதைப் போல, திரிகர்த்தர்களை எதிர்த்து வெளியே சென்றான். அப்போது (யுதிஷ்டிரனின் பக்கத்தில்) அர்ஜுனன் இல்லாததால் மகிழ்ச்சியில் நிறைந்த துரியோதனனின் துருப்புகள், யுதிஷ்டிரனைப் பிடிப்பதில் தீவிரமடைந்தன. பிறகு இரு படைகளும், மழைக்காலத்தில் நீர் நிறைந்த இரு நதிகளான கங்கையும் சரயுவும் போலப் பெரும் மூர்க்கத்துடன் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English