Arjuna dispelled Sakuni’s illusions! | Drona-Parva-Section-028 | Mahabharata In Tamil
(சம்சப்தகவத பர்வம் – 12)
பதிவின் சுருக்கம் : பகதத்தனை வலம் வந்த அர்ஜுனன்; அர்ஜுனனைத் தாக்கிய சகுனியின் தம்பிகளான விருஷகனும், அசலனும்; விருஷகனையும் அசலனையும் கொன்ற அர்ஜுனன்; சகுனி செய்த மாயைகள்; மாயைகளை அழித்த அர்ஜுனன்; பின்வாங்கிய சகுனி; காந்தாரர்களை அழித்த அர்ஜுனன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பெரும் சக்தி கொண்டவனும், இந்திரனுக்கு எப்போதும் பிடித்தமானவனும், அவனது {இந்திரனின்} நண்பனுமான பகதத்தனைக் கொன்ற பிறகு, பார்த்தன் {அர்ஜுனன்} அவனை வலம் வந்தான். அப்போது, பகை நகரங்களை அடக்குபவர்களும், காந்தார மன்னனின் {சுபலனின்} மகன்களுமான விருஷகன் மற்றும் அசலன் ஆகிய சகோதரர்கள் இருவரும் போரில் அர்ஜுனனைப் பீடிக்கத் தொடங்கினர். அந்த வீர வில்லாளிகள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து, பெரும் வேகம் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான கணைகளைக் கொண்டு அர்ஜுனனைப் பின்னாலிருந்தும் முன்னாலிருந்தும் ஆழமாகத் துளைக்க ஆரம்பித்தனர்.
அப்போது அர்ஜுனன், கூரிய கணைகளால் சுபலனின் மகனான விருஷகனின் குதிரைகள், தேரோட்டி, வில், குடை, கொடிமரம் மற்றும் தேர் ஆகியவற்றைத் துண்டுகளாக வெட்டினான். மேலும் அர்ஜுனன், கணைகளின் மேகத்தாலும், பல்வேறு ஆயுதங்கள் பிறவற்றாலும் சுபலனின் மகனுடைய {விருஷகனின்} தலைமையில் இருந்த காந்தாரத் துருப்புகளை மீண்டும் கடுமையாகப் பீடித்தான். பிறகு சினத்தால் நிறைந்த அர்ஜுனன், உயர்த்தப்பட்ட ஆயுதங்களைக் கொண்ட வீரக் காந்தாரர்கள் ஐநூறு {500} பேரைத் தன் கணைகளின் மூலம் யமலோகம் அனுப்பினான். அப்போது அந்த வலிமைமிக்க வீரன் {விருஷகன்}, குதிரைகள் கொல்லப்பட்ட {தன்} தேரில் இருந்து விரைவாகக் கீழிறங்கி, தன் சகோதரனின் {அசலனின்} தேரில் ஏறி மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.
பிறகு, சகோதரர்களான விருஷகன் மற்றும் அசலன் ஆகிய இருவரும் ஒரே தேரில் ஏறிக் கணைகளின் மழையால் பீபத்சுவை {அர்ஜுனனை} இடையறாமல் துளைக்கத் தொடங்கினர். திருமணப் பந்தத்தால் {உமது மனைவி காந்தாரியால்} உமக்கு உறவினர்களான விருஷகன் மற்றும் அசலன் ஆகிய அந்த உயர் ஆன்ம இளவரசர்கள், பழங்காலத்தில் விருத்திரனோ, பலனோ இந்திரனைத் தாக்கியது போல மிகக் கடுமையாகப் பார்த்தனை {அர்ஜுனனைத்} தாக்கினர். குறி தவறாத அந்தக் காந்தார இளவரசர்கள் இருவரும் காயமடையாமலேயே, வியர்வையை உண்டாக்கும் {சூரியக்} கதிர்களால் உலகைப் பீடிக்கும் கோடை காலத்தின் இரண்டு மாதங்களைப் போலப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} மீண்டும் தாக்கத் தொடங்கினர். அப்போது அர்ஜுனன், மனிதர்களில் புலிகளும், ஒரே தேரில் அருகருகில் இருந்தவர்களுமான விருஷகன் மற்றும் அசலன் ஆகிய அந்த இளவரசர்களை, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} ஒரே கணையால் கொன்றான். பிறகு, கண்கள் சிவந்தவர்களும், சிங்கத்தைப் போன்றவர்களும், வலிமைமிக்கக் கரங்களையும், ஒரே குணங்களையும் கொண்ட இரத்தச் சகோதரர்களுமான அந்த வீரர்கள் இருவரும், அந்தத் தேரில் இருந்து ஒன்றாகவே கீழே விழுந்தனர். நண்பர்களின் அன்புக்குரிய அவர்களது உடல்கள், கீழே பூமியின் மீது விழுந்து, சுற்றிலும் புனிதமான புகழைப் பரப்பியபடி அங்கே கிடந்தன. துணிச்சல்மிக்கவர்களும் புறமுதுகிடாதவர்களுமான தங்கள் தாய்மாமன்கள் இப்படி அர்ஜுனனால் கொல்லப்பட்டதைக் கண்ட உமது மகன்கள், ஓ! ஏகாதிபதி, அவன் {அர்ஜுனன்} மீது பல ஆயுதங்களை மழையாகப் பொழிந்தனர் [1].
[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, “அரசரே! (போரைவிட்டு) ஓடாதவர்களான தம் மாமன்மார்களிருவரும் யுத்தத்தில் கொல்லப்பட்டது கண்டு, உம்முடைய மகன்கள் மிகுந்த கண்ணீரைச் சொரிந்தார்கள்” என்றிருக்கிறது.
பல்வேறு விதங்களிலான நூறு மாயைகளை அறிந்தவனான சகுனியும், தன் சகோதரர்கள் கொல்லப்பட்டதைக் கண்டு அந்த இரு கிருஷ்ணர்களையும் {இரு கருப்பர்களையும்} குழப்புவதற்காக மாயைகளை உண்டாக்கினான். அர்ஜுனன் மீது அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தடிகள், இரும்பு குண்டுகள் {பந்துகள்}, கற்கள், சதக்னிகள், ஈட்டிகள், கதாயுதங்கள், பரிகங்கள், நீண்ட கத்திகள், வேல்கள், முத்கரங்கள், கோடரிகள் {பட்டசங்கள்}, கம்பனங்கள், வாள்கள், ஆணிகள் {நகரங்கள்}, குறும் உலக்கைகள், போர்க்கோடரிகள், க்ஷுரங்கள் {கத்தி போன்றவை}, கூரிய பல்லங்கள் {க்ஷுரப்ரங்கள்}, நாளீகங்கள், வத்ஸதந்தங்கள், அஸ்திஸந்திகள் {எலும்பு போன்ற தலைகளைக் கண்ட கணைகள்}, சக்கரங்கள், பாம்புத் தலை கொண்ட கணைகள், பராசங்கள் ஆகியவையும் இன்னும் பல ஆயுதங்களும் விழுந்தன. கழுதைகள், ஒட்டகங்கள், எருமைக்கடாக்கள், புலிகள், சிங்கங்கள், மான்கள், சிறுத்தைகள், கரடிகள், ஓநாய்கள், கழுகுகள், குரங்குகள், பல்வேறு விதங்களிலான பாம்புகள், பலவிதமான ராட்சசர்கள், காக்கை கூட்டங்கள் ஆகியன அனைத்தும் பசியுடனும், சினத்தால் தூண்டப்பட்டும் அர்ஜுனனை நோக்கி ஓடின.
அப்போது, தெய்வீக ஆயுதங்களை அறிந்த வீரனும், குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, கணை மேகங்களை ஏவி அவை அனைத்தையும் எதிர்த்தடித்தான். சிறந்த பலமான கணைகளின் மூலம் அந்த வீரனால் {அர்ஜுனனால்} எதிர்த்தடிக்கப்பட்ட அவர்கள் {காந்தாரர்கள்}, உரக்கக் கதறிய படியே உயிரிழந்து கீழே விழுந்தனர். பிறகு அடர்த்தியான இருள் தோன்றி அர்ஜுனனின் தேரை மறைத்தது, அந்த இருளுக்குள் இருந்து கடும் குரல்கள் அர்ஜுனனை நிந்தித்தன. எனினும், பின்னவன் {அர்ஜுனன்}, ஜியோதிஷ்கம் என்ற அழைக்கப்பட்ட ஆயுதங்களின் மூலம் அந்த அடர்த்தியான பயங்கரமான இருளை விலக்கினான். அந்த இருள் விலக்கப்பட்ட போது, பயங்கரமான நீரலைகள் தோன்றின. அந்த நீரை வற்ற செய்வதற்காக அர்ஜுனன் ஆதித்யம் என்றழைக்கப்பட்ட ஆயுதத்தைப் பயன்படுத்தினான். அந்த ஆயுதத்தின் விளைவாக அந்த நீர் அனைத்தும் கிட்டத்தட்ட வற்ற செய்யப்பட்டது. சுபலனால் {சகுனியால்} மீண்டும் மீண்டும் உண்டாக்கப்பட்ட பல்வேறு மாயைகளை அர்ஜுனன் சிரித்துக் கொண்டே தன் ஆயுதங்களின் பலத்தால் அழித்தான் [2]. அவனது {சகுனியின்} மாயைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு அர்ஜுனனின் கணைகளால் பீடிக்கப்பட்டு, அச்சங்கொண்ட சகுனி தன் வேகமான குதிரைகளின் உதவியோடு இழிந்த பாவியைப் போலத் தப்பி ஓடினான்.
[2] வேறொரு பதிப்பில் இதன்பிறகு, “இவ்வாறு சௌபலனான சகுனியால் அடிக்கடி உண்டாக்கப்பட்ட பலவித மாயைகளை அர்ஜுனன் தன் அஸ்த்ரபலத்தால் விரைவாக நாசஞ்செய்து சிரித்துக் கொண்டே (சகுனியை நோக்கி), “ஓ! கெட்ட சூதாட்டக்காரா! காந்தாராதிபதியே! இக்காண்டீவமானது சொக்கட்டான் காய்களைப் போடாது; இக்காண்டீவமோ பிரகாசிப்பவையும், தீட்டப்பட்டவையும், கூர்மையுள்ளவையுமான அம்புகளைப் பிரயோகிக்கும்” என்று சொன்னான்” என்றிருக்கிறது.
அப்போது, ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்த அர்ஜுனன், தன் கரங்களின் அதீத நளினத்தை {லாகவத்தை} எதிரிகளுக்கு எடுத்துக் காட்டியபடி, அந்தக் கௌரவப் படையின் மீது அம்புகளின் மேகங்களைப் பொழிந்தான். இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட உமது மகனின் படை, மலையால் தடுக்கப்பட்ட கங்கையின் நீரூற்று இரண்டு ஓடைகளாகப் பிரிவதைப் போலப் பிரிந்தது. அந்த ஓடைகளில் ஒன்று, ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே} துரோணரை நோக்கிச் சென்றது, மற்றொன்றோ உரத்த கதறலுடன் துரியோதனனை நோக்கிச் சென்றது. அப்போது அடர்த்தியாக எழுந்த புழுதியானது துருப்புகள் அனைத்தையும் மறைத்தது. எங்களால் அர்ஜுனனைக் காண முடியவில்லை. காண்டீவத்தின் நாணொலி மட்டுமே களத்திற்கு வெளியே {வடக்குப் பகுதியில்} எங்களால் கேட்கப்பட்டது. உண்மையில், அந்தக் காண்டீவ நாணொலியானது, சங்கொலிகள், பேரிகைகளின் ஒலிகள் மற்றும் பிற கருவிகளின் ஒலிகள் ஆகியவற்றுக்கும் மேலெழுந்து எங்களுக்குக் கேட்டது.
பிறகு களத்தின் தென்பகுதியில் போர் வீரர்களில் முதன்மையானோர் ஒரு புறமும், அர்ஜுனன் மறுபுறமும் நிற்க ஒரு கடும்போர் அங்கே நடந்தது. எனினும், நான் துரோணரைப் பின்தொடர்ந்து சென்றேன். யுதிஷ்டிரனின் பல்வேறு படைப்பிரிவுகள் களத்தின் அனைத்துப் பகுதிகளிலும் எதிரியை அடித்தன. உமது படையின் பல்வேறு பிரிவுகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கோடைகாலக் காற்றானது, ஆகாயத்தின் மேகத்திரள்களை அழிப்பதைப் போல அர்ஜுனனைத் தாக்கின. உண்மையில் அடர்த்தியான மழையைப் பொழியும் வாசவனை {இந்திரனைப்} போலக் கணைகளின் மேகங்களை இறைத்தபடி அர்ஜுனன் வந்த போது, மனிதர்களில் புலியான அந்தக் கடும் வில்லாளியை {அர்ஜுனனைத்} தடுப்பதற்கு உமது படையில் எவரும் இல்லை. பார்த்தனால் {அர்ஜுனனால்} தாக்கப்பட்ட உமது வீரர்கள் பெரும் வலியை உணர்ந்தனர். {அப்படி வலியை உணர்ந்த} அவர்கள் தப்பி ஓடினர். அப்படித் தப்பி ஓடும்போது தங்கள் எண்ணிக்கையிலேயே {தங்கள் படையினரிலேயே} அவர்கள் பலரைக் கொன்றனர்.
கங்கப் பறவையின் {கழுகின்} இறகுகளால் ஆன சிறகுகளைக் கொண்டவையும், அனைத்து உடல்களையும் ஊடுருவவல்லவையுமான கணைகள் அர்ஜுனனால் ஏவப்பட்டு, விட்டிற்பூச்சிக்கூட்டங்களைப் போல அனைத்துப் பக்கங்களையும் மறைத்தபடி பாய்ந்தன. குதிரைகள், தேர்வீரர்கள், யானைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோரைத் துளைத்த அந்தக் கணைகள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, {அவற்றை ஊடுருவி} எறும்புப் புற்றுக்களுக்குள் நுழையும் பாம்புகளைப் போலப் பூமிக்குள் புகுந்தன. {அதன்பிறகு} அர்ஜுனன், யானை, குதிரை அல்லது மனிதன் என எவர் மீதும் {இரண்டாவது முறையாக} கணைகளை ஏவவில்லை. ஒரே ஒரு கணையால் {மட்டும்} தாக்கப்பட்ட இவை ஒவ்வொன்றும் கடுமையாகப் பீடிக்கப்பட்டு உயிரிழந்து கீழே விழுந்தன.
கொல்லப்பட்ட மனிதர்கள், யானைகள், கணைகளால் அடிக்கப்பட்ட குதிரைகள் என அனைத்தாலும் விரவி கிடந்ததும், நாய்கள், நரிகள் ஆகியவற்றின் ஊளைகளால் எதிரொலித்ததுமான அந்தப் போர்க்களம் விசித்திரமாகவும் பயங்கரமாகவும் காட்சியளித்தது. அந்தக் கணைகளால் வலியை உணர்ந்தவனான தந்தை {தன்} மகனைக் கைவிட்டான், நண்பன் மற்றொரு நண்பனையும், மகன் தந்தையையும் கைவிட்டனர். உண்மையில், ஒவ்வொருவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதையே நோக்கமாகக் கொண்டனர். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்ட வீரர்கள் பலர், தங்களைச் சுமந்த விலங்குகளையே கூடக் கைவிட்டனர்” {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |