Sunday, May 08, 2016

நீலனைக் கொன்ற அஸ்வத்தாமன்! - துரோண பர்வம் பகுதி – 029

Aswatthama killed Nila! | Drona-Parva-Section-029 | Mahabharata In Tamil

(சம்சப்தகவத பர்வம் – 13)

பதிவின் சுருக்கம் : அணிபிளந்து ஓடிய கௌரவப் படை; துரோணரை மையமாகக் கொண்டு நடைபெற்ற போர்; துரோணருக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் இடையிலான பயங்கரப் போர்; நீலனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையிலான போர்; நீலனைக் கொன்ற அஸ்வத்தாமன்...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, (என்னுடைய) அந்தப் படைப்பிரிவுகள் பிளக்கப்பட்டு, முறியடிக்கப்பட்டு, நீங்கள் அனைவரும் களத்தில் இருந்து வேகமாகப் பின்வாங்கியபோது, உங்கள் மனங்களின் நிலை எப்படி இருந்தது? {இப்படி} பிளக்கப்பட்டு, நிற்பதற்குக் கூட ஓர் இடத்தைக் காணாமல் ஓடும் படையணியினரை மீண்டும் அணிதிரட்டுவது எப்போதும் மிகக் கடினமானதே. ஓ! சஞ்சயா, அது குறித்து அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, [உமது துருப்புகள் பிளக்கப்பட்டாலும்], உமது மகனுக்கு {துரியோதனனுக்கு} நன்மை செய்யும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட உலகின் முதன்மையான வீரர்கள் பலர், தங்கள் புகழைத் தக்க வைத்துக் கொள்வதற்காகத் துரோணரைப் பின்தொடர்ந்தனர். அந்தப் பயங்கர நகர்வில் உயர்த்தப்பட்ட ஆயுதங்களுடன் பாண்டவத் துருப்புகளை எதிர்த்த அவர்கள், நல்ல சாதனைகளை அடைந்து, யுதிஷ்டிரனை அணுகக்கூடிய தூரத்திலேயே வைத்துக் கொண்டு, அச்சமற்ற வகையில் தங்கள் படைத்தலைவரைத் {துரோணரைத்} தொடர்ந்தனர்.


பெரும் சக்தி கொண்ட பீமசேனன், வீர சாத்யகி, திருஷ்டத்யும்னன் ஆகியோரின் ஒரு பிழையைக் கூடத் {தங்களுக்குச்} சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்தக் கௌரவத் தலைவர்கள் பாண்டவப் படையின் மீது பாய்ந்தனர். “துரோணர், துரோணர்!” என்று சொல்லிப் பாஞ்சாலர்கள் தங்கள் துருப்புகளைத் தூண்டினர். எனினும், உமது மகன்களோ, “துரோணரைக் கொல்லப்பட விடாதீர்” என்று சொல்லி குருக்கள் அனைவரையும் தூண்டினர்.

“துரோணரைக் கொல்வீர்”, “துரோணரைக் கொல்வீர்” என்று சொல்லி ஒரு தரப்பும், “துரோணரைக் கொல்லப்பட விடாதீர்”, “துரோணரைக் கொல்லப்பட விடாதீர்” என்று சொல்லி அடுத்ததும் {அடுத்த தரப்பும்} எனத் துரோணரைத் தங்கள் பந்தயப் பொருளாகக் கொண்டு குருக்களும், பாண்டவர்களும் சூதாடுவதாகத் தெரிந்தது. பாஞ்சாலர்களின் இளவரசனான திருஷ்டத்யும்னன், துரோணர் யாரை நசுக்க முயன்றாரோ, அந்தப் பாஞ்சாலர் தேர்வீரர்கள் அனைவரும் இருந்த தரப்புக்குச் சென்றான்.

இப்படியே, போரிடுதவற்காக ஒருவன் {தன்} எதிரிகளைத் தேர்ந்தெடுப்பதில் எந்த விதியும் அனுசரிக்கப்படவில்லை. அந்தப் போர் பயங்கரமாக மாறியது. வீரர்களை எதிர் கொண்ட வீரர்கள் உரத்த முழக்கங்களைச் செய்தனர். பாண்டவர்களை அவர்களது எதிரிகளால் நடுங்கச் செய்ய இயலவில்லை. மறுபுறம், தங்கள் துயரங்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்த பின்னவர்கள் {பாண்டவர்கள்} தங்கள் எதிரிகளின் படையணியினரை நடுங்கச் செய்தனர். தன்மானம் கொண்டவர்களாக இருப்பினும், சினத்தாலும், பழிவாங்கும் உணர்ச்சியாலும் உற்சாகங்கொண்ட அவர்கள் {பாண்டவர்கள்}, பலத்தாலும் சக்தியாலும் தூண்டப்பட்டுத் துரோணரைக் கொல்வதற்காகத் தங்கள் உயிரைப் பற்றியும் கவலை கொள்ளாமல் அந்தப் பயங்கரப் போரை அணுகினர்.

உயிரையே பணயமாகக் கொண்டு கடும்போரில் விளையாடிய அளவில்லா சக்தி படைத்த அவ்வீரர்களுக்குள் நடந்த அந்த மோதலானது, வச்சிரத்திற்கு எதிரான இரும்பின் மோதலை ஒத்திருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் நடைபெறும் கடும்போரைப் போல இதற்கு முன்னர்த் தாங்கள் பார்த்ததாகவோ, கேட்டதாகவோ வயதில் மிக முதிர்ந்த மனிதர்களாலும் எண்ண முடிவில்லை. பெரும் படுகொலைகளைக் கண்ட அம்மோதலில், அந்தப் பெரும்படையின் எடையால் பீடிக்கப்பட்ட பூமியானது நடுங்கத் தொடங்கியது. எதிரியால் கலங்கடிக்கப்பட்டு, தூக்கிவீசப்பட்ட அந்தக் குரு படை உண்டாக்கிய பயங்கர ஒலி, ஆகாயத்தையே முடக்கிப் பாண்டவப்படைக்குள்ளும் ஊடுருவியது.

போர்க்களத்தில் திரிந்த துரோணர், பாண்டவப் படைப்பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரிடம் வந்து, கூர்மையான தன் கணைகளால் அவர்களைப் பிளந்தார். அற்புதமான சாதனைகளைக் கொண்ட துரோணரால் இப்படி அவர்கள் நசுக்கப்பட்ட போது, பாண்டவப்படையின் தலைவன் திருஷ்டத்யும்னன், சினத்தால் நிறைந்து துரோணரைத் தானே தடுத்தான். துரோணருக்கும், பாஞ்சாலர்களின் இளவரசனுக்கும் {திருஷ்டத்யும்னனுக்கும்} இடையில் நடந்த அந்த மோதலானது மிக அற்புதமானதாக இருந்ததை நாங்கள் கண்டோம். அஃது {அம்மோதல்} ஈடு இணையற்றது என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.

அப்போது, நெருப்புக்கு ஒப்பானவனாகத் தன் கணைகளையே தீப்பொறிகளாகவும், தன் வில்லையே தீச்சுடராகவும் கொண்ட {அநூப நாட்டு ஆட்சியாளன்} நீலன், உலர்ந்த புற்குவியலை எரிக்கும் காட்டுத்தீயைப் போல, குரு படைகளை எரிக்கத் தொடங்கினான். துரோணரின் வீரமகன் {அஸ்வத்தாமன்}, நீலனோடு ஒரு மோதலை முன்பிலிருந்தே விரும்பியதால், துருப்புகளை எரித்தபடியே பின்னவன் {நீலன்} வந்த போது, அவனிடம் சிரித்துக் கொண்டே, கண்ணியமான வார்த்தைகளால், “ஓ! நீலா, சாதாரணப் படைவீரர்கள் பலரை உன் கணைகளின் தீச்சுடர்களால் எரிப்பதால் நீ ஈட்டப் போவது {ஈட்டப்போகும் பயன்} என்ன? உதவியற்ற என்னிடம் நீ போரிடுவாயாக, சினத்தால் நிறைந்து என்னைத் தாக்குவாயாக” என்றான் {அஸ்வத்தாமன்}.

இப்படிச் சொல்லப்பட்டதும், முற்றாக மலர்ந்த தாமரையின் காந்திக்கு ஒப்பான பிரகாசமான முகத்தைக் கொண்ட நீலன், தாமரைக் கூட்டங்களுக்கு ஒப்பான உடலையும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும் கொண்ட அஸ்வத்தாமனைத் தன் கணைகளால் துளைத்தான். திடீரென நீலனால் ஆழத் துளைக்கப்பட்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மூன்று பல்லங்களைக் கொண்டு தன் எதிராளியின் {நீலனின்} வில், கொடிமரம் மற்றும் குடையை அறுத்தான். அப்போது, தன் தேரில் இருந்து விரைவாகக் குதித்த நீலன், ஒரு சிறந்த வாளையும் கேடயத்தையும் கொண்டு, (தன் நகங்களால், தன் இரையைத் தூக்கிச் செல்லும்) ஒரு பறவையைப் போல, அஸ்வத்தாமனின் உடலில் இருந்து அவனது தலையைத் துண்டிக்க விரும்பினான். எனினும், ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, இறகுகள் கொண்ட கணை ஒன்றின் மூலமாக, அழகான மூக்கால் அருளப்பட்டதும், சிறந்த குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதும், உயர்ந்த தோள்களில் இருந்ததுமான தன் எதிராளியின் {நீலனின்} தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான்.

அப்போது, முழு நிலவின் காந்திக்கு ஒப்பான பிரகாசமான முகமும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களும், தாமரைக்கு ஒப்பான நிறமும் கொண்ட அந்த உயரமான வீரன் {நீலன்} இப்படியே கொல்லப்பட்டுக் கீழே பூமியில் விழுந்தான். சுடர்மிகு சக்தி கொண்ட நீலன், ஆசானின் மகனால் {அஸ்வத்தாமனால்} இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்ட பாண்டவப் படை, பெரும் துயரத்தால் நிறைந்து நடுங்கத் தொடங்கியது. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களின் பெரும் தேர்வீரர்கள் அனைவரும், “ஐயோ, போர்க்களத்தின் தென்பகுதியில், இந்திரனின் மகன் (அர்ஜுனன்), எஞ்சியுள்ள சம்சப்தகர்களையும், நாராயணப் படையையும் கொல்வதில் ஈடுபட்டு வரும்போது, எதிரியிடம் இருந்து நம்மைக் காக்க அந்த வலிமைமிக்க வீரனால் {அர்ஜுனனால்} எப்படி இயலும்?” என்று நினைத்தனர்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English