Thursday, April 28, 2016

பாண்டிய மன்னன் சாரங்கத்வஜன்! - துரோண பர்வம் பகுதி – 023அ

Pandya king Sarangadhwaja! | Drona-Parva-Section-023 a | Mahabharata In Tamil

(சம்சப்தகவத பர்வம் – 07)

பதிவின் சுருக்கம் : துரோணரை எதிர்த்துச் சென்றோர் கொண்ட குதிரைகளைக் குறித்துச் சஞ்சயன் விளக்கிச் சொன்னது; பாண்டிய மன்னன் சாரங்கத்வஜனின் வரலாறு சுருக்கம்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, கோபத்தால் தூண்டப்பட்டு, பீமசேனனின் தலைமையில் துரோணரை எதிர்த்துச் சென்றோர் அனைவருடைய தேர்களின் தனிப்பட்ட குறியீடுகளை எனக்குச் சொல்வாயாக” என்றான்.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “(மான் போன்ற) புள்ளிகளாலான நிறத்தைக் கொண்ட குதிரைகளால் [1] (இழுக்கப்பட்ட தேரில்) விருகோதரன் {பீமன்} முன்னேறுவதைக் கண்ட துணிச்சல் மிக்கச் சிநியின் பேரன் (சாத்யகி) வெள்ளிநிறத்தாலான குதிரைகளால் சுமக்கப்பட்டு முன்னேறினான்.

[1] வேறொரு பதிப்பில் இவை கரடியின் நிறம் கொண்டவை எனச் சொல்லப்படுகிறது.

எதிர்க்கப்பட முடியாதவனும், சினத்தால் தூண்டப்பட்டவனுமான யுதாமன்யு {வெண்மை, நீலம் சிவப்பு நிறங்கள் எனப்} பல வண்ண வேறுபாடுகளைக் கொண்ட சிறந்த குதிரைகளால் சுமக்கப்பட்டுத் துரோணரை எதிர்த்துச் சென்றான்.

பாஞ்சால மன்னன் {துருபதன்} மகனான திருஷ்டத்யும்னன், புறாக்களின் நிறத்தையும் {வெண்மை மற்றும் கருமை நிறம்}, தங்க ஒப்பனைகளைக் கொண்டவையும் மிக வேகமானவையுமான குதிரைகளால் சுமக்கப்பட்டுச் சென்றான்.

தன் தந்தையைக் காக்க விரும்பியவனும், அவனுக்கு முழுமையான வெற்றியை விரும்பியவனும், முறையான நோன்புகளைக் கொண்டவனுமான திருஷ்டத்யும்னனின் மகன் க்ஷத்ரதர்மன் சிவப்பு குதிரைகளால் சுமக்கப்பட்டுச் சென்றான்.

சிகண்டியின் மகன் க்ஷத்ரதேவன், நன்கு அலங்கரிக்கப்பட்டவையும் தாமரை இதழ்களின் நிறத்தைக் கொண்டவையும், தூய வெண் கண்களைக் கொண்டவையுமான குதிரைகளைத் தூண்டியபடி (துரோணரை எதிர்த்துச்) சென்றான் [2].

[2] இந்தப் பதிவின் கீழே இன்னுமொருமுறையும் க்ஷத்ரதேவன் குறிப்பிடப்படுகிறார். [5]ம் அடிக்குறிப்பில் அதைக் காணலாம். துரோண பர்வம் பகுதி 21ல் க்ஷத்ரதேவன் துரோணரால் வீழ்த்தப்பட்டதாக ஒரு குறிப்பு உண்டு. அங்கே அவன் கொல்லப்பட்டானா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

காம்போஜ இனத்தைச் சேர்ந்தவையும், பச்சைக்கிளியின் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான அழகிய குதிரைகள் நகுலனைச் சுமந்தபடியே உமது படையை நோக்கி வேகமாக ஓடின.

மேகங்களைப் போன்ற கருமை நிறம் கொண்ட கோபக்காரக் குதிரைகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கணைகளால் குறிபார்த்தபடி நிற்கும் வெல்லப்பட முடியாத துரோணரை எதிர்த்து உத்தமௌஜஸைச் சுமந்து சென்றன.

காற்றைப் போன்ற வேகம் கொண்டவையும், {தித்திரி என்ற பறவையைப் போன்ற} பலவண்ண வேறுபாடுகளைக் கொண்டவையுமான குதிரைகள், உயர்த்தப்பட்ட ஆயுதங்களைக் கொண்ட சகாதேவனை அந்தக் கடும்போருக்குச் சுமந்து சென்றன.

பெரும் மூர்க்கம் கொண்டவையும், காற்றைப் போன்ற வேகத்தைக் கொண்டவையும், தந்த நிறத்தாலானவையும், கழுத்தில் கருப்பு நிற பிடரி மயிர் கொண்டவையுமான குதிரைகள் அந்த மனிதர்களில் புலியான யுதிஷ்டிரனைச் சுமந்து சென்றன. காற்றின் வேகம் கொண்டவையும், தங்க ஒப்பனையால் அலங்கரிக்கப்பட்டவையுமான தங்கள் குதிரைகளில் சுமக்கப்பட்ட வீரர்கள் பலர் யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்து சென்றனர்.

தன் தலைக்குப் பின் தங்கக் குடை ஏந்தப்பட்டவனும், (யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்த) படைவீரர்கள் அனைவராலும் சூழப்பட்டவனுமான பாஞ்சாலர்களின் அரசத் தலைவன் துருபதன் மன்னனுக்கு {யுதிஷ்டிரனுக்குப்} பின்னே இருந்தான். மன்னர்கள் அனைவரிலும் சிறந்த வில்லாளியான சௌதாபி {துருபதன்}, அனைத்து ஒலிகளையும் தாங்கிக் கொள்ளவல்ல அழகிய குதிரைகளால் சுமக்கப்பட்டுச் சென்றான் [3].

[3] வேறொரு பதிப்பில் இந்த வரி, “சிறந்த வில்லாளியான துருபதன் நெற்றியில் வெள்ளைச் சுட்டிகளோடு கூடியவையும், பொன்மயமான பிடரி மயிர்களும் ரோமங்களும் கொண்டவையும், மஞ்சள் பட்டுக்கு ஒப்பான நிறமுள்ளவைகளும், போரில் எல்லாச் சப்தங்களையும் பொறுக்கின்றவைகளுமான குதிரைகளோடு அரசர்களுக்கு மத்தியில் பயமற்றவனாக எதிர்த்து நின்றான்” என்றிருக்கிறது.

பெரும் தேர்வீரர்கள் அனைவருடன் விராடன் முன்னவனை {துருபதனைத்} தொடர்ந்தான்.

தங்கள் தங்கள் துருப்புகளால் சூழப்பட்ட கைகேயர்கள், சிகண்டி, திருஷ்டகேது ஆகியோர் மத்ஸ்யர்களின் ஆட்சியாளனை {விராடனைப்} பின் தொடர்ந்து வந்தனர்.

விராடனைச் சுமந்து கொண்டிருந்தவையும், பாதிரி மலர்களின் (வெளிர் சிவப்பு) வண்ணத்திலானவையுமான சிறந்த குதிரைகள் மிக அழகாகத் தெரிந்தன.

மஞ்சள் நிறத்திலானவையும், தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான வேகமான குதிரைகள் மத்ஸ்யர்களின் அரசத் தலைவனும், எதிரிகளைக் கொல்பவனுமான விராடனின் மகனை (உத்தரனை) மிக வேகமாகச் சுமந்து சென்றன [4].

[4] பீஷ்ம பர்வம் பகுதி 47-ல் http://mahabharatham.arasan.info/2015/10/Mahabharatha-Bhishma-Parva-Section-047b.html சல்லியனால் உத்தரன் கொல்லப்பட்டான். இங்கே மீண்டும் அவன் பெயர் மறைமுகமாகக் குறிப்பிடப்படுகிறது. ஒருவேளை முன்பு சுமந்தது இப்போது சொல்லப்படுகிறதோ என்னவோ…

ஐந்து கேகயச் சகோதரர்களும் அடர் சிவப்பு {இந்திர கோபக பூச்சியின்} நிறத்திலான குதிரைகளால் சுமக்கப்பட்டனர். தங்கம் போன்ற காந்தியைக் கொண்டவர்களும், சிவப்புக் கொடிமரங்களைக் கொண்டவர்களும், தங்க ஆரமணிந்தவர்களும், போரில் சாதித்தவர்களுமான அந்த வீரர்கள் {கேகயச் சகோதரர்கள்} அனைவரும், கவசங்களை அணிந்து கொண்டு மேகங்களைப் போலவே கணைகளின் மழையைப் பொழிந்து கொண்டு சென்றனர்.

தும்புருவால் கொடையாக அளிக்கப்பட்டவையும், சுடப்படாத மண்பானையின் நிறம் கொண்டவையுமான சிறந்த குதிரைகள் அளவிலா சக்தி கொண்ட பாஞ்சால இளவரசன் சிகண்டியைச் சுமந்தன. மொத்தமாக, பாஞ்சால குலத்தின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பனிரெண்டாயிரம் {12000} பேர் போருக்குச் சென்றனர். அவற்றில், ஆறாயிரம் {6000} பேர் சிகண்டியைப் பின்தொடர்ந்தனர்.

மான் போலப் பலவித நிறங்களைக் கொண்ட உற்சாகமான குதிரைகள் மனிதர்களில் புலியான சிசுபாலனின் மகனை {திருஷ்டகேதுவைச்} சுமந்தன. பெரும் பலம் கொண்டவனும், போரில் வீழ்த்தப்படக் கடினமானவனும், சேதிகளில் காளையுமான திருஷ்டகேது பல்வேறு வண்ணங்களைக் கொண்ட காம்போஜக் குதிரைகளால் சுமக்கப்பட்டான்.

சிந்து இனத்தைச் சேர்ந்தவையும், அழகிய அங்கங்களைக் கொண்டவையும் வைக்கோலும், புகையும் கலந்த நிறமுள்ளவையுமான சிறந்த குதிரைகள் கைகேய இளவரசனான பிருஹத்க்ஷத்ரனை வேகமாகச் சுமந்து சென்றன.

தூய வெண்கண்களைக் கொண்டவையும், தாமரையின் நிறத்தைக் கொண்டவையும், பால்ஹீகர்களின் நாட்டில் பிறந்தவையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான குதிரைகள் சிகண்டியின் மகனான துணிச்சல்மிக்க க்ஷத்ரதேவனைச் சுமந்து சென்றன [5].

[5] சிகண்டியின் மகன் க்ஷத்ரதேவன் இரண்டாம் முறையாகக் குறிப்பிடப்படுகிறான். [2]ம் அடிக்குறிப்பில் அதைக் காணலாம்.

தங்க ஒப்பனைகளால் அலங்கரிக்கப்பட்டு, சிவப்புப் பட்டின் வண்ணம் கொண்ட அமைதியான குதிரைகள் போரில் எதிரிகளைக் கொல்பவனான சேனாபிந்துவைச் சுமந்தன.

கொக்குகளின் நிறம் கொண்ட சிறந்த குதிரைகள், இளமை நிறைந்தவனும், மென்மையானவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான காசிகள் மன்னனின் {அபிபூவின்} மகனைப் {விபுவைப்} போரில் சுமந்தன.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மனோ வேகம் கொண்டவையும், ஓட்டுநருக்கு மிகவும் கீழ்ப்படிந்து நடப்பவையும், கருப்புக் கழுத்துகள் கொண்டவையுமான வெண்ணிறக் குதிரைகள் இளவரசன் பிரதிவிந்தியனைச் சுமந்தன.

அர்ஜுனன் மகனான சுதசோமனை [6] {உளுந்துப் பூ போன்ற} வெளிர்மஞ்சள் நிறம் கொண்ட குதிரைகள் சுமந்தன. சுதசோமனை அர்ஜுனன் சோமனிடம் {சந்திரனிடம்} இருந்து அடைந்தான். உதயேந்து என்ற பெயரில் அழைக்கப்படும் குருக்களின் நகரத்தில் அவன் {சுதசோமன்} பிறந்தான். ஆயிரம் சந்திரன்களின் காந்தியைக் கொண்ட அவன் சோமகர்களின் சபையில் பெரும் புகழை வென்றதால் சுதசோமன் என்று அழைக்கப்படலானான்.

[6] ஆதிபர்வம் பகுதி 223ன்படி சுதசோமன் பீமனின் மகனாவான். மன்மதநாததத்தரின் பதிப்பிலும் கங்குலியைப் போலவே இவன் பார்த்தனின் மகன் என்றே குறிக்கப்படுகிறது. வேறொரு பதிப்பில் இந்த இடத்தில் இவன் பீமனின் மகன் என்றே குறிக்கப்படுகிறான். அந்தப் பத்தி பின்வருமாறு, “உளுந்துப் பூவின் நிறமுள்ள குதிரைகள் போர்க்களத்தில் பெரும்பலம் கொண்டவனும், போர்வீரர்களுள் தலைவனும், பீமசேனனின் மகனுமான அந்தச் சுதசோமனைச் சுமந்தன. கௌரவர்களின் உதயேந்து எனும் பெயர் கொண்ட அந்தப் பட்டணத்தில் சோமலதையைப் பிழியும்பொழுது, ஆயிரம் சந்திரனுக்கு ஒப்பானவனாகத் தோன்றிய காரணத்தினால் அந்தப் பீமனின் மகன் சுதசோமன் என்ற பெயரால் அழைக்கப்பட்டான்” என்று இருக்கிறது. எனவே, கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இது பிழையாகச் சொல்லப்பட்டுள்ளது. சுதசோமன் பீமனின் மகனே.

சால மலர்களைப் போன்றோ, காலைச் சூரியனைப் போன்றோ நிறம் கொண்ட குதிரைகள், அனைத்துப் புகழுக்கும் தகுந்த நகுலனின் மகன் சதானீகனைச் சுமந்தன.

தங்க ஒப்பனைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், மயில் கழுத்தின் நிறத்திலானவையுமான குதிரைகள் மனிதர்களில் புலியும், (பீமனின் மூலமான) [7] திரௌபதியின் மகனுமான சுருதகர்மனைச் சுமந்தன.

[7] இங்கும் தவறு நேர்ந்திருக்கிறது. ஆதிபர்வம் பகுதி 223ன் படி சுருதகர்மன் அர்ஜுனனின் மகனாவான்.

மீன்கொத்திகளின் {காடையுடைய சிறகின்} நிறத்திலான சிறந்த குதிரைகள், கல்விக்கடலான பார்த்தனைப் போன்றவனான திரௌபதியின் மகன் சுருதகீர்த்தியை [8] அந்தப் போரில் சுமந்தன.

[8] ஆதிபர்வம் பகுதி 223ன் படி பாண்டவர்கள் மூலம் திரௌபதி பெற்ற பிள்ளைகளின் பெயர்கள் பின்வருமாறு: பிரதிவிந்தியன் யுதிஷ்டிரனுக்கும், சுதசோமன் விருகோதரனுக்கும் {பீமனுக்கும்}, சுரூதகர்மன் அர்ஜுனனுக்கும், சதானீகன் நகுலனுக்கும், சுரூதசேனன் சகாதேவனுக்கும் பிறந்தார்கள். மேலே குறிப்பிடப்படும் பட்டியலில் சகாதேவனின் மகனான சுரூதசேனனின் பெயர் மட்டும் விடுபட்டிருக்கிறது. இங்கே குறிப்பிடப்படும் சுருதகீர்த்தி அர்ஜுனனின் மகன் என்று இன்னும் ஒன்றிரண்டு பகுதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

போரில் கிருஷ்ணனுக்கும், பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்} ஒன்றரை மடங்கு மேலானவன் என்று கருதப்பட்ட இளைஞனான அபிமன்யுவைப் மஞ்சள்பழுப்பு நிறக் குதிரைகள் சுமந்தன.

திருதராஷ்டிர மகன்களுக்கு மத்தியில் (தன் சகோதரர்களைக் கைவிட்டு) பாண்டவர்களின் தரப்பை அடைந்த ஒரே வீரனான யுயுத்சுவைப் போரில் {தாமரை நிறத்தாலான} பெரும் குதிரைகள் சுமந்தன.

பருத்தவையும், நன்கு அலங்கரிக்கப்பட்டவையும் (உலர்ந்த) நெற்கதிரின் நிறத்தாலானவையுமான குதிரைகள் அந்தப் பயங்கரப் போரில் பெரும் சுறுசுறுப்புடன் இருந்த வார்த்தக்ஷேமியைச் சுமந்தன.

கருப்புக் கால்களைக் கொண்டவையும், தங்கத்தாலான மார்புக் கவசங்கள் தரித்தவையும், ஓட்டுநருக்கு மிகவும் கீழ்ப்படிபவையுமான குதிரைகள் இளமை நிரம்பிய சௌசித்தியைப் போரில் சுமந்தன.

தங்கக் கவசங்களால் முதுகு மறைக்கப்பட்டவையும், தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், சிவப்புப் பட்டின் நிறத்தாலானவையுமான குதிரைகள் ஸ்ரேணிமானைச் சுமந்தன [9].

[9] இதன் பிறகு, வேறொரு பதிப்பில், “பொன்மாலைகள் அணிந்தவையும், அழகானவையும், பொற்சேணங்கட்டியவையும், நன்கு அலங்கரிக்கப்பட்டவையுமான குதிரைகள், புகழத்தக்கவனும், மனிதர்களில் சிறந்தவனுமான காசிராஜனைத் {அபிபூவைத்} தாங்கின” என்றிருக்கிறது.

சிவப்பு நிறத்தாலான குதிரைகள், தெய்வீக வேதங்களையும், ஆயுத அறிவியலிலும் சாதித்து முன்னேறும் சத்யத்ருதியைச் சுமந்தன.

(பாண்டவப் படையின்) படைத்தலைவனும், துரோணரைத் தன் பங்காகக் கொண்ட பாஞ்சாலனுமான திருஷ்டத்யுமனன், புறாக்களின் வண்ணத்திலான குதிரைகளால் சுமக்கப்பட்டான்.

சத்யத்ருதி, சௌசித்தி, ஸ்ரேணிமான், வசுதானன் [10], காசி ஆட்சியாளனின் {அபிபூவின்} மகன் விபு ஆகியோர் அவனை {திருஷ்டத்யும்னனைப்} பின்தொடர்ந்தனர். இவர்கள் தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், காம்போஜ இனத்தில் சிறந்தவையுமான வேகமான குதிரைகளைக் கொண்டிருந்தனர்.

[10] துரோண பர்வம் பகுதி 21ல் துரோணர் வசுதேவனை {வசுதானனைக்} கொன்றதாக குறிப்பு உண்டு. இருவரும் ஒருவரா என்பது தெரியவில்லை.

யமனுக்கோ, வைஸ்ரவணனுக்கோ {குபேரனுக்கோ} ஒப்பான இவர்கள் ஒவ்வொருவரும், பகையணியின் வீரர்களின் இதயங்களை அச்சத்தால் பீடித்தப்படி போரில் முன்னேறிச் சென்றனர்.

காம்போஜ நாட்டைச் சேர்ந்தவர்களும், எண்ணிக்கையில் ஆறாயிரம் {6000} கொண்டவர்களுமான பிரபத்ரகர்கள், ஒன்றாகவே சாகத் தீர்மானித்து ஆயுதங்களை உயர்த்திக் கொண்டு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், பல்வேறு நிறங்களிலான சிறந்த குதிரைகளைக் கொண்டவையுமான தேர்களில், விற்களை வளைத்துத் தங்கள் கணைகளின் மழைகளால் எதிரிகளை நடுங்கச் செய்தபடி திருஷ்டத்யும்னனைப் பின்தொடர்ந்தனர்.

அழகிய தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும் பழுப்புப் பட்டு நிறம் கொண்டவையுமான சிறந்த குதிரைகள் சேகிதானனை உற்சாகமாகச் சுமந்தன.

அர்ஜுனனின் தாய்மாமனும், குந்தி போஜன் [11] என்றும் அழைக்கப்பட்டவனுமான புருஜித் வானவில்லின் நிறைத்தாலான சிறந்த குதிரைகளால் சுமக்கப்பட்டு வந்தான்.

[11] வேறொரு பதிப்பில் இவ்வரிகள், “குந்திபோஜன் இந்திராயுதத்துக்குச் சமமான நிறமுள்ள சிறந்த குதிரைகளோடு வந்தான். சவ்யசச்சினுக்கு {அர்ஜுனனுக்குத்} தாய்மாமனான புருஜித்தும் நல்ல குதிரைகளோடு வந்தான்” என்றிருக்கிறது.

நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட வானத்தின் நிறம் கொண்ட குதிரைகள் போரில் மன்னன் ரோசமானனைச் சுமந்தன [12].

[12] வேறொரு பதிப்பில் இன்னும் அதிகமாக இருக்கிறது. அது பின்வருமாறு, “பலவித வண்ணங்களைக் கொண்டவையும், கறுத்துக் கால்களைக் கொண்டவையும், தங்க வேலைப்பாடுகளைக் கொண்ட விரிப்புகளைக் கொண்டவையுமான சிறந்த குதிரைகள், ஜராசந்தினின் மகனான சகாதேவனைச் சுமந்தன. தாமரைத் தண்டையொத்த நிறம் கொண்டவையும், வேகத்தில் பருந்துக்கு ஒப்பானவையுமான சிறந்த குதிரைகள் சுதர்மனைச் சுமந்தன.

சிவப்பு மானின் {முயல் இரத்த} நிறத்தாலானவையும், தங்கள் உடல்களில் வெள்ளை இழைகளைக் கொண்டவையுமான குதிரைகள், கோபதியின் மகனான பாஞ்சால இளவரசன் சிங்கசேனனைச் சுமந்தன.

பாஞ்சாலர்களில் புலியான ஜனமேஜயன் என்ற பெயரால் அறியப்பட்டவன், எள்ளு மலர்களின் நிறத்தாலான சிறந்த குதிரைகளைக் கொண்டிருந்தான்.

வேகமுள்ளவையும், பெரியவையும், அடர்நீல நிறம் கொண்டவையும் தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், தயிர் நிறத்தாலான முதுகைக் கொண்டவையும், சந்திரனின் நிறத்தாலான முகங்களைக் கொண்டவையுமான குதிரைகள் பெரும் வேகத்துடன் பாஞ்சாலர்களின் ஆட்சியாளனை {துருபதனைச்} சுமந்து சென்றன.

அழகிய தலைகளைக் கொண்டவையும், துணிச்சல்மிக்கவையும், நாணல் தண்டுகளைப் போன்றவையும் (வெண்மையானவையும்), ஆகாயத்துக்கோ, தாமரைக்கோ ஒப்பான காந்தியைக் கொண்டவையுமான குதிரைகள் தண்டதாரனைச் சுமந்தன.

வெளிர் பழுப்பு நிறம் கொண்டவையும், எலியைப் போன்ற நிறத்தை முதுகில் கொண்டவையும், செருக்கால் கழுத்துகள் உயர்த்தப்பட்டவையுமான குதிரைகள் போரில் வியாக்கிரதத்தனைச் சுமந்தன.

கருப்புப் புள்ளிகளைக் கொண்ட குதிரைகள் மனிதர்களில் புலியும், பாஞ்சால இளவரசனுமான சுதன்வானைச் சுமந்தன.

இந்திரனின் இடிக்கு {வஜ்ரத்துக்கு} ஒப்பாகப் பெரும் மூர்க்கம் {வேகம்} கொண்டவையும், இந்திரகோபகங்களின் நிறம் கொண்டவையும், பலவண்ணங்களில் திட்டுக்களைக் கொண்டவையுமான அழகிய குதிரைகள் சித்திராயுதனைச் சுமந்தன.

தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், சக்கரவாகப் பறவையின் நிறம் கொண்ட வயிறுகளைக் கொண்டவையுமான குதிரைகள் கோசலர்கள் மன்னனின் மகன் சுக்ஷத்திரனைச் சுமந்தன.

அழகியவையும், பெரும் உடல்படைத்தவையும், பலவண்ணங்களைக் கொண்டவையும், மிகுந்த பணிவுள்ளவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான உயரமான குதிரைகள் போரில் சாதித்தவனான சத்யதிருதியைச் சுமந்தன.

சுக்லன், ஒரே வெள்ளி நிறத்தாலான கொடிமரம், கவசம், வில் மற்றும் குதிரைகளுடன் போரில் முன்னேறினான்.

கடற்கரைப் பகுதிகளில் பிறந்தவையும், சந்திரனைப் போன்ற வெண்ணிறம் கொண்டவையுமான குதிரைகள், கடும் சக்தி கொண்டவனான சமுத்ரசேனன் மகன் சந்திரசேனனைச் சுமந்தன.

நீலத் தாமரையின் நிறம் கொண்டவையும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், அழகிய மலர்மாலைகள் தரித்தவையுமான மேன்மையான குதிரைகள் போரில் அழகிய தேரைக் கொண்ட சைப்யனைச் {சிபியின் மகனான சித்திரரதனைச்} சுமந்தன.

கலாய மலரின் நிறம் கொண்டவையும், வெள்ளை மற்றும் சிவப்பு இழைகளைக் கொண்டவையுமான குதிரைகள் போரில் தடுப்பதற்குக் கடினமான ரதசேனனைச் சுமந்தன.

மனிதர்களில் துணிச்சல்மிக்கவன் என்று கருதப்படுபவனும் படச்சரர்களை {அசுரர்களைக்} கொன்றவனுமான அந்த மன்னனை {?} வெள்ளைக் குதிரைகள் சுமந்தன.

கின்சுக {பலாச மர} மலர்களின் நிறம் கொண்ட குதிரைகள், அழகிய மாலைகள் தரித்தவனும், அழகிய கவசம், ஆயுதங்கள் மற்றும் கொடிமரத்தைக் கொண்டவனுமான சித்திராயுதனைச் சுமந்தன.

ஒரே நீல நிறம் கொண்ட குதிரைகள், கொடி, வில், கவசம் மற்றும் கொடிமரத்துடன் மன்னன் நீலன் போரில் முன்னேறினான்.

பல்வேறு விதமான ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட வரூதம் {தேர்க்கூடு}, கொடிமரம் ஆகியவற்றைக் கொண்டவனும் அழகிய குதிரைகளையும், கொடியையும் கொண்ட சித்திரன் போரில் முன்னேறினான்.

தாமரை நிறத்தாலான சிறந்த குதிரைகள், ரோசமானனின் மகன் ஹேமவர்ணனைச் சுமந்தன.

அனைத்து வகை ஆயுதங்களைத் தாங்கவல்லவையும், போரில் துணிச்சல்மிக்கச் சாதனைகளைச் செய்தவையும், நாணலின் நிறத்தாலான முதுகெலும்பு பத்திகள் கொண்டவையும், வெண்ணிற விறைப்பைகள் கொண்டவையும், கோழி முட்டையின் நிறம் கொண்டவையுமான குதிரைகள் தண்டகேதுவைச் சுமந்தன.

வலிமைமிக்கவனும், சக்தியைச் செல்வமாகக் கொண்டவனுமான பாண்டியர்களின் மன்னன் சாரங்கத்வஜன், வைடூரியக் கற்களாலான கவசத்தைத் தரித்துக் கொண்டு, தன் சிறந்த வில்லை வளைத்தபடி, சந்திரக் கதிர்களின் நிறத்தாலான குதிரைகளில் துரோணரை நோக்கி முன்னேறினான். அவனது நாடு {பாண்டிய நாடு} படையெடுக்கப்பட்டு, அவனது சொந்தங்கள் தப்பி ஓடிய போது, அந்தப்போரில் கிருஷ்ணனால் அவனது {சாரங்கத்வஜனின்} தந்தை கொல்லப்பட்டான். பிறகு, பீஷ்மர், துரோணர், ராமர் {பரசுராமர்}, கிருபர் ஆகியோரிடம் இருந்து ஆயுதங்களை {அஸ்திரங்களை} அடைந்த இளவரசன் சாரங்கத்வஜன், ஆயுதங்களில் {அஸ்திரங்களில்}ருக்மி, கர்ணன், அர்ஜுனன் மற்றும் அச்யுதனுக்கு {கிருஷ்ணனுக்கு} இணையானவனாக ஆனான். பிறகு அவன் துவாரகை நகரத்தை அழித்து, முழு உலகத்தையும் {தனக்கு} அடிபணியச் செய்ய விரும்பினான். எனினும், அவனுக்கு நன்மை செய்ய விரும்பிய விவேகமுள்ள அவனது நண்பர்கள், அவ்வழிக்கு எதிராக அவனுக்கு ஆலோசனை வழங்கினர். அவன் {சாரங்கத்வஜன்}, பழியெண்ணங்கள் அனைத்தையும் கைவிட்டுவிட்டுத் தன் ஆட்சிப்பகுதிகளை இப்போது ஆண்டுவருகிறான். பாண்டியர்களின் மன்னனான அந்தச் சாரங்கத்வஜனைப் பின்தொடர்ந்த முக்கியத் தேர்வீரர்கள் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் {1,40,000} பேரை அட்ரூஸ மலரின் {Atrusa flower}{?} நிறம் {பித்தளையின் நிறமாக இருக்க வேண்டும்} கொண்ட குதிரைகள் சுமந்தன [13].

[13] வேறொரு பதிப்பில் இந்தப் பத்தி, “கேசவனாலே அரசனான தன் தந்தையும் போரில் கொல்லப்பட்டுப் பிறகு பாண்டியர்களுடைய கபாடபுரமும் பிளக்கப்பட்டு உறவினர்களும், தங்கள் தங்கள் இடங்களை விட்டுத் தப்பி ஓடிப் போன சமயத்தில், பீஷ்மரிடத்திலிருந்தும், அவ்வாறே துரோணரிடத்தினின்றும், பரசுராமரிடத்தினின்றும், கிருபாச்சாரியரிடத்தினின்றும் அஸ்திரங்களைப் பெற்று, அந்த அஸ்திரங்களாலே ருக்மி, கர்ணன், அர்ஜுனன், அச்சுதன் இவர்களோடு ஒப்புமையைப் பெற்றுத் துவாரகையை நாசம் பண்ணுவதற்கும், பூமி முழுதையும் வெல்வதற்கும் விரும்பினவனும், கற்றறிந்தவர்களான நண்பர்களால் நன்மையைக் கருதி அவ்வித முயற்சியிலிருந்து தடுக்கப்பட்டுத் தொடர்ச்சியான வைரத்தை விட்டுத் தன் ராஜ்யத்தை ஆண்டுவருகிறவனும், பலசாலியுமான சாகரத்வஜப் பாண்டியன் சந்திரக் கிரணங்கள் போன்ற நிறமுள்ளவைகளும், வைடூரியமிழைத்த விரிப்புகளால் மூடப்பட்டவையுமான குதிரைகளோடு, பராக்கிரமமென்கிற பொருளைக் கைப்பற்றித் திவ்யமான தனுசை நாணொலி செய்து கொண்டு துரோணரை எதிர்த்து வந்தான். பித்தளை போன்ற நிறமுடைய குதிரைகள், பாண்டியனைப் பின்தொடர்ந்து வருகின்ற லக்ஷத்து நாற்பதினாயிரம் சிறந்த தேராளிகளைத் தாங்கின” என்றிருக்கிறது.

பல்வேறு வண்ணங்களிலானவையும், பல்வேறு விதங்களிலான சக்திகளைக் கொண்டவையுமான குதிரைகள், வீரனான கடோத்கசனைச் சுமந்தன.

பெரும் அளவிலானவையும், வலிமைமிக்கவையும், அரட்டா இனத்தைச் சேர்ந்தவையுமான குதிரைகள், பாரதர்கள் அனைவரின் கருத்துகளையும் ஒதுக்கி, யுதிஷ்டிரன் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தன் விருப்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} சென்றவனும், தங்கத் தேரில் இருந்தவனும், கண்கள் சிவந்தவனுமான வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பிருஹந்தனைச் சுமந்தன.

தங்க நிறத்திலான மேன்மையான குதிரைகள் மன்னர்களில் முதன்மையான அறம் சார்ந்த யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்து சென்றன. 


ஆங்கிலத்தில் | In English