Tuesday, April 26, 2016

துரியோதனனைத் திருத்திய கர்ணன்! - துரோண பர்வம் பகுதி – 022

Karna corrected Duryodhana! | Drona-Parva-Section-022 | Mahabharata In Tamil

(சம்சப்தகவத பர்வம் – 06)

பதிவின் சுருக்கம் : துரோணரின் ஆற்றலைக் கண்டு மகிழ்ந்த துரியோதனன் பாண்டவர்களை அவமதித்துப் பேசியது; பாண்டவர்களை அவமதிப்பது தகாது என்று சொல்லி அவர்களைப் புகழ்ந்த கர்ணன்...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அந்தப் பயங்கரப் போரில் பரத்வாஜர் மகனால் {துரோணரால்} பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் பிளக்கப்பட்டபோது, யாரேனும் ஒருவனாவது போரில் துரோணரை அணுகினானா? ஐயோ, கொட்டாவி விடும் புலியைப் போலவோ, மதப்பெருக்குக் கொண்ட யானையைப் போலவோ போரில் நிற்பவரும், போரில் தன் உயிரை விடத் தயாராக இருப்பவரும், நன்கு ஆயுதம் தரித்தவரும், அனைத்து வகைப் போர்களையும் அறிந்தவரும், பெரும் வில்லாளியும், மனிதர்களில் புலியும், எதிரிகளின் அச்சத்தை அதிகரிப்பவரும், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்தவரும், துரியோதனனுக்கு எப்போதும் நன்மை செய்ய விரும்புபவருமான துரோணர் தன் துருப்புகளுக்குத் தலைமையில் நிற்பதைக் கண்டு, அற்பர்களால் முடியாத, மனிதர்களில் முதன்மையானோருக்கு மட்டும் தனித்தன்மையான, க்ஷத்திரியர்களின் புகழை மேம்படுத்துவதான போரைச்செய்ய, ஐயோ மெச்சத்தகுந்த உறுதியான தீர்மானத்துடன் அவரை அணுகக்கூடிய மனிதன் எவனும் இல்லையா? ஓ! சஞ்சயா, தன் படைகளின் தலைமையில் நிற்கும் பரத்வாஜரின் மகனை {துரோணரைக்} கண்டு, அவரை அணுகிய அந்த வீரர்கள் யாவர் என்று எனக்குச் சொல்வாயாக [1]” என்றான் {திருதராஷ்டிரன்}.


[1] வேறொரு பதிப்பில் இப்பத்தி, “ஓ! சஞ்சயா, பெரும்போரில் துரோணரால் பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் தோற்கடிக்கப்பட்ட பிறகு, அற்பர்களால் செய்ய முடியாததும், மனிதர்களில் சிறந்தோரால் செய்யப்படுவதும், க்ஷத்திரியர்களுக்குப் புகழை உண்டாக்குவதும், சிறந்ததுமான எண்ணத்தைச் செலுத்தி போரில் யாராவது ஒருவன் அவரை எதிர்த்தானா? எவன் வெல்லப்பட்ட போது (எதிரியை) எதிர்க்கிறானோ அந்த வீரனல்லவா வீரர்களுள் சிறந்தவன். ஐயோ, போரில் நிற்கும் துரோணரைக் கண்டு அவரை எதிர்ப்பவன் ஒருவனுமில்லையா? கொட்டாவி விடும் புலியைப் போலவும், மதப்பெருக்குக் கொண்ட யானையைப் போலவும் இருப்பவரும், விசித்திரமாகப் போரிடுபவரும், பெரிய வில்லுள்ளவரும், மனிதர்களில் சிறந்தவரும், எதிரிகளுக்குப் பயத்தை விருத்தி செய்பவரும், நன்றியறிவுள்ளவரும், சத்யத்தில் நிலைபெற்றவரும், துரியோதனனுடைய நன்மையை விரும்புகின்றவரும், படையில் நிலைபெற்றிருக்கிறவரும், வீரருமான அந்தத் துரோணரைக் கண்டு எந்த வீரர்கள் (போரிடுவதற்காகத்) திரும்பினார்கள்? அதனை எனக்குச் சொல்வாயாக” என்று இருக்கிறது.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாஞ்சாலர்கள், பாண்டவர்கள், மத்ஸ்யர்கள், சிருஞ்சயர்கள், சேதிகள், கேகயர்கள் ஆகியோர் துரோணரின் கணைகளால் போரில் பிளக்கப்பட்டு, இப்படி முறியடிக்கப்பட்டதைக் கண்டும், புயலால் கலங்கடிக்கப்பட்ட பெருங்கடலின் பயங்கரமான அலைகளால் நிலை தடுமாறும் மரக்கலங்களைப் போலத் துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட வேகமான கணைகளின் மழையால் களத்தில் இருந்து இப்படி விரட்டப்பட்ட அவர்களைக் கண்டும் சிங்க முழக்கங்களாலும், பல்வேறு கருவிகளால் உண்டாக்கப்பட்ட ஒலிகளாலும், (பகைவரின் {பாண்டவப்} படையில் உள்ள) தேர்கள், குதிரைகள் மற்றும் காலாட்படை வீரர்களை அனைத்துப் பக்கங்களிலிருந்தும் கௌரவர்கள் தாக்கத் தொடங்கினர்.

(வேகமாக ஓடும் பாண்டவ வீரர்களான) அவர்களைக் கண்ட மன்னன் துரியோதனன், தன் உறவினர்கள் மற்றும் சொந்தங்கள் சூழ தன் படைகளுக்கு மத்தியில் நின்று கொண்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, சிரித்துக் கொண்டே கர்ணனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.

துரியோதனன் {கர்ணனிடம்}, “ஓ! ராதையின் மகனே {கர்ணா}, “சிங்கத்தால் அச்சுறுத்தப்பட்ட காட்டுமான்கூட்டத்தைப் போல, அந்த உறுதி மிக்க வில்லாளியின் (துரோணரின்) கணைகளால் பிளக்கப்பட்ட பாஞ்சாலர்களைப் பார். இவர்கள் மீண்டும் போருக்கு வர மாட்டார்கள் என நினைக்கிறேன். புயலால் பிளக்கப்பட்ட வலிமைமிக்க மரங்களைப் போலத் துரோணரால் இவர்கள் பிளக்கப்பட்டிருக்கின்றனர். அந்த உயர் ஆன்ம வீரரின் {துரோணரின்} தங்கச் சிறகுள்ள கணைகளால் பீடிக்கப்பட்டவர்கள் தப்பி ஓடுகிறார்கள், இவர்களில் இருவராகச் சேர்ந்திருப்பவர் எவரும் இல்லை. உண்மையில், அவர்கள் சுழல்களால் களமெங்கும் இழுத்துச் செல்லப்படுவது போலத் தெரிகிறது.

கௌரவர்களாலும், உயர் ஆன்ம துரோணரால் தடுக்கப்படும் அவர்கள், காட்டுத் தீக்கு மத்தியில் உள்ள யானைகளைப் (யானைக்கூட்டத்தைப்) போல ஒருவருடன் ஒருவர் நெருங்கிப் பதுங்குகின்றனர். மலர்ந்திருக்கும் மரங்கள் வண்டுக்கூட்டங்களால் ஊடுருவப்படுவதைப் போலத் துரோணரின் கணைகளால் துளைக்கப்பட்ட இந்த வீரர்கள் களத்தை விட்டுத் தப்பி ஓடுகையில் ஒருவரை ஒருவர் நெருங்கிப் பதுங்குகின்றனர். {அதோ} கோபம் நிறைந்த பீமன், பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களால் கைவிடப்பட்டு, அங்கே என் வீரர்களால் சூழப்பட்டிருப்பது எனக்குப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஓ! கர்ணா, அந்தத் தீயவன் {பீமன்}, இன்று உலகத்தைத் துரோணர் நிறைந்ததாகவே காண்பான். அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, உயிர் மற்றும் அரசாட்சியின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டான் என்பதில் ஐயமில்லை” என்றான் {துரியோதனன்}.

கர்ணன் {துரியோதனனிடம்}, “வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரன் {பீமன்}, தான் உயிரோடிருக்கும்வரை போரை நிச்சயம் கைவிட மாட்டான். ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, இந்த (நமது) சிங்க முழக்கங்களையும் அவன் {பீமன்} பொறுக்க மாட்டான். அதே போல, பாண்டவர்களும் போரில் தோற்க மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். அவர்கள் துணிவுள்ளவர்களும், பெரும்கோபங்கொண்டவர்களும், ஆயுதங்களை அறிந்தவர்களும், போரில் தடுக்கப்படக் கடினமானவர்களும் ஆவர்.

அவர்களை நஞ்சூட்டவும், எரிக்கவும் நாம் செய்த முயற்சிகளால் அவர்களுக்கு ஏற்பட்ட துயரங்களையும், பகடை விளையாட்டால் எழுந்த துயரங்களையும் நினைவுகூர்ந்தும், அவர்கள் நாடு கடத்தப்பட்டுக் காட்டில் இருந்ததை மனத்தில் கொண்டும், பாண்டவர்கள் போரைக் கைவிடமாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், அளவிலா சக்தி கொண்டவனுமான விருகோதரன் {பீமன்} (போரிடுவதற்காக) ஏற்கனவே திரும்பிவிட்டான். அந்தக் குந்தியின் மகன் {பீமன்}, நம் தேர்வீரர்களில் முதன்மையானோர் பலரை நிச்சயம் கொல்வான். வாளாலும், வில்லாலும், ஈட்டியாலும், குதிரைகளாலும், யானைகளாலும், மனிதர்களாலும், தேர்களாலும் [2], முழுக்க இரும்பாலான அவனது கதாயுதத்தாலும், (நம் படைவீரர்களைக்) கூட்டம் கூட்டமாக அவன் {பீமன்} கொல்வான்.

[2] பீமனின் வலிமை மனிதசக்திக்கு அப்பாற்பட்டது என்பதால், இவற்றைக் கூட அவன் கருவிகளாகப் பயன்படுத்துவான் என்று கர்ணன் சொல்வதாக இங்கே கங்குலி விளக்குகிறார்.

சத்தியஜித்தால் [3] தலைமை தாங்கப்பட்ட தேர்வீரர்கள் பிறர், பாஞ்சாலர்கள், கேகயர்கள், மத்ஸ்யர்கள், குறிப்பாகப் பாண்டவர்கள் அவனை {பீமனைப்} பின்தொடர்கிறார்கள். அவர்கள் அனைவரும் துணிச்சல்மிக்கவர்களும், பெரும் வலிமை மற்றும் ஆற்றலைக் கொண்டவர்களுமாவர். மேலும், கோபத்துடன் பீமனால் வழிநடத்தப்படும் அவர்கள் வலிமைமிக்கத் தேர்வீரர்களுமாவர். குலத்தின் காளைகளான அவர்கள், சூரியனைச் சூழ்ந்திருக்கும் மேகங்களைப் போல, அனைத்துப் பக்கங்களிலும் விருகோதரனைச் {பீமனைச்} சூழ்ந்து கொண்டு, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் துரோணரை அணுகத் தொடங்குகின்றனர் [4].

[3] துரோண பர்வம் பகுதி 21ல் சத்தியஜித் கொல்லப்பட்டான். வேறொரு பதிப்பில் இது சாத்யகி என்று சொல்லப்படுகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இது சாத்யகி என்றே சொல்லப்படுகிறது. எனவே இங்கே கங்குலியின் பதிப்பில் சத்தியஜித் என்று குறிப்பிடப்படுவது பிழையாகவே இருக்க வேண்டும்.

[4] வேறொரு பதிப்பில் இன்னும் அதிகமாக இருக்கிறது. அது பின்வருமாறு, “பாண்டவர்கள் யுத்தங்களில் கிருஷ்ணனைப் பந்துவாக உடையவர்களாகச் சொல்லப்படுகின்றனர். பாஞ்சாலர்கள், கேயர்கள், மாத்ஸ்யர்கள், பாண்டவர்கள் ஆகியோர் எல்லா விதத்தாலும் வீரர்கள்; பலசாலிகள்; ஆற்றலுடையவர்கள்; வலிமைமிக்கத் தேர்வீரர்கள்; (அகாரியத்தில்) வெட்கமுடியவர்கள்; எதிரிகளைக் கொல்வதில் திறம்பெற்றவர்கள்; பரிசுத்தமான லக்ஷணம் பொருந்தியவர்கள். அரசனே, அனேக அரசர்கள் யுத்தத்தில் அவர்களுக்கு வசப்பட்டிருக்கிறார்கள். நாராயணனைத் தலைவனாகக் கொண்ட பாண்டவர்களை நீ அவமதியாதே” என்று இருக்கிறது. இந்தக் குறிப்புக் கங்குலியில் இல்லை. இதற்கடுத்து பின்வருவது போலவே தொடர்கிறது.

மரணத் தருவாயிலுள்ள விட்டிற்பூச்சிகள், சுடர்மிக்க விளக்கைத் தாக்குவதைப் போல, ஒரே பொருளைக் கவனமாக நோக்கும் இவர்கள் {ஒரே வழியில் செல்லும் இந்தப் பாண்டவர்கள்} பாதுகாப்பில்லாத துரோணரை நிச்சயம் பீடிப்பார்கள். ஆயுதங்களை நன்கறிந்தவர்களான அவர்கள் துரோணரைத் தடுக்க நிச்சயம் தகுந்தவர்களே. பரத்வாஜர் மகனின் {துரோணரின்} மேல் இப்போது இருப்பது கனமான சுமை என்றே நான் நினைக்கிறேன். துரோணர் இருக்கும் இடத்திற்கு நாம் வேகமாகச் செல்வோமாக. வலிமைமிக்க யானையைக் கொல்லும் ஓநாய்களைப் போல முறையான நோன்புகளைக் கொண்ட அவரை {துரோணரை} அவர்கள் {பாண்டவர்கள்} கொல்லாதிருக்கட்டும்” என்றான் {கர்ணன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ராதேயனின் {கர்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துரியோதனன், பிறகு, தன் தம்பிகளுடன் சேர்ந்து, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணருடைய தேரை நோக்கி முன்னேறினான். துரோணரை மட்டுமே கொல்லும் விருப்பத்தால் செயலூக்கத்துடன் வந்த பாண்டவ வீரர்கள் அனைவரும், பல்வேறு நிறங்களிலான சிறந்த குதிரைகளால் இழுக்கப்பட்ட தங்கள் தேர்களில் போருக்குத் திரும்பும் ஒலி அங்கே செவிடாக்குவதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English