The war between Samsaptakas and Arjuna! | Drona-Parva-Section-018 | Mahabharata In Tamil
(சம்சப்தகவத பர்வம் – 02)
பதிவின் சுருக்கம் : சம்சப்தகர்களை அணுகிய அர்ஜுனன்; அர்ஜுனனின் சங்கு முழக்கத்தைக் கேட்டு அஞ்சிய திரிகர்த்தர்கள்; சுதன்வானைக் கொன்ற அர்ஜுனன்; பீதியடைந்த திரிகர்த்தர்கள் துரியோதனின் படையை நோக்கி ஓடியது; ஓடியவர்களைத் தடுத்து அவர்களைப் போருக்குத் திருப்பிய சுசர்மன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, மகிழ்ச்சியால் நிறைந்த சம்சப்தகர்கள் [1], அர்த்தச்சந்திர வடிவத்தில் தங்கள் வியூகத்தை அமைத்து, சமமான நிலத்தில் தங்கள் தேர்களுடன் நின்றனர். அந்த மனிதர்களில் புலிகள் {சம்சப்தகர்கள்}, தங்களை நோக்கி கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்) வருவதைக் கண்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, உரக்கக் கூச்சலிட்டனர். அவ்வொலி வானத்தையும், முக்கியத் திசைகள் மற்றும் துணைத்திசைகள் அனைத்தையும் நிறைத்தது. மனிதர்களால் மட்டும் மறைக்கப்பட்ட களமாக இருந்ததால், அஃது எதிரொலிகள் எதையும் உண்டாக்கவில்லை.
[1] வெற்றி அல்லது மரணம் என்ற உறுதியை ஏற்ற படைவீரர்களே சம்சப்தகர்கள் என்று சொல்லப்படுவார்கள். இவர்களைக் குறிக்கும் சொல் வரும்போதெல்லாம் நீண்ட சொற்றொடர்களைச் {அதாவது, வெற்றி அல்லது மரணம் என்ற உறுதியை ஏற்ற படைவீரர்கள் என்று} சொல்வதைவிட இந்த வடிவில் {சம்சப்தகர்கள் என்று} சொல்வது சிறப்பானதாகும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதை உறுதிசெய்து கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, சிறு புன்னகையுடன், கிருஷ்ணனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! தேவகியைத் தாயாகக் கொண்டவனே {தேவகீநந்தனா, கிருஷ்ணா}, போரில் அழியப் போகும் அந்தத் திரிகர்த்தர்கள், தாங்கள் அழ வேண்டிய இந்த நேரத்தில் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதைப் பார். அல்லது, கோழைகளால் அடையவே முடியாத சிறந்த உலகங்களை இவர்கள் அடையப் போவதால் இஃது அவர்கள் மகிழ வேண்டிய காலமே என்பதிலும் ஐயமில்லைதான்” {என்றான் அர்ஜுனன்}.
வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ரிஷிகேசனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன அர்ஜுனன், போரில் அணிவகுத்து நிற்கும் திரிகர்த்தர்களின் படையணிகளிடம் வந்து, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தேவதத்தம் என்று அழைக்கப்பட்டதுமான தன் சங்கை எடுத்து பெரும்பலத்துடன் ஊதி, அதன் ஒலியால் திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைத்தான். அவ்வொலியால் பீதியடைந்த அந்தச் சம்சப்தகர்களின் தேர்ப்படை செயலிழந்து போய், போரில் அசைவற்று நின்றது. அவர்களது விலங்குகள் {குதிரைகள்} அனைத்தும் கண்களை அகலவிரித்துக் கொண்டு, காதுகள், கழுத்துகள் மற்றும் உதடுகள் செயலற்று, கால்கள் அசைவற்று நின்றன. மேலும் அவை சிறுநீர் கழித்தன, குருதியையும் கக்கின.
பிறகு சுயநினைவு மீண்ட பிறகு, தங்கள் படையணிகளை முறையான வரிசையில் நிறுத்திய அவர்கள், ஒரே சமயத்தில் தங்கள் கணைகள் அனைத்தையும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது ஏவினர். பெரும் வேகத்துடன் தன் ஆற்றலை வெளிக்காட்டவல்ல அர்ஜுனன், அந்த ஆயிரக்கணக்கான கணைகளும் தன்னை வந்து அடையும் முன்பே பதினைந்து [2] கணைகளால் அவற்றை வெட்டினான். பிறகு அவர்கள் ஒவ்வொருவரும், அர்ஜுனனைப் பத்து {பத்து பத்து} கணைகளால் துளைத்தனர். பார்த்தன் {அர்ஜுனன்} அவர்களை மூன்று {மும்மூன்று} கணைகளால் துளைத்தான். பிறகு அவர்கள் ஒவ்வொருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனை {அர்ஜுனனை} ஐந்து {ஐந்தைந்து} கணைகளால் துளைத்தனர். பெரும் ஆற்றலைக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, அவர்கள் ஒவ்வொருவரையும் இரண்டு {இரண்டிரண்டு} கணைகளால் துளைத்தான்.
[2] கங்குலியில் Five and Ten arrows என்று இருக்கிறது. வேறு ஒரு பதிப்பில் இவை ஐம்பது கணைகள் என்று குறிப்பிடப்படுகின்றன.
மீண்டும் கோபத்தால் தூண்டப்பட்ட அவர்கள், தடாகத்தில் மேகங்கள் தடையில்லாமல் பொழிவதைப் போல அர்ஜுனன் மற்றும் கேசவன் {கிருஷ்ணன்} மீது எண்ணற்ற கணைகளை விரைவாகப் பொழிந்தனர். பிறகு அந்த ஆயிரக்கணக்கான கணைகளும், காட்டில் பூத்திருக்கும் மரங்களில் வண்டுக்கூட்டங்கள் விழுவதைப் போல அர்ஜுனன் மீது விழுந்தன. கடினமானதும், பலமானதுமான அர்ஜுனனின் கிரீடம் முப்பது கணைகளால் ஆழமாகத் துளைக்கப்பட்டது. தங்கச் சிறகுகளைக் கொண்ட அந்தக் கணைகள் அவனது கிரீடத்தில் இருந்ததால், அர்ஜுனன், ஏதோ தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனைப் போலவும், (புதிதாக) உதித்த சூரியனைப் போலவும் ஒளிர்ந்தான்.
பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பிறகு அந்தப் போரில், சுபாகுவின் கையுறையை ஒரு பல்லத்தால் அறுத்து, சுதர்மன் மற்றும் சுதன்வானையும் மறைத்தான். சுபாகுவோ பத்து கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான் [3]. தன் கொடியில் சிறந்த குரங்கு வடிவத்தைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, பதிலுக்குப் பல கணைகளால் அவர்கள் அனைவரையும் துளைத்து, மேலும் சில பல்லங்களால் தங்கத்தாலான அவர்களது கொடிமரங்களையும் வெட்டினான். சுதன்வானின் வில்லையும் அறுத்த அவன் {அர்ஜுனன்}, தன் கணைகளால் பின்னவனின் {சுதன்வானின்} குதிரைகளையும் கொன்றான். பிறகு, தலைப்பாகையால் அருளப்பட்ட பின்னவனின் {சுதன்வானின்} தலையையும் அவனது உடலில் இருந்து வெட்டி வீழ்த்தினான்.
[3] இந்த வரி வேறொரு பதிப்பில் வேறு மாதிரி இருக்கிறது. அது பின்வருமாறு, “பாண்டவன் யுத்தத்தில் அர்த்தசந்திரபாணத்தால் சுபாகுவின் கையுறையை அறுத்து, மீண்டும் அவன் மீது அம்பு மழைகளைப் பொழிந்தான். பிறகு, சுசர்மனும், சுரதனும், சுதர்மனும், சுதனுவும், சுபாகுவும் பத்துப் பத்துப் பாணங்களால் கிரீடியை அடித்தனர்” என்று இருக்கிறது.
அந்த வீரனின் {சுதன்வானின்} வீழ்ச்சியில், அவனது தொண்டர்கள் {அவனைப் பின்தொடர்ந்து வந்தவர்கள்} பீதியடைந்தனர். பீதியால் தாக்குண்ட அவர்கள் அனைவரும், துரியோதனனின் படைகள் இருந்த இடத்திற்குத் தப்பி ஓடினர். பிறகு வாசவனின் {இந்திரனின்} மகன் {அர்ஜுனன்}, கோபத்தால் நிறைந்து, சூரியன் தன் தடையற்ற கதிர்களால் இருளை அழிப்பதைப் போலத் தன் இடைவிடாத கணைகளின் மழையால் அந்த வலிமைமிக்கப்படையைத் தாக்கத் {அழிக்கத்} தொடங்கினான். பிறகு, அந்தப் படை உடைந்து அனைத்துப் பக்கங்களிலும் உருகி ஓட, அர்ஜுனன் கோபத்தால் நிறைந்தபோது, திரிகர்த்தர்கள் அச்சத்தால் தாக்குண்டனர். பார்த்தனின் {அர்ஜுனனின்} நேரான கணைகளால் கொல்லப்பட்ட போது, பீதியடைந்த மான்கூட்டத்தைப் போலத் தங்கள் உணர்வுகளை இழந்த அவர்கள், தாங்கள் நின்ற இடத்திலேயே நீடித்தனர்.
பிறகு சினத்தால் நிறைந்த திரிகர்த்தர்களின் மன்னன் {சுசர்மன்}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களிடம், “வீரர்களே, தப்பி ஓடாதீர்! அச்சமுறுவது உங்களுக்குத் தகாது. துருப்புகள் அனைத்தின் பார்வையிலும் பயங்கர நிலைப்பாடுகளை எடுத்து {சபதம் செய்து} இங்கே வந்த பிறகு, துரியோதனனின் படைத்தலைவர்களிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்? போரில் இத்தகு (கோழைத்தனமான) செயலைச் செய்வதால், உலகத்தின் பரிகாசத்திற்கு நாம் ஆளாக மாட்டோமா? எனவே, அனைவரும் நிற்பீராக. உங்கள் பலத்துக்குத் தக்கபடி போரிடுவீராக” என்றான் {சுசர்மன்}.
இப்படிச் சொல்லப்பட்ட அந்த வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் மகிழ்ச்சியுறச் செய்தபடி, மீண்டும் மீண்டும் உரத்த கூச்சலிட்டுக் கொண்டு தங்கள் சங்குகளை முழங்கினர். பிறகு அந்தச் சம்சப்தகர்கள், காலனையே மங்கச் செய்யத் தீர்மானித்திருந்த நாராயணக் கோபாலர்களுடன் மீண்டும் களத்திற்குத் திரும்பினர்” {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |